"வேளாண் சட்டங்களை திரும்பப் பெற முடியாது" - விவசாயிகளிடம் உறுதிபட கூறிய மத்திய அரசு

டெல்லியில் கடும் குளிர், கொட்டும் மழைக்கு மத்தியில் 40ஆம் நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளின் பிரதிநிதிகளுடன் இந்திய அரசு திங்கட்கிழமை நடத்திய ஏழாம் சுற்றுபேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.

வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்ற விவசாயிகள் சங்கங்களின் கோரிக்கையை ஏற்கும் பேச்சுக்கே இடமில்லை என்று கூட்டத்தில் பேசிய இந்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் திட்டவட்டமாக கூறியதாக பேச்சுவார்த்தையில் பங்கெடுத்த விவசாயிகள் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து அடுத்த சுற்று பேச்சுவார்த்தை ஜனவரி 8ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேளாண் சட்டங்கள் தொடர்பான அம்சங்களை விதிகள்வாரியாக விவாதிக்கலாம் என்று வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தொடர்ந்து வலியுறுத்தியதாகவும், ஆனால், அதை விவசாயிகள் நிராகரித்து விட்டதாகவும் பாரதிய கிசான் யூனியன் தலைவர் யுதவீர் சிங் தெரிவித்தார்.

சட்டத்தின் அம்சங்களை விவாதிக்க நாங்கள் விரும்பியபோதும், அதை விவசாயிகள் ஏற்காததால் கருத்தொற்றுமை ஏற்படவில்லை. விவசாயிகள் சங்கங்கள் தொடர்ந்து பிடிவாதமாக உள்ளன என்று அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறினார்.

4 மணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தை

முன்னதாக, பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணிவரை இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் கூட்டம் தொடங்கிய முதல் ஒரு மணி நேரம், மூன்று வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாயிகள் விவாதித்தனர்.

40 விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடனான இந்த கூட்டத்தில், இந்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ரயில்வே, வர்த்தகம் மற்றும் உணவு அமைச்சர் பியூஷ் கோயல், பஞ்சாப் நாடாளுமன்ற உறுப்பினரான வர்த்தகத் துறை இணை அமைச்சர் சோம் பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இடைவேளையின்போது தங்களுடைய சொந்த உணவை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். போராட்ட களத்தில் அவர்களே உருவாக்கிய லங்கர் (சமுதாய சமையலறை) பகுதியில் இருந்து உணவு கொண்டு வரப்பட்டிருந்தது.

கடந்த முறை நடந்த பேச்சுவார்த்தையின்போது, இந்த லங்கர் உணவுப்பந்தியில் அமைச்சர்களும் அதிகாரிகளும் கலந்து கொண்டு உணவை உட்கொண்டனர். ஆனால், திங்கட்கிழமை பேச்சுவார்த்தையின்போது விவசாயிகள் லங்கர் உணவை உட்கொள்ளச்சென்றபோது, அமைச்சர்கள் தனியாக அதிகாரிகளுடன் கூட்ட அரங்கில் சுமார் ஒன்றரை மணி நேரம் தனியாக ஆலோசனை நடத்தினர்.

"எங்களுடைய கோரிக்கைகள் அப்படியே இருக்கின்றன. வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட வேண்டும். அதில் இரண்டு திருத்தங்களை திரும்பப் பெற வேண்டும். எங்களின் கோரிக்கைகளை அரசு செவி கொடுத்து கேட்கும்வரை எங்களுடைய போராட்டம் தொடரும்,"என்று பாரத் கிசான் யூனியன் உறுப்பினர் ஜாகீர் சிங் தலேவால் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மறைமுகமாக பேசி வரும் அரசு தரப்பு

பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசத்தின் சில பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், டெல்லியின் புராரி பகுதியிலும் டெல்லியை இணைக்கும் எல்லை பகுதிகளிலும் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் சங்கங்களில் இடம்பெற்ற குறிப்பிட்ட சில நிர்வாகிகளுடன் அலுவல்பூர்வமற்ற வகையிலும் அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இதேவேளை, நாட்டின் பிற பகுதிகளில் உள்ள பதிவு பெற்ற மற்றும் தங்களுக்கு சாதகமாக உள்ள விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்தும் மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பேசி வருகிறார். அதில் சுமார் 25 அமைப்புகளின் பிரதிநிதிகளிடம், மூன்று வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக அவர் கையெழுத்து பெற்றிருக்கிறார்.

இத்தகைய செயல்பாடுகள் மூலம் விவசாயிகள் போராட்டத்தை பலவீனப்படுத்தலாம் என்று மத்திய அரசு கருதுவதாக போராட்ட களத்தில் உள்ள விவசாயிகள் குற்றம்சாட்டி வருகிறார்கள். ஆனால், சட்டங்களை திரும்பப்பெறாமல் அதில் திருத்தம் செய்வது பற்றி விவாதிக்க அரசு தயாராக இருப்பதாக மத்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது. இதனால் இந்த விவகாரத்தில் கருத்தொற்றுமை ஏற்படாமல் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :