தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக பிப்ரவரி 19ம் தேதி நடக்கும்

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக வருகின்ற பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெறும் எனவும் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22-ம் தேதி நடைபெற உள்ளதாகவும் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதற்கான அறிவிப்பை மாநிலத் தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமார் இன்று புதன்கிழமை வெளியிட்டார்.

உடனடியாக தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமலுக்கு வருவதாகவும் அவர் அறிவித்தார்.

தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது என்றும்,

இந்தத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இந்த ஜனவரி 28-ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டு பிப்ரவரி 4-ஆம் தேதி வரை செய்யலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும் பிப்ரவரி 5-ஆம் தேதி வேட்புமனு மனு மீதான பரிசீலனையும், பிப்ரவரி 7ஆம் தேதி வேட்பு மனுவை வாபஸ் பெற இறுதி நாள் எனவும் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தல் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் மூலமே நடத்தப்படவுள்ளது.

கொரோனா நோய்த் தொற்று வழிமுறைகள் வெளியீடு

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா நோய்த்தொற்று காரணமாக பல்வேறு கட்டுப்பாட்டு நெறிமுறைகளுடன் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளனர். தேர்தல் நடைபெறும் வாக்குச்சாவடிகளில் முகக் கவசம், கிருமி நாசினி, பிபிஇ கிட்ஸ் உள்ளிட்ட நோய்த் தொற்று பரவலை தடுப்பதற்கான வழிமுறைகள் பின்பற்றபடுவது உறுதி செய்யப்படும் எனக் கூறியுள்ளனர். மேலும் ஜனவரி 31 ஆம் தேதி வரை பேரணிகள், பொதுக்கூட்டங்கள் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடு

பதற்றம்‌ நிறைந்த வாக்குச்சாவடிகள்‌, அந்தந்த மாவட்ட தேர்தல்‌ அலுவலர்கள்‌ மற்றும்‌ காவல்‌ கண்காணிப்பாளர்களால்‌ கண்டறியப்பட்டு அதிகபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகள்‌ அளிக்கப்படுவதோடு, வாக்குச்சாவடிகளில்‌ வாக்குப்பதிவு நடவடிக்கைகள் கண்காணிப்பு கேமிரா, நுண்‌ பார்வையாளர்கள்‌, இணையதள கண்காணிப்பு, ஆகியவற்றின்‌ முலம்‌ கண்காணிக்கப்பட உள்ளது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி தலைவர், துணைத் தலைவர், மேயர், துணை மேயர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் மார்ச் 4ம் தேதி நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். 80 ஆயிரம் போலீசார் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

தேர்தல் அறிவிப்புக்கும் வேட்பு மனுத்தாக்கல் தொடங்குவதற்கும் இடையில் ஒரு நாள் இடைவெளியே இருப்பதால் இதை அரசியல் கட்சிகள், அவர்களது கூட்டணிகள் எப்படி எதிர்கொள்ளப் போகின்றன என்பதும், இதற்கு எதிர்க்கட்சிகள் எப்படி எதிர்வினையாற்றும் என்பதும் அடுத்தடுத்த அரசியல் காட்சிகளில் தெளிவாகும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: