You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜாக் மா மாயமாகிவிட்டாரா? சீன அரசுடனான மோதல்போக்கு காரணமா? - எழுப்பப்படும் கேள்விகள்
உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான சீனாவை சேர்ந்த அலிபாபா நிறுவனத்தின் நிறுவனர் ஜாக் மா கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக பொதுவெளியில் காணப்படாதது குறித்து சமூக ஊடகங்களில் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
சீன அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு அமைப்புகள் ஜாக் மாவுக்கு சொந்தமான நிறுவனங்கள் மீது விசாரணைகளை நடத்தி வரும் வேளையில், அவர் மாயமாகிவிட்டாரா என்ற கோணத்தில் பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
குறிப்பாக, தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பல மாதங்களாக நடுவராக பங்கேற்று வந்த ஜாக் மா, சமீபத்தில் நடந்த அதன் இறுதி நிகழ்ச்சியில் கூட கலந்துகொள்ளாதது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளதாக ராய்ட்டர்ஸ் முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
ஆசிய கண்டத்தின் ஐந்தாவது மிகப் பெரிய பணக்காரரான அலிபாபா குழும தலைவரான ஜாம் மா, கடந்த அக்டோபர் மாதம் ஷாங்காய் நகரத்தில் நடைபெற்ற ஒரு நிதி தொழில்நுட்ப மாநாட்டில், சீன வங்கிகள் மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகளுக்கு எதிரான கருத்துகளை தெரிவித்ததாகவும், அதனால் அதிகாரிகளுடன் ஏற்பட்ட மோதலுக்கு பிறகே அவர் பொதுவெளியில் காணப்படவில்லை என்றும் ராய்ட்டர்ஸ் முகமை தெரிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி, இந்த மோதல் சூழ்நிலைக்கு பிறகே, அலிபாபாவின் ஆன்ட் குழுமத்தின் 37 பில்லியன் டாலர்கள் மதிப்பு கொண்ட ஆரம்ப பொது விடுப்புகள் (IPO) சீன அரசால் தடைசெய்யப்பட்டது. ஒருவேளை இது திட்டமிட்டபடி நிகழ்ந்திருந்தால், உலக பங்குச்சந்தை வரலாற்றில் மிகப் பெரிய பங்கு வெளியீடாக அமைந்திருக்கும் என்று கூறப்படுகிறது.
முன்னதாக, ஜாக் மா பங்கேற்று வந்த "ஆப்பிரிக்காஸ் பிசினஸ் ஹீரோஸ்" என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் நவம்பர் மாதம் நடைபெற்ற இறுதி அத்தியாயத்தில் அவருக்கு பதிலாக வேறொரு நடுவர் சேர்க்கப்பட்டதாக கடந்த வெள்ளிக்கிழமையன்று பைனான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.
இதுதொடர்பாக நேற்று (திங்கட்கிழமை) அலிபாபாவின் செய்தித்தொடர்பாளரிடம் கேட்டதற்கு, திட்டமிடலில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாகவே வேறொரு நடுவர் இடம்பெற்றதாக தெரிவித்ததாகவும், ஆனால் ஜாக் மாவின் இருப்பிடம் பற்றிய கேள்விகளுக்கு அவர் பதிலேதும் அளிக்கவில்லை என்றும் ராய்ட்டர்ஸ் முகமை கூறுகிறது.
ஜாக் மா மாயமாகிவிட்டாரா? என்ற கோணத்தில் உலகம் முழுவதும் சமூக ஊடகங்களில் விவாதம் தீவிரமாக சென்றுக்கொண்டிருக்கும் நிலையில், இது சீனாவில் ஒரு பெரிய செய்தியாகவே இன்னும் பார்க்கப்படவில்லை. சீனாவில் ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் தடை செய்யப்பட்டுள்ளதும், சர்ச்சைக்குரிய விவகாரங்கள் கண்காணிக்கப்பட்டு வருவதும் இதற்கு காரணமாக கருதப்படுகிறது.
எனினும், ஹாங்காங் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள அலிபாபாவின் பங்கு மதிப்பு நேற்று (ஜனவரி 4) 2.15 சதவீதம் சரிவு கண்டது.
வேகமெடுக்கும் சீன அரசின் விசாரணை
சீனாவின் தொழில்நுட்ப ஜாம்பாவான அலிபாபா மற்றும் டென்சென்ட் போன்ற நிறுவனங்கள் மீது, சீன அரசின் கண்காணிப்பு நடவடிக்கைகள் அதிகரித்திருக்கின்றன. இது இந்த நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் நிறுவனங்களின் பலத்தைக் குறித்து சீன அரசு கவலைப்படுவதைக் காட்டுகிறது.
சீன அரசு நெறிமுறையாளர்கள், இந்த தொழில்நுட்ப நிறுவனங்களின் மில்லியன் கணக்கிலான பயனர்களைக் குறித்தும், சீன மக்கள் அன்றாடம் பொருட்களை வாங்குவது மற்றும் பணப்பரிமாற்றம் செய்வதில் இந்த நிறுவனங்கள் செலுத்தும் ஆதிக்கத்தைக் குறித்தும் கவலைப்படுகிறார்கள்.
எனவே, அலிபாபா நிறுவனம், தன்னை மட்டுமே சந்தையில் நிலை நிறுத்திக் கொள்ள, முற்றொருமை (Monopoly) நடவடிக்கைகளை எடுக்கிறதா என சீனாவின் சந்தை நெறிமுறையாளர்கள் விசாரித்து வருகிறார்கள்.
இந்த விசாரணையை, சீனாவின் ஸ்டேட் அட்மினிஸ்ட்ரேஷன் ஃபார் மார்க்கெட் ரெகுலேஷன் (எஸ்.ஏ.எம்.ஆர்) என்கிற அமைப்பு, கடந்த மாதம் உறுதிப்படுத்தியது.
பிற செய்திகள்:
- கொரோனா தடுப்பூசி போடுவதில் முன்னிலை வகிக்கும் இஸ்ரேல் - என்ன செய்கிறது இந்தியா?
- திருப்பூரில் தெருவில் விட்டுச் செல்லப்பட்ட சிறுமி உயிரிழப்பு - என்ன நடந்தது?
- விவசாயிகள் போராட்டம்: தீர்வின்றி தொடரும் பேச்சுவார்த்தை - அடுத்தது என்ன?
- பன்முகத்தன்மையில் ஒற்றுமை, வாழ்க தமிழ் - தமிழில் ட்வீட் செய்த டெல்லி முதல்வர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: