"திரையரங்க தளர்வு மருத்துவர்களை இழிபடுத்தும் செயல்" - வலுக்கும் விமர்சனம்

    • எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
    • பதவி, பிபிசி தமிழ்

தமிழகத்தில் திரையரங்குகள் 100 சதவீத பார்வையாளர்களுடன் செயல்படலாம் என்ற மாநில அரசின் அறிவிப்பு, தீவிர திரைப்பட ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியிருந்தாலும், கொரோனா பரவல் குறித்த அச்சத்தை பொது மக்கள் இடையே ஏற்படுத்தியிருக்கிறது.

கொரோனா ஊரடங்கு காலத்தில், திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்துள்ளதற்கு சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

திரைத்துறையினர் சமூக பொறுப்போடு செயல்பட வேண்டும் என்றும் தங்களது ரசிகர்களும், அவர்களின் குடும்பங்களும் கொரோனாவால் பாதிக்காமல் காக்கும் கடமை முன்னணி திரை நட்சத்திரங்களுக்கும், கலைஞர்களுக்கும் உள்ளது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

திரைத்துறையினரின் அழுத்தத்தால் தமிழக அரசு திரையரங்குகளில் 100 சதவிகித இருக்கைகளிலும் பார்வையாளர்கள் அமர அனுமதி வழங்கியுள்ளது என விமர்சித்துள்ள மருத்துவர்கள், கொரோனா பரவும் ஆபத்தை கருத்தில் கொள்ளாமல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''70 சதவிகிதம் வேகமாக பரவும் புதிய உருமாறிய கொரோனா பரவும் காலக் கட்டத்தில் இத்தகைய அனுமதி கொடுத்திருப்பது பொதுமக்களின் நலன்களுக்கு எதிரானது.இது மக்களின் உயிரோடு விளையாடும் செயலாகும்.தனிநபர் இடைவெளியை பரமாரிக்க வேண்டும், கூட்டம் உள்ள இடங்களை தவிர்க்க வேண்டும்,மூடிய காற்றோட்டம் இல்லாத இடங்களை தவிர்க்க வேண்டும் என உலக நல நிறுவனம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மத்திய அரசும் இதை அறிவுறுத்தி வருகிறது.இந்நிலையில், தமிழக அரசு இத்தகைய முடிவை எடுத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது,'' என மருத்துவர் ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களின் உயிரைவிட திரைப்படத் தயாரிப்பாளர்களின் பொருளாதார நலனை முக்கியமானதாக தமிழக அரசு கருதுவது வியப்பைத் தருகிறது என்று விமர்சித்துள்ள அவர், பல மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கொரோனா பணியில் ஈடுபட்டு இறந்துள்ளனர் என்றும் அரசு அனுமதி வழங்கியுள்ள செயல், மருத்துவ பணியாளர்களையும், முன்களப் பணியாளர்களையும் இழிவுபடுத்தும் செயலாகும் என்கிறார் அவர்.

கொரோனாவால் பொருளாதார பாதிப்புக்கு உள்ளான திரைத்துறையினருக்கு இழப்பீடு வழங்கலாமே ஒழிய,அவர்கள் நலன் காத்தல் என்ற பெயரில் கொரோனா பரவலை அதிகரிக்கும் செயலை அனுமதிக்க கூடாது என்று தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் தமிழக அரசு அளித்த அனுமதி குறித்து மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் ரவீந்திரநாத் கேட்டுக் கொண்டுள்ளார்.

எச்சரிக்கும் நிபுணர்கள்

திரையரங்குகள் முழுக்க முழுக்க குளிர்சாதன வசதி கொண்டு இயங்கும் அரங்குகளாக உள்ள நிலையில், சமூக இடைவெளி இல்லாமல் எல்லா இருக்கைளிலும் பார்வையாளர்களை அனுமதித்தால், கொரோனா பரவல் வேகமாக அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக இந்திய மருத்துவ கழகத்தின் விஞ்ஞானி பிரதீப் கவுர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மூடப்பட்ட குளிர் சாதன அரங்கத்தில் சுமார் மூன்று மணி நேரம் இடைவெளி இன்றி பார்வையாளர்கள் அமர்ந்திருப்பது, அதிலும் தமிழகம் முழுவதும் பல்வேறு திரையரங்குகளில் மக்கள் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மக்கள் திரளில் கொரோனா பரவும் வாய்ப்பு அதிகம் என்றும் இதுபோன்ற நிகழ்வுகளை பொது மக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் பிரதீப் கவுர் வலியுறுத்தியுள்ளார்.

இந்திய அளவில் கொரோனாவின் தாக்கம் குறைந்து வரும் நேரத்தில், இங்கிலாந்தில் இருந்து பரவியுள்ள கொரோனா வைரஸின் திரிபு பரவ தொடங்கிய இந்த நேரத்தில் திரையரங்குகளுக்கு அளிக்கப்பட்டுள்ள தளர்வு அச்சம் தருவதாக பொது மக்கள் கருதுகிறார்கள்.

தீவிர விஜய் ரசிகராக இருந்தாலும் மாஸ்டர் படம் பார்க்க திரையரங்குக்கு செல்லப்போவதில்லை என்கிறார் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தமிழ்செல்வன்.

''கொரோனா தொற்று பற்றிய அச்சம் இன்னும் தீரவில்லை. புதிய வகை கொரோனா பரவுகிறது என்கிறார்கள். இந்த நேரத்தில் தியேட்டர்களை திறக்கிறார்கள் என்பது மிகவும் ஆச்சரியத்தை தருகிறது. என் குடும்பத்தினரின் நலன் கருதி நான் இந்த முறை படம் பாரக்க போக வேண்டாம் என முடிவு செய்துவிட்டேன். 100 சதவீத பார்வையாளர்கள் என்றால், எல்லோரும் மாஸ்க் அணிந்திருப்பார்களா என்ற சந்தேகம் உள்ளது. உடல்நலன் பாதிக்கப்பட்ட நபர் யாரவது அங்கிருந்தால் நான் பாதிக்கப்படுவதோடு, என் குடும்பத்தினரும் பாதிக்கப்படுவார்கள்,''என்கிறார் தமிழ்செல்வன்.

பெரும்பாலான நடிகர்கள் திரையரங்குகள் முழுவீச்சில் இயங்குவதற்கு வரவேற்பு தெரிவித்தாலும், ஒரு சிலர் மாற்று கருத்தை தெரிவித்துள்ளனர்.

திரையரங்கு உரிமையாளர்கள் படம் பாரக்க வருபவர்கள் மாஸ்க் அணிந்துள்ளதை உறுதிப்படுத்திவிட்டு அவர்களின் உடல்வெப்பத்தை சரிபார்த்த பின்னர்தான் திரையரங்கத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்கிறார்கள். ஆனால், நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் ஒரே நேரத்தில் படம் பார்க்க கூடும்போது சமூகஇடைவெளி பின்பற்றப்படுமா என்பது சந்தேகமே என்கிறார்கள் நிபுணர்கள்.

முன்னாள் பொது சுகாதார இயக்குநர் குழந்தைசாமியிடம் கேட்டபோது, "குளிர் சாதன வசதியுடன் திரையரங்குகள் இயங்கலாம் என சமீபத்தில் மத்திய அரசு தளர்வு அளித்துள்ளது," என்றார்.

''திரையரங்கத்தில் உள்ள குளிர் சாதனத்தில் காற்று சுழற்சியை அதிகரிக்கும் வசதி இருக்கும். அதனை மாக்ஸிமம் என்ற அளவில் வைத்தால் மூடப்பட்ட அறையில் புதிய காற்று சுழற்சி இருப்பதை உறுதிப்படுத்தலாம். முடிந்தவரை, மூடப்பட்ட அறையை விடுத்து, காற்றோட்டம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் 100 சதவீத பார்வையாளர்கள் இருந்தால் தொற்று பரவுவதை குறைக்க வாய்ப்புள்ளது. ஆனால் இது போன்ற வாய்ப்புகள் எத்தனை திரையரங்குகளில் இருக்கும் என்று தெரியவில்லை,''என்கிறார் குழந்தைசாமி.

பார்வையாளர்கள் திரையரங்கில் இருக்கும் நேரத்தில் கட்டாயமாக மாஸ்க் அணிந்திருக்க வேண்டும் என்றும் கைகுலுக்குவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என்கிறார் அவர்.

''படம் பார்க்க செல்லவதாக இருந்தால்,ஒவ்வொருவரும் தங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொண்டு செல்ல வேண்டும். முடிந்தவரை மற்றவர்களிடம் இருந்து விலகி நிற்பது, திரை அரங்கத்தில் இருக்கும் போது மாஸ்கை கழற்றாமல் இருக்க வேண்டும். இடைவெளி நேரத்தில் கை கழுவுவது அவசியம். இருக்கை தூய்மையாக இருக்கிறதா என்றும் பரிசோதிக்கவேண்டும்,''என்கிறார் குழந்தைசாமி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :