ட்ரம்பின் வரிவிதிப்பால் துருக்கியின் பண மதிப்பில் பெரும் சரிவு
கடந்த சில மணிநேரங்களில் நடைபெற்ற முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகின்றோம்.

பட மூலாதாரம், Getty Images
துருக்கியின் இரும்பு மற்றும் அலுமினியம் இறக்குமதிக்கான வரிவிதிப்பை அதிபர் டொனால்டு ட்ரம்ப் இரண்டு மடங்காக உயர்த்தியுள்ளார். இதனால் துருக்கியின் பணமதிப்பான லிராவின் மதிப்பில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
துருக்கியின் பணமானது "அமெரிக்காவின் ஸ்திரமான டாலர்" மதிப்புக்கு எதிராக கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது மேலும் அமெரிக்கா மற்றும் துருக்கி இடையேயான உறவில் சுமூக நிலை இல்லை என ஒரு ட்வீட்டில் தெரிவித்தார் அதிபர் ட்ரம்ப்.
அயல்நாட்டு சக்திகள் தலைமையிலான பிரசாரத்தின் ஒரு பகுதியாகவே லிராவின் மதிப்பில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என துருக்கி அதிபர் ரிஸீப் தயீப் எர்துவான் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வரி உயர்வு முடிவுக்கு எதிராக தக்க பதிலடி கொடுக்கப்படும் என துருக்கி எச்சரித்துள்ளது.
'' அமெரிக்காவின் இந்த முடிவு இரு நாடுகளுக்கு இடையேயான உறவை பாதிக்கும் என்பதை அந்நாடு தெரிந்துகொள்ள வேண்டும்'' என துருக்கியின் வெளியுறவுத் துறை அமைச்சககம் ஒரு அறிக்கையில் கூறியுள்ளது.
சில மணி நேரம் முன்பு தொழில்துறை அமைச்சகம் இணக்கமான போக்கை கடைப்பிடித்தது. அமெரிக்கா இன்னமும் தொழில்துறையில் கூட்டாளியாக இருப்பதாகவும் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றும் அழைப்பு விடுத்துள்ளது.
நேற்றைய தினம் துருக்கியின் லிரா மதிப்பு 13 சதவீதம் குறைந்துள்ளது.


பட மூலாதாரம், Donat Sorokin
உருக்காலையில் வெடித்த வாயு கலன்
பிரேசில் நகரமான இபாடிங்காவில் உள்ள ஒரு எஃகு ஆலையில் ஒரு எரிவாயு கலன் வெடித்ததையடுத்து ஆலையின் அருகே உள்ள பள்ளி மற்றும் வீடுகளில் உள்ளவர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளார்கள். முப்பது பேர் காயமடைந்துள்ளனர். இதில் யார் உயிருக்கும் ஆபத்து இல்லை.
நாட்டின் தென் கிழக்கில் உள்ள இந்த உருக்கலையானது உசிமினாஸ் எனும் நிறுவனத்தால் நடத்தப்பட்டுவருகிறது. எஃகை உருக்குவதற்கு இந்த கலனில் உள்ள வாயு பயன்படுத்தப்பட்டு வந்ததாக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
கலன் வெடித்ததால் ஏற்பட்ட தீ கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விபத்துக்கான காரணம் அறியப்படவில்லை.

சொந்தஊருக்கு திரும்பி புரட்சி செய்த ரோமானியர்கள்
லட்சக்கணக்கான ரோமானியர்கள் அரசுக்கு எதிராக தலைநகர் புக்காரெஸ்ட் மற்றும் சில நகரங்களில் பேரணி சென்றுள்ளனர். அயல்நாட்டில் வேலை பார்க்கும் ரோமானியர்கள் பலர் தங்களது நாட்டுக்கு பயணம் செய்து ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தினர் மேலும் அரசை ராஜினாமா செய்ய வலியுறுத்தினர்.
ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க புக்காரெஸ்ட் வன்முறை தடுப்பு காவல்துறையானது கண்ணீர் புகைகுண்டுகள் மற்றும் தண்ணீர் பீய்ச்சியடித்தல் ஆகிய யுக்திகளை பயன்படுத்தியது. ஆர்பாட்டக்காரர்கள் சிலர், சில பொருட்களை தூக்கியெறிந்து காவல் தடுப்புகளை மீற முயன்றுள்ளனர். காவல் துறை அதிகாரிகள் உள்பட இருநூறுக்கும் அதிகமான மக்களுக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், AFP/Getty

சௌதி கூட்டணிப்படைகள் மீது வெளிப்படையான விசாரணை தேவை
ஏமனில், சௌதி தலைமையிலான கூட்டணிப் படைகள் நடத்திய வான் தாக்குதலில் டஜன் கணக்கில் குழந்தைகள் கொல்லப்பட்டதில் நம்பகமான மற்றும் வெளிப்படையான விசாரணை தேவை என ஐநா பாதுகாப்பு கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.
வியாழக்கிழமை நடந்த தாக்குதலில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருந்த சாடா மாகாணத்தில் ஒரு பள்ளிப்பேருந்து சிக்கியது. குறைந்தபட்சம் 29 குழந்தைகள் இத்தாக்குதலில் இறந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நாற்பதுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாக ஹூதி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சௌதி தலைமையிலான கூட்டணிப்படைகள் ஏமனின் சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசை ஆதரிக்கின்றன. சௌதி அரேபியா மீது ஏவுகணை தாக்குதலை தொடரும் கிளர்ச்சியாளர்களை குறிவைத்தே தாக்குதல் நடத்தபடுவதாக கூட்டணிப்படைகள் கூறுகின்றன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












