விண்வெளி நிலையத்தில் ஓராண்டு தங்கபோகும் இருவர்: நாஸா சோதனை
பூமியைச் சுற்றி வலம் வந்துகொண்டிருக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இதுவரை இல்லாதபடிக்கு தொடர்ந்து 12 மாதங்கள் தங்கப்போகும் இருவர் உட்பட மூன்று விண்வெளி வீரர்களை ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம் அந்த விண்வெளி நிலையத்தில் கொண்டுபோய்ச் சேர்த்துள்ளது.

பட மூலாதாரம், Reuters
அமெரிக்கரான ஸ்காட் கெல்லியும் ரஷ்யரான மிகாய்ல் கொர்னியன்கோவும் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரையில் சர்வதேச விண்வெளி நிலையத்திலேயே தங்கியிருப்பார்கள்.
சாதாரணமாக விண்வெளி நிலையத்தில் ஆறு மாதங்களுக்குத்தான் ஒருவர் தங்கவைக்கப்படுவார். ஆனால் புவியீர்ப்பு விசையின் தாக்கம் குறைவதால் உடலில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் பற்றி ஆராய்வதற்காக இவர்கள் அதிக காலம் தங்கவைக்கப்படுகின்றனர்.
விண்ணில் எடையுணராமையால் கெல்லிக்கு ஏற்படும் மாற்றங்கள், கெல்லியுடன் இரட்டையராகப் பிறந்தவருக்கு இங்கே பூமியில் உடலில் ஏற்படும் மாற்றங்களோடு ஒப்பிடப்படும்.
எதிர்காலத்தில் செவ்வாய்க் கிரகத்துக்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கான தகவல் சேகரிப்புக்காக நாஸா இந்த சோதனையை நடத்துக்கிறது.
விண்வெளியில் தொடர்ச்சியாக அதிக காலம் தங்கியிருந்தவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் வலெரி பொலியகொவ் என்ற ரஷ்ய விண்வெளி வீரர் ஆவார்.
ரஷ்யாவின் 'மிர்' விண்வெளி நிலையத்தில் இவர் ஒரு முறை தொடர்ந்து 14 மாதங்கள் தங்கியிருந்தார்.
தற்போது விண்வெளி நிலையம் சென்றுள்ள ரஷ்யரான கென்னடி படால்கா, ஆறு மாதங்களில் பூமி திரும்பிவிடுவார்.












