இனவெறியுடன் 10 பேரை கொலை செய்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை
கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம்.
நாஜி ஆதரவு பெண்ணுக்கு ஆயுள் சிறை

பட மூலாதாரம், Reuters
ஜெர்மனியில் நாஜிக்களை ஆதரிக்கும் குழு ஒன்றைச் சேர்ந்த பீட் ஷேப்பே எனும் 43 வயதாகும் பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இன வெறியின் காரணமாக 10 கொலைகளில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
அப்பெண் மற்றும் அவரது குழுவினர் நால்வரும் 2000 மற்றும் 2007க்கும் இடையே எட்டு துருக்கிய வம்சாவளியினர், ஒரு கிரேக்க நாட்டவர் மற்றும் ஒரு பெண் காவல் அதிகாரியைக் கொலை செய்தது 2011இல் கண்டுபிடிக்கப்பட்டது.

பாதுகாப்புக்கு பணம் ஒதுக்கச் சொல்லும் டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images
நேட்டோ நாடுகள் தங்கள் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4%ஐ பாதுகாப்பு செலவினங்களுக்கு ஒதுக்குமாறு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
இது தற்போது அந்த நாடுகள் கொண்டுள்ள இலக்கைவிட இரண்டு மடங்கு அதிகமாகும்.

அகதிகளை எள்ளி நகையாடிய ஜெர்மன் அமைச்சர்

பட மூலாதாரம், AFP
தனது 69வது பிறந்தநாளன்று 69 ஆஃப்கன் அகதிகள் வெளியேற்றப்பட்டதாக எள்ளலாகப் பேசிய ஜெர்மன் உள்விவகார அமைச்சர் ஹோர்ஸ்ட் சீஹோஃபர் பதவி விலகுமாறு வலிறுத்தப்பட்டுள்ளது.
எட்டு ஆண்டுகளாக ஜெர்மனியில் வாழ்ந்து வந்த 23 வயது ஆஃப்கன் தஞ்சம் கோரி ஒருவர் காபூலில் இறந்துவிட்ட செய்தி வெளியானதை தொடர்ந்து அவருக்கு பதவி விலக வேண்டும் என்று எதிர்க் கட்சிகள் வலியுறுத்தின.
ஜூலை 4 அன்று 69 தஞ்சம் கோருபவர்கள் விமானம் மூலம் ஜெர்மனியில் இருந்து ஆப்கானிஸ்தான் அனுப்பப்பட்டனர்.

ஐ.எஸ் வசமுள்ள பகுதிகள் மீது சிரியா தாக்குதல்

பட மூலாதாரம், Reuters
சிரியாவின் தென்மேற்கு பகுதியில் இஸ்லாமிய அரசு அமைப்பின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் சிரியாவின் அரசு படைகளும், ரஷ்யப் படைகளும் தாக்குதல் நடத்தி வருகின்றன.
அப்பிராந்தியத்தில் கிளர்ச்சியாளர்கள் வசம் இருந்த பெரும்பாலான பகுதிகளை அரசு கைப்பற்றியுள்ளதைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

விமான விபத்தில் சிக்கியவர்கள் மீட்பு

பட மூலாதாரம், US COAST GUARD
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்திலுள்ள மவுண்ட் ஜம்போ பகுதியில் விபத்தில் சிக்கிய தனியார் விமானத்தில் இருந்த 11 பேரையும் அமெரிக்க கடலோரக் காவல் படையினர் மீட்டுள்ளனர்.
பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் தீவில் நடந்த இந்த விபத்தில் யாரும் உயிரிழக்கவில்லை. எனினும், பலர் பலத்த காயமடைந்துள்ளனர்.

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












