அரசு முதலீட்டில் பல பில்லியன் டாலர் மாயம்: மலேசிய முன்னாள் பிரதமர் கைது

மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்

பட மூலாதாரம், Getty Images

மலேசியாவில் அரசு முதலீட்டு நிதியத்தில் இருந்து பல பில்லியன் டாலர் பணம் காணாமல் போயுள்ளது தொடர்பாக முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கைது செய்யப்பட்டுள்ளதாக மலேசிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நீண்ட கார் அணிவகுப்போடு வீட்டிலிருந்து கொண்டு செல்லப்பட்ட அவர், புதன்கிழமை அதிகாரபூர்வமாக குற்றம் சாட்டப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த மே மாதம் நடைபெற்ற தேர்தலில் அதிர்ச்சி அளிக்கும் வகையிலான முடிவால் பதவியில் இருந்து அகற்றப்பட்ட நஜிப், 1MDB எனப்படும் அரசு முதலீட்டு நிதியத்தில் இருந்து பில்லியன்கணக்கான டாலர்கள் காணாமல்போனது தொடர்பாக விசாரிக்கப்பட்டு வந்தார். இதனால், நாட்டை விட்டு வெளியேற அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

270 மில்லியன் டாலருக்கு மேலான மதிப்புடைய ஆடம்பரப் பொருட்களை புலனாய்வாளர்கள் நஜிப் வீட்டிலிருந்து கைப்பற்றியுள்ளனர்.

இவற்றில் நஜிப்பின் மனைவிக்கு சொந்தமான 12 ஆயிரத்திற்கு மேலான ஆபரணங்களும் அடங்குகின்றன.

"வுல்ஃப் ஆப் வால் ஸ்டீட்" (Wolf of Wall Street) என்ற ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட திரைப்படத்தை தயாரித்த ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர், நஜிப்பின் வளர்ப்பு மகன் ஆகியோரை இன்று காரலை புலனாய்வாளர்கள் விசாரித்துள்ளனர்.

ஊழல் மோசடி

இந்த பண மோசடி தொடர்பான குற்றச்சாட்டுக்களை நஜிப் தொடாந்து மறுத்து வந்துள்ளார்.

அவர் பிரதமாராக இருந்தபோது, இந்த குற்றச்சாட்டுகளில் இருந்து மலேசிய அதிகாரிகளால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். இருப்பினும் பல நாடுகளில் அவர் மீது விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

270 மில்லியன் டாலருக்கு மேலான மதிப்புடைய ஆடம்பரப் பொருட்களை புலனாய்வாளர்கள் நஜிப் வீட்டிலிருந்து கைப்பற்றியுள்ளனர்.

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, 270 மில்லியன் டாலருக்கு மேலான மதிப்புடைய ஆடம்பரப் பொருட்களை புலனாய்வாளர்கள் நஜிப் வீட்டிலிருந்து கைப்பற்றியுள்ளனர்.

மலேசியாவை விட்டு வெளியேற அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரை நிதி முனையமாக மாற்றி, தொலைநோக்கு முதலீடுகள் மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு, 1MDB எனப்படும் அரசு முதலீட்டு நிதியம் 2009ம் ஆண்டு நஜிப்பால் உருவாக்கப்பட்டது.

ஆனால், 2015ம் ஆண்டு தொடக்கத்தில், சுமார் 11 பில்லியன் டாலர் தொகையை வங்கிகளுக்கும், கடன் பத்திரதாரர்களுக்கும் கொடுக்க தவறிய இந்த நிதியம் தொடர்பாக எதிர்மறையான விமர்சனங்கள் வர தொடங்கின.

ஆவணங்களில் புலனாய்வு மேற்கொண்டதில் இந்த நிதியத்தில் இருந்து நஜிப்பின் தனிப்பட்ட வங்கி கணக்குக்கு பல லட்சக்கணக்கான டாலர் சென்றுள்ளதென குற்றஞ்சாட்டப்படுவதாக அப்போது வால் ஸ்டீட் ஜர்னல் செய்தி வெளியிட்டது.

1MDB எனப்படும் அரசு முதலீட்டு நிதியம் மற்றும் பொது நிதிகளில் இருந்து பணம் எடுத்துள்ளதை நஜிப் தொடர்ந்து மறுத்து வருகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :