You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
Bitcoin வர்த்தகம்: படுவேகத்தில் உயர்ந்த மதிப்பு சரிவை சந்தித்தது எப்படி?
பிட்காயினின் மதிப்பு முதல் முறையாக 34 ஆயிரம் அமெரிக்க டாலர்களை கடந்து வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது என்கிற செய்தியைப் படித்து ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்குள், அதன் மதிப்பு பெரிய வீழ்ச்சியைக் கண்டு 29,000 டாலர்களைத் தொட்டது.
சில வாரங்களுக்கு முன்பு தான், பிட்காயினின் மதிப்பு 20,000 அமெரிக்க டாலரைத் தொட்டது.
கடந்த ஜனவரி 2ஆம் தேதி சனிக்கிழமை, பிற்பகலில் இந்த மெய்நிகர் க்ரிப்டோகரன்ஸி 30,823.30 டாலரைத் தொட்டு வர்த்தகமானது. ஜனவரி 3ஆம் தேதி பிட்காயினின் மதிப்பு 34,302 டாலரை தொட்டது.
எவ்வளவு வேகத்தில் 34,000 டாலரைத் தொட்டதோ அதே வேகத்தில், பிட்காயின் கடந்த ஜனவரி 4ஆம் தேதி 28,532 டாலர் வரை சரிவைக் கண்டது.
ஜனவரி 5ஆம் தேதி மாலை 5.40 மணியளவில் 31,752 டாலருக்கு பிட்காயின் வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது.
கடந்த 2020-ம் ஆண்டில், பிட்காயினின் மதிப்பு கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகரித்திருக்கிறது. இதற்கு அதிவேகமாக லாபம் பார்க்க விரும்பிய முதலீட்டாளர்கள் தான் காரணம்.
அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்து வருவதால், பிட்காயினின் மதிப்பு இன்னும் அதிகரிக்கலாம் என சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
கடந்த மார்ச் 2020-ல், கொரோனா பிரச்னையால் முதலீட்டாளர்கள் அமெரிக்க டாலரில் முதலீடு செய்தார்கள். இதனால் அமெரிக்க டாலர் மதிப்பு அதிகரித்தது. அதன் பிறகு கொரோனா பெருந்தொற்றை சமாளிக்க அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் பல நிதித் தொகுப்புகளை அறிவித்தது.
இதனால் மீண்டும் அமெரிக்க டாலரின் மதிப்பு சரியத் தொடங்கிவிட்டது. கடந்த 2020-ம் ஆண்டில், அமெரிக்க டாலர் கரன்ஸி மதிப்பு, 2017-ம் ஆண்டுக்குப் பிறகான காலத்தில் இல்லாத அளவுக்கு பெரிய சரிவுடனேயே நிறைவடைந்தது.
பிட்காயினும் கிட்டத்தட்ட அமெரிக்க டாலர், பிரிட்டனின் பவுண்ட் ஸ்டெர்லிங் போன்ற பிற கரன்ஸியை போலவே வர்த்தகமாகிறது.
சமீபத்தில் பிட்காயினை ஆன்லைனில் பேமென்ட் (பணப் பரிமாற்றம்) செய்ய முடியும் என்பதால், இதற்கான ஆதரவு பெருகியது. Paypal போன்ற பணப்பரிமாற்ற நிறுவனங்கள் டிஜிட்டல் கரன்ஸிகளை இணையத்திலேயே பரிமாற்றம் செய்யலாம் என்கிற வசதியைக் கொண்டு வந்திருக்கிறார்கள்.
க்ரிப்டோ கரன்ஸியின் மதிப்பு ஏற்ற இறக்கத்துக்கு உட்பட்டது என்பதை முன்பே ஒரு முறை வலுவாக நிரூபித்தது.
2017ஆம் ஆண்டில் 20,000 டாலரை தொடும் நிலையில் இருந்த பிட்காயின், அதன் பின் மிகப் பெரிய சரிவை கண்டு 3,300 டாலருக்குக் கீழ் சரிந்தது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் மீண்டும் ஒரு சிறிய வீழ்ச்சியைக் காண்பதற்கு முன், பிட்காயினின் மதிப்பு 19,000 டாலரைக் கடந்தது.
பிரிட்டனின் மத்திய வங்கியான பேங்க் ஆஃப் இங்கிலாந்தின் ஆளுநர் ஆண்ட்ரூ பெய்லி, இதை ஒரு பணப் பரிமாற்ற முறையாக பயன்படுத்துவதை கடந்த அக்டோபர் மாதம் எச்சரித்தார்.
நான் நேர்மையாக இருக்க வேண்டும், நாம் உள்ளார்ந்த மதிப்பு என்றழைக்கும் Intrinsic Value-வை பிட்காயினில் காண்பது கடினம். ஆனால் மக்களுக்கு பிட்காயின் வேண்டும் என்பதால் வெளிப்புற மதிப்பு இருக்கலாம் என்கிறார் ஆண்ட்ரூ.
மக்கள் பிட்காயினை ஒரு பணப் பரிமாற்றமாகப் பார்ப்பது தனக்கு பதற்றமளிக்கிறது என்றும், பிட்காயினின் மதிப்பு கடுமையான ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டது என்பதை முதலீட்டாளர்கள் உணர வேண்டும் என்றும் கூறினார் பேங்க் ஆஃப் இங்கிலாந்தின் ஆளுநர்.
இந்தியாவில் அதிகரிக்கும் திடீர் வரவேற்பு
கிரிப்டோ கரன்சியின் இந்த அபாரமான வளர்ச்சி காரணமாக, டெல்லியில் மக்கள் தொடர்பு பணியில் ஈடுபட்டிருக்கும் 34 வயதான ரித்திகா கர் இதில் முதலீடு செய்தார். நான்கு மாதங்களுக்கு முன்பு அவர் கிரிப்டோ கரன்சியில் ஆயிரம் ரூபாய் முதலீடு செய்து பிட்காயின்களை வாங்கினார்.
``சில கட்டுரைகளைப் படித்தபோது கிரிப்டோ கரன்சிகள் பற்றி நான் அறிந்தேன். உண்மையில் அது ஆர்வத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. புதிதாக எதையாவது ஏன் முயற்சித்துப் பார்க்கக் கூடாது என தோன்றியது. நான்கு மாதங்களில் என் முதலீடு ஒரு லட்சம் ரூபாயை எட்டியுள்ளது'' என்று அவர் தெரிவித்தார்.
கிரிப்டோ கரன்சியில் முதன்முறையாக முதலீடு செய்திருக்கும் ரித்திகா, நீண்டகால நோக்கில் முதலீடு செய்து வருகிறார். ஐந்து ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலத்துக்கு முதலீட்டை வைத்திருக்க விரும்புகிறார். ``விரைவாக லாபம் ஈட்டுவதற்காக நான் இதைச் செய்யவில்லை. என் எதிர்காலத்துக்கான முதலீடு போன்றதாக இருக்கும். நான் தனியாக வாழும் பெண். முடிந்த வரையில் பல வகைகளில் முதலீடுகள் செய்ய விரும்புபவராக இருக்கிறேன்'' என்று அவர் குறிப்பிட்டார்.
பிற செய்திகள்:
- கொரோனா தடுப்பூசி: கூட்டறிக்கை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனங்கள்
- லாஸ்லியாவின் ஒரேயொரு பதிவு: இந்திய அளவில் ட்ரெண்டிங்!
- "திரையரங்க தளர்வு மருத்துவர்களை இழிபடுத்தும் செயல்" - வலுக்கும் விமர்சனம்
- வயதாவதால் பலவீனமாகும் நோய் எதிர்ப்பு மண்டலம் - தவிர்க்க முடியுமா?
- இந்திய நாடாளுமன்றத்தின் புதிய கட்டட பணிகளுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி
- ஜாக் மா மாயமாகிவிட்டாரா? சீன அரசுடனான மோதல்போக்கு காரணமா? - எழுப்பப்படும் கேள்விகள்
- யுரேனியம் செறிவூட்டலை திடீரென அதிகரித்த இரான் - எச்சரிக்கும் உலக நாடுகள்
- தகனம் செய்யப்படும் கொரோனாவால் இறந்த முஸ்லிம்கள்: பிரச்சனை எழுப்பும் ஜாகிர் நாயக்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்