ஆப்பிள் நிறுவனத்தின் பங்கு மதிப்பு ஒரே நாளில் 10% சரிவு

பட மூலாதாரம், AFP
சீனாவில் ஆப்பிள் அலைபேசிகளின் விற்பனை குறைந்ததே நிறுவனத்தின் வருவாய் வீழ்ச்சிக்கு காரணமென்று அந்நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி டிம் குக் தெரிவித்ததையடுத்து வியாழக்கிழமை அன்று ஆப்பிளின் பங்குகள் சுமார் 10 சவீத வீழ்ச்சியை கண்டுள்ளன.
கடந்த வருடத்தின் கடைசி மூன்று மாதங்களில் ஆப்பிளின் வருவாய் 86 பில்லியன் டாலர்களாக இருக்குமென்று கணிக்கப்பட்டிருந்த நிலையில், அதைவிட ஐந்து பில்லியன் டாலர்கள் குறைவான வருவாய் கிடைத்துள்ளதாக கடந்த புதன்கிழமையன்று அந்நிறுவனத்தின் தரப்பில் அறிவிக்கப்பட்டது.
முன்னதாக, சீன சந்தைகளை அதிகளவு சார்ந்து செயல்படும் ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த பர்பெர்ரி, எல்விஎம்எச், ஹெர்மஸ் ஆகிய நிறுவனங்களின் பங்கு மதிப்பும் வீழ்ச்சியை கண்டன.
மற்ற நுகர்வோர் பொருள் தயாரிப்பு நிறுவனங்களை போன்று ஆப்பிள் நிறுவனத்துக்கும் வருடத்தின் இறுதிப்பகுதியில் வரும் விழாக்கால விற்பனைகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்நிலையில், 2018ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் ஆப்பிளுக்கு கிடைத்துள்ள வருவாய் அதற்கு முந்தைய ஆண்டின் அதே காலாண்டில் கிடைத்துள்ள வருவாயை விட ஐந்து சதவீதம் குறைவாகும்.
அதுமட்டுமின்றி, கடந்த 2016ஆம் ஆண்டிலிருந்து இதுவரையிலான காலகட்டத்தில் ஆப்பிள் நிறுவனம் பதிவு செய்யும் முதல் காலாண்டு வருவாய் வீழ்ச்சி இதுவாகும்.
இந்த வீழ்ச்சிக்கு முன்னர்வரை அமெரிக்காவின் மிகப் பெரிய தனிப்பெரும் நிறுவனமாக விளங்கிய ஆப்பிளின் மதிப்பு தற்போது மைக்ரோசாப்ட், அமேசான், கூகுளின் தாயக நிறுவனமான ஆல்பாபெட் ஆகியவற்றைவிட குறைவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
என்ன சொன்னார் டிம் குக்?
ஆப்பிள் நிறுவனத்தின் காலாண்டு வருவாய் நிலவரம் குறித்து அதன் முதலீட்டாளர்களுக்கு கடந்த புதன்கிழமையன்று டிம் குக் எழுதிய கடிதத்தில், சீனாவில் குறிப்பாக ஹாங்காங், தைவான் பிராந்தியத்தில் ஏற்பட்ட விற்பனை குறைவே அந்நிறுவனத்தின் மொத்த வருவாய் இழப்பில் முக்கிய இடத்தை வகிப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

பட மூலாதாரம், Getty Images
"வளர்ந்து வரும் சந்தைகளில் எங்களுக்கு முன்னுள்ள சவால்கள் குறித்து நாங்கள் முன்னரே கணித்திருந்தாலும், சீனாவின் இந்த குறிப்பிட்ட பகுதிகளில் ஏற்பட்டுள்ள சரிவு குறித்து நாங்கள் முன்னறிந்திருக்கவில்லை" என்று டிம் குக் தெரிவித்திருந்தார்.
அதேவேளையில், வளர்ந்த சந்தைகளை சேர்ந்த வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்ததைவிட குறைந்த எண்ணிக்கையில் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய அலைபேசியை வாங்கியதாக டிம் மேலும் குறிப்பிட்டிருந்தார்.
முன்னதாக, அதிக விலை உள்ளிட்ட காரணங்களினால் ஆப்பிள் ஐபோன்களின் புதிய பதிப்புகள் பயன்பாட்டாளர்களிடையே குறிப்பிடத்தக்க வரவேற்பை பெறாததால் அதன் தயாரிப்பு குறைக்கப்பட்டதாக கவலைகள் எழுந்தன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












