You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'பிக்பாஸ்' அர்ச்சனா: "நாங்கள் பிரபலங்கள் மட்டுமே; பொதுச்சொத்து கிடையாது" - சமூக ஊடக விமர்சனங்களுக்கு பதில்
- எழுதியவர், ச. ஆனந்தப்பிரியா
- பதவி, பிபிசி தமிழுக்காக
முன்னணி தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரும் திரைக் கலைஞருமான அர்ச்சனாவும் அவரது மகள் சாராவும் தங்கள் மீதான எதிர்மறை கருத்துகளுக்கு சமூக வலைதளங்களில் பதிலளித்துள்ளனர். இது குறித்து பிபிசி தமிழுடனும் தமது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார் அர்ச்சனா.
2000மாவது ஆண்டுகளில் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக பிரபலமடைந்தவர் அர்ச்சனா.
திருமணத்திற்கு பின்பு சிறிது காலம் தொலைக்காட்சியில் இருந்து விலகி இருந்தவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மீண்டும் தொகுப்பாளராக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க ஆரம்பித்தார்.
அதில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற முன்னணி நட்சத்திரங்களை இவர் எடுத்த பேட்டிகள் ரசிகர்களிடையே பரவலான கவனத்தைக் குவித்தது.
பின்பு 'பிக்பாஸ்' தமிழ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் வைல்ட் கார்ட் சுற்றில் போட்டியாளராக உள்ளே நுழைந்தார். இந்த நிகழ்ச்சியில் இவரது விளையாட்டு தொடர்பாக நிறைய எதிர்மறையான விமர்சனங்கள் பிக்பாஸ் பார்வையாளர்களால் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டன.
பின்பு அவரது யூடியூப் சேனலில் 'பாத்ரூம் டூர்' என்ற வீடியோ ஒன்று வெளியானது. இதுவும் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளானது. இதற்கான விளக்கங்களை அப்போதே அர்ச்சனா கொடுத்து விட்ட நிலையில் தற்போது அவர் மீதும் அவரது மகள் சாரா மீதும் மீண்டும் எதிர்மறை கருத்துகள் சமூக வலைதளங்களில் வந்து கொண்டிருக்கிறது.
என்ன காரணம்?
முன்னணி தொலைக்காட்சி ஒன்றில் 'தாயில்லாமல் நானில்லை' என்ற அம்மா- பிள்ளை தொடர்பான நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை அர்ச்சனாவும் அவரது மகளும் இணைந்து தொகுத்து வழங்கி இருக்கிறார்கள். இதற்கான முன்னோட்டக் காணொளி தொலைக்காட்சியின் சமூக வலைதள பக்கங்களில் வெளியானது.
இதற்குதான் தற்போது அர்ச்சனாவையும் அவரது மகள் மீதும் பிக்பாஸ் மற்றும் யூடியூப் வீடியோ தொடர்பான கருத்துகளை தொடர்பு படுத்தி இதில் பேசி வருகிறார்கள். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அர்ச்சனாவும் அவரது மகளும் தங்களது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளனர்.
எங்களை வெறுப்பவர்களுக்கான ஒரு சிறு குறிப்பு என தொடங்கும் அந்த பதிவில், ''நானும் என் அம்மாவும் இணைந்து சமீபத்தில் பிரபல தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கியிருந்தோம். நானும் அம்மாவும் இணைந்து அந்த நிகழ்ச்சி தொகுத்து வழங்கியதற்காக என்ன காரணம் என்றே தெரியாமல் அத்தனை வெறுப்புகளை சமூக வலைதளங்கள் வாயிலாக பெற்றோம். அதிலும் குறிப்பாக நிறைய பெண்களிடம் இருந்தே அநாகரிகமான வார்த்தைகளில் எதிர்மறை பின்னூட்டங்கள் வந்திருந்தது. இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவிடம் இருந்தும் கூட அப்படியான பின்னூட்டம் வந்திருந்தது.''
''நாங்கள் அன்பை வரவேற்பவர்கள். எங்களை உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அதை நாங்கள் மதிக்கிறோம் ஆனால் அதை உங்களுடனேயே வைத்து கொள்ளுங்கள். அதை நீங்கள் வெளிப்படுத்தும் விதம் எங்களை பாதிப்படைய செய்கிறது. நாங்கள் இங்கு உங்கள் வெறுப்பை கொண்டாட இருக்கவில்லை. எங்களை புரிந்து கொண்டு அன்பு செலுத்துபவர்களுக்கும் ஆதரவு கொடுப்பவர்களுக்கும் நன்றி. அன்புடன் சாரா" என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அர்ச்சனாவிடம் பிபிசி தமிழுக்காக பேசினேன்.
"இத்தனை வெறுப்புகளை சம்பாதிப்பது இதுதான் முதல் முறை"
"அம்மாவுக்கும் குழந்தைக்கும் இடையில் இருக்கக்கூடிய அன்பு குறித்தான ஒரு நிகழ்ச்சியை நானும் சாராவும் தொகுத்து வழங்கி இருக்கிறோம். அப்படி இருக்கும் போது நீங்கள் நிகழ்ச்சியின் கரு குறித்து பேசாமல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர்கள் மீது மட்டும் கமெண்ட் செய்து கொண்டிருக்கிறீர்கள். அப்படியே இருந்தாலும் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதில் ஏதேனும் குறை இருந்தால் நீங்கள் சொல்லலாம்.
அதை விடுத்து இத்தனை வருடம் என் பணி அனுபவத்தில் சமீபத்தில்தான் இத்தனை எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து வருகிறேன். இத்தனை நாட்கள் நானும் சாராவும் அது குறித்து கவலைப்பட்டது கிடையாது. நான் அந்த பின்னூட்டங்களை படிக்க கூட மாட்டேன்.
ஆனால், முதல் முறையாக அந்த பின்னூட்டங்களை படித்து விட்டு சாரா என்னிடம் வந்து காண்பித்தாள். அதிலும் குறிப்பாக இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக இருக்கக்கூடிய ஒரு பெண்மணி அநாகரிகமான வார்த்தைகளால் பதிவு செய்திருந்தார். "இவரும் இரண்டு குழந்தைகளுக்கு அம்மா. நாளை அந்த குழந்தைகளும் மீடியாவில் வேலை பார்த்து இப்படியான எதிர்மறை கருத்துகள் வந்தால் அந்த அம்மா எப்படி அதை ஏற்று கொள்வார்கள்?" என்று கேட்டாள்.
இப்படி அதிகமான எதிர்மறை கருத்துகள் வந்து கொண்டிருந்தது பெண்களிடம் இருந்துதான். பிக்பாஸ் நிகழ்ச்சியால் என் மீது உங்களுக்கு கோபம். அந்த கோபத்தை என் மீது நிறைய காண்பித்தாயிற்று. அந்த நிகழ்ச்சியில் அப்படி வெறுக்கும் அளவுக்கு என்ன செய்தேன் என்பது இதுவரை இன்னும் புரியவில்லை. ஆனால் அது என்னுடைய தனிப்பட்ட வேறு விஷயம். அதோடு இணைத்து நீங்கள் ஏன் சாராவையும் பேச வேண்டும். நீங்கள் பேசுவதற்கும் எழுதுவதற்கும் ஓர் இடம் இருக்கிறது என்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்யலாமா?" என்று கேள்வி எழுப்புகிறார் அர்ச்சனா.
"பிரபலங்கள் பொதுச்சொத்து கிடையாது"
நாங்கள் பொது வெளியில் பிரபலங்கள் தானே தவிர பொது சொத்து கிடையாது என்பவர் எங்களுக்கும் தனிப்பட்ட வாழ்க்கை, பிரச்னைகள் என எல்லாமே இருக்கிறது என்கிறார்.
"இது போன்ற எதிர்மறை கருத்துகள் எங்கள் மீது தருவதால் உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்றால் அதை வெளிப்படையாக தெரிவித்து விட்டு செய்யுங்கள். நானும் உங்களுக்கான ஒரு தீர்வாக, மனநல மருத்துவராக இருக்கிறேன் என்று மன்னித்து விட்டு விடுகிறேன்.
அந்த நிகழ்ச்சியில் பத்துக்கும் மேற்பட்ட அம்மா பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் விடுத்து நானும் என் பிள்ளையும் மட்டும்தான் தெரிகிறோமா? எங்களுக்கு வேலை தெரியாமல் அந்த மேடையில் நின்றால் நீ அது குறித்து பேசலாம். வேலை தெரியாமலா கூப்பிடுவார்கள்? ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், அரசியல் தலைவர்கள் என பல பிரபலங்களை பேட்டி எடுத்திருக்கிறேன்.
அப்படி இருக்கும் போது என் வேலையை பேசாமால் ஏன் என் குழந்தையையும் சேர்த்து வைத்து பேச வேண்டும்? பள்ளி செல்லும் குழந்தையை பாதிக்கும் அளவுக்கு பேசுகிறார்கள். எட்டு வயதில் அவளுக்கு ஓர் அறுவை சிகிச்சை நடந்தது. அதை எல்லாம் தாண்டி உயிர் மீண்டு அந்த குழந்தை வந்திருக்கிறது. அப்போது அதை எல்லாம் கடந்து வருவதற்கான முதிர்ச்சியை இயல்பாகவே பெறுகிறாள்.
அவள் அப்படி வயதுக்கு மீறிய முதிர்ச்சியுடன் இருக்கிறாள் என்றால் கூட அதில் உங்களுக்கு என்ன பிரச்னை? பெற்றோர் ஆகிய எங்களுக்கோ அவள் நண்பர்களுக்கோ பள்ளிக்கோ இல்லாத பிரச்னை உங்களுக்கு ஏன் இது போன்ற பிரச்னையை கையாளும் அளவிற்கு 14 வயதில் அந்த குழந்தைக்கு முதிர்ச்சி இருக்கிறது. ஆனால் 40 வயதாகியும் இதுபோன்ற எதிர்மறை கருத்துகளை பரப்பும் அந்த தாய்க்கு முதிர்ச்சி இல்லாததை என்ன சொல்வது?"
பிக்பாஸ் போன பிறகுதான் இது போன்ற எதிர்மறை கருத்துகள் வந்து கொண்டிருக்கிறது. ஏன் அந்த நிகழ்ச்சிக்கு போனோம் என நினைத்தது உண்டா?
"நிச்சயமாக இல்லை. ஒரு முறை முடிவெடுத்த பிறகு அது குறித்து நான் வருத்தப்பட மாட்டேன். அந்த நிகழ்ச்சியில் எனக்கு கொடுக்கப்பட்ட அனைத்து வேலைகளையும் சரியாக செய்தேன் என கமல் சாரே பல முறை பெயர் சொல்லி பாராட்டி இருக்கிறார். அது ஒரு விளையாட்டே தவிர யாரையும் மதிப்பிடுவதற்கான நிகழ்ச்சி அல்ல. இதுவே மற்ற மொழிகளில் பிக்பாஸ் பார்த்தால் அங்கு விளையாட்டை பற்றி மட்டும்தான் பார்வையாளர்கள் பேசுவார்கள். ஒருவருடைய தனிப்பட்ட குணாதிசியம் பற்றி அல்ல. அப்படி என் குணாதிசியம் சரியில்லை என்றால் என் குடும்பத்தில் இவ்வளவு மகிழ்ச்சியாக எல்லோரும் ஒற்றுமையாக இருக்க மாட்டோம்.
நீங்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பார்த்தது வெறும் ஒரு மணி நேரம்தான். ஆனால், அங்கு உள்ளே 24 மணி நேரமும் என்ன நடந்தது என்பது எங்களுக்கு தெரியும். அதனால்தான் நிகழ்ச்சி முடிந்ததும் கூட இன்றளவும் ஒற்றுமையாக இருக்கிறோம்.
சமூக வலைதளங்களில் இப்போது நாங்கள் போட்ட இந்த பதிவு கூட என்னை பற்றி கிடையாது. ஒரு 14 வயது குழந்தை இது போன்ற சமூக வலைதளங்களால் எப்படி பாதிக்கப்பட்டு அதை வெளிப்படுத்தி இருக்கிறாள் என்பதுதான். எங்களை பிடிக்கவில்லை என்றால் ஒதுங்கி விடுங்கள். இல்லை என்றால் எங்களை ஒரு நிகழ்ச்சியில் போடாதீர்கள் என்று தொலைக்காட்சி நிறுவனம் முன் நின்று போய் சொல்லுங்கள். அதை விடுத்து எதை வேண்டுமானாலும் சமூக வலைதளங்களில் பரப்பாதீர்கள். இதை எல்லாம் தாண்டி எங்களை புரிந்து கொண்டு எங்களுக்கு ஆதரவும் அன்பும் தருபவர்களுக்கு நன்றி"
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் ஒரு மணி நேரம்தான் காட்டுகிறார்கள் என்கிறீர்கள். இப்போது 24*7 என பிக்பாஸ் அல்டிமேட் அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். அது பற்றி சொல்லுங்கள்? மேலும் இதில் பங்கேற்க அழைப்பு ஏதும் வந்ததா?
"பிக்பாஸ் அல்டிமேட் குறித்து செய்தி வந்ததும் அல்டிமேட்டாக செய்யுங்கள் என்று வாழ்த்து தெரிவித்தேன். 24 மணி நேரமும் ஒளிபரப்பானாலும் அங்குள்ள 100 கேமராவில் நடப்பதை எல்லாம் காட்ட முடியாது. ஒரு கேமராவில் நடப்பதை மட்டும்தான் காட்டுவார்கள். 24 மணி நேரமும் அல்டிமேட் நிகழ்ச்சி நடக்கும். ஆனால், எந்த கேமராவில் என்ன நடக்கிறது எதை காட்டலாம் என்பதை அவர்கள் காட்ட நினைப்பதுதான் வரும். இது எந்த பிக்பாஸ்ஸூக்கும் பொருந்தும்.
பிக்பாஸ் அல்டிமேட்டுக்கு எந்த அழைப்பும் எனக்கு வரவில்லை. அப்படியே கூப்பிட்டிருந்தாலும் நான் வர மாட்டேன் என்பதும் அவர்களுக்கு தெரியும்".
பிற செய்திகள்:
- தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் எப்படி நடைபெறும்? - அடிப்படை தகவல்கள்
- 'கடவுள் என் ப்ராவை அளவெடுக்கிறார்' - நடிகை மீது விசாரணைக்கு உத்தரவிட்ட பாஜக அமைச்சர்
- தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை சாத்தியமா?
- டாடா வசமான ஏர் இந்தியா: மீண்டும் திரும்பிய வரலாறு - முக்கிய தகவல்கள்
- தமிழ்நாடு ஆளுநருக்கு தங்கம் தென்னரசு எதிர்வினை - நீட், மொழிக்கொள்கை விவகாரம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: