பட்ஜெட் 2022: இந்தியாவில் கிரிப்டோ கரன்சியின் எதிர்காலம் என்ன? ஆதரவாளர்களின் எதிர்பார்ப்பும் எதிர்ப்பாளர்களின் நிலையும் என்ன?

    • எழுதியவர், கெளதமன் முராரி
    • பதவி, பிபிசி தமிழுக்காக

இன்னும் சில தினங்களில் 2022 - 23 நிதி ஆண்டுக்கான இந்திய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட்டில் வருமான வரி வரம்பு உயர்வு, வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள், வரிக் கழிவு, வரிச் சலுகைகள் என பல்வேறு எதிர்பார்ப்புகள் இருந்தாலும், கிரிப்டோ கரன்சி குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளதாகத் தெரிகிறது.

இந்த பட்ஜெட்டில் கிரிப்டோ கரன்சி தொடர்பாக ஏதேனும் அறிவிப்புகள் வருமா? அப்படியே வந்தால் அது கிரிப்டோவை இந்தியாவில் முழுமையாக அனுமதிப்பதாக இருக்குமா, இந்தியாவில் பணப்பரிவர்த்தனைகளில் ஒன்றாக கிரிப்டோகரன்சிகள் கருதப்படுமா என பல கேள்விகளுக்கு இந்த பட்ஜெட்டில் பதில் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பல்லாயிரம் கோடிகளில் புரளும் இந்திய கிரிப்டோ சந்தை நெறிமுறைப்படுத்தப்பட வேண்டும் என கிரிப்டோ ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். அதே சமயம், கிரிப்டோவை அனுமதித்தால் அது ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் உறையச் செய்துவிடும் என்கிறது மற்றொரு தரப்பு.

கிரிப்டோவை அனுமதிக்க வேண்டாம் என குரல்கள் வலுத்து வரும் அதே சமயம், அதை அனுமதித்தாக வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று ஆதரவாளர்கள் வலியுறுத்துகின்றனர். இந்த விஷயத்தில் குறைந்தபட்சம் அது குறித்து பரவலான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்கின்றனர் கிரிப்டோ கரன்சியை எதிர்ப்பவர்கள்.

உலக பொருளாதாரத்தில் ஒரு சொத்தின் விலை, அதன் மதிப்பு அல்லது உத்தரவாதத்தை வைத்து நிர்ணயிக்கப்படுகிறது. உதாரணமாக, ரியல் எஸ்டேட்டை எடுத்துக் கொண்டால் அதன் நிலம் மற்றும் வீட்டின் மதிப்பைக் கொண்டு அதன் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

இந்திய ரூபாய் நோட்டுக்களை எடுத்துக் கொண்டால், "I PROMISE TO PAY THE BEARER THE SUM OF ..... RUPEES" என்கிற இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் கையொப்பமிட்ட வாசகம் இருக்கும். அவரது உத்தரவாதத்தால், அச்சடிக்கப்படும் மதிப்புக்கான விலையை அந்த நோட்டு பெறுகிறது. கிரிப்டோ கரன்சிக்கு அப்படி ஒரு மதிப்போ, எந்தவொரு அரசு அல்லது உலகின் முக்கிய அமைப்புகளின் உத்தரவாதமோ இல்லை. இருப்பினும், அது ஒரு புதுவித சொத்தாக அல்லது பணமாக இது கருதப்படுகிறது.

இது தான் பிரச்னையின் தொடக்கப் புள்ளியாக அரசாங்கங்கள் மற்றும் மத்திய வங்கிகள் பார்க்கின்றன.

இந்தியா உட்பட மத்திய மற்றும் தெற்காசிய பிராந்தியத்திலிருந்து, 2020ஆம் ஆண்டு ஜூலை முதல் 2021ஆம் ஆண்டு ஜூன் வரையான காலகட்டத்தில், 42,35,000 கோடி ரூபாய் (572.5 பில்லியன் அமெரிக்க டாலர்), கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்யப்பட்டிருப்பதாக செயினாலிசிஸ் அறிக்கையை மேற்கோள்காட்டியுள்ளது புளூம்பெர்க். இது ஒட்டுமொத்த கிரிப்டோ முதலீட்டில் வெறும் 14 சதவீதம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) அடிப்படையில் உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாகக் கருதப்படும் இந்தியா, 2021 - 22 நிதியாண்டில் அறிவித்த ஒட்டுமொத்த பட்ஜெட் தொகை எவ்வளவு தெரியுமா? 34,83,236 கோடி ரூபாய்தான்.

அதே (ஜூலை 2020 முதல் ஜூன் 2021) காலகட்டத்தில், இந்தியாவில் கிரிப்டோ சந்தை 641 சதவீதம் அதிகரித்திருப்பதாக செயினாலிசிஸ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

2021ஆம் ஆண்டு மார்ச் மாதம், இந்தியாவில் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்திருப்பவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 80 லட்சம் (8 மில்லியன்) பேர் என ராய்ட்டர்ஸ் செய்தி முகமை ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தது.

பிட்பின்ஸ் (Bitbns) என்கிற கிரிப்டோ தளத்தில் பதிவு செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை மற்றும் முதலீடு செய்யப்படும் பணத்தின் அளவு கடந்த ஆண்டை விட 2021ஆம் ஆண்டில் 30 மடங்கு அதிகரித்திருப்பதாக ராய்டர்ஸ் முகமையிடம் கூறியுள்ளார் அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கெளரவ் தஹக். மற்ற சில கிரிப்டோ நிறுவனங்களும் தங்களின் வியாபாரம் அதிகரித்திருப்பதை, பல்வேறு செய்திகளில் ஆமோதித்துள்ளனர்.

இப்படி ஒரு பக்கம் கிரிப்டோ கரன்சி சந்தை அசுரத்தனமாக வளர்ந்து கொண்டிருக்க, மறுபக்கம் இந்திய அரசு தரப்பிலிருந்து, கிரிப்டோ கரன்சி மீது எந்த வித தடையும் இல்லாத, எந்த வித கட்டுப்பாடுகளோ நெறிமுறைகளோ இல்லாத, அரசு எந்திரத்துக்குள்ளேயே ஒருவித எதிர்ப்பு மனநிலை என, தெளிவற்ற நிலையே தொடர்கிறது.

இந்தியாவில் கிரிப்டோகரன்சி

இந்திய வங்கித் துறையை நிர்வகிக்கும் மத்திய ரிசர்வ் வங்கி, 2013 கால கட்டத்திலேயே கிரிப்டோகரன்சி என ஒன்று இருப்பதாகவும், அதில் உள்ள சட்ட சிக்கல்கள் மற்றும் அபாயங்களை இந்தியர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என எச்சரித்தது. அப்போதிலிருந்து இந்த நொடிவரை ஆர்பிஐ கிரிப்டோ கரன்சிக்கு எதிரான மனநிலையிலேயே இருப்பதாகத் தெரிகிறது.

சமீபத்தில் கூட, கிரிப்டோ கரன்சிக்கு முழுமையான தடை விதிக்கப்பட வேண்டும் என ஆர்பிஐ தன் மத்திய குழுவிடம் தன் தரப்பை வலுவாகத் தெளிவுபடுத்தியுள்ளதும் இங்கு நினைவுகூரத்தக்கது.

"கிரிப்டோ கரன்சிகள், பொருளாதாரம் மற்றும் நிதி நிலைத்தன்மைப் பார்வையில் பார்க்கும் போது, ஆர்பிஐக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது" என ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் சமீபத்தில் பேசியதை சுட்டிக்காட்டுகிறது எகனாமிக் டைம்ச் பத்திரிகை.

2018ஆம் ஆண்டு, வங்கிகள் கிரிப்டோ பரிவர்த்தனைகளுக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுக்கக்கூடாது, அது போன்ற சொத்துக்களில் முதலீடு செய்திருந்தால் அதை விற்று உடனடியாக வெளியேற வேண்டும் என தடை விதித்தது ஆர்பிஐ. அத்தடையை இந்திய உச்ச நீதிமன்றம் கடந்த மார்ச் 2020-ல் நீக்கியது.

கிரிப்டோ கரன்சிகள் அதீதமாக விலை மாறக்கூடியதன்மை கொண்டவை. வங்கி அமைப்புகளின் முக்கியத்துவத்தை கிரிப்டோ கரன்சிகள் குறைத்துவிடும் என்றும், ஒட்டுமொத்தத்தில் பொருளாதாரத்தின் நிலைத்தன்மையை சீர்குலைக்கும் என்பதால்தான் மத்திய ரிசர்வ் வங்கி போன்ற பல நாட்டு மத்திய வங்கிகள் அதைத் தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்க அஞ்சுகின்றன என சமீபத்தில் எகனாமிக் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான மற்றொரு கட்டுரையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

இந்திய அரசு முதலில் கிரிப்டோ கரன்சியை முழுமையாகத் தடை செய்வது போலத் தெரிந்தது, ஆனால் தற்போது கிரிப்டோ கரன்சியை நெறிமுறைப்படுத்தும் நோக்கில் இந்தியா வரைவுச்சட்ட மசோதாவை உருவாக்கி வருதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

கிரிப்டோ கரன்சி குறித்து, கடந்த டிசம்பர் 2021-ல், இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் நிதியமைச்சரிடம் கேள்வி எழுப்பிய போது "அது மிகவும் சிக்கலான பகுதி, மேலும் அது எந்தவித நெறிமுறை சட்டங்களின் கீழும் இல்லை. அதை தடை செய்ய அரசு எந்த வித தீர்மானமும் எடுக்கவில்லை. அது குறித்து ஆர்பிஐ மற்றும் செபி அமைப்புகளின் மூலம் மக்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கூடிய விரைவில் அரசு ஒரு சட்டத்தை அறிமுகப்படுத்தும்" என்று கூறினார் இந்தியாவின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

எதிர்வரும் 2022 - 23 பட்ஜெட்டில் கிரிப்டோ கரன்சிகளை நெறிமுறைப்படுத்துவது மற்றும் வருமான வரி சார்ந்த அறிவிப்புகள் வெளியாகலாம், என்றும் பட்ஜெட் கூட்டத்தொடரில் மசோதா தாக்கல் செய்யப்படலாம் என கிரிப்டோ முதலீட்டாளர்கள், ஆர்வலர்கள், ஆடிட்டர்கள் வரை பல தரப்பினரிடமும் பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

கிரிப்டோ கரன்சி ஆதரவாளர்கள் இந்த 2022 பட்ஜெட்டில் எதிர்பார்ப்பது என்ன? அரசு கிரிப்டோ துறைக்கு என்ன மாதிரியான உதவிகளை உடனடியாகச் செய்தால் அத்துறை வளரும்? என கேட்டோம்.

பட்ஜெட்டில் கிரிப்டோ குறித்த தெளிவு தேவை

"இந்த 2022 - 23 பட்ஜெட்டில் கிரிப்டோகரன்சிகள் ஒரு சொத்தாக வகைப்படுத்தப்பட்டு, ஒட்டுமொத்த துறையை நெறிமுறைப்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட வேண்டும். மேலும் வரி விண்ணப்பங்கள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தப்பட வேண்டும்" என டெசோஸ் இந்தியா கிரிப்டோகரன்சி நிறுவனத் தலைவர் ஓம் மால்வியா ஊடகங்களிடம் கூறியுள்ளார். இது, பெரும்பாலான கிரிப்டோ ஆதரவாளர்களின் ஒருமித்த கருத்தாக எதிரொலிக்கிறது.

"2020ஆம் ஆண்டில் இந்திய உச்ச நீதிமன்றம், இந்தியாவில் கிரிப்டோ வர்த்தகத்தின் மீதான தடைய நீக்கியதால் புதிய விஷயங்களைக் கண்டுபிடிப்பவர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் கிரிப்டோவில் முதலீடு செய்வதற்கான தடைகள் நீங்கின.

உலகின் முன்னணி வெஞ்சர் முதலீட்டாளர்களான ஆண்ட்ரெஸ்ஸன் ஹொரொவிட்ஸ், சிகுயா கேப்பிட்டல், டைகர் குளோபல் போன்ற நிறுவனங்கள் 500 மில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் கிரிப்டோ ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளன. இந்த தொகையே, கிரிப்டோகரன்சி குறித்த உற்சாகத்தையும், கிரிப்டோவினால் கிடைக்கும் நன்மை குறித்த விழிப்புணர்வையும், அதிக ரிஸ்கில் அதிக லாபம் கொடுக்கும் சொத்தில் சோதனை செய்து பார்க்க விரும்புவதையும் வெளிப்படுத்துகிறது" என்கிறார் காயின் ஸ்விட்ச் என்கிற கிரிப்டோ கரன்சி தளத்தின் முதன்மை வணிக அதிகாரி ஷரண் நாயர்.

மேலும், "ஒரு முற்போக்கான நெறிமுறைச் சட்டம், வளமான சூழல் அமைப்புகளை உருவாக்கும், அது மேற்கொண்ட பல இந்தியர்கள் பாதுகாப்பான சூழலில் கிரிப்டோவில் முதலீடு செய்ய ஊக்குவிக்கும்" என்கிறார்.

"முதலில், கிரிப்டோவை ஒரு சொத்தாக வகைப்படுத்த வேண்டும், கிரிப்டோவில் முதலீடு செய்யப்படும் பணத்தின் நகர்வுக்கென (பணம் எப்படி ஒரு நபரிடமிருந்து கிரிப்டோவுக்கும், பிறகு கிரிப்டொவில் இருந்து தனி நபர் கைக்குச் செல்கிறது) முறையான சட்ட வரையறை இருக்க வேண்டும். ஒட்டுமொத்த கிரிப்டோ துறைக்குமே கடுமையான கே.ஒய்.சி (முதலீட்டாளர்கள் யார் என்கிற அடிப்படை விவரங்கள்) நடைமுறைகள் தேவை. கடைசியாக, கிரிப்டோ துறை எந்த அமைப்பின் கீழ் வணிக ரீதியில் செயல்பட வேண்டும் போன்றவைகளை எல்லாம் தீர்மானித்து குறிப்பிடப்பட வேண்டும்" என்கிறார் ஷரண் நாயர்.

கிரிப்டோவை இந்திய அரசு முறையாக அனுமதிக்கவில்லை என்றாலும், ஏற்கனவே இந்தியாவில் பலரும் முதலீடு செய்து வருகின்றனர். எனவே இந்த 2022 பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கிரிப்டோ வரி சார்ந்த விவரங்களையும் தெளிவுபடுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிரிப்டோ தொடர்பாக வருமான வரி விவகாரத்தில் தொடரும் சிக்கல்கள் என்ன?

முதலில் கிரிப்டோகரன்சிகள் ஒரு கரன்சியா அல்லது சொத்தா என்பதிலேயே குழப்பம் நிலவுகிறது என்கிறார் சென்னையில் பட்டயக் கணக்காளராக தனி நிறுவனத்தை நடத்தி வரும் எஸ் பாஸ்கரன்.

"கரன்சியாகக் கருதப்பட வேண்டுமானால், அதை மத்திய ரிசர்வ் வங்கி அங்கீகரிக்க வேண்டும். இதுவரை இந்தியாவில் அப்படி கிரிப்டோகரன்சிகளுக்கு எந்தவித அங்கீகாரமும் வழங்கப்படவில்லை. எனவே கிரிப்டோகரன்சியிலிருந்து கிடைக்கும் லாப நஷ்டம் வருமான வரிச்சட்டத்துக்குள் வருமா என்கிற அடிப்படைக் கேள்வி எழுகிறது. எனவே, முதலில் கிரிப்டோகரன்சிகள் ஒரு சொத்தாகவோ முதலீடாகவோ வகைப்படுத்தப்பட வேண்டும்.

இருப்பினும், வருமான வரிச் சட்டத்தின் படி, விலக்களிக்கப்பட்ட வருமானங்களைத் தவிர மற்ற எல்லா வருமானங்களுக்கும் வரி செலுத்தப்பட வேண்டும் என்பது விதி மற்றும் தற்போது அந்த நடைமுறைப்படிதான் கிரிப்டோகரன்சிகளுக்கு வரி கணக்கிடப்பட்டு வருகிறது.

கிரிப்டோகரன்சியில் வர்த்தகம் மேற்கொள்பவராக இருந்தால், அவருக்கு அதிலிருந்து கிடைக்கும் தொகை வியாபார வருமானமாகக் கருதப்படும். இதுவே முதலீட்டாளராக (நீண்ட நாட்களுக்கு கிரிப்டோவை வாங்கி வைத்திருப்பவர்களானால்) அவர்களுக்கு மூலதன ஆதாய வரி (Capital Gain) கணக்கிடப்படும்.

இது போக அரசு தரப்பிலிருந்து பார்த்தால் கிரிப்டோ கரன்சிகளுக்கு டிடிஎஸ், டிசிஎஸ் பிடித்தம் செய்யப்படுமா? பங்குச் சந்தையில் மேற்கொள்ளும் வர்த்தகங்களுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படுவதைப் போல இதற்கும் விதிக்கப்படுமா போன்றவைகளை எல்லாம் அரசு பட்ஜெட்டில் தெளிவுபடுத்த வேண்டும். மேற்கூறிய வரிப் பிடித்தங்கள் மற்றும் வரி வரம்புகளுக்குள் கிரிப்டோகரன்சிகள் வருவது அரசுக்கான வருவாயைப் அதிகரிக்கும்.

மேலும் கிரிப்டோகரன்சிகளை ஒரு சட்ட ரீதியிலான பணப்பரிமாற்றமாக இந்தியா அனுமதிக்கிறதா இல்லையா என்பதையும், பட்ஜெட்டில் தெளிவுபடுத்தினால் நன்றாக இருக்கும்" என்கிறார் பாஸ்கரன்.

கிரிப்டோ கரன்சியை அனுமத்தால் பொருளாதாரம் ஆட்டம் கண்டுவிடும்

கிரிப்டோவை நெறிமுறைப்படுத்த சட்டங்கள் மற்றும் வழிமுறைகள் இருந்தால் போதும் என்பதை, எதிர் தரப்பினர் கடுமையாக எதிர்க்கின்றனர். கிரிப்டோவை ஒருமுறை உள்ளே அனுமதித்துவிட்டால், அது பொருளாதாரத்தை ஸ்தம்பிக்கச் செய்துவிடும் என்பது அவர்களின் வாதம்.

பொதுவாக ஒரு கரன்சியை ஏதாவது ஒரு நாடு அச்சடித்தால்தான் அதை கரன்சி என்போம், நாடுகளைத் தவிர வேறு யாராவது கையாண்டால் அது 'சொத்து' என்று தான் அழைக்கப்படுகிறது.

கரன்சியை அச்சடித்து வெளியிடுவது தான் ஒரு அரசாங்கம், தங்கள் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்த கையில் வைத்திருக்கும் மிகப்பெரிய நெறிமுறை ஆயுதம். அதையே கிரிப்டோகரன்சி கேள்விக்கு உள்ளாக்கிவிடுவதால் அரசாங்கங்கங்களும் அதை சட்ட ரீதியில் அங்கீகரிக்க அஞ்சுவதாக தமிழ்நாட்டின் நிதிசார் உயர்மட்டக் குழுவைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் கூறினார்.

"உதாரணமாக டாலரில் முதலீடு செய்தால், அதை அச்சடித்தது அமெரிக்கா என்று தெரியும். ஆனால் கிரிப்டோவில் அதை யார் உருவாக்கினார்கள் என்பது யாருக்குமே தெரியாது. அமெரிக்க டாலரில் ஒரு பிரச்சனை என்றால் அதை ஃபெடரல் ரிசர்விடம் பேசலாம். கிரிப்டோவில் ஒரு பிரச்னை என்றால் யாரைத் தொடர்பு கொள்வது?

அதே போல ஒரு நாட்டின் மத்திய வங்கி, அந்த நாட்டின் கரன்சியின் விநியோகம் தொடர்பான விவரங்களை வெளிப்படையாகச் செய்யும். உதாரணமாக வட்டி விகிதத்தை உயர்த்துகிறார்கள் என்றால், பணத்தின் சப்ளையை குறைக்கிறார்கள் என்பதை வெளிப்படையாக புரிந்து கொள்ளலாம். ஆனால் கிரிப்டோவில் இப்படி ஒரு விஷயமே இல்லையே.

கிரிப்டோ விநியோகத்தை யாராலும் கணிக்க முடியாது எனும் போது, அதை எப்படி நம்பி பொருளாதாரத்துக்குள் அனுமதிக்க முடியும், கிரிப்டோவை எப்படி வங்கித் துறைக்குள் கொண்டு வர முடியும்" என கேள்வி எழுப்புகிறார் அந்த மூத்த உறுப்பினர்.

"வங்கிகளைப் பொருத்தவரை ஒரளவுக்கு நிலையான சொத்துக்களுக்கு எதிராகத் தான் கடன் கொடுத்து தங்களின் வங்கி வியாபாரங்களை முன்னெடுத்துச் செல்லும். கிரிப்டோ போன்ற அதீத விலை மாற்றம் காணும் கரன்சிகளை வங்கித் துறைக்குள் அனுமதிப்பது, வங்கித் துறையையே சிரமத்துக்கு உள்ளாக்கிவிடும்.

ஆர்பிஐயைப் பொறுத்தவரை கிரிப்டோ கரன்சிகளை ஒரு சொத்தாகக் கூட அனுமதிக்கப்படக் கூடாது, என்று கருதுவதாகத் தெரிகிறது. அப்படி வெறும் சொத்தாக தற்போது வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டால், நாளை அது பணப்பரிமாற்றமாக மாறிவிடும். அப்படி அது பரிணமித்துவிட்டால், பிறகு அப்பரிமாற்றங்களை கட்டுப்படுத்த முடியாது என உறுதியாகக் கருதுகிறது.

இப்பணப்பரிமாற்றம் காலப்போக்கில் அதிகரித்தால், ஒருகட்டத்தில் பொருட்களின் விலையில் இருக்கும் வெளிப்படைத்தன்மை காணாமல் போய்விடும். ஒட்டுமொத்த பொருளாதாரமும் ஸ்தம்பித்துவிடும்" என அந்த உறுப்பினர் பகிர்ந்து கொண்டார்.

'படித்தவர்களுக்கே புரியவில்லையே - ரிஸ்க் தான்'

"உலகின் பல நாட்டைச் சேர்ந்தவர்கள் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்கிறார்கள். இந்தியாவில் கிரிப்டோ கொண்டு வரப்பட்டால், அது ஒரு சூதாட்டம் போலத் தான் கையாளப்படும். நன்கு படித்தவர்கள், பட்டதாரிகளுக்கு கூட கிரிப்டோ குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை." என்கிறார் ஏ.வி.சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிகவியல் துறைப் பேராசிரியர் ம மதிவாணன்.

"காலத்தின் கட்டாயத்தால் கிரிப்டோ கரன்சியை இந்தியா ஏற்றுக் கொள்ள வேண்டும், அதைத் தவிர்க்க முடியாது என்றாலும், அதனால் இந்தியாவில் 5 - 10 சதவீத மக்கள் மட்டுமே பலனடைவர். ஆனால் 90% பேர் பாதிக்கப்படலாம். உதாரணமாக வங்கி பெயரில் நடக்கும் போலி அழைப்புகள் மற்றும் மோசடி முயற்சிகளைக் குறிப்பிடலாம். இன்று வரை வங்கி விஷயத்தில் எளிய மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

யார்? என்ன? ஏது என்றெல்லாம் சரியாக விசாரிக்காமல், மிக எளிதில் தங்களின் கே.ஒய்.சி விவரங்களைக் கூட மோசடிக்காரர்களிடம் கொடுத்துவிடும் விழிப்புணர்வற்ற நிலை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது எனும் போது, கிரிப்டோ போன்ற அதிநவீன நிதி முதலீடுகள், அதுவும் பயங்கரமாக விலை மாற்றம் காணும் முதலீடுகள் பற்றி எப்படி சாதாரண மக்களுக்குத் தெரியும்?

பங்குச் சந்தை, ஃப்யூச்சர்ஸ், ஆப்ஷன் பன்ற நிதி சார் முதலீடு சாதனங்கள் கடந்த பல ஆண்டு காலமாக இந்தியாவில் நெறிமுறைப்படுத்தப்பட்டு, முறையாக கண்காணிக்கப்பட்டு வரும் விஷயங்களைக் குறித்தே போதிய அளவுக்கு மக்கள் மத்தியில் விழிப்புணர்வு இல்லாதபோது கிரிப்டோ கரன்சியை மக்கள் எப்படி புரிந்து கொண்டு செயல்படுவார்கள்," என கேள்வி எழுப்புகிறார்.

"என்னைப் பொருத்தவரை தடை இருந்தால் நல்லது, ஆனால் அதைத் தாண்டி, இந்தியா மட்டும் உலக அரங்கில் தனித்துவிடப்படாமல் இருக்க வேண்டும் என்கிற காரணத்துக்காக கிரிப்டோ கரன்சி அனுமதிக்கப்பட்டால், அது குறித்து போதிய அறிவு பரவல்படுத்தப்பட வேண்டும்," என்கிறார் மதிவாணன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: