பிபாஷா பாசு, கரண் குரோவரின் மகப்பேறு போட்டோ ஷூட் - வைரலாகும் படங்கள்

பிரபல பாலிவுட் நடிகையான பிபாஷா பாசு, தமது கணவர் கரண் குரோவருடன் சேர்ந்து தான் கர்ப்பமாக இருப்பதை காட்டும் திறந்தவெளி வயிறுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்து அதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த படத்துடன், தங்களுடைய வாழ்வில் புதிய வரவாக வரும் சிசுவின் அடையாளமாக தாம் கர்ப்பம் அடைந்திருக்கும் தகவலை வித்தியாசமான முறையில் பதிவிட்டிருக்கிறார் பிபாஷா பாசு.

சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் இந்த படங்கள் மற்றும் அவற்றை வெளியிட்டுள்ள ஊடகங்களின் இடுகைகளையும் தமது ட்விட்டர் பக்கத்தில் ரீட்வீட் செய்திருக்கிறார் பிபாஷா.

கணவனும் மனைவியும் மெல்லிய பருத்தியிலான சட்டையை அணிந்து கொண்டு இந்த போட்டோவுக்காக போஸ் கொடுத்துள்ளனர். அதில் பிபாஷா பாசு, சட்டையில் ஒரு பொத்தானை மட்டும் போட்டுக் கொண்டு தமது கர்ப்பம் தாங்கிய வயிறு தெரியும் வகையிலும் அவரை நெருங்கி அணைத்தபடி கரன் குரோவர் கர்ப்பம் அடைந்த வயிற்றுப்பகுதியை தொட்டுப் பார்ப்பது போலவும் ஒரு படம் பகிரப்பட்டுள்ளது.

ட்விட்டர் பக்கத்தில் பிபாஷா பாசுவை 66 லட்சத்துக்கும் அதிகமானோர் பின்தொடருகிறார்கள். இன்ஸ்டாவில் அவரை 1.10 கோடிக்கும் அதிகமானோர் பின்தொடருகிறார்கள். அதில் பலரும் பிபாஷா தாய்மை அடைந்த செய்தி மற்றும் அவர் கருவுற்ற காட்சியை பார்த்து ஆச்சரியத்தில் ஆழ்ந்ததாகவும் இது உண்மையிலேயே மகிழ்ச்சியான செய்தி என்றும் தெரிவித்துள்ளனர்.

தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிபாஷா பகிரந்துள்ள இடுகையில்,

"ஒரு புதிய நேரம், ஒரு புதிய கட்டம், ஒரு புதிய ஒளி எங்களுடைய வாழ்க்கையின் பிரதிபலிப்பாக கூடுதல் நிழலாக சேர்கிறது. நாங்கள் முன்பு இருந்ததை விட இன்னும் கொஞ்சம் எங்களை அது முழுமையாக்குகிறது. நாங்கள் இந்த வாழ்க்கையைத் தனித்தனியாகத் தொடங்கினோம், பின்னர் நாங்கள் ஒருவரையொருவர் சந்தித்தோம், அதிலிருந்து நாங்கள் இருவரானோம். இருவருக்குமே அதீத காதல் இருந்தது. பார்ப்பதற்கு கொஞ்சம் அதிகமானதாகத் தோன்றினாலும் ஒரு காலத்தில் இரண்டாக இருந்த நாங்கள் இப்போது விரைவில் மூவராகி விடுவோம்" என்று கூறியுள்ளார்.

மேலும், "எங்கள் அன்பால் வெளிப்படும் படைப்பான 'எங்கள் குழந்தை' விரைவில் எங்களுடன் சேர்ந்து எங்களுடைய மகிழ்ச்சியுடன் கலக்கப்போகிறது. உங்கள் அனைவருக்கும் நன்றி, உங்கள் நிபந்தனையற்ற அன்புக்கும், உங்கள் பிரார்த்தனைகளுக்கும், நல்வாழ்த்துக்களுக்கும் நன்றி. அவை எப்போதும் எங்களின் ஒரு பகுதியாக இருக்கும்," என ரசிர்களுக்காகவும் "எங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருப்பதற்கும், மற்றொரு அழகான வாழ்க்கையை எங்களுடன் வெளிப்படுத்தியதற்கும் நன்றி, எங்கள் குழந்தையே. துர்கா துர்கா," என தங்களுடைய குழந்தைக்குமாக நன்றி வரிகளை இந்த நட்சத்திர காதல் தம்பதி தங்களுடைய சமூக ஊடக இடுகையில் குறிப்பிட்டுள்ளனர்.

முன்னதாக, ஈகை பெருநாள் விருந்தின்போது பொதுவெளியில் பிபாஷா பாசு தோன்றியிருந்தார். அப்போது அவர் பகிர்ந்த படங்களைப் பார்த்தபோது அவரது ரசிகர்களில் பலர், பிபாஷா கர்ப்பமாக இருப்பதாக சந்தேகம் எழுப்பி சமூக ஊடகங்களில் கருத்துக்களைப் பகிர்ந்தனர்.

ஆனால், அது குறித்து அப்போது எந்த கருத்தையும் வெளியிடாமல் தவிர்த்த பிபாஷா, இப்போது தமது ரசிகர்களுக்கு தமது போட்டோ ஷூட் மூலம் பதில் கொடுத்துள்ளார்.

டேட்டிங், காதல், கல்யாணம்

பிபாஷா ,கரண் இருவரும் 2015ஆம் ஆண்டு பூஷன் படேலின் அலோன் திரைப்படத்தின் செட்டில் முதன்முதலில் சந்தித்தனர், பின்னர் அவர்கள் ஒரு வருட காலத்துக்கு டேட்டிங் செய்தனர். அதைத்தொடர்ந்து 2016ஆம் ஆண்டு ஏப்ரலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

கரண் கடைசியாக நடிகர் சுர்பி ஜோதியுடன் 'குபூல் ஹை 2.0' என்ற வெப்சீரிஸ் நிகழ்ச்சியில் நடித்தார். அது ஒரு காதல் நாடகத்தை மையமாகக் கொண்ட தொடர். Zee5 தளத்தில் அது திரையிடப்பட்டது.

பிபாஷா கடைசியாக கரணுடன் 'டேஞ்சரஸ்' என்ற க்ரைம் த்ரில்லர் குறுந்தொடரில் நடித்தார். பூஷண் படேல் இயக்கத்தில் விக்ரம் பட் எழுதிய இந்தத் தொடர் பார்வையாளர்களிடையே கலவையான வரவேற்பைப் பெற்றது.

கரணை டேட்டிங் செய்வதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்ளால் தனிப்பட்ட விவரங்களை பகிர்ந்தபடி பிபாஷா இந்தியா டுடே இதழுக்கு பேட்டி அளித்திருந்தார். அப்போது குழந்தை பெற்றுக் கொள்வது பற்றி கருத்து தெரிவித்த அவர், "இந்த நேரத்தில் நான் தாயாகவோ குழந்தைகளையோ கொண்டிருக்கவில்லை. ஆனால், ஒவ்வொரு தாய்மையும் மிகவும் அழகானது என்று தாயாக இருந்த நெருங்கிய நண்பர் அல்லது தோழிகள் சொல்லக் கேட்டிருக்கிறேன்," என்று கூறினார்.

மேலும் அவர், "உண்மை என்னவென்றால், இன்றுவரை உங்கள் தாயுடன் ஒரு பிணைப்புடன் நீங்கள் இருப்பீர்கள். எப்போதாவது நான் மிகவும் அமானுஷ்யமான, முட்டாள்தனமான ஒன்றைக் கேட்டால் என் அம்மா உடனே, 'தீக் ஹை, ஹோ ஜெயே கா' (சரி, எல்லாம் சரியாகிப் போகும்) என்று சொல்வார். என்னிடம் அந்த மாதிரி நள்ளிரவில் ஒருவர் வந்து ஏதாவது முட்டாள்தனமாக கேட்டால் நான் பொறுமை இழப்பேன். ஆனால், என் அம்மா எப்போதும் என்னிடம் பொறுமை இழந்ததில்லை. தாய்மை என்பது நிச்சயம் அழகானது. திருமணம் பற்றி எனக்குத் தெரியாது. நீங்கள் ஒரு நல்ல துணையைக் கண்டால், அது நல்லது, ஆனால் அது மட்டுமே ஒரு பெண்மையை முழுமையாக்கும் என நான் நினைக்கவில்லை. அப்படியானால் ஒரு ஆணுக்கும் அப்படித்தானே இருக்க வேண்டும். ஒரு ஆணுக்கும் அவரை முழுமைப்படுத்த ஒரு பெண் தேவைப்படும்," என்று பிபாஷா அந்த நேர்காணலில் கூறியிருந்தார்.

எட்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர் உருவகப்படுத்திய அந்த தாய்மை நிலையை இன்று அனுபவித்து வருகிறார் பிபாஷா. அவருக்கு சுகப்பிரசவம் நடக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் சமூக ஊடகங்களில் தொடர்ந்து வாழ்த்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

பிபாஷா பாசு பின்னணி

பிபாஷா பாசு 1979ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி பிறந்தார். ஆரம்பத்தில் இந்தி படங்களில் நடித்த அவர் பிறகு தமிழ், தெலுங்கு, பெங்காலி மற்றும் ஆங்கில படங்களிலும் நடித்தார். ஃபிலிம்பேர் விருது உட்பட பல விருதுகளை 2000ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் பெற்று தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவர் பிபாஷா. குறிப்பாக, த்ரில்லர் மற்றும் திகில் படங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் அவர் அதிக அக்கறை காட்டுவார்.

டெல்லியில் பிறந்து கொல்கத்தாவில் வளர்ந்த பெங்காலி பெண் பிபாஷா பாசு. ஃபேஷன் மாடலாகத்தான் தமது தொழில்முறை வாழ்க்கையைத் தொடங்கினார். அதன் பிறகு அஜ்னபீ (2001) மூலம் பாலிவுட் திரைப்படத்துறையில் அறிமுகமானார், அது அவருக்கு சிறந்த பெண் அறிமுக நடிகைக்கான ஃபிலிம்பேர் விருதை பெற்றுத் தந்தது.

பிபாஷாவின் முதல் முன்னணி பாத்திரம் ராஸ் (2002) என்ற திகில் படமாகும். அது அவருக்கு சிறந்த நடிகைக்கான ஃபிலிம்பேர் விருதை பெற்றுத் தந்தது. இதைத்தொடர்ந்து ஜிஸ்ம் (2003), பர்சாத் (2005) மற்றும் அதிக வசூல் செய்த நோ என்ட்ரி (2005), தூம்-2 (2006) போன்ற படங்களில் பிபாஷாவின் கதாபாத்திரங்கள் அவரை திரையுலகில் உச்சத்துக்கு கொண்டு சென்றது.

2005ஆம் ஆண்டில் தமிழ் திரைப்படத்தில் அறிமுகமான அவர் நடிகர் விஜய்க்கு இரண்டாவது ஜோடியாக ஜெனிலியாவுடன் நடித்திருந்தார்.

கார்ப்பரேட் (2006), ஃபிர் ஹெரா பெரி (2006), ஆல் தி பெஸ்ட்: ஃபன் பிகின்ஸ் (2009), ரேஸ் (2008), மற்றும் காதல் நகைச்சுவை படமான பச்னா ஏ ஹசீனோ (2008) ஆகியவை பிபாஷாவின் வணிக ரீதியிலான வெற்றி படங்களாகும்.

2010களில், அவர் ராஸ் 3D (2012), ஆத்மா (2013), கிரியேச்சர் 3D (2014) மற்றும் அலோன் (2015) ஆகிய திகில் படங்களில் நடித்தார். அதைத் தொடர்ந்து திரைப்பட உலகுக்கு இடைவெளி விட்டிருந்த அவர் டேஞ்சரஸ் (2020) என்ற வெப் சீரிஸ் மூலம் திரை உலகில் மீண்டும் வலம் வந்தார். திரை உலகில் பிரபல முன்னணி நடிகர் ஜான் ஆப்ரஹாமுடன் நெருங்கிப் பழகியவராக கிசுகிசக்கப்பட்ட பிபாஷா, 2016இல் கரண் குரோவரை கரம் பிடித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: