விளையாட்டில் அரசின் தலையீட்டை எதிர்க்கும் இரான் ட்விட்டர்வாசிகள் மற்றும் பிற செய்திகள்

பட மூலாதாரம், AFP
விளையாட்டுத் துறையில் அரசின் தலையீடு அதிகமாக இருப்பதை எதிர்த்து, தங்கள் நாட்டின் விளையாட்டு அமைப்புகளை சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்பதில் இருந்து தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன், #BanIRSportsFederations என்ற ஹேஷ்டேக் பல்லாயிரம் இரான் ட்விட்டர் பயனாளிகளால் பகிரப்பட்டு வருகிறது.
பெண்கள் விளையாட்டு மைதானத்துக்குள் நுழையவே அனுமதி இல்லாத சூழலில், 2018ஆம் ஆண்டு நடந்த ஒரு கால்பந்து போட்டியின்போது, ஆண் வேடமிட்டு மைதானத்துக்குள் சென்ற 29 வயது பெண் ஒருவரின் சிறைக் காவலை நீதிமன்றம் ஒன்று நீட்டித்தது.
அதை எதிர்த்து அப்பெண் தலைநகர் டெஹ்ரானில் உள்ள அந்த நீதிமன்றத்தின் முன் தனக்குத் தானே தீயிட்டுக்கொண்டார். அவர் இப்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
இதே போல சயீத் மொல்லோய் எனும் ஜூடோ விளையாட்டு வீரர் இஸ்ரேல் வீரரை 2019 ஜூடோ உலக சாம்பியன்ஷிப் போட்டியில் எதிர்கொள்வதைத் தடுக்க, அதற்கு முன் அவர் ரஷ்ய வீரருடன் மோதவிருந்த போட்டியில் இருந்து விலகுமாறு அதிகாரிகள் அவரை அறிவுறுத்தினர்.

பட மூலாதாரம், Reuters
சர்வதேச அளவிலான போட்டிகளில் இஸ்ரேல் வீரர்களுடன் இரான் வீரர்கள் மோதுவதை இரான் தடுத்து வருகிறது.
தங்கள் அரசின் இத்தகைய நடவடிக்கைகளால் சர்வதேச விளையாட்டு அமைப்புகள் தங்கள் நாட்டின் விளையாட்டு அமைப்புகளை தடை செய்ய இரான் ட்விட்டர்வாசிகள் கோருகின்றனர்.

சந்திரயான் 2: தகவல்தொடர்பு துண்டிப்பு

பட மூலாதாரம், iSRO
இந்தியாவின் நிலவுப் பயணத் திட்டமான சந்திரயான் 2இன் விக்ரம் லேண்டர் உடனான சிக்னல் துண்டிக்கப்பட்டுவிட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
முதல் கட்டத்தில் அதன் செயல்பாடு சிறப்பாக இருந்ததாக கூறிய அவர், பின்னர் லேண்டரில் இருந்து தரை கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பு இழந்துவிட்டதாக அவர் கூறினார்.
விரிவாகப் படிக்க: சந்திரயான் 2: விக்ரம் லேண்டரிடம் இருந்து தகவல் தொடர்பு துண்டிப்பு

அஸ்ஸாமில் குடியுரிமைக்காக 19 லட்சம் மக்கள் சட்டப் போராட்டம்

அஸ்ஸாமில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியிடப்பட்ட இறுதி தேசிய குடியுரிமைப் பதிவேடு அல்லது என்.ஆர்.சி. பட்டியல், அப்துல் மஜீத் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு நம்பிக்கையின்மை மற்றும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அசாமில் பஸ்கா மாவட்டம் கட்டஜார் கிராமத்தில் வசிக்கும் அந்தக் குடும்பத்தில் உள்ள 8 பேரில், 7 பேரின் பெயர்கள் என்.ஆர்.சி. பட்டியலில் விடுபட்டுள்ளன.
என்.ஆர்.சி. பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ள 19 லட்சம் பேரின் நம்பிக்கையும் அசாமின் வெளிநாட்டு டிரிபியூனல்கள் மீது உள்ளன. ஆனால் இந்த சமயத்தில் நீண்ட சட்டப் போராட்டத்தின் தொடக்கப் புள்ளியில் நிற்பதால், இந்தியக் குடியுரிமை என்பது அவர்களுக்கு எட்டா கனியாகவே தோன்றுகிறது.

இலங்கையில் தமிழரோ, முஸ்லிமோ ஜனாதிபதியாக முடியுமா?

இலங்கையில் சில மாதங்களில் ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகவுள்ள நிலையில், நாட்டில் அது குறித்த கருத்துகள் தினமும் பேசப்படுகின்றன.
2015ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், மைத்திரிபால சிறிசேன வெற்றி பெறுவதற்கு தமிழ் பேசும் சமூகத்தின் வாக்குகள் பாரிய பங்களிப்பை வழங்கியிருந்தன.
விரிவாகப் படிக்க: இலங்கையில் தமிழரோ, முஸ்லிமோ ஜனாதிபதியாக முடியுமா?

4 பந்துகளில் 4 விக்கெட்டுகள்

பட மூலாதாரம், Getty Images
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 3வது டி20 கிரிக்கெட் போட்டியில் 4 பந்துகளில் தொடர்ந்து 4 விக்கெட்டுகளை எடுத்து இலங்கை வேகப்பந்துவீச்சாளர் லசித் மலிங்கா சாதனை படைத்துள்ளார்.
விரிவாகப் படிக்க: 4 பந்துகளில் 4 விக்கெட்டுகள் - மலிங்கா அசத்தல் சாதனை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












