2016 ஆம் ஆண்டில் உலகம் கண்டவை: ஒரு மீள் பார்வை
2016 ஆம் ஆண்டு உலகளவில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.
கோல்டன் குளோப் விருதுகளை அள்ளிய 'தி ரெவனன்ட்' மற்றும் 'தி மார்ஷியன்'
சிறந்த திரைப்படங்கள் மற்றும் அமெரிக்க தொலைக்காட்சி தொடர்களுக்கு வழங்கப்படும் விருது கோல்டன் குளோப். நாடக பிரிவில் 'தி ரெவனன்ட்' திரைப்படத்திற்கும், இசை அல்லது நகைச்சுவை பிரிவில் 'தி மார்ஷியன்' திரைப்படத்திற்கும் இந்த ஆண்டின் 73வது கோல்டன் குலோப் விருதுகள் வழங்கப்பட்டன. நாடக பிரிவில் சிறந்த நடிகராக லியனார்டோ டிகாப்ரியோவும், நடிகையாக பிரி லார்சனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இசை அல்லது நகைச்சுவை பிரிவில் சிறந்த நடிகராக மேட் டாமனும், நடிகையாக ஜெனிஃப்பெர் லாரன்ஸும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அதேபோல், ஆண்டுத்தோறும் வழங்கப்படும் ஆஸ்கர் விருதுக்கு சிறந்த படமாக ஸ்பாட் லைட் திரைப்படமும், சிறந்த நடிகராக லியனார்டோ டிகாப்ரியோவும், சிறந்த நடிகையாக பிரி லார்சனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பட மூலாதாரம், Getty Images
ஸீகா வைரஸ் : குழந்தை பெற்றெடுக்க 2 ஆண்டுகள் வரை ஒத்திவைக்க பரிந்துரை
பிரேசில் நாட்டில் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஸீகா வைரஸ் திடீரென பரவியது. இதன் காரணமாக, கொலம்பியா, எக்வடார், எல் சால்வடோர் மற்றும் ஜமைக்கா ஆகிய நாடுகளில் குழந்தைகள் பெற்றெடுப்பதை 2 ஆண்டுகள் வரை ஒத்திவைக்க அதிகாரிகள் பரிந்துரைத்தனர். ஏடிஸ் என்கிற கொசுக் கடியால் பரவும் இது, குழந்தைகள் பாதிப்புடன் பிறப்பதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. பிறக்கும் குழந்தைகளின் மூளையில் மிகவும் அரிதான மூளை பாதிப்பை இந்த ஸீகா வைரஸ் ஏற்படுத்துகிறது.

பட மூலாதாரம், Getty Images
சர்வதேச எதிர்ப்புகளையும் மீறி வட கொரியா ஏவுகணை சோதனை
நீண்ட தூரம் செல்லும் ராக்கெட் ஒன்றை விண்வெளியில் வட கொரியா ஏவி, ஐ.நா சபையின் பல ஒப்பந்தங்களை மீறியது மட்டுமின்றி உலக நாடுகளின் கண்டனங்களுக்கும் உள்ளானது. இதற்கு முன்னர், ஹைட்ரஜன் வெடிகுண்டு சோதனையை முதல் முறையாக வெற்றிகரமாக மேற்கொண்டதாக வட கொரியா தெரிவித்திருந்தது. தொடர் ஏவுகணை சோதனைகளால் சர்ச்சையில் சிக்கிய வட கொரியா மீது அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் மற்றும் ஐ.நா சபை பல பொருளாதார தடைகளை விதித்தது குறிப்பிடத்தக்கது.

பட மூலாதாரம், Getty Images
1000 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றிணைந்த கிறிஸ்துவ மதம்
கிறிஸ்துவர்கள் இடையேயான ஒற்றுமையை மீண்டும் சீரமைக்கும் நோக்கில் போப் பிரான்சிஸ் மற்றும் ரஷ்ய மரபு வழி முதுபெரும் தலைவருமான கிர்ரியல் இரு திருச்சபைகள் இடையேயான வரலாற்று சிறப்புமிக்க பேச்சுவார்த்தையை கியூபாவில் நடத்தினர். 11 ஆம் நூற்றாண்டில் கிறிஸ்துவ மதத்தின் வடக்கு மற்றும் கிழக்கு கிளைகள் தனித்தனியாக பிரிந்து சென்றதிலிருந்து போப் மற்றும் ரஷ்ய திருச்சபைகளின் தலைவர் இடையே நடைபெறும் முதல் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

பட மூலாதாரம், Getty Images
75 பில்லியன் டாலர்கள் சொத்துக்களுடன் முதல் இடத்தில் பில் கேட்ஸ்
2016 ஆம் ஆண்டிற்கான உலகில் உள்ள பில்லியனர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டது. இந்த பட்டியலில் 75 பில்லியன் டாலர்கள் சொத்துக்களுடன் பில் கேட்ஸ் முதல் இடத்தை வகிக்கிறார். ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுகர்பெர்க் 44.6 பில்லியன் டாலர்கள் சொத்துக்களுடன் ஆறாம் இடத்தை பெற்றுள்ளார். 19.8 பில்லியன் டாலர்கள் சொத்துக்களுடன் முகேஷ் அம்பானி 36வது இடத்தையும், 16.7 பில்லியன் டாலர்கள் சொத்துக்களுடன் திலீப் சங்வி 44வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
விண்வெளியில் 340 நாட்கள் : சாதனை படைத்த அமெரிக்க, ரஷ்ய விண்வெளி வீரர்கள்
அமெரிக்க விண்வெளி வீரர் ஸ்காட் கெல்லி மற்றும் ரஷ்ய விண்வெளி வீரர் மிகாய்ல் கொர்னியன்கோவும் தங்களுடைய 340 நாள் விண்வெளி பயணத்தை முடித்துவிட்டு பத்திரமாக பூமிக்குத் திரும்பியுள்ளனர். சாதாரணமாக விண்வெளி நிலையத்தில் ஆறு மாதங்களுக்குத்தான் ஒருவர் தங்கவைக்கப்படுவர். ஆனால், புவியீர்ப்பு விசையின் தாக்கம் குறைவதால் உடலில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் பற்றி ஆராய்வதற்காக இவர்கள் அதிக காலம் தங்கவைக்கப்படுகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
90 ஆண்டுகளுக்குப்பிறகு கியூபா மண்ணில் அமெரிக்க அதிபர்
அமெரிக்கா மற்றும் கியூபா வரலாற்றில் இந்நாள் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. அமெரிக்க அதிபர் ஒபாமா இரண்டு நாள் சுற்றுப்பயணமாக கியூபா சென்றார். 1959 ஆம் ஆண்டில் நடைபெற்ற புரட்சியை தொடர்ந்து, அமெரிக்கா - கியூபா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. இச்சூழலில், கியூபாவிற்கு விஜயம் மேற்கொண்டார் ஒபாமா. 90 ஆண்டுகள் கழித்து கியூபாவிற்கு வருகைததரும் முதல் அமெரிக்க அதிபர் என்ற பெருமையை ஒபாமா பெற்றார்.

பட மூலாதாரம், Getty Images
கசிந்த 11.5 மில்லியன் ரகசிய ஆவணங்கள் ; கிடுகிடுக்க வைக்கும் பனாமா முறைகேடு
உலகின் அதிகாரமிக்க செல்வந்தர்கள் தங்களுடைய செல்வத்தை வரி ஏய்ப்பு செய்து பதுக்க தேர்ந்தெடுத்த நிறுவனம்தான் பனாமா நாட்டைச் சேர்ந்த சட்ட நிறுவனம் மொஸாக் ஃபொன்செக. இந்த நிறுவனம் வரி ஏய்க்க உதவும் நாடுகளை எப்படி பயன்படுத்தியிருக்கிறது என்ற விவரம் கசிந்துள்ளது. இந்நிறுவனத்தின் சுமார் 11.5 மில்லியன் ஆவணங்கள் பொதுவெளியில் வெளியிடப்பட்டன. இந்த ஆவணங்களை 78 நாடுகளில் 107 ஊடக நிறுவனங்கள் ஆராய்ந்து செய்தி வெளியிட்டுள்ளன.

லண்டனின் முதல் முஸ்லிம் மேயர் சாதிக் கான்
பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் முதன்முறையாக பிரிட்டன் தலைநகர் லண்டன் மாநகரின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பெயர் சாதிக் கான். தொழிற்கட்சி சார்பில் போட்டியிட்ட சாதிக் கான் 56.8 சதவிகித வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். தன் வெற்றி குறித்து பேசிய சாதிக் கான், "அச்சுறுத்தும் அரசியலை" வாக்காளர்கள் புறக்கணித்திருப்பதை இந்த தேர்தல் முடிவுகள் காட்டுவதாகவும், லண்டன் மாநகரம் தனக்கு அளித்த அனைத்து வாய்ப்புகளையும் லண்டன் குடிமக்கள் அனைவருக்கும் கிடைக்கச் செய்வதே தமது குறிக்கோள் என்றும் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
தாலிபன் தலைவரை ஆளில்லா விமானம் மூலம் வீழ்த்திய அமெரிக்கா
பாகிஸ்தானில் இயங்கிவரும் பயங்கரவாத குழுவான தாலிபன் அமைப்பின் தலைவர் முல்லா அக்தர் முகமது மன்சூர். ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானம் மூலம் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார். இதனை உறுதி செய்த அமெரிக்க அதிபர் ஒபாமா, தாலிபன்கள் அமைதிப் பேச்சுவார்த்தையில் சேர்ந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

பட மூலாதாரம், Getty Images
கடலில் விழுந்து நொறுங்கிய எகிப்து விமானம்; தொடரும் மர்மம்
ஈஜிப்ட் ஏர் என்ற விமான நிறுவனத்திற்கு சொந்தமான எம் எஸ் 804 என்ற விமானம் பாரிஸிலிருந்து கெய்ரோவை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. மத்திய தரைக்கடல் மீது பறந்து கொண்டிருந்த போது நடுவானிலே ரேடாரின் பார்வையிலிருந்து விலகிப்போனது. பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் என மொத்தம் 69 பேர் அதில் பயணம் மேற்கொண்டிருந்தனர். விமானம் கடலில் மோதி விபத்துக்குள்ளானது. யாரும் உயிர்பிழைக்கவில்லை. உயிரிழந்த பயணிகளின் உடல்களில் வெடி பொருட்களின் தடயங்கள் இருந்ததாக எகிப்து விமான போக்குவரத்து அமைச்சகம் சமீபத்தில் அறிவித்து விசாரணை நடத்தி வருகிறது.

பட மூலாதாரம், Getty Images
கொத்து கொத்தாக மத்திய தரைக்கடலில் மடிந்த குடியேறிகள்
இந்தாண்டு குடியேறிகளுக்கு மிகவும் மோசமான ஆண்டாக அமைந்தது. உள்நாட்டு போர் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் சொந்த நாடுகளிலிருந்து வெளியேறி தஞ்சம் பெறுவதற்காக ஆபத்தான கடல் பயணத்தை மேற்கொள்கின்றனர். அவ்வாறு மே 23 லிருந்து 29 வரை ஒருவாரத்தில் மட்டும் குடியேறிகளை சுமந்து சென்ற மூன்று கப்பல்கள் மத்திய தரைக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளன. இதில், மட்டும் சுமார் 700 மூழ்கி உயிரிழந்ததாக மீட்புதவி பணியாளர்கள் கூறுகின்றனர்.

குத்துச்சண்டை உலகின் ஜாம்பவான் முகமது அலி மறைவு
சர்வதேச அளவில் குத்துச்சண்டையில் தனி முத்திரை பதித்து, ஜாம்பவானாக விளங்கியவர் முகமது அலி. அவர் தன்னுடைய 74 வது வயதில் காலமானார். அதிக எடைப்பிரிவில் மூன்று முறை உலகப்பட்டங்களை வென்றுள்ள முகமது அலி சுவாச பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 1964 ஆம் ஆண்டில் தன்னுடைய முதல் உலக பட்டத்தை வென்றவுடன் இஸ்லாத்திற்கு மதம் மாறினார். அவருடைய இயற்பெயர் காசியஸ் க்ளே.

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்காவில் ஒருபாலுறவுக்காரர்கள் விடுதியில் 49 பேர் சுட்டுக் கொலை
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் பல்ஸ் என்ற ஒருபாலுறவுக்காரர்கள் இரவு கேளிக்கையகத்தில் ஒமர் மடீன் என்ற 29 வயது இளைஞர்அதிகாலை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 49 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 53 பேர் காயம் அடைந்தனர். துப்பாக்கிச்சூட்டையும் நடத்திவிட்டு அதுகுறித்த தகவல்களையும் பதற்றமின்றி தொலைபேசி மூலம் போலிசாருக்கு தெரியப்படுத்தி இருக்கிறார் உமர் மடீன். நவீன அமெரிக்க வரலாற்றில் ஓர்லாண்டோ துப்பாக்கிச்சூடு ஒரு மோசமான படுகொலை சம்பவமாகும்.

பட மூலாதாரம், Getty Images
கொலம்பியாவில் 50 ஆண்டுகால மோதலை முடிவுக்கு கொண்டு வந்த ஒப்பந்தம்
கொலம்பியாவில் கடந்த 52 ஆண்டுகளாக ஃபார்க் போராளிகள் மற்றும் அரசாங்கம் இடையே நடைபெற்று வந்த உள்நாட்டு மோதல் ஒரு சமாதான அமைதி ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது. இந்த ஒப்பந்தத்தில், ஃபார்க் போராளி குழுவின் தலைவர் டிமோலியோன் ஜிம்மேனேஸ் மற்றும் கொலம்பிய அதிபர் யுவான் மானுவெல் சாண்டோஸ் ஆகியோர் கூட்டாக கையெழுத்திட்டிருந்தனர். ஆனால், இந்த ஒப்பந்தத்தை அமல்படுத்த அக்டோபர் மாதம் நடத்தப்பட்ட மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் கொலம்பிய மக்கள் இதனை நிராகரித்தனர். இந்நிலையில், கடந்த நவம்பர் மாதம் திருத்தப்பட்ட புதிய ஒப்பந்தம் ஒன்றில் இரு தரப்பினரும் கையெழுத்திட்டுள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய ஐக்கிய ராஜ்ஜியம்
28 நாடுகள் உறுப்பினராக உள்ள ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேற வேண்டுமா அல்லது தொடர்ந்து நீடிக்க வேண்டுமா என்பதை முடிவு செய்ய ஐக்கிய ராஜ்ஜியத்தில் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பிரிட்டன் வெளியேறக் கூடாது என்று பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரன் பிரசாரம் மேற்கொண்டிருந்தார். வாக்கெடுப்பின் இறுதியில் ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேற வேண்டும் என்பதற்கு ஆதரவாக மக்கள் அதிகளவில் வாக்களித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து, பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரன் பதவியை ராஜினாமா செய்தார். தற்போது, ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெறியேறுவதற்கான நடவடிக்கைகள், பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பட மூலாதாரம், Getty Images
தடையை நீக்கியது அமெரிக்கா; ராணுவத்தில் திருநங்கைகளுக்கு பணி
உலகிலே மிகப்பெரிய ராணுவத்தை கொண்டுள்ள அமெரிக்கா, தனது ராணுவத்தில் திருநங்கைகளை பணியமர்த்துவதிலிருந்த தடையை நீக்கியது. அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர் ஆஷ் கார்டர், ராணுவ தலைமையகமான பென்டகன் விதித்திருந்த தடை உத்தரவை நீக்கினார். இந்த விதிமுறை காலாவதி ஆகிவிட்டதாகவும், ராணுவத்திற்கு தீங்கிழைப்பதாகவும் ஆஷ் கார்டர் கருத்து தெரிவித்திருந்தார். அமெரிக்காவின் இந்த தடை நீக்க உத்தரவு திருநங்கைகளுக்கான உரிமைகளுக்காக போராடும் பிரசாரகர்களால் வரவேற்கப்பட்டது.

பட மூலாதாரம், AFP
போக்கிமான் கோ உலகளவில் வெளியான தினம்
இந்த ஆண்டு வெளியான ஸ்மார்ட் ஃபோன் விளையாட்டுகளிலேயே மிகவும் பிரபலமானது இந்த போக்கிமான் கோ விளையாட்டு. நின்டெண்டோ மற்றும் நியான்டிக் நிறுவனங்கள் இணைந்து இதனை வெளியிட்டன. இளம் பருவத்தினரிடையே மிகவும் வேகமாக பரவிய இந்த விளையாட்டு நின்டெண்டோ நிறுவனத்திற்கு பல பில்லியன் கணக்கான டாலர்களை வருவாயாக குவித்தது.

பட மூலாதாரம், Getty Images












