You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
லாஸ்லியாவின் ஒரேயொரு பதிவு: இந்திய அளவில் ட்ரெண்டிங்! குதூகலிக்கும் ரசிகர்கள்
இலங்கை தமிழரான லாஸ்லியா, இலங்கையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து வந்தார். பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றதன் மூலம் அவர் தமிழகம் முழுவதும் மட்டுமில்லாமல் உலக தமிழர்கள் மத்தியிலும் பிரபலமானார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின்போது லாஸ்லியாவுக்கு ஆதரவாக ரசிகர்களால் சமூக ஊடகங்களில் லாஸ்லியா ஆர்மி உருவாக்கப்பட்டது. பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு, லாஸ்லியா 2 திரைப்படங்களில் கதாநாயகியாக நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்த நிலையில் சமீபத்தில் லாஸ்லியாவின் வாழ்க்கையில் துயரம் ஒன்று நடந்தது. அவருடைய தந்தை கனடாவில் திடீரென மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். இதன் காரணமாக அதிர்ச்சியில் இருந்த லாஸ்லியா இலங்கை சென்று தனது தந்தைக்கு செய்ய வேண்டிய இறுதி சடங்குகளை செய்து முடித்துள்ளார்.
தற்போது தந்தையின் மறைவு என்ற துயரத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் லாஸ்லியா மீண்டும் சமூக வலைதளத்திற்கு நீண்ட இடைவெளிக்குப்பின் வந்துள்ளார்.
லாஸ்லியா தனது சமூக வலைதள பக்கத்தில் தனது கருப்பு வெள்ளை படத்தை பதிவிட்டுள்ளார்.
அதில் "நம்பிக்கை" என்று குறிப்பிட்டுள்ளார் இதனையடுத்து இந்தப் பதிவிற்கு கீழே ரசிகர்கள் அனைவரும் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருவதை காண முடிகிறது.
மேலும் துயரங்களில் இருந்து லாஸ்லியா மீண்டு வந்து, மீண்டும் ஒரு உற்சாகமான பெண்ணாக வலம் வர வாழ்த்துக்கள் என நெட்டிசன்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். லாஸ்லியா பதிவு செய்த இந்த ஒரே ஒரு இன்ஸ்டாகிராம் பதிவு இந்திய அளவில் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக ஊடகங்களில் வைரலானது எப்படி?
கடந்த ஆண்டில் சமூக வலைதளத்தில் பேசு பொருளாக இருப்பது விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் நிகழ்ச்சி.
பரபரப்புக்கு சிறிதும் பஞ்சமில்லாமல் போகும் அந்த நிகழ்ச்சியில் ரசிகர்களின் ஆதரவை அதிகம் பெற்றவர்கள் பட்டியலில் முதலில் இருக்கிறார் இலங்கையை சேர்ந்த லாஸ்லியா.
லாஸ்லியா என்று இவரை தமிழக ரசிகர்கள் அழைத்து வந்தாலும், இவரது பெயர் லொஸ்லியா மரியநேசன்.
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய சில நாட்களில் அவருக்கென ``லாஸ்லியா ஆர்மி" என்ற இணைய பக்கங்களும் அவரின் ரசிகர்களினால் தொடங்கப்பட்டன.
இவ்வாறு ஒரு சில நிமிடங்களில் பிரபலமடைந்த இந்த லொஸ்லியா யார் என பிபிசி தமிழ் ஆராய்ந்தது.
இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் வட மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் 1996ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23ஆம் தேதி லொஸ்லியா மரியநேசன் பிறந்தார்.
கிளிநொச்சியில் அன்று காணப்பட்ட யுத்த சூழ்நிலை காரணமாக கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்திற்கு லாஸ்லியாவின் பெற்றோர் இடம்பெயர்ந்துள்ளனர்.
திருகோணமலையிலுள்ள அழகிய கிராமமான அன்புவெளிப்புரம் என்ற பகுதிக்கு சென்ற அவர்கள், ஓலைகளினாலான வீடொன்றை கட்டி அந்த வீட்டில் மிகவும் சிரமத்திற்கு மத்தியில் வாழ்ந்து வந்துள்ளனர்.
குடும்பப்பின்னணி
பல்வேறு சிரமங்களை எதிர்கொண்ட லொஸ்லியாவின் தந்தை மரியநேசன், ஓட்டுநராக பணி செய்து வந்து குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார்.
2009ஆம் ஆண்டு காலப் பகுதியில் குடும்பம் எதிர்கொண்ட கஷ்ட சூழ்நிலைக்கு மத்தியில், லொஸ்லியாவின் தந்தை தொழில் வாய்ப்பை தேடி கனடா சென்றுள்ளார்.
அதன் பின்னர் லொஸ்லியா மற்றும் அவரது இரண்டு சகோதரிகள், தனது தாயான மேரி மாக்ரட்டின் அரவணைப்பின் கீழ் திருகோணமலை சென் மேரிஸ் கல்லூரியில் கல்வி கற்றுள்ளனர்.
லொஸ்லியா, தமிழ் சார்ந்த பல்வேறு போட்டிகள், விவாதங்கள் ஆகியவற்றில் பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த நிலையிலேயே கல்வித்தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருந்த நேரத்தில், இலங்கையில் உள்ள தமிழ் தொலைக்காட்சியான சக்தி டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றுவதற்கான சந்தர்ப்பம் அவருக்கு கிடைத்தது.
ஊடக பிரவேசத்திற்கான சந்தர்ப்பம் கிடைத்த தருணத்திலேயே, உயர்தரத்தில் சித்தியும் பெற்றுள்ளார் லொஸ்லியா அதனூடாக அவருக்கு பல்கலைக்கழகம் செல்வதற்கான வாய்ப்பும் கிடைத்துள்ளது.
பல்கலைக்கழக பிரவேசமா? ஊடக பயணமா? என்ற கேள்விக்கு பதில் தெரியாது தடுமாறிய லொஸ்லியா, இறுதியில் ஊடக பயணத்தை தொடர்வது என்ற முடிவை எட்டியுள்ளார்.
இதன்படி, சக்தி தொலைக்காட்சியில் காலை நேர நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் ஊடாக, சற்று பிரபலமடைந்த அவர், பின்னரான காலப் பகுதியில் அதே தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தன்னை உயர்த்தி வளர்த்துக் கொண்டுள்ளார்.
இலங்கை தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர்கள் மத்தியில் லொஸ்லியா மிகவும் பிரபலமடைந்தார்.
லொஸ்லியாவுடன் பணியாற்றிய அனுபவங்கள் தொடர்பில் சக்தி நியூஸ் பெஸ்ட் நிறுவனத்தின் செய்தி முகாமையாளர் ஜெப்ரி ஜெபதர்ஷனிடம் பிபிசி தமிழ் பேசியது.
''இந்த நிகழ்ச்சிக்கு போவது குறித்து அவங்க கடைசி வரைக்கும் யாருக்கும் சொல்லவேயில்லை. சில வேளைகளில் அது விதிமுறையாகவும் இருக்கலாம். எங்களோட மிக நெருக்கமாக பழகியும் கூட இந்த விஷயத்தை சொல்லவில்லை. அது நல்ல விஷயம். அந்த நிறுவனத்தினால் வழங்கப்பட்ட விதிமுறைகள அவங்க மதித்து இருக்காங்க. போனதுக்கு பிறகு தான் தெரியும் இந்த நிகழ்ச்சியில் லாஸ்லியாவும் இருக்கானு. ரொம்ப சந்தோஷப்பட்டோம். வியப்படைந்தோம்." என்றார் ஜெப்ரி.
''எந்த சந்தர்ப்பத்திலயும் லொஸ்லியா அவங்கட அப்பா, அம்மா கூட மட்டும் தான் கதைச்சுக்கிட்டு இருப்பா. வேறு யாரு கூடவும் பெருசா பேச மாட்டா. இப்படியான ஆட்களை தேடுறது ரொம்ப அரிது. அம்மா, அப்பாவோட இந்த 100 நாட்கள் எப்படி தான் கதைக்காம இருப்பாவோ என நினைக்கிறேன். எங்கள் நிறுவனம் உருவாக்கிய திறமைசாலி என நாங்கள் பெருமை அடைகிறோம். லொஸ்லியா தொடர்பான தொகுப்புக்களையும் நாங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்கிறோம்."
தமிழக ஊடகத்துக்குள் வந்தது எப்படி?
விஜய் டிவில் ஒளிபரப்பான நாடகம் ஒன்றில் பணியாற்றிய இலங்கை பெண் ஒருவரின் உதவியுடனேயே, லொஸ்லியா தமிழக ஊடகத்துறைக்குள் சென்றுள்ளார்.
விஜய் டிவிக்கு சென்ற அவரிடம் நடத்தப்பட்ட நேர்முகப் பரீட்சையின் ஊடாக, அவர் நேரடியாக பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்;.
இந்த நிலையில், லொஸ்லியா தொடர்பில் அவரது நெருங்கிய தோழியான தர்ஷியிடமும் பிபிசி தமிழ் பேசியது.
"நண்பர்கள் மாத்திரம் ரசித்துக் கொண்டிருந்த லொஸ்லியாவை, இன்று உலகமே ரசித்துக் கொண்டிருப்பதை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது" என அவரது நெருங்கிய தோழி தர்ஷி தெரிவிக்கின்றார்.
''மிகவும் சந்தோஷமா இருக்கு. ப்ரண்ட்ஸ் மட்டும் ரசிச்சிட்டு இருந்த லொஸ்லியா அப்படின்ற கேரேக்டர, இப்போ உலகம் ரசிக்க ஆரம்பிச்சு இருக்கு. அத பார்க்கும் போது சந்தோஷமா இருக்கு. எங்களோட இருந்த லொஸ்லியாவையே நாங்க இப்போ டி.வியில் பார்க்கிறோம். ரொம்ப சந்தோஷமா இருக்கு. லாஸ்லியா இப்போ இருக்க இடத்த நினைச்சு அவங்க அம்மா ரொம்ப சந்தோஷமா இருக்காங்க. ஆனா அதே அளவு அவள மிஸ் பண்ணுறாங்க." என்று தெரிவித்தார் லாஸ்லியாவின் தோழி தர்ஷி.
சண்டைகள் அதிகம் நிறைந்த அந்த நிகழ்ச்சியில், எந்த வித வம்பு தும்புக்கும் போகாமல் அமைதியாகவும் பொறுமையாகவும் இருக்கும் லொஸ்லியா ரசிகர்களை ஈர்த்தார்.
பிற செய்திகள்:
- தியேட்டரில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி: கொரோனா பரவலை தடுக்க உதவுமா?
- வயதாவதால் பலவீனமாகும் நோய் எதிர்ப்பு மண்டலம் - தவிர்க்க முடியுமா?
- இந்திய நாடாளுமன்றத்தின் புதிய கட்டட பணிகளுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி
- ஜாக் மா மாயமாகிவிட்டாரா? சீன அரசுடனான மோதல்போக்கு காரணமா? - எழுப்பப்படும் கேள்விகள்
- யுரேனியம் செறிவூட்டலை திடீரென அதிகரித்த இரான் - எச்சரிக்கும் உலக நாடுகள்
- தகனம் செய்யப்படும் கொரோனாவால் இறந்த முஸ்லிம்கள்: பிரச்சனை எழுப்பும் ஜாகிர் நாயக்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்