மலேசியா: முன்னாள் பிரதமர் வீட்டில் சோதனை - சிக்கியது விலையுயர்ந்த பொருட்கள்
மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்குக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் விலையுயர்ந்த பொருட்கள் நிரம்பிய நூற்றுக்கணக்கான பெட்டிகளும், கைபைகள் நிறைய வெளிநாட்டு பணமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக மலேசிய போலிஸார் தெரிவித்துள்ளனர்.

பட மூலாதாரம், EPA
நாட்டின் வளர்ச்சி நிதியமான 1எம்டிபி தொடர்பான விசாரணையில், தலைநகர் கோலாலம்பூரில் உள்ள நஜிபுக்கு சொந்தமான இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன.
நாட்டின் வளர்ச்சி நிதியத்தில் ஊழல் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளே தனது முன்னாள் கூட்டாளியான மஹதீர் முகமதிடம் நஜிப் தோல்வியுற்றதுக்கு முக்கிய காரணமாகும்.
நஜிப்பால் அமைக்கப்பட்ட அந்த நிதியத்துக்காக வந்த பல பில்லியன் டாலர்கள் கணக்கில் வரவில்லை.
700மில்லியன் டாலர்களை நஜிப் எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது ஆனால் அதை நஜிப் எப்போதும் மறுத்து வருகிறார்.
மலேசிய அதிகாரிகளால் அதன் விசாரணை முடிக்கப்பட்டு நஜிப் விடுவிக்கப்பட்டார்; ஆனால் பிற நாடுகளால் அது விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த விசாரணையை மீண்டும் துவங்க முடிவு செய்வதாக தற்போதைய பிரதமர் மஹதீர் தெரிவித்தார்; மேலும் அந்த பணத்தை மீட்க முடியும் என தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். நஜிப் நாட்டை விட்டு வெளியேறுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்:
நஜிப்பின் அலுவலகம், தனியார் குடியிருப்பு மற்றும் தலைநகர் கோலாலம்பூரில் நஜிப்புக்கு சொந்தமான பல இடங்களில் பல நாட்களாக ஊடகங்களின் முன்னிலையில் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
நஜிப்பின் வீட்டில் இருந்து எடுக்கப்பட்ட லாக்கர் எனப்படும் பாதுகாப்பு பணப்பெட்டி ஒன்றை திறப்பதற்காக பூட்டு திறப்பவர் அழைத்து வரப்பட்டார்.
வெள்ளிக்கிழமையன்று வர்த்த குற்றவியல் விசாரணை பிரிவின் தலைவர் அமர் சிங், விலையுயர்ந்த கைப்பைகள் அடங்கிய 284 பெட்டிகள் அதில் கண்டறியப்பட்டதாக தெரிவித்தார்.
"எங்களது ஆட்கள் இந்த பைகளை சோதனை செய்ததில்,72 பைகளில் மலேசியாவின் ரிங்கெட், அமெரிக்க டாலர்கள், கைகடிகாரங்கள், நகைகள் ஆகியவை கண்டறியப்பட்டன." என்று அவர் தெரிவித்தார்.
தற்போது கைப்பற்றப்பட்ட நகையின் அளவை கூற இயலாது என்றும் நகைகள் பெரியளவில் இருக்கலாம் என்றும் ராயட்டர்ஸ் செய்தி முகமையிடம் அவர் குறிப்பிட்டுள்ளார்
இந்த சோதனை தேவையற்று தன்னை துன்புறுத்தவதாகவும், கைப்பற்றப்பட்ட பொருட்கள் பெரிதாக மதிப்பற்றவை என்றும் நஜிப் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












