You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கிரிப்டோகரன்சி ஹேக்கர் திருடிய பணத்தில் 2,000 கோடி ரூபாயை திருப்பி தந்தது ஏன்?
உலகில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய கிரிப்டோகரன்சி திருட்டுகளில் ஒன்றில் ஈடுபட்ட நபர், தாம் திருடிய பணத்தில் சுமார் பாதி அளவு பணத்தை திரும்ப கொடுத்துள்ளார்.
பணத்தைத் திருடிய ஹேக்கர் பாலி நெட்வொர்க் எனும் நிறுவனத்திடமிருந்து திருடிய 600 மில்லியன் டாலர் மதிப்பிலான கிரிப்டோகரன்சிகளில் 260 மில்லியன் டாலர் (சுமார் 2000 கோடி இந்திய ரூபாய்) பணத்தை திருப்பி அளித்துள்ளார் என்று புதன்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலி நெட்வொர்க் என்பது ஒரு ப்ளாக்செய்ன் (blockchain) தளமாகும். பிட்காயின் உள்ளிட்ட அனைத்து வகையான கிரிப்டோகரன்சிகள் வாயிலாகவும் மேற்கொள்ளப்பட்ட ஒவ்வொரு பண பரிமாற்றத்தை பதிவு செய்யும் பேரேடுகள் ப்ளாக்செய்ன் எனப்படுகின்றன.
வெவ்வேறு வகையான டிஜிட்டல் டோக்கன்கள் மூலம் இணையப் பரிவர்த்தனை மேற்கொள்ளும் சேவையை ப்ளாக்செய்ன் நிறுவனங்கள்பயனர்களுக்கு வழங்குகின்றன. அதாவது ஒரு கிரிப்டோகரன்சியை வைத்துள்ள நபர், அதே மதிப்பிலான இன்னொரு கிரிப்டோகரன்சியை வைத்துள்ள ஒருவரிடம் ப்ளாக்செய்ன் தளம் மூலம் பரிவர்த்தனை செய்து கொள்ளலாம்.
பணத்தை திருடியவருக்கு வேண்டுகோள்
600 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான கிரிப்டோகரன்சிகள் திருடப்பட்ட பின்பு தீர்வு ஒன்றை எட்டும் நோக்கில், பாலி நெட்வொர்க் நிறுவனம் செவ்வாய் அன்று ட்விட்டர் வாயிலாக அந்த ஹேக்கருக்கு திறந்த மடல் ஒன்றை எழுதியது.
தமக்கு பணத்தில் அதிகம் ஆர்வம் இல்லை என்று கூறியிருந்த அந்த ஹேக்கர் தாம் திருடிய பணத்தை திருப்பி அளிப்பதாக உறுதி அளித்திருந்தார்.
இதன்படி புதன்கிழமையன்று 260 மில்லியன் அமெரிக்க டாலர் பணம் திரும்ப வழங்கப்பட்டுள்ளது.
3.3 மில்லியன் டாலர் மதிப்பிலான எதேரியம் (Ethereum) எனும் கிரிப்டோகரன்சி, 256 மில்லியன் டாலர் மதிப்பிலான பினான்ஸ் ஸ்மார்ட் செய்ன் (Binance Smart Chain) எனும் கிரிப்டோகரன்சி மற்றும் ஒரு மில்லியன் டாலர் மதிப்பிலான பாலிகான் (Polygon) எனும் கிரிப்டோகரென்ஸி ஆகியவை தங்களுக்கு திரும்ப வழங்கப்பட்டுள்ளன என்று பாலி நெட்வொர்க் தெரிவித்துள்ளது.
இன்னும் 269 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான எதேரியம் கிரிப்டோகரன்சி டோக்கன்களும், 84 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பாலிகான் கிரிப்டோகரன்சி டோக்கன்களும் திரும்ப வழங்கப்படவில்லை.
'ஓர் இரவு முழுவதும் செலவிட்டேன்'
தம்மைத் தாமே நேர்காணல் செய்து கொள்வது போன்ற கேள்வி பதில் வடிவ விளக்கத்தை இந்த ஹேக்கர் வெளியிட்டுள்ளார் என்று லண்டனில் உள்ள ப்ளாக்செய்ன் பகுப்பாய்வு நிறுவனமான எல்லிப்டிக் எனும் நிறுவனத்தை நிறுவியவர்களில் ஒருவரான டாம் ராபின்சன் தெரிவித்துள்ளார்
தான் திருடிய பணத்தையும் அனைத்தையும் திரும்ப வழங்க வேண்டும் என்று அந்த ஹேக்கர் திட்டமிட்டிருந்ததாக கூறும் அவர் பாலி நெட்வொர்க் நிறுவனத்தின் மென்பொருட்களில் இருக்கும் கோளாறுகளை சுட்டிக்காட்ட அவர் இந்த இணையத்தில் ஈடுபட்டார் என்று கூறுகிறார்.
"ஒருவர் தாக்கப்படும் போது நிச்சயமாக வலிக்கும் என்பது எனக்கு தெரியும்; ஆனால் இத்தகைய ஹேக்கிங் சம்பவங்கள் நிகழும் பொழுது அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டாமா?" என்று எதேரியம் கிரிப்டோகரன்சி ப்ளாக்செய்னில் இந்த ஹேக்கர் ஒரு குறிப்பையும் எழுதி இருந்தார்.
பாலி நெட்வொர்க் நிறுவனத்தின் மென்பொருளில் இருக்கும் கோளாறுகளை கண்டறிவதற்காக தாம் ஓர் இரவு முழுவதையும் செலவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
பாலி நெட்வொர்க் நிறுவனம் வெளியில் யாருக்கும் தெரியாமல் தங்களது நிறுவன மென்பொருளில் இருக்கும் கோளாறை சரிசெய்து விடுவார்கள் என்பதால் பல மில்லியன் டாலர் மதிப்பிலான கிரிப்டோகரென்சியைத் திருடி அதை இந்தக் ஹேக்கர் பொதுவெளிக்கு கொண்டு வந்துள்ளார்.
பணத்தை திருப்பித் தர வேண்டிய கட்டாயம் ஏன்?
அவர்கள் திருட்டில் ஈடுபட்டு சொத்து சேர்க்கும் நோக்கத்துடன் இருந்திருக்கலாம் அல்லது பாலி நெட்வொர்க் தளத்தை மேலும் வலுவானதாகவும் பாதுகாப்பானதாகவும் மாற்றுவதற்காக இப்படி செயல்பட்டு இருக்கலாம் என்று கூறுகிறார் ராபின்சன்.
கிரிப்டோகரன்சி தொடர்பான குற்றங்கள் குறித்து நாடுகளின் அரசுகள் மற்றும் அவற்றின் சட்ட அமலாக்க நிறுவனங்களுக்கு இவர் ஆலோசனை வழங்கி வருகிறார்.
இணையவழிக் குற்றத்தில் ஈடுபடும் நபர்கள் டிஜிட்டல் பணங்களைத் திருடுவது ப்ளாக்செய்ன் தொழில்நுட்பத்தில் மிகவும் கடினமானது. ஏனென்றால் ஹேக் செய்பவரின் கணக்குக்கு பணம் செலுத்தப்படுவது குறித்த பதிவுகளை அனைவராலும் பார்க்க முடியும் என்று ராபின்சன் கூறுகிறார்.
எப்பொழுதெல்லாம் பணம் அவர்கள் கணக்குக்கு மாற்றப்படுகிறதோ, அப்போதெல்லாம் அதை அனைவராலும் பார்க்கமுடியும். அதனால் அதை உணர்ந்து அவர்கள் பணத்தை திரும்ப செலுத்த முடிவு செய்கின்றனர் என்று அவர் கூறுகிறார்.
கிரிப்டோகரன்சி என்பது என்ன?
கிரிப்டோகரன்சி என்பது என்பது டிஜிட்டல் பணம். ரூபாய்த் தாள்களைப் போலவோ, உலோக நாணயங்களைப் போலவோ அவற்றை நமது பாக்கெட்டுகளில் வைத்துக்கொள்ள முடியாது. அது இருப்பது இன்டெர்நெட்டில். வர்த்தகம் செய்வதும் இன்டர்நெட்டில்தான்.
எந்த நாட்டு அரசாலோ, ஒழுங்குமுறை அமைப்பாலோ கிரிப்டோகரன்சிகள் வெளியிடப்படவில்லை.
ஆன்லைன் மோசடிகள் உள்ளிட்டவற்றைக் குறிப்பிட்ட கிரிப்டோகரன்சிகள் பற்றிய தனது அச்சத்தை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டிருக்கிறது.
முன்னதாக கடந்த 2018-ஆம் ஆண்டில் கிரிப்டோகரன்சிகளையும் அதைப் பயன்படுத்தும் அமைப்புகளையும் தடை செய்தது.
ஆனால் 2020-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ரிசர்வ் வங்கியின் தடைக்கு எதிராக உத்தரவு பிறப்பித்த உச்ச நீதிமன்றம் "இது தொடர்பாக ஒரு நிலைப்பாட்டை எடுக்கவும் சட்டத்தை உருவாக்கவும்" உத்தரவிட்டது.
பின்பு இந்தியாவுக்கென தனியாக கிரிப்டோகரன்சியை வெளியிடலாமா என்பது குறித்தும், அது எப்படி பயன்படுத்தப்பட வேண்டும் என்பது குறித்தும் ஆய்வு செய்து வருவதாக இந்த ஆண்டு மார்ச் மாதம் கூறியது ரிசர்வ் வங்கி. அரசின் முடிவில் இது முக்கியமானது. இந்திய நாணய முறையின் எதிர்காலம் பற்றியது.
இந்தியாவில் எவ்வளவு கிரிப்டோகரன்சிகள் வாங்கப்பட்டிருக்கின்றன என தரவுகள் இல்லாவிட்டாலும், பல லட்சக் கணக்கானோர் டிஜிட்டல் பணத்தில் முதலீடு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் இந்த எண்ணிக்கை வேகமாக அதிகரித்திருக்கிறது.
பிற செய்திகள்:
- டோக்யோ ஒலிம்பிக்: நிர்வாணமாக குளிக்குமாறு இந்தியர்களிடம் கூறப்பட்டது ஏன்?
- எஸ்.பி. வேலுமணி வீட்டில் ரெய்டு: வேலூரா புழலா? அதிமுக கூட்டத்தில் காரசார விவாதம்
- ஆப்கானிஸ்தான் அரசு - தாலிபன் போர் 20 ஆண்டுகளாக நீடிப்பது ஏன்? - விரிவான பின்னணி
- தமிழகத்தில் வாழும் இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை கிடைக்குமா?
- டோக்யோ ஒலிம்பிக்: நிர்வாணமாக குளிக்குமாறு இந்தியர்களிடம் கூறப்பட்டது ஏன்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்