You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தியாவுக்கு தனி கிரிப்டோ கரன்சி: அரசின் அடுத்த அதிரடி என்ன?
- எழுதியவர், நிதி ராய்
- பதவி, பிபிசி தமிழுக்காக
கிரிப்டோகரன்சிகளை நீங்கள் பயன்படுத்தி வருகிறீர்கள் என்றால் கிரிப்டோகரன்சிகள் பற்றிய இந்திய அரசின் திட்டம் தொடர்பான சமீபத்திய செய்திகளை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
கிரிப்டோகரன்சி மற்றும் டிஜிட்டல் கரன்சி ஒழுங்குமுறை மசோதா என்ற புதிய சட்ட முன்வடிவை இந்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்ய இருக்கிறது. மசோதாவில் என்ன இருக்கிறது என்ற விவரம் இன்னும் வெளியாகவில்லை.
இந்தியாவில் கிரிப்டோகரன்சி பயன்பாட்டை எப்படி ஒழுங்குபடுத்துவது என்ற அம்சங்கள் இதில் இடம்பெறும் என எதிர்பார்க்கலாம்.
கிரிப்டோகரன்சிகள் பற்றிய இந்தியாவின் நகர்வு, உலகம் முழுவதும் உற்று நோக்கப்படுகிறது. அடுத்த மழைக்காலக் கூட்டத் தொடரில் இந்த மசோதா அமல்படுத்தப்படுமா என்பதை முதலீட்டாளர்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள்.
எப்படியோ, கிரிப்டோகரன்சிகளை முற்றிலுமாகத் தடை செய்யும் எண்ணம் அரசுக்கு இல்லை என்பதை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெளிவுபடுத்திவிட்டார். ஆனால் கிரிப்டோகரன்சிகளுக்கு பின்னால் இருக்கும் தொழில்நுட்பத்தின் கடிவாளத்தைக் கையில் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற திட்டம் அரசுக்கு இருக்கிறது.
25 வயதான ருச்சி பால் நம்பிக்கையுடன் இருக்கிறார். கிரிப்டோகரன்சிகள் மூலமான தனது வர்த்தகத்தைத் தொடருவதற்கு அவர் முடிவெடுத்திருக்கிறார்.
"அரசு தடை விதிக்கும் என்று நான் கருதவில்லை. ஆனால் அவர்கள் ஒழுங்குபடுத்துவார்கள். 2017-ஆம் ஆண்டைப் போல கிரிப்டோகரன்சிகளை பற்றி ஒவ்வொருவரும் பேசுவார்கள்; பின்னர் எல்லாம் மறைந்து போகும்" என்கிறார் ருச்சி பால்.
கிரிப்டோகரன்சிகள் தொடர்பான இந்திய அரசின் நடவடிக்கைகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டால், "சுவாரஸ்யமானது" என்கிறார்.
"சர்வதேச அளவில் இது முதலில் ஏற்கப்படாது. பன்னாட்டு பரிமாற்றத்துக்கு பயன்படுத்த முடியாது. பிட் காயினைப் போல எல்லோரும் ஏற்கும் நிலையை எட்டுவதற்கு சில காலம் பிடிக்கும்." என்கிறார் ருச்சி.
கிரிப்டோகரன்சிகளுள் ஒன்றான பிட் காயின்களை இந்தியர்கள் அதிக அளவில் வாங்குகிறார்கள். கணிசமாக அவர்களுக்கு ஆதாயம் கிடைக்கிறது. ஆனால் அதுபற்றிய அதிகாரப்பூர்வமான புள்ளி விவரங்கள் இல்லை.
"தடை விதிக்கப்படுவதற்கு முன்பாக எவ்வளவு ஆதாயம் பெற முடியுமோ அவ்வளவு ஆதாயத்தை ஈட்டிவிட வேண்டும் என விரும்புகிறேன். பணம் சம்பாதிக்கக் கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பைத் தவறவிட நான் விரும்பவில்லை." என்று கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்யும் ஒருவர் கூறினார். டிஜிட்டல் பணம் என்பது முதலீட்டுக்கான சொத்துவகை அல்ல. அதில் வேறுபாடு இருக்கிறது என்கிறார் அடையாளத்தை வெளியிட விரும்பாத அந்த முதலீட்டாளர்.
கிரிப்டோகரன்சி என்பது என்ன?
கிரிப்டோகரன்சி என்பது என்பது டிஜிட்டல் பணம். ரூபாய்த் தாள்களைப் போலவோ, உலோக நாணயங்களைப் போலவோ அவற்றை நமது பாக்கெட்டுகளில் வைத்துக்கொள்ள முடியாது. அது இருப்பது இன்டெர்நெட்டில். வர்த்தகம் செய்வதும் இன்டர்நெட்டில்தான்.
எந்த நாட்டு அரசாலோ, ஒழுங்குமுறை அமைப்பாலோ கிரிப்டோகரன்சிகள் வெளியிடப்படவில்லை.
ஆன்லைன் மோசடிகள் உள்ளிட்டவற்றைக் குறிப்பிட்ட கிரிப்டோகரன்சிகள் பற்றிய தனது அச்சத்தை இந்திய ரிசர்வ் வங்கி இந்த ஆண்டிலும் வெளியிட்டிருக்கிறது.
முன்னதாக கடந்த 2018-ஆம் ஆண்டில் கிரிப்டோகரன்சிகளையும் அதைப் பயன்படுத்தும் அமைப்புகளையும் தடை செய்தது.
ஆனால் 2020-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ரிசர்வ் வங்கியின் தடைக்கு எதிராக உத்தரவு பிறப்பித்த உச்ச நீதிமன்றம் "இது தொடர்பாக ஒரு நிலைப்பாட்டை எடுக்கவும் சட்டத்தை உருவாக்கவும்" உத்தரவிட்டது.
கடந்த மாதத்தில் புதிய தகவலை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. இந்தியாவுக்கென தனியாக கிரிப்டோகரன்சியை வெளியிடலாமா என்பது குறித்தும், அது எப்படி பயன்படுத்தப்பட வேண்டும் என்பது குறித்தும் ஆய்வு செய்து வருவதாகக் கூறியது. அரசின் முடிவில் இது முக்கியமானது. இந்திய நாணய முறையின் எதிர்காலம் பற்றியது.
இந்தியாவில் எவ்வளவு கிரிப்டோகரன்சிகள் வாங்கப்பட்டிருக்கின்றன என தரவுகள் இல்லாவிட்டாலும், பல லட்சக் கணக்கானோர் டிஜிட்டல் பணத்தில் முதலீடு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் இந்த எண்ணிக்கை வேகமாக அதிகரித்திருக்கிறது.
புதிய ஒழுங்குமுறை அமலுக்கு வரும்பட்சத்தில், ஏற்கெனவே கிரிப்டோ கரன்சிகளை வைத்திருப்பவர்கள் அவற்றை விற்றுத் தீர்ப்பதற்கான போதிய காலம் வழங்கப்படும் என்பதையும் அரசு தெளிவுபடுத்திவிட்டது.
இந்தியாவுக்கென தனி கிரிப்டோகரன்சி வந்தால் என்னவாகும்?
சட்டதிட்டங்களுக்கு உள்பட்டு இந்தியாவுக்கென தனியாக கிரிப்டோகரன்சியை அறிமுகப்படுத்தும் திட்டம் இருப்பதாக ரிசர்வ் வங்கியும் மத்திய நிதியமைச்சகமும் கடந்த மாதம் கூறின. சொல்வது போலச் செய்வது எளிதன்று.
டிஜிட்டல் பணத்துக்கு அனுமதி கொடுக்க வேண்டுமானால் வர்த்தகத்திலும் பரிமாற்றங்களிலும் அதற்கென சட்டப்பூர்வ மதிப்பை நிர்ணயிக்க வேண்டும். அது மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
டிஜிட்டல் பணத்தின் சட்டபூர்வ மதிப்பு சாதாரண மக்களுக்கும் கிடைக்குமா அல்லது மொத்த விற்பனைகளில் மட்டும் பயன்படுத்தப்படுமா என்பது உள்ளிட்ட பல்வேறு குழப்பங்களுக்கு விடையளிக்க வேண்டியிருக்கும் என்கிறார் ஜெ சாகர் அசோசியேட்ஸ் என்ற சட்ட நிறுவனத்தைச் சேர்ந்த சஞ்சய் சிங்.
"தனிநபர் கணக்குகளை வங்கிகள் நிர்வகிப்பது போல, டிஜிட்டல் பணக் கணக்குகளை ரிசர்வ் வங்கி நிர்வகிக்கப் போகிறதா? அப்படிச் செய்ய வேண்டுமானால் அதற்கு மிக விரிவான தொழில்நுட்பம் தேவைப்படும். வரி, பண மோசடி, பரிவர்த்தனை முறைகள், தனிநபர் விவரங்களின் பாதுகாப்பு உள்லிட்ட ஏராளமான அம்சங்களையும் கணக்கில் கொள்ள வேண்டும்." என்கிறார் அவர்.
கொரோனா பெருந்தொற்றுச் சூழலே இந்திய அரசு டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கித் திரும்பியதற்குக் காரணம் என்கிறார் பிட்காயின் வர்த்தகத்தை மேற்கொண்டு வரும் பைடெக்ஸ் என்ற நிறுவனத்தின் தலைவரான மோனார்க் மோடி. குக்கிராமங்கள் வரை இன்டர்நெட் சென்றிருப்பதால் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் கடந்த ஆண்டில் மட்டும் 42 சதவிகிதம் வரை அதிகரித்திருக்கின்றன என்று அவர் கூறுகிறார்.
இப்போதிருக்கும் கிரிப்டோகரன்சிகளை ஆதரிக்காதது ஏன்?
பிட்காயின் பரிவர்த்தனை நிறுவனமான ஸெப்பேயின் தலைமை மார்க்கெட்டிங் அதிகாரி விக்ரம் ரங்கலா இப்படிக் கூறுகிறார்: "இப்போது பிரபலமாக இருக்கும் பிட்காயின் மற்றும் ஈதர் போன்றவை அனைவருக்கும் பொதுவானவை. எந்த நாட்டு அரசுடனும் இணைப்புக் கிடையாது. இண்டர்நெட் இருந்தால் கிரிப்டோகரன்சிகளை யாரும் பெற முடியும். பொருளாதாரம் மற்றும் நிதிசார்ந்த அரசின் கொள்கைகளுடன் கிரிப்டோகரன்சிகள் இருக்க வேண்டும் என்பதால்தான் அரசு அதன் மீது கட்டுப்பாட்டை வைத்திருக்க நினைக்கிறது. அதற்காக ஏற்கெனவே இருக்கும் கிரிப்டோகரன்சிகளும் அரசின் கிரிப்டோகரன்சியும் மோத வேண்டிய அவசியம் இல்லை. இரண்டும் ஒரே நேரத்தில் இருக்கலாம்."
மோசடிகள் நடக்கக்கூடும் என்ற சிக்கலுக்கு யுனோகாயின் என்ற மற்றொரு பிட்காயின் பரிமாற்ற நிறுவனத்தின் தலைவர் சாத்விக் விஸ்வநாதன் தீர்வு கூறுகிறார். "கிரிப்டோ கரன்சி பரிமாற்ற அமைப்புகள் வாடிக்கையாளர்களின் அடையாள ஆவணங்களைப் பெற்று, வங்கிக் கணக்குகள் மூலமாக மட்டுமே பரிவர்த்தனைகள் நடக்க வேண்டும். இந்த நடைமுறையில் மோசடியாளர்கள் யாரும் ஆதாயம் பெறாமல் தடுக்க முடியும்" என்கிறார் அவர்.
பிற செய்திகள்:
- இளவரசர் ஃபிலிப்: ஓர் அசாதாரண மனிதரின் தனிச்சிறந்த வாழ்க்கை
- இளவரசர் ஃபிலிப் 99 வயதில் காலமானார், பக்கிங்காம் அரண்மனை அறிவிப்பு
- கட்டாய ஓய்வுக்குப் பரிந்துரைக்கப்பட்ட 9 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் - தகவல் ஆணைய உத்தரவு சொல்வது என்ன?
- மேற்குவங்கத்தில் மத்திய பாதுகாப்புப்படை துப்பாக்கிச்சூடு: 4 பேர் பலி - நடந்தது என்ன?
- சர்ச்சையாகும் தமிழக ஆளுநரின் நியமனங்கள்: கொந்தளிக்கும் கட்சிகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: