You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் எப்படி நடைபெறும்? - அடிப்படை தகவல்கள்
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறுமென மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று (வெள்ளிக் கிழமை) துவங்குகிறது.
இந்தத் தேர்தல்கள் எப்படி நடைபெறும், மேயர், நகராட்சி, பேரூராட்சித் தலைவர்கள் எப்படித் தேர்வுசெய்யப்படுவார்கள்?
வரும் பிப்ரவரி 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்தபின் பிப்ரவரி 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கான தேர்தல் ஏற்கனவே நடந்து முடிந்துவிட்ட நிலையில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கு மட்டும் இப்போது தேர்தல் நடக்கவிருக்கிறது.
மொத்த இடங்கள் எத்தனை?
தமிழ்நாட்டில் மொத்தமாக தற்போது 21 மாநகராட்சிகள் இருக்கின்றன. இவற்றில் 1,374 வார்டு உறுப்பினர் பதவியிடங்கள் இருக்கின்றன.
138 நகராட்சிகள் இருக்கின்றன. இதில் 3,843 வார்டு உறுப்பினர் பதவியிடங்கள் இருக்கின்றன. 490 பேரூராட்சிகளும் அவற்றில் 7,621 வார்டு உறுப்பினர் பதவியிடங்களும் இருக்கின்றன. மொத்தமாக 12,838 நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தேர்வுசெய்யப்படுவார்கள்.
இந்தத் தேர்தல் முடிவடைந்து, வெற்றிபெற்றவர்கள் அறிவிக்கப்பட்ட பிறகு, உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடக்கும்.
அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளில் கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டவர்கள், தங்களில் இருந்து ஒருவரையே பேரூராட்சி தலைவர், நகராட்சி தலைவர், மாநகராட்சி மேயர் ஆகிய பதவிகளுக்கு போட்டியிடுபவர்களைத் தேர்வு செய்ய அந்த மறைமுகத் தேர்தலில் வாக்களிப்பார்கள்.
இவ்வாறு 21 மேயர்கள், 21 துணை மேயர்கள், 138 நகர் மன்ற தலைவர்கள், 138 நகர் மன்ற துணைத் தலைவர்கள், 490 பேரூராட்சி மன்றத் தலைவர்கள், 490 பேரூராட்சித் துணைத் தலைவர்கள் என 1,298 பதவிகளுக்கானவர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள்.
ஒருவர் எத்தனை வாக்குகளைச் செலுத்த வேண்டும்?
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஒருவர் நான்கு வாக்குகளைச் செலுத்த வேண்டியிருக்கும். (கிராம ஊராட்சி கவுன்சிலர், கிராம ஊராட்சித் தலைவர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிகளுக்கு தலா ஒரு வாக்கு வீதம் நான்கு வாக்குகள்)
ஆனால், இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தவரை, ஒருவர் ஒரு வாக்கை மட்டுமே செலுத்தினால் போதுமானது.
அதாவது, ஒருவர் தான் குடியிருக்கும் பகுதியின் வார்டு உறுப்பினரை மட்டுமே தேர்வுசெய்வார்.
மேயர், நகர் மன்றத் தலைவர், பேரூராட்சிகளின் தலைவர் பதவிகளுக்கு நேரடித் தேர்தல் இருந்தபோது, ஒருவர் இரண்டு வாக்குகளைச் செலுத்த வேண்டியிருக்கும். அதாவது, வார்டு உறுப்பினரைத் தேர்வுசெய்ய ஒரு வாக்கு, மேயர் அல்லது நகர் மன்றத் தலைவரைத் தேர்வு செய்ய ஒரு வாக்கு என இரு வாக்குகளைச் செலுத்த வேண்டும்.
ஆனால், தற்போது மேயர், நகராட்சி மன்றத் தலைவர், பேரூராட்சித் தலைவர் பதிவகளுக்கு மறைமுகத் தேர்தலே நடக்குமென்பதால், ஒரு வாக்காளர் ஒரு வாக்கை மட்டுமே செலுத்தினால் போதுமானது.
மாநகராட்சி வார்டு உறுப்பினர், நகராட்சி வார்டு உறுப்பினர், பேரூராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கான தேர்தல் எல்லாமே கட்சி அடிப்படையில்தான் நடைபெறும். ஆகவே கட்சி சின்னம் இதில் பயன்படுத்தப்படும்.
வார்டு உறுப்பினர்கள் அனைவரும் தேர்வுசெய்யப்பட்ட பிறகு, மார்ச் நான்காம் தேதியன்று மறைமுகத் தேர்தல் நடத்தப்படும். இதில் வார்டு உறுப்பினர்கள் தங்கள் தலைவரையும் துணைத் தலைவரையும் தேர்வுசெய்வார்கள்.
தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோயம்புத்தூர் ஆகிய மூன்று மாநகராட்சிகள் மிகப் பெரியவை. இதில் சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளும் மதுரை, கோவை மாநகராட்சிகளில் தலா 100 வார்டுகளும் இருக்கின்றன.
இந்தத் தேர்தலுக்கென மொத்தமாக 31,029 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. மொத்தமாக 2,79,56,754 வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்க முடியும்.
ஒரு வாக்குச்சாவடிக்கு 4 அலுவலர்கள் வீதம் மொத்தமாக 1.33 லட்சம் அலுவலர்கள் வாக்குப்பதிவு பணியில் ஈடுபடுவார்கள். இந்தத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவிருக்கின்றன. இதற்காக 55,337 வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படும்.
"இந்தத் தேர்தலில் மாநகராட்சியின் மேயர், நகராட்சி மன்றத் தலைவர், பேரூராட்சி மன்றத் தலைவர், இந்த அமைப்புகளின் துணைத் தலைவர்கள் மறைமுகத் தேர்தல் மூலம் தேர்வுசெய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மாநகராட்சியின் தலைவர் அதாவது மேயர் பதவி, மிக மிக முக்கியமான, மரியாதைக்குரிய பதவி. இதுபோன்ற பதவிகளை மக்களின் நேரடி வாக்கு மூலம்தான் தேர்வுசெய்ய வேண்டும். ஆனால், இப்போது மறைமுகத் தேர்தல்தான் நடக்கவிருக்கிறது.
இந்த மறைமுகத் தேர்தல்கள் மிக நியாயமாக நடப்பதை உறுதிசெய்ய வேண்டும். வார்டு உறுப்பினர்களின் கைப்பாவையாக மேயர்களோ, நகராட்சி மன்றத் தலைவர்களோ செயல்படும் நிலை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதை எல்லா அரசியல் கட்சிகளும் மனதில் கொண்டு செயல்பட வேண்டும்" என்கிறார் உள்ளாட்சி அமைப்புகள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டுவரும் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தின் பேராசியரான பழனித்துரை.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: