கொரோனா வைரஸ்: கோவிட் 19 நோய் தொற்று உலகளவில் அடுத்த ஹாட் ஸ்பாட் ஆக மாறுகிறதா இந்தியா?

பட மூலாதாரம், Hindustan Times
- எழுதியவர், அபர்ணா அல்லூரி மற்றும் ஷதாப் நஸ்மி
- பதவி, பிபிசி
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மெதுவாக அதிகரித்தது. ஆனால் முதலாவது நோயாளி கண்டறியப்பட்டதிலிருந்து ஆறு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், நோயால் பாதித்தவர்களின் எண்ணிக்கையில் ரஷ்யாவைக் கடந்து உலகில் மூன்றாவது இடத்திற்கு இந்தியா சென்றுவிட்டது.
உலகில் அதிக மக்கள் தொகையில் இரண்டாவது பெரிய நாடாக, நகரங்களில் அதிக மக்களைக் கொண்டுள்ள இந்தியா, உலகில் கொரோனா பாதிப்பின் ஹாட்ஸ்பாட் ஆக மாறுவதற்கான வாய்ப்பு எப்போதும் இருந்து கொண்டே உள்ளது.
ஆனால், நோய் பாதிப்பு எண்ணிக்கைகளின் பின்னணியில் உள்ள தகவல் தொகுப்பு கேள்விக்கு உரியதாக உள்ளது. ஏனெனில், போதிய அளவுக்கு இந்தியாவில் மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்படவில்லை. வழக்கத்திற்கு மாறாக மரண விகிதம் குறைவாக இருப்பது விஞ்ஞானிகளைக் குழப்பம் அடையச் செய்துள்ளது.
1. இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை வேகமாக உயர்கிறது
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை தினமும் பத்தாயிரம் கணக்கில் அதிகரிப்பதால், அண்மைக்காலமாக இது வேகமாக அதிகரித்து வருகிறது. கடுமையான முடக்கநிலை கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை அடுத்த வாரங்களில் ஜூன் மாதத்தில் தான் அதிகபட்ச எண்ணிக்கையில் நோய்த் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜூலை 7ஆம் தேதி நிலவரத்தின்படி 719,664 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆனால், மக்கள் தொகையுடன் ஒப்பிடும்போது உண்மையான பாதிப்பு அளவு தெளிவாகத் தெரியவில்லை என்று நச்சுயிரியல் நிபுணர் ஷாஹித் ஜமீல் கூறுகிறார்.
மே மாதத்தில் 26 ஆயிரம் இந்தியர்களுக்கு அரசு தன்னியல்பான வகையில் மருத்துவப் பரிசோதனை நடத்தியது. அதில் 0.73 சதவீதம் பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. பரிசோதனை எண்ணிக்கை போதாது என்று சில நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால், அது நாடு தழுவிய அடையாளக் குறியீடு என்ற அளவில் மதிக்கக் கூடியது தான் என்று டாக்டர் ஜமீல் போன்றவர்கள் கூறுகின்றனர்.
``இந்த புள்ளிவிவரத்தை ஒட்டுமொத்த மக்கள் தொகைக்கு நாம் கணக்கிட்டுப் பார்த்தால், மே மாதம் மத்தியில் 10 மில்லியன் பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டிருக்க வேண்டும்'' என்று டாக்டர் ஜமீல் கூறியுள்ளார்.

நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 20 நாட்களுக்கு ஒரு முறை இரட்டிப்பாக உயர்கிறது என்பதை வைத்துப் பார்த்தால், இப்போதைய பாதிப்பு எண்ணிக்கை 30 மில்லியன் முதல் 40 மில்லியன் வரை சென்றிருக்க வேண்டும்.
நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட எண்ணிக்கைக்கும், உண்மையான நோய்த் தொற்று பாதிப்பு எண்ணிக்கைக்கும் இடையிலான இடைவெளி எல்லா நாடுகளிலும், வெவ்வேறு அளவுகளில் உள்ளது. மருத்துவப் பரிசோதனைகள் செய்தவன் மூலம் மட்டுமே அதை நிரப்ப முடியும். ``நிறையப் பேருக்குப் பரிசோதனை செய்தால், நிறையப் பேருக்குப் பாதிப்பு உறுதி செய்யப்படும்'' என்று டாக்டர் ஜமீல் தெரிவித்தார்.
சமீபகால வாரங்களில் இந்தியாவில் இதுதான் நடந்துள்ளது - மருத்துவப் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அரசு வேகமாக அதிகரித்த போது, பாதிப்பு எண்ணிக்கையும் திடீரென உயர்ந்தது.
மார்ச் 13 ஆம் தேதியிலிருந்து இந்தியாவில் 10 மில்லியனுக்கும் மேற்பட்ட மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் அதில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு ஜூன் 1 ஆம் தேதிக்குப் பிறகு தான் பரிசோதனை நடந்தது.

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து எப்போது கிடைக்கும்?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ் : இதுவே கடைசி கொள்ளை நோய் அல்ல
- கொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் என்ன?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்

2. இந்தியா போதிய எண்ணிக்கையில் மருத்துவப் பரிசோதனை செய்யவில்லை

எண்ணிக்கையின் அடிப்படையில் பார்த்தால் இந்தியாவில் அதிகாரப்பூர்வ பாதிப்பு அதிகமாக உள்ளது. ஆனால் ஒப்பீட்டளவில் பார்த்தால் ஓரளவுக்குக் குறைவாகவே உள்ளது. இந்தியா மக்கள் தொகை ஒப்பீட்டளவில் பார்த்தால், உலக நாடுகளில் 3 மடங்கு அதிக பாதிப்பு உள்ளது - அண்மையில் அரசு சுட்டிக்காட்டிய தகவல் இது.
ஆனால், குறைந்த அளவுக்கே மருத்துவப் பரிசோதனை நடந்திருக்கிறது என்பதால் தான், ஒப்பீட்டளவில் இந்தியாவில் நோய் பாதிப்பு எண்ணிக்கை குறைவாக உள்ளது என்று டாக்டர் ஜமீல் தெரிவிக்கிறார். ஒப்பீட்டளவில் இந்தியாவைவிட அதிக சராசரி பாதிப்பு உள்ள நாடுகளைப் பார்த்தால், அங்கே பரவலாகப் பரிசோதனை செய்திருப்பதை அறிய முடியும். இந்தியாவில் பரிசோதனை எண்ணிக்கை குறைவாக இருப்பதால், சராசரி பாதிப்பு என்பது கணக்கில் கொள்ளத்தக்கதாக இல்லை என்கிறார் அவர்.

ஆனால் எவ்வளவு பேருக்கு நீங்கள் பரிசோதனை செய்கிறீர்கள் என்பது மட்டுமின்றி, யாருக்குப் பரிசோதனை செய்கிறீர்கள் என்பதும் முக்கியம்.
ஆரம்ப கட்டத்தில் நோய்த் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களுக்கு பரிசோதனை மற்றும் தடமறிதல் என்பதில் இந்தியா முக்கியத்துவம் கொடுத்தது. பரவலான மக்கள் தொகைக்கு பரிசோதனை நடத்தவில்லை.
நோய்த் தாக்குதல் தீவிரமாகப் பரவத் தொடங்கிய பிறகு பரிசோதனையும் தடமறிதலும் போதுமானவையாக இல்லை என்று ஹிமான்ஷு தியாகி, ஆதித்ய கோபாலன் ஆகிய கணிதவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இவர்கள் கோவிட்-19 மருத்துவப் பரிசோதனை உத்திகள் குறித்து ஆய்வு செய்துள்ளனர். நோய் பாதித்தவர்களை தடுத்து வைக்க அது உதவிகரமாக இருந்தது. ஆனால் சமுதாய அளவில் கண்டறியப்படாமல் உள்ளவர்களிடம் மருத்துவப் பரிசோதனை நடத்தி புதிய பாதிப்புகளைக் கண்டறிவதாக அந்த நடைமுறை இல்லை என திரு. தியாகி, திரு. கோபாலன் ஆகியோர் கூறியுள்ளனர்.
பரந்த அளவில் பரிசோதனைகளை நடத்தினால், எண்ணிக்கை அதிகரிக்கும். ஆனால், யாருக்கெல்லாம் இந்திய அரசு பரிசோதனை செய்கிறது என நாம் எப்படி அறிந்து கொள்வது? நாடுகளுக்கு இடையில் பரிசோதனை எண்ணிக்கைகளை ஒப்பிடுவதில் சிக்கல் உள்ளது. ஏனெனில் எவ்வளவு பேருக்கு பரிசோதனை செய்தோம் என சில நாடுகள் கணக்கு வைத்துள்ளன, எத்தனை எண்ணிக்கையில் பரிசோதனை செய்தோம் என்பதை சில நாடுகள் கணக்கு வைத்துள்ளன. இந்தியாவிடம் இருப்பது, எத்தனை எண்ணிக்கையில் பரிசோதனை செய்தோம் என்ற கணக்கு. இது கொஞ்சம் அதிகமாகத் தோன்றும். ஏனெனில் பலருக்கு, ஒன்றும் மேற்பட்ட முறை பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.
எனவே, ஒரு நபருக்கு நோய் பாதிப்பை உறுதி செய்வதற்கு எத்தனை பரிசோதனைகள் செய்யப்படுகின்றன என்பதைக் கணக்கில் எடுக்க வேண்டும் என்று அறிவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். அதிகமான பரிசோதனைகள் நடந்தால், அதன் பரப்பும் அதிகமாவதாக இருக்கிறது. வைரஸ் பரவைத் தடுப்பதில் வெற்றி கண்டுள்ள நாடுகளுடன் ஒப்பிடும்போது, இங்கே, இந்தியாவில் செயல்பாடு குறைவானதாகவே உள்ளது.

அதிக பரவலாக நீங்கள் பரிசோதனைகள் செய்தால், நோய் பாதிப்பு விகிதம் குறைவாக இருக்கும் - அதனால் தான் நியூசிலாந்து, தாய்வானில் பாதிப்பு விகிதம் 1 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது.

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் பரிசோதனை செய்தவர்களில் நோய் பாதிப்பு உறுதி செய்யப்படுபவர்களின் விகிதம் ஏப்ரலில் 3.8 சதவீதமாக இருந்தது, ஜூலையில் அது 6.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. நோய் பரவும் ஆபத்து வாய்ப்புள்ளவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களிடம் மட்டுமே பரிசோதனை செய்யப்படுவதால் தான், இந்த எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
இந்தியாவில் குணம் பெறுபவர்கள் எண்ணிக்கை நம்பிக்கை ஊட்டுவதாக உள்ளது

நோயால் தாக்குதலுக்கு ஆளாவது அல்லது மரணம் அடையும் எண்ணிக்கையைக் காட்டிலும், குணம் அடைவோர் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கிறது என்று தகவல் தொகுப்புகள் தெரிவிக்கின்றன. இந்த வைரஸ் பாதிப்பின் பாதையை கணிப்பதற்கு, உறுதி செய்யப்பட்டவர்கள், குணம் அடைபவர்கள், மரணம் அடைபவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பு ஆவதற்கு எவ்வளவு நாட்கள் ஆகிறது என்ற விவரத்தை அறிவியல் நிபுணர்கள் பயன்படுத்துகின்றனர். நீண்ட அவகாசம் எடுத்துக் கொள்வது, நல்ல அறிகுறி என்று அவர்கள் கருதுகின்றனர்.
இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை இரட்டிப்பாகும் வேகம் குறித்து அறிவியல் நிபுணர்கள் சந்தேகங்கள் தெரிவிக்கின்றனர். குறைந்த எண்ணிக்கையில் பரிசோதனைகள் செய்வதால், புதிதாகப் பதிவு செய்யப்படும் பாதிப்பு எண்ணிக்கை குறைவாக இருக்கும், அதன் அதிகரிப்பு வேகம் குறைவாக இருக்கும். நோய் பாதிப்பு உறுதி செய்யப்படுபவர்களைவிட, குணம் அடைபவர்களின் எண்ணிக்கை, கால அளவு வேகமானதாக இருக்கும்.
மரணம் அடைபவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் காலம் எவ்வளவு என்பதைக் கவனிக்க வேண்டும் என்கிறார் டாக்டர் ஜமீல். இப்போது இது சுமார் 26 நாட்களாக உள்ளது. இந்த இடைவெளி குறையுமானால், மருத்துவமனைகள் மீது அழுத்தம் அதிகரிக்கும். அதனால், மரணங்கள் அதிகரிக்கக் கூடும்.
உலக அளவில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளைவிட, இந்தியாவில் குணம் பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. உதாரணமாக, விளக்கப்படத்தில் செங்குத்தான கோடு என்பது நல்ல விஷயம். அதாவது இந்தியாவில் கோவிட்-19 நோய் பாதிப்புக்கு உள்ளானவர்கள் அமெரிக்கா அல்லது பிரேசில் நாடுகளைவிட வேகமாகக் குணம் அடைகிறார்கள் என்று அர்த்தம்.
குணம் அடைதலில் இந்தியாவின் பங்கு - அதாவது உறுதி செய்யப்பட்ட நோயாளிகளில் குணம் அடைபவர்களின் சதவீதம் - அதிகமாக உள்ளது. சுமார் 60 சதவீதம் பேர் குணம் பெற்றுள்ளனர். இது அமெரிக்காவில் 27 சதவீதம் என்ற அளவில் மட்டுமே உள்ளது.

குணம் அடைபவர்களின் எண்ணிக்கையிலும், தகவல் தொகுப்புகள் முழுமையாக இல்லை, அதற்கான வரையறைகள் மாறுபடுகின்றன.
வைரஸ் பாதிப்பு இருப்பதாக ஆரம்பத்தில் உறுதி செய்யப்பட்டு, சில வாரங்களுக்குப் பிறகு, நோய் பாதிப்பு இல்லை என உறுதியாகும் போது அவர் குணம் அடைந்தவராகக் கருதப்படுவார் என்று இந்தியா கூறியுள்ளது. சில நாடுகளில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களில் மட்டுமே முழுமையாக குணம் அடைந்தவர்கள் கணக்கில் சேர்க்கப் படுகிறார்கள். அதனால் தான் பிரிட்டனில் குணம் அடைபவர்களின் விகிதம் குறைவாக இருக்கலாம் என்று தெரிகிறது.
இதில் முக்கியமான விஷயம் என்னவெனில், ஒவ்வொரு நாட்டிலும் எவ்வளவு பேர் குணம் அடைகிறார்கள் என்ற ஒப்பீடு இல்லாமல், இந்தியாவில் குணம் அடைபவர்கள் எண்ணிக்கை அதிகம் என்பது கவனிக்கத்தக்கது.
அதனால் தான் இந்தியாவில், இந்த நோய் பாதிப்பால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.
இந்தியாவில் மரண விகிதம் மிகவும் குறைவு
இந்தியாவில் கோவிட்-19 பாதிப்பால் இதுவரை 20,160 மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால், உலக அளவிலான பட்டியலில் இது 8வது இடத்தில் உள்ளது. ஆனால் ஒரு மில்லியனுக்கு எவ்வளவு பேர் உயிரிழப்பு என்று பார்த்தால் இது குறைவாகவே உள்ளது.
``மேற்கு ஐரோப்பிய நாடுகளில் நீங்கள் பார்ப்பதில் இது ஒரு சிறிய அளவுதான்'' என்று பொருளாதார நிபுணரும், புரூக்கிங்ஸ் கல்வி நிறுவனத்தின் மூத்த ஆராய்ச்சியாளருமான ஷாமிக்கா ரவி கூறியுள்ளார்.
இந்தியாவில் மரணங்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது, இந்தியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையிலான மரண எண்ணிக்கை இடைவெளிக்கான காரணத்தைக் கூறுவதாக இல்லை என்று அவர் கூறுகிறார்.

``நமது நாட்டில் மரணங்கள் விகிதம் அதிகமாக இருந்தால், எந்தத் தகவல் தொகுப்பும் அதை மறைத்துவிட முடியாது - அதாவது 20-40 மடங்குகளை மறைக்க முடியாது'' என்று அவர் கூறியுள்ளார்.
இந்தப் பிராந்தியத்தில் உள்ள பாகிஸ்தான் அல்லது இந்தோனீசியா போன்ற மற்ற நாடுகளைப் போலவே இந்தியாவில் மரண விகிதம் குறைவாக உள்ளது.
இந்தப் பிராந்தியத்தில் நோய்த் தொற்றுகள் அதிகமாக இருப்பது முதல், மேற்கத்திய நாடுகளில் இளவயது மக்களின் உடலில் பாதிப்பை ஏற்படுத்த முடியாத வீரியம் குறைந்த பாதிப்பு இருப்பது வரையிலான பல காரணங்கள் இதற்கு சொல்லப்படுகின்றன. கோவிட்-19 பாதித்தால் முதியவர்கள் தான் அதிகம் மரணிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
``எல்லா நாடுகளும் தகவல் தொகுப்பில் திருத்தங்கள் செய்துவிட முடியாது'' என்று டாக்டர் ஜமீல் கூறுகிறார். ``மற்ற நோய்த் தொற்றுகள் காரணமாக இந்த மக்களிடம் உட்பொதிந்த நோய் எதிர்ப்பாற்றல் அதிகமாக இருக்கக் கூடும். ஆனால், மரணங்களின் எண்ணிக்கை ஏன் குறைவாக இருக்கிறது என்பது உண்மையில் நமக்கு இன்னும் தெரியவில்லை'' என்கிறார் அவர்.
5. இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் வெவ்வேறு தகவல்களை அளிக்கின்றன
அமெரிக்கா அல்லது ஐரோப்பிய யூனியன் போல இந்தியாவிலும் மாநிலங்களுக்கு இடையில் கொரோனா வைரஸ் பாதிப்பு தகவல் தொகுப்பு மாறுபட்டதாக உள்ளது. டெல்லி, மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்களில் நாட்டின் மொத்த பாதிப்பில் 60 சதவீத நோயாளிகள் உள்ளனர்.

சில பகுதிகளில் பாதிப்பு எண்ணிக்கைகள் குறைந்துள்ள நிலையில், மற்ற பகுதிகளில் அந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மிக சமீபத்தில் தெற்கில் கர்நாடகா மற்றும் தெலங்கானாவில் நோய் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மற்றொரு தென்மாநிலமான ஆந்திரப்பிரதேசத்திலும், தொடர்ச்சியாக பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்த வைரஸ் பாதிப்புக்கான எதிர்வினை செயல்பாடு இதுவரையில் மையமாக்கப் பட்டதாக உள்ளது. அதில் மாற்றம் செய்ய வேண்டிய தேவை உள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு எதிரான வெற்றிகரமான செயல் திட்டத்துக்கு, இந்தியாவை ``மாவட்டங்களாகப் பிரிக்க வேண்டும்'' என்றும், அதற்கேற்ப அணுகுமுறைகளைக் கையாள வேண்டும் என்றும் டாக்டர் ஜமீல் கூறுகிறார். ``ஏனெனில் இன்னொரு முடக்க நிலை அமல் செய்தால், முந்தையதைவிட அது குறைந்த செயல் திறன் கொண்டதாகவே இருக்கும்'' என்று அவர் தெரிவித்துள்ளார்.
மாநில அளவிலான கண்ணோட்டத்தில் பார்ப்பதைக் காட்டிலும், இன்னும் சிறிய எல்லைகளாகப் பிரித்துக் கொண்டு, அந்தப் பகுதிக்கான தகவலை கவனிக்க வேண்டும் என்று டாக்டர் ரவி கூறுகிறார். ``ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும், நோய் அறிகுறி உள்ளதா என்பதை நாம் அறிய வேண்டும்'' என்று அவர் கூறியுள்ளார்.
சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

தொடர்புடைய செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












