You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழகத்தில் தொடரும் மழை: செம்பரம்பாக்கத்தில் என்ன நிலைமை?
(இன்றைய நாளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் சிலவற்றின் சுருக்கத்தை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.)
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல இடங்களில் புதன்கிழமையும் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மீனவர்களுக்கு எச்சரிக்கை ஏதுமில்லை என்றபோதும், பெரும்பாலான கடலோர மாவட்டங்களில் மழை பொழிவு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர், நாகப்பட்டினம்,புதுச்சேரி, திருவண்ணாமலை மற்றும் ராணிப்பேட்டையில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
புதன்கிழமை தொடங்கும் மழை அடுத்த மூன்று நாட்களுக்கு நீடிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை மற்றும் ஒரு சில இடங்களில் மிதமான மழை பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செவ்வாய் அன்று பெய்த மழை காரணமாக சென்னை நகரத்தின் பல்வேறு சாலைகளில் தண்ணீர் தேங்கி இருந்ததை பலரும் சமூகவலைதளங்களில் பதிவிட்டிருந்தனர்.
2015இல் சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளம் குறித்த படங்களையும், தற்போதும் தங்களது குடியிருப்புகளில் மழை நீர் தேங்கியிருப்பதையும் நினைவுகூர்ந்தனர். சென்னை விமான நிலைய பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றதால் விமானங்கள் புறப்படுவது தாமதமாகியது.
செவ்வாய்கிழமை காலை முதல் பெய்த மழை காரணமாக, சென்னை நகரத்தின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டியது.
வெள்ள அபாயத்தை தடுக்கும் பொருட்டு ஒரு மணிநேரத்தில் 500 கன அடி நீர் முதலில் திறந்துவிடப்பட்டது. மேலும் மழை பொழிவு நீடித்ததால், அணையில் இருந்து ஒரு மணிநேரத்திற்கு 3,000 கன அடி நீர் வரை தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அணைக்கு அருகில் உள்ள ஒரு சில கிராமங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னை புறநகர் பகுதியில் இருந்து நகரத்திற்கு வந்து சேர வேண்டிய அரசு பேருந்துகள், தனியார் ஆலை வாகனங்கள் பலவும் சாலைகளில் தத்தளித்தன.
கடந்த 30 நாட்களில் இரண்டாவது முறையாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா தடுப்பூசி: கடமையே பிரதானம் - கூட்டறிக்கை இந்திய நிறுவனங்கள்
கொரோனா வைரஸ் தொடர்பான இரண்டு மருந்துகளுக்கு இந்த வாரம் இந்திய மருந்து தலைமை கட்டுப்பாட்டாளர் ஒப்புதல் வழங்கிய நிலையில், இந்த தடுப்பூசி போடும் பணியை சீராக செயல்படுத்த உறுதியேற்பதாக அனுமதி பெற்ற இரண்டு நிறுவனங்களின் தலைவர்கள் உறுதியளித்துள்ளனர்.
"தங்களுக்கு முன்னால் உள்ள மிக முக்கியமான பணி இந்தியாவிலும் உலக அளவிலும் உள்ள மக்களின் உயிர்களையும் வாழ்வாதாரங்களையும் காப்பாற்றுவதாகும்," என்று சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியாவின் தலைமை செயல் அதிகாரி அதார் பூனாவாலா மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ணா எல்லா கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
"இப்போது இரண்டு கொரோனா தடுப்பூசிகளுக்கு இந்தியாவில் EUA (அவசரகால பயன்பாட்டு அங்கீகாரம்) வழங்கப்பட்டுள்ளன. அவற்றின் உற்பத்தி, வழங்கல், விநியோகம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறோம். இது தேவைப்படும் மக்களுக்கு உயர் தரமான, பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தடுப்பூசிகளைப் பெறுகிறது," என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
"எங்களுடைய இரு நிறுவனங்களும் இந்தச் செயலில் முழுமையாக ஈடுபட்டுள்ளன. மேலும் தடுப்பூசிகளின் போடும் திட்டம் சீராக இருப்பதை உறுதிப்படுத்துவது, தேசத்துக்கும் உலகத்துக்கும் செய்யும் கடமையாக கருதுகிறோம். எங்களின் ஒவ்வொரு நிறுவனமும் திட்டமிட்டபடி கோவிட் -19 தடுப்பூசிகளின் மேம்பாட்டு நடவடிக்கைகளை தொடர்கின்றன," என்று இரு தயாரிப்பாளர்களும் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் தயாரிப்பு மற்றும் விநியோகத்தில் சம்பந்தப்பட்ட இரு நிறுவனங்களும் வெளிநாடுகளுக்கு முன்னுரிமை கொடுப்பதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவி வந்த நிலையில், இந்த கூட்டறிக்கையால், தவறான தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று அதார் பூனாவாலா தெரிவித்தார்.
பிற செய்திகள்:
- தியேட்டரில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி: கொரோனா பரவலை தடுக்க உதவுமா?
- வயதாவதால் பலவீனமாகும் நோய் எதிர்ப்பு மண்டலம் - தவிர்க்க முடியுமா?
- இந்திய நாடாளுமன்றத்தின் புதிய கட்டட பணிகளுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி
- ஜாக் மா மாயமாகிவிட்டாரா? சீன அரசுடனான மோதல்போக்கு காரணமா? - எழுப்பப்படும் கேள்விகள்
- யுரேனியம் செறிவூட்டலை திடீரென அதிகரித்த இரான் - எச்சரிக்கும் உலக நாடுகள்
- தகனம் செய்யப்படும் கொரோனாவால் இறந்த முஸ்லிம்கள்: பிரச்சனை எழுப்பும் ஜாகிர் நாயக்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்