மலேசியா: முன்னாள் பிரதமர் நஜிப் நாட்டை விட்டு வெளியேற தடை

நஜிப் ரசாக் மற்றும் அவரது மனைவி

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, நஜிப் ரசாக் மற்றும் அவரது மனைவி

மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், நாட்டில் இருந்து வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளது என குடியேற்றத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

நஜிப் ரசாக்கும், அவரது மனைவியும் விடுமுறையைக் கழிக்க வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், அதிகாரிகள் இவ்வாறு கூறியுள்ளனர்.

மலேசியாவை 60 ஆண்டுகள் ஆட்சி செய்த, நஜிப் ரசாக்கின் பேரீஸான் நேஷ்னல் கூட்டணி அதிர்ச்சித் தோல்வியடைந்தது.

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீது ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்டது.

பொது தேர்தலில் வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியை பெற்றஅந்நாட்டின் முன்னாள் பிரதமர் மகாதீர் மொஹமத், கடந்த வியாழக்கிழமையன்று, 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பிரதமராக பதவியேற்றுள்ளார்.

மகாதீர் மொஹமத்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, மகாதீர் மொஹமத்

நஜிப் ரசாக் மீதான ஊழல் குற்றச்சாட்டு வழக்குகளில் ஒரு முழுமையான விசாரணை நடக்கும் என பிரதமர் மகாதீர் மொஹமத் கூறியிருந்தார்.

நஜிப் ரசாக் மற்றும் அவரது குடும்பத்தினர் வெளிநாட்டுக்குச் செல்ல அனுமதிக்கப்படமாட்டாது என குடியேற்றத் துறை அதிகாரிகள் தன்னிடம் தெரிவித்துள்ளதாக மகாதீர் ட்வீட் செய்துள்ளார்.

நஜிப்பும், அவரது மனைவியும் விடுமுறையைக் கழிக்க சனிக்கிழமையன்று இந்தோனீசிய தலைநகர் ஜகார்த்தா செல்ல திட்டமிட்டிருந்தாக நம்பப்படுகிறது.

அரசு முதலீட்டு நிதியில் ஊழல் மற்றும் முறைகேடு செய்ததாக நஜிப் குற்றம்சாட்டப்பட்டார்.

இந்த ஊழல் குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக நாட்டில் புகைந்துகொண்டிருந்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: