அஸ்ஸாமில் குடியுரிமைக்காக 19 லட்சம் மக்கள் சட்டப் போராட்டம் - சவால்கள், துயரங்கள் #BBC_Ground_Report

அப்துல் மஜித்
படக்குறிப்பு, அப்துல் மஜித்
    • எழுதியவர், பிரியங்கா துபே
    • பதவி, பிபிசி

அஸ்ஸாமில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியிடப்பட்ட இறுதி தேசிய குடியுரிமைப் பதிவேடு அல்லது என்.ஆர்.சி. பட்டியல், அப்துல் மஜீத் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு நம்பிக்கையின்மை மற்றும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அசாமில் பஸ்கா மாவட்டம் கட்டஜார் கிராமத்தில் வசிக்கும் அந்தக் குடும்பத்தில் உள்ள 8 பேரில், 7 பேரின் பெயர்கள் என்.ஆர்.சி. பட்டியலில் விடுபட்டுள்ளன.

தனது குடும்பம் தொடர்பான குடியுரிமை குறித்த ஆவணங்களை பிளாஸ்டிக் பையில் வைத்திருக்கும் மஜீத், ``என்.ஆர்.சி.யில் எங்களுடைய பரம்பரையை நிரூபிக்க எனது தந்தையாரின் நில ஆவணங்களை நானும் என் அனைத்து சகோதரர்கள் மற்றும் சகோதரிகளும் பயன்படுத்தினோம். எனது மற்ற சகோதரர்கள் மற்றும் சகோதரிகள், அவர்களுடைய குடும்பங்கள் என என் குடும்பத்தில் மற்றவர்களின் பெயர்கள் எல்லாம் பட்டியலில் சேர்க்கப் பட்டுள்ளன.

என் குடும்பத்தினர் பெயர் மட்டும் இடம் பெறவில்லை. நான், என் மனைவி மற்றும் பிள்ளைகள் இதில் இருந்து நீக்கப் பட்டுள்ளோம். நாங்கள் அனைவருமே ஒரே ஆவணத்தைப் பயன்படுத்தியுள்ள நிலையில், எனது உடன் பிறந்தவர்களின் குடும்பங்கள் சேர்க்கப்பட்டு, நானும், என் பிள்ளைகளும் மட்டும் எப்படி நீக்கப்பட்டோம்? இது எனக்குப் புரியவில்லை'' என்று கூறினார். கவலையுடன் தலையைத் தொங்கப் போட்டிருக்கும் மஜீத், காலுக்குக் கீழே உள்ள தரையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

அவருடைய மூத்த மகன் முபாரக் உசேன், பள்ளி விலகல் சான்றிதழ், ஆதார் அட்டை, பான் கார்டு ஆகியவற்றை என்னிடம் காட்டினார். வெளிநாட்டு டிரிபியூனலில் இன்னொரு நீண்ட சட்டப் போராட்டத்தை நடத்துவதற்கு குடும்பத்துக்கு இனியும் தெம்பில்லை என்று அவர் கூறினார்.

``என்.ஆர்.சி. நடைமுறைக்கான ஆவணங்களைத் தயார் செய்ய ஏற்கெனவே நிறைய நேரத்தை செலவிட்டிருக்கிறோம், கடினமாக உழைத்திருக்கிறோம், நிறைய பணம் செலவு செய்திருக்கிறோம். ஜூலை 2018ல் வெளியான வரைவுப் பட்டியலில் தெளிவாக எங்களுடைய பெயர்கள் இடம் பெற்றிருந்தன. 1951 ஆம் ஆண்டு குடியுரிமைப் பதிவேடு, நில ஆவணங்கள், வாக்காளர் பட்டியலில் பெயர்கள் இடம் பெற்றுள்ளதன் சான்றளிக்கப்பட்ட நகல்கள், பள்ளிச் சானறிதழ்கள் என அனைத்தையும் நாங்கள் சமர்ப்பித்திருக்கிறோம். எங்களுடைய அனைத்து சான்றிதழ்களுமே செல்லத்தக்கவை. எனவே, இறுதிப் பட்டியலில் இருந்து எங்களுடைய பெயர்கள் ஏன் நீக்கப்பட்டன என்பது எனக்குத் தெரியவில்லை'' என்று அவர் கூறினார்.

இப்போதுள்ள சூழ்நிலையில், குடியுரிமை கோரி வழக்கு நடத்தும் வாய்ப்பு தங்கள் குடும்பத்தினருக்கு மிகவும் குறைவாகவே உள்ளது என்கிறார் அவர். ``என்.ஆர்.சி. விசாரணைகளின் போது ஏற்கெனவே நாங்கள் நிறைய பணம் செலவு செய்துவிட்டோம். நாங்கள் ஏழைகள். சிறிய அளவில் விவசாயம் செய்கிறோம். செலவுகளை சமாளிக்க தினசரி கூலி வேலைகளுக்குச் செல்கிறோம். இதுபோன்ற நீண்டகால டிரிபியூனல் விசாரணைக்கு நாங்கள் எப்படி பணம் திரட்ட முடியும்? வழக்கறிஞர் கட்டணத்தை நாங்கள் எப்படி செலுத்த முடியும்? மேலும், நாங்கள் நிறைய நம்பிக்கையுடன் இருந்தோம். இப்போது குடியுரிமை கிடைப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை'' என்று உறைந்த முகத்துடன் அவர் கூறினார்.

அஷியா கட்டுன்
படக்குறிப்பு, அஷியா கட்டுன்

என்ஆர்.சி. பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட காரணத்தாலேயே ஒருவரை வெளிநாட்டவர் என்று கூறிவிட முடியாது என்று அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூறுகிறது. குடிமக்கள் எந்த தேசத்தவர் என்பதை வெளிநாட்டு டிரிபியூனல்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப் பட்டுள்ளது. ஆனால் பணம் மற்றும் சட்ட உதவிகள் இல்லாத நிலையில், முபாரக் உசேன் போன்ற பலர் வெளிநாட்டு டிரிபியூனல்களை அணுகுவது என்பதே சவால் நிறைந்ததாக இருக்கும்.

டிரிபியூனல்களுக்குச் செல்பவர்களுக்கு என்ன நடக்கும்? இதுபற்றி கூடுதல் தகவல்களை அறிந்து கொள்வதற்காக அசாமில் பஸ்கா மாவட்டம் பாங்ஷிபாடி கிராமத்தில் உள்ள அஷியா காட்டூன் என்ற 42 வயது பெண்ணை நான் சந்தித்தேன்.

தனது குடியுரிமைக்காக வெளிநாட்டு டிரிபியூனலில் அவர் கடந்த 4 ஆண்டுகளாக வழக்காடி வருகிறார். நான் அவரை சந்தித்த போது, செப்டம்பர் மாத சூரிய வெப்பத்தில், ஒற்றை அறை கொண்ட தனது குடிசைக்கு வெளியே அமர்ந்து, கோதுமையை சுத்தம் செய்து கொண்டிருந்தார். கண்களில் சோகத்துடன், வெளிறிய முகத்துடன் மிகுந்த கவலையில் காணப்பட்டார். அவருடைய விஷயம் பற்றிக் கேட்டபோது, வீட்டுக்குள் வேகமாகச் சென்றவர், கனமான நீல நிற நீதிமன்ற கோப்பு ஒன்றை எடுத்துக் கொண்டு வந்தார். அஷியாவின் வழக்கு பற்றிய விவரங்களைக் கொண்டதாக மட்டும் அல்லாமல், அவருடைய இந்தியக் குடியுரிமை பற்றிய தகவல்களும் அதில் இருந்தன.

``2016 ஆம் ஆண்டு உள்ளூர் காவல் நிலையத்தில் இருந்து எனக்குத் தொலைபேசி அழைப்பு வந்தது. என்னுடைய பெயரில் வந்திருக்கும் நோட்டீஸை வாங்கிக் கொள்ள காவல் நிலையத்துக்கு வருமாறு காவலர்கள் என்னை கேட்டுக் கொண்டனர். நான் அங்கே சென்றபோது என்னை டி பிரிவில் அல்லது சந்தேகத்துக்குரிய வாக்காளர் பிரிவில் சேர்த்திருப்பதாகத் தெரிவிக்கப் பட்டது. அதன் பிறகு பார்பெடா மாவட்டத்தில் பாத்ஷலா நகருக்கு நான் சென்று ஒரு வழக்கறிஞரைப் பார்த்தேன்.

இரண்டு ஆண்டுகளாக அவர் என்னிடம் இருந்து பணம் கறந்து கொண்டிருந்தார். நீதிமன்றத்துக்கு என்னை அலைய வைத்தார். ஒரு முறை ஒரு ஆவணத்தைக் கேட்பார், அடுத்த முறை வேறொரு ஆவணத்தைக் கேட்பார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வழக்கறிஞரை மாற்றிவிட்டேன். ஆனால் இன்னும் பணம் செலவாகிக் கொண்டு தான் இருக்கிறது. ஆனால் 2018ல் வெளிநாட்டு டிரிபியூனலில் என்னுடைய வழக்கு விசாரணை தொடங்கியது.

முபாரக் ஹுசைன்
படக்குறிப்பு, முபாரக் உசேன்

அப்போதிருந்து எனக்கு ஆதரவாக சாட்சி அளிக்க என்னுடைய கிராம நல அலுவலர், தாய்வழி மாமா, என் பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள், மாநில தகவல் மைய அதிகாரிகள், நெருங்கிய உறவினர்களை அழைத்துச் சென்றிருக்கிறேன். இந்த வழக்கிற்காக என் பணம் அனைத்தையும் செலவு செய்துவிட்டேன். இன்னும் மிச்சம் பணம் ஏதும் இல்லாததால், கடந்த மூன்று மாதங்களாக என்னால் விசாரணைக்குச் செல்ல முடியவில்லை. என் வழக்கின் இப்போதைய நிலை என்ன என்று எனக்குத் தெரியாது'' என்று அவர் கூறினார்.

ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியான என்.ஆர்.சி. பட்டியலில் அஷியாவின் பெயர் இடம் பெறவில்லை. வெளிநாட்டு டிரிபியூனலில் குடியுரிமை வழக்கை நடத்துவதில் உள்ள பிரச்சினைகள் பற்றிக் கூறிய அவர், ``வழக்கறிஞர் மட்டும் என்னிடம் இருந்து இதுவரை 90 ஆயிரம் ரூபாய் வாங்கியிருக்கிறார். மற்ற செலவுகளுக்கு நான் கணக்கு வைக்கவில்லை. என்னுடைய கடின உழைப்பு, என்னுடைய நேரம், என் பணம் எல்லாம் இந்த வழக்கிற்காக போய்விட்டது. இப்போது என்னிடம் எதுவும் இல்லை. எனக்கு எதிராக தீர்ப்பு வந்தால் நான் உயர் நீதிமன்றத்துக்குச் செல்ல வேண்டும்.

பெரிய பெரிய நீதிமன்றங்களுக்கு வழக்கிற்கு செல்வதை நினைத்தால் பயமாக இருக்கிறது. என்னுடைய முன்னோர்கள், குடும்பத்தினரின் ஆவணங்கள் எல்லாம் செல்லத்தக்கவையாக இருக்கும் போது என்னுடைய ஆவணம் பற்றி மட்டும் ஏன் இவ்வளவு கேள்வி கேட்கிறார்கள் என்பது ஆச்சரியமாக உள்ளது. அவர்கள் எல்லோரும் இந்தியர்களாக இருக்கும் போது, நான் எப்படி வெளிநாட்டவராக இருக்க முடியும்?

அஷியாவை அடுத்து அசாமில் தன் குடியுரிமை வழக்கில் வெற்றி பெற்ற ஒரு வழக்கறிஞரை நான் சந்தித்தேன். அவரை இந்தியர் என்று வெளிநாட்டு டிரிபியூனல் அறிவித்துள்ளது. ஆனால் அவருடைய மற்றும் அவருடைய குடும்பத்தினரின் பெயர்கள் என்.ஆர்.சி. இறுதிப் பட்டியலில் நிராகரிக்கப் பட்டுள்ளன. அவருடைய வேண்டுகோளின்படி, இந்தச் செய்தியில் அவருடைய பெயர் ரகசியமாக வைக்கப் பட்டுள்ளது.

``1997 ஆம் ஆண்டில் என்னுடைய ஆவணங்களைப் பரிசீலனை செய்யாமல் என்னை -டி- வாக்காளர் என அறிவித்துவிட்டார்கள். வெளிநாட்டு டிரிபியூனலில் நான் வழக்காடி 2014ல் வெற்றி பெற்றேன். இப்போது உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, என்னுடைய பெயர் இயல்பாகவே என்.ஆர்.சி. பட்டியலில் சேர்க்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால் எனது பெயர் என்.ஆர்.சி. பட்டியலில் நிராகரிக்கப் பட்டிருப்பது எனக்கு அதிர்ச்சியாக உள்ளது. வெளிநாட்டு டிரிபியூனல் எனக்குச் சாதகமாகத் தீர்ப்பு அளித்துள்ளது. தேவையான எல்லா ஆவணங்களும் என்னிடம் உள்ளன. ஆனாலும் என் பெயர் பட்டியலில் இடம் பெறவில்லை'' என்று அவர் கூறினார்.

வெளிநாட்டு டிரிபியூனலில் வழக்காடுவதில் உள்ள பிரச்சினைகள் பற்றிப் பேசிய அவர், ``என்.ஆர்.சி. பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட அதிர்ச்சியில் இன்னும் இருக்கிறேன். சமூகத்தில் என் குடும்பத்தினரின் நற்பெயருக்கு இழுக்கு ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டு டிரிபியூனலில் வழக்கு நடத்தும்போது நான் உடல் ரீதியாகவும், மனதளவிலும் மிகவும் பாதிக்கப்பட்டேன். இப்போது திரும்பவும் பழைய நிலைக்கே வந்துவிட்டேன். ஆனால் நான் மட்டும் தனியாக இல்லை.

முஸ்தபா கடாம் ஹுசைன்
படக்குறிப்பு, முஸ்தபா கடாம் ஹுசைன்

சமர்ப்பிக்கப்பட்ட பத்து ஆவணங்களில் ஏதாவது ஒரு ஆவணத்தில் எழுத்துப் பிழை இருப்பது போன்ற அற்பமான தவறுகளைக் கூட காரணமாகக் கூறி, வெளிநாட்டு டிரிபியூனலில் குடியுரிமை வழக்குகளில் பலர் தோல்வி அடைந்துள்ளனர். இந்த நடைமுறை சவால் நிறைந்ததாக உள்ளது. வழக்கறிஞரான என்னுடைய பெயரே, பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறது என்றால், சட்ட நுணுக்கங்கள் பற்றி ஏதும் அறியாத கிராமப்புற சாமானிய மக்களின் நிலைமையை யோசித்துப் பாருங்கள்'' என்று கூறினார்.

மேலும் 200 டிரிப்யூனல்கள்

என்.ஆர்.சி. பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள், அசாமில் வெளிநாட்டு டிரிபியூனல்களில் குடியுரிமை விண்ணப்பங்களைப் புதிதாகத் தாக்கல் செய்வதற்கு குவஹாட்டியைச் சேர்ந்த வழக்கறிஞர் முஸ்தபா உசேன் உதவிகள் அளிக்கிறார். மாநில தலைநகரில் தன்னுடைய வீட்டில் பேட்டி அளித்த அவர், வெளிநாட்டு டிரிபியூனலில் விண்ணப்பம் சமர்ப்பிப்பதில் உள்ள சிக்கல்களை விளக்கினார். ``இப்போது அசாமில் 100 வெளிநாட்டு டிரிபியூனல்கள் செயல்பட்டு வருகின்றன. அரசு புதிதாக 200 டிரிபியூனல்களை அமைத்து வருகிறது. அவை விரைவில் செயல்படத் தொடங்கும். எனவே 300 டிரிபியூனல்கள் இருக்கும். குடியுரிமை கோரும் 19 லட்சம் விண்ணப்பங்களை விசாரிக்க 120 நாட்கள் உள்ளன. இந்த 19 லட்சம் விண்ணப்பங்களும் தனித்தனியானவை.

அதாவது ஒரு குடும்பத்தில் 8 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தால், அனைவரும் சேர்ந்து ஒரே விண்ணப்பமாக அளிக்க முடியாது. 8 பேருக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பங்களை விசாரிப்பவர்களுக்கு இது பெரிய சவாலாக இருக்கும். விண்ணப்பம் செய்பவர்களுக்கும் சவாலாகவே இருக்கும். என்.ஆர்.சி.யில் படிப்படியான, செயல்பாட்டு நடைமுறைகள் உள்ளன. வெளிநாட்டு டிரிபியூனல்களில் அப்படி கிடையாது. குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் நியாயமான விசாரணையை வெளிநாட்டு டிரிபியூனல்களில் முடிக்க வேண்டும் என்று விரும்பினால், குறித்த கால அவகாசத்துடன் கூடிய, படிப்படியான செயல்பாட்டு நடைமுறைகளை விசாரணைகளுக்கும் ஏற்படுத்த வேண்டும்'' என்று அவர் கூறினார்.

குடியுரிமை விண்ணப்பங்களை வெளிநாட்டு டிரிபியூனலில் தாக்கல் செய்வதில் முக்கியமான ஒரு நடவடிக்கை, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுதாரரின் ஆவணங்களுக்கு சான்று பெற்றாக வேண்டும் என்பதாக உள்ளது. சாமானிய மக்களுக்கு சான்று பெறும் நடைமுறை பற்றிக் குறிப்பிட்ட முஸ்தபா, ``அரசு அலுவலகங்களில் சான்றொப்பம் கோரி நூற்றுக்கணக்கான விண்ணப்பங்கள் நிலுவையில் இருக்கும் என்பது நமக்குத் தெரியும். சான்றொப்பம் அளிப்பதற்கு, கால அவகாசத்தை அரசு நிர்ணயிக்காவிட்டால், நீதி நடைமுறையை தாமதப்படுத்துவதாக இது அமைந்துவிடும்'' என்று கூறினார்.

குடியுரிமையை முடிவு செய்வதற்கான சட்டபூர்வ நடைமுறையின் அங்கமாக வெளிநாட்டு டிரிபியூனல்கள் இருக்கும் என்று இந்திய அரசு கருதுகிறது. தேவையானவர்களுக்கு சட்ட உதவி அளிக்கப்படும் என்று வெளியுறவு அமைச்சகம் உறுதி அளித்துள்ளது.

என்.ஆர்.சி. பட்டியல் வெளியான பிறகு ஊடகங்களுக்குத் தகவல் அளித்த, அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், ``பட்டியலில் விடுபட்டுவிட்டதாக இப்போதும் யாருக்காவது கவலை இருந்தால், அசாம் உயர் நீதிமன்றத்தையும், பிறகு உச்ச நீதிமன்றத்தையும் அணுகும் உரிமை அவர்களுக்கு உள்ளது. பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்படமாட்டார்கள். சட்டத்தின்படி அனைத்து வாய்ப்புகளையும் அவர்கள் பயன்படுத்தி முடிக்கும் வரையில், இந்தியக் குடிமக்களுக்கு அளிக்கப்படும் அனைத்து உரிமைகளும் அவர்களுக்கும் கிடைக்கும்'' என்று கூறியுள்ளார்.

என்.ஆர்.சி. பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ள 19 லட்சம் பேரின் நம்பிக்கையும் அசாமின் வெளிநாட்டு டிரிபியூனல்கள் மீது உள்ளன. ஆனால் இந்த சமயத்தில் நீண்ட சட்டப் போராட்டத்தின் தொடக்கப் புள்ளியில் நிற்பதால், இந்தியக் குடியுரிமை என்பது அவர்களுக்கு எட்டா கனியாகவே தோன்றுகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: