You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பன்முகத்தன்மையில் ஒற்றுமை, வாழ்க தமிழ் - தமிழில் ட்வீட் செய்த டெல்லி முதல்வர்
தமிழ் மொழி, கலாசாரத்தை மேம்படுத்துவதற்காக தமிழ் அகாதெமியை டெல்லி அரசு அமைத்துள்ளதற்காக நன்றி தெரிவித்துக் கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழிலேயே ட்வீட் செய்திருக்கிறார், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்.
இது தொடர்பாக முதல்வர் கேஜ்ரிவாலின் ட்விட்டர் பக்கத்தை டேக் செய்து, தமிழ் மொழியின் சிறப்பையும், தமிழ் கலாச்சாரத்தின் பெருமைகளையும் பரப்பும் வகையில் "டெல்லியில் தமிழ் அகாடமி" அமைத்துள்ள மாண்புமிகு டெல்லி முதல்வர் @CMODelhi மற்றும் மாண்புமிகு துணை முதல்வர் @msisodia ஆகியோருக்கு தமிழக அரசின் சார்பாக எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள கேஜ்ரிவால், "பன்முகத்தன்மையில் ஒற்றுமை என்பது நம் நாட்டின் பெருமை, அதை பாதுகாப்பது நமது கடமை. வாழ்க தமிழ்!" என்று பதில் அளித்துள்ளார்.
இதேபோல, டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, வளமான தமிழ் மொழி மற்றும் கலாசாரத்தை டெல்லிவரை கொண்டு வந்துள்ள தமிழக மக்களுக்கும், தமிழக முதல்வருக்கும் நன்றி தெரிவிப்பதாக கூறி ட்வீட் செய்திருக்கிறார்.
டெல்லியில் தமிழ் மொழி, கலாசாரத்தை மேம்படுத்துவதற்காக ஒரு மையத்தை அம்மாநில அரசு அமைத்திருக்கிறது. அதன் தலைவராக டெல்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா, துணை தலைவராக டெல்லி மாநகராட்சியின் முன்னாள் கவுன்சிலா் என். ராஜா ஆகியோரை நியமித்து டெல்லி அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
இது தொடா்பாக துணை முதல்வா் மணீஷ் சிசோடியாவின் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "துணை முதல்வா் மணீஷ் சிசோடியாவின் தலைமையின் கீழ் இயங்கும் டெல்லி கலை, கலாசாரம், மொழித் துறையில் தமிழ் மொழி, அதன் கலாசாரத்தை மேம்படுத்துவதற்காக தமிழ் அகாதெமி அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கு டெல்லி மாநகராட்சி முன்னாள் கவுன்சிலரும், தில்லி தமிழ்ச் சங்கத்தின் தற்போதைய உறுப்பினருமான என்.ராஜாவை அகாதெமியின் துணைத் தலைவராக டெல்லி அரசு நியமித்துள்ளது. டெல்லி என்பது கலாசார ரீதியாக வளமான நகரமாகும். நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் வந்துள்ள மக்கள் இங்கு வசித்து, பணியாற்றி வருகின்றனா். இந்தப் பன்முகத்தன்மையே டெல்லியைத் துடிப்பான பரந்த நோக்கமுள்ள கலாசார நகரமாக உருவாக்குகிறது. டெல்லியில் தமிழ்நாட்டிலிருந்து வந்துள்ள மக்கள் ஏராளமானோா் வசிக்கின்றனா். தமிழகத்தின் கலை, கலாசாரத்தை டெல்லியில் வாழும் அனைவரும் அறிந்து கொள்வதற்காக தமிழ் அகாதெமியை உருவாக்கி உள்ளோம்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பற்றிய தகவல் வெளிவந்தவுடன் தமிழ்நாட்டில் பரவலாக டெல்லி அரசின் நடவடிக்கையை வரவேற்று பலரும் வாழ்த்துகளையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
தமிழ் கலாசார இணைப்பு மேம்பட டெல்லி அரசின் இந்த நடவடிக்கை உதவும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டு, டெல்லி முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.
டெல்லியில் தமிழ் சங்கம் வளாகத்தில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டிருக்கிறது. இது தவிர 80 ஆண்டுகளுக்கும் மேலான ஆண்டுகள் பழமையான டெல்லி தமிழ் கல்வி சங்கத்தின்கீழ் 8 பள்ளிகள், தமிழர்களுக்கு முன்னுரிமை கொடுத்து இயங்கி வருகிறது. மாணவர்களின் பெற்றோர்களை உறுப்பினர்களாகக் கொண்ட இந்த சங்கத்தின் கீழ் உள்ள பள்ளிகளில் ஆசிரியர் ஊதியத்தில் ஒரு பகுதிக்கான நிதியுதவியை டெல்லி அரசு செய்து வருகிறது.
பிற செய்திகள்:
- தமிழகத்தில் 100% பார்வையாளர்களுடன் திரையரங்குகள் இயங்க அனுமதி
- "கொரோனா தடுப்பூசிக்கு இந்தியா அவசரகதியில் அனுமதி" - வல்லுநர்கள் எச்சரிக்கை
- தேர்தல் முடிவுகளை மாற்றுமாறு அதிகாரியை மிரட்டினாரா டிரம்ப்? - ரகசிய ஒலிப்பதிவு வெளியானதால் அதிர்ச்சி
- தமிழ்நாடு காங்கிரசில் வாரி வழங்கப்பட்ட பதவிகள்: கட்சிக்கு துணையா தொல்லையா?
- தமிழ் மொழி வளர்ச்சிக்காக கலைக்கழகம் அமைத்த டெல்லி அரசு
- குரூப்-1 தேர்வில் பரியேறும் பெருமாள் திரைப்படம் குறித்து கேள்வி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்