You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மேற்குவங்கத்தில் மத்திய பாதுகாப்புப்படை துப்பாக்கிச்சூடு: 4 பேர் பலி - நடந்தது என்ன?
மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் சட்டமன்றத் தேர்தலின் இன்றைய நான்காவது கட்ட வாக்குப்பதிவின்போது, மத்திய பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா மற்றும் அசாம் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 6ஆம் தேதியுடன் முடிவடைந்துவிட்ட நிலையில், மேற்குவங்கத்தில் மட்டும் ஏப்ரல் 29ஆம் தேதிவரை மொத்தம் எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், இன்று (ஏப்ரல் 10) 44 தொகுதிகளில் நடைபெற்று வரும் நான்காவது கட்ட வாக்குப்பதிவில் ஆங்காங்கே வன்முறை வெடித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, கூச் பெஹார் மாவட்டத்தின் சிதால்குச்சி பகுதியில் தங்களை தாக்க வந்தவர்கள் மீது சிஐஎஸ்எஃப் வீரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிப்பதாக பிடிஐ முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில், சிறப்பு பார்வையாளர்களின் இடைக்கால அறிக்கையின் அடிப்படையில், கூச் பெஹாரின் சிதால்குர்ச்சி சட்டமன்றத் தொகுதியின் வாக்குச் சாவடி 125இல் வாக்குப்பதிவை ஒத்திவைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக எதிர்வினையாற்றியுள்ள மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி, "மத்திய பாதுகாப்புப்படை வீரர்கள் இன்று சிதல்குச்சியில் 4 பேரை சுட்டுக் கொன்றுள்ளது. இன்று காலையில் மற்றொரு மரணமும் ஏற்பட்டிருந்தது. சிஆர்பிஎஃப் எனது எதிரி அல்ல, ஆனால் உள்துறை அமைச்சரின் அறிவுறுத்தலின் கீழ் இங்கே ஒரு சதி நடக்கிறது, அதற்கு இன்றைய சம்பவம் ஒரு சான்று" என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளதாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
"வாக்களிக்க வரிசையில் நிற்கும் வாக்காளர்களை சிஆர்பிஎஃப் கொன்றுள்ளது, அவர்களுக்கு இவ்வளவு தைரியம் எங்கிருந்து கிடைக்கிறது? தாங்கள் தோற்றுவிட்டது பாஜகவுக்குத் தெரியும். எனவே அவர்கள் வாக்காளர்களையும் தொண்டர்களையும் கொல்கிறார்கள்" என்று அவர் கடுமையான கருத்தை தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோதி, "கூச் பெஹாரில் நடந்த சம்பவம் வருத்தமளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறேன். இந்த சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று நான் தேர்தல் ஆணையத்திடம் கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளதாக பிடிஐ முகமை கூறுகிறது.
நடந்தது என்ன?
இந்த சம்பவம் நடந்த கூச் பெஹார் மாவட்டத்தில் உள்ள பிபிசி இந்தி சேவையின் செய்தியாளர் பூமிகா ராய், "இன்று காலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மற்றும் பாஜகவின் தொண்டர்களுக்கும் இடையே ஏற்பட்ட கைகலப்பின்போது, துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவி வந்த நிலையில், தற்போது பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் தங்களது கட்சியை சேர்ந்தவர்கள் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கூறி வரும் நிலையில் அந்த கருத்தை பாஜக மறுத்துள்ளது" என்று கூறுகிறார்.
பிபிசிக்காக கொல்கத்தாவிலிருந்து செய்தி வழங்கி வரும் பிரபாகர் மணி திவாரியிடம் நடந்த சம்பவத்தை விவரித்த மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர், "சிலர் தேர்தல் பணியில் இருந்த சி.ஐ.எஸ்.எஃப் பணியாளர்களை சுற்றி வளைத்து அவர்களிடம் இருந்த துப்பாக்கிகளை பறிக்க முயன்றனர். இதையடுத்து, பாதுகாப்புப்படை வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கினர். இதில் சம்பவ இடத்திலேயே மூன்று பேர் இறந்தனர், மற்றொருவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தார். சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக மாதபங்கா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. மேலும், துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நான்கு பேரும் அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்" என்று கூறியுள்ளார்.
பிற செய்திகள்:
- சர்ச்சையாகும் தமிழக ஆளுநரின் நியமனங்கள்: கொந்தளிக்கும் கட்சிகள்
- தீவிரமாகும் கொரோனா பரவல்: தமிழகத்தில் இன்று முதல் அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள் என்னென்ன?
- கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக ரேபிஸ் தடுப்பூசி செலுத்திய உத்தர பிரதேச அரசு மருத்துவமனை ஊழியர்
- இளவரசர் ஃபிலிப் 99 வயதில் காலமானார், பக்கிங்காம் அரண்மனை அறிவிப்பு
- இரங்கல்: மாட்சிமை பொருந்திய எடின்பரோ கோமகன்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: