You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பத்ம விருதுகள் நிராகரிப்பு: அன்று எஸ். ஜானகி... இன்று புத்ததேவ், சந்தியா - தொடரும் சர்ச்சையின் பின்னணி என்ன?
- எழுதியவர், பரணி தரன்
- பதவி, பிபிசி தமிழ்
2022ஆம் ஆண்டுக்கான பத்ம விருது பெற ஜனவரி 25ஆம் தேதி அறிவிக்கப்பட்டவர்களில் பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்ட மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா, பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்ட மேற்கு வங்கத்தின் முதுபெரும் பின்னணி பாடகி சந்தியா முகர்ஜி ஆகிய இருவரும் விருதுகளைப் பெற மறுத்திருப்பது கவனத்தை ஈர்த்திருக்கிறது.
இந்திய குடிமக்கள் அவரவர் சார்ந்த துறைகளில் ஆற்றி வரும் சிறந்த சேவையை அங்கீகரிக்கும் வகையில் பத்ம விருதுகள் பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ ஆகிய பிரிவுகளில் வழங்கப்படுகின்றன. மத்திய உள்துறை அமைச்சகம் நியமிக்கும் தேர்வுக் குழு, விருதுக்குரியவர்கள் பெயர்களை முடிவு செய்து மத்திய அரசுக்கு பரிந்துரைக்கும். அதன் அடிப்படையில் விருதுகள் வழங்கப்படும்.
இந்த நிலையில், புத்ததேவ் பட்டாச்சார்யா, சந்தியா ஆகியோர் தங்களுக்கு அந்த விருது தேவையில்லை என்று கூறியிருக்கிறார்கள்.
புத்ததேவ் பட்டாச்சார்யா, கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர். தற்போது உடல் சுகவீனம் அடைந்த நிலையில் இருக்கும் அவர், தனக்கு பத்ம விருது அறிவிக்கப்பட்டிருந்தாலும் பராவியில்லை, அதை நான் ஏற்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார்.
கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைப்படி ஒரு அரசாங்கத்திடம் இருந்து வரும் விருதை ஏற்பதில்லை என்ற முடிவில் தாம் உறுதியுடன் இருப்பதாக புத்ததேவ் கூறுகிறார்.
அவரது கருத்தை அவர் சார்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ஆமோதித்துள்ளது. புத்ததேவ் பட்டாச்சார்யா மட்டுமின்றி முந்தைய காலங்களில் மூத்த தலைவர் இஎம்எஸ் நம்பூதிரிபாட் கூட பத்ம விருதை ஏற்கவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.
அந்த கட்சி மூத்த தலைவர் இஎம்எஸ் நம்பூதிரிபாட்டுக்கு 1992ஆம் ஆண்டில் மத்தியில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டது. அவரும் கட்சிக் கொள்கையை மேற்கோள்காட்டி தமது விருதை நிராகரிக்கும் முடிவை நியாயப்படுத்தினார். அப்போது நாட்டின் பிரதமராக அடல் பிகாரி வாஜ்பேயி இருந்தார்.
பத்ம விருது நிராகரிப்பதிலும் ஏற்பதிலும் கூட அரசியல் இருப்பதாகக் கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் லக்ஷ்மணன்.
"மேற்கு வங்கத்தில் முதுபெரும் பாடகி சந்தியா 80 ஆண்டுகளாக சினிமா உலகில் ஆற்றிய பங்களிப்புக்கு அவரது கடைசி காலத்தில் பத்ம ஸ்ரீ விருது வழங்கப்படுவதை தன்னை சிறுமைப்படுத்தும் செயலாக பார்ப்பதில் தனி மனித கோபமும் நியாயமும் இருக்கிறது," என்று அவர் கூறுகிறார்.
அதேசமயம், பத்ம விருதுகள் தேர்வில் வெளிப்படைத்தன்மை உள்ளதாக அரசு கூறி வந்தாலும், அது நடைமுறையில் நம்பும்படியாக இல்லை என்கிறார் லக்ஷ்மணன்.
விருதுகளை மறுத்த வரலாறு
ஆனால், இவருடன் இந்த பட்டியல் நிற்காமல் தமிழ் திரைப்பட பாடகி ஜானகி, பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், சிதார் கலைஞர் உஸ்தாத் வில்யாத் கான், வரலாற்றாய்வாளர் ரொமிலா தாப்பர், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பி.என்.ஹக்சர், பாதுகாப்பு ஆய்வாளர் கே. சுப்பிரமணியம், உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஜே.எஸ். வர்மா, கதக் கலைஞர் சிதாரா தேவி, குஷ்வந்த் சிங் என இந்த பட்டியல் நீள்கிறது. இவர்களுக்கு பல்வேறு காலங்களில் பத்ம விபூஷண் அல்லது பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டது.
இதில் கே. சுப்பிரமணியம், 1999இல் விருதுக்கு அறிவிக்கப்பட்டபோது அரசுப்பணி உயரதிகாரிகள், பத்திரிகையாளர்கள் இதுபோன்ற விருதுகளை வாங்கும் பழக்கத்தைக் கொண்டிருக்கக் கூடாது. அது அவர்கள் பக்கசார்பாக இருக்க தூண்டலாம் என்ற கருத்தை கொண்டிருப்பதாக தெரிவித்தார்.
ஹக்சர், இந்திரா காந்தி ஆட்சிக்காலத்தில் பிரதமரின் முதன்மை செயலாளராகவும் பிறகு நாட்டின் திட்டக்குழு துணைத் தலைவராகவும் இருந்தவர்.
உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஜே.எஸ். வர்மாவுக்கு அவரது மரணத்துக்கு பின்பு 2014இல் அறிவிக்கப்பட்ட பத்ம பூஷண் விருதை ஏற்க அவரது குடும்பத்தினர் மறுத்து விட்டனர்.
கன்னட இலக்கியவாதி கே.சிவராம் கராந்த், 1975இல் இந்திரா காந்தி ஆட்சிக்காலத்தில் அறிவிக்கப்பட்ட எமர்ஜென்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தனக்கு 1968இல் வழங்கப்பட்ட பத்ம பூஷண் விருதை திருப்பிக் கொடுத்தார்.
பொற்கோயில் ஆபரேஷன் ப்ளூர் ஸ்டார் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தனக்கு வழங்கப்பட்ட பத்ம பூஷண் விருதை குஷ்வந்த் சிங் திருப்பிக் கொடுத்தார். ஆனால், 2007இல் அதை விட உயரிய விருதான பத்ம விபூஷண் விருதை அப்போதைய குடியரசு தலைவர் அப்துல் கலாம் வழங்கியபோது அதை அவர் ஏற்றுக் கொண்டார்.
வரலாற்றாய்வாளர் ரொமிலா தாப்பர், தனக்கு இருமுறை வழங்கப்பட்ட பத்ம விருதுகளை நிராகரித்தார். கல்வி அமைப்புகள் மற்றும் அவை தொடர்புடைய அமைப்புகளிடம் இருந்து மட்டுமே "எனது தொழில்முறை பணிக்கான அங்கீகார விருதை பெறுவேன்" என்று கூறி பத்ம விருதை ரொமிலா நிராகரித்தார்.
கதக் கலைஞர் சிதாரா தேவி, தன்னை விட வயதிலும் அனுபவத்திலும் இளையோருக்கு பத்மபூஷண் விருது முன்பே கொடுக்கப்பட்டுள்ளதை குறிப்பிட்டு தனக்கு வழங்கப்படும் விருதை நிராகரிப்பதாக தெரிவித்தார்.
பத்மஸ்ரீ விருதை நிராகரித்தவர்கள் வரிசையில் பிரபல பாலிவுட் வசனகர்த்தா சலீம் கான், எழுத்தாளர் கீதா மேத்தா இடம்பெற்றுள்ளனர். மேலும் 10 பேர் வழங்கப்பட்ட பத்ம விருதை திருப்பிக் கொடுத்தவர்கள்.
உத்தர பிரதேச முதல்வராக இருந்த வீர் பகதூர் சிங், இரண்டாம் மொழியாக உருதுவை பேசுபவர்களை கழுதை மீது ஏற்றச் செய்து ஓட விட வேண்டும் என பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து விருதைத் திருப்பிக் கொடுத்தார் கைஃபி அஸ்மி, .
உஸ்தாத் வில்யாத் கானுக்கு 1964இல் பத்மஸ்ரீயும் 1968இல் பத்மபூஷண் விருதும் அறிவிக்கப்பட்டபோது தமது இசைப்புலமையை தீர்மானிக்கும் தகுதி அதன் நடுவர்களுக்கு இல்லை என்று கூறி விருதை நிராகரித்தார். 2000ஆம் ஆண்டு அவருக்கு பத்மவிபூஷண் விருது அறிவிக்கப்பட்டபோது அதை பெறுவது தமக்கு அவமானம் என்று கூறி விருதைப் பெறாமல் தவிர்த்தார்.
இவர்கள் அனைவரும் விருதை பெறாமல் நிராகரிக்க பல்வேறு காரணங்களை கூறியிருந்தாலும், வெளிப்படைத்தன்மையுடன் வழங்கப்படுவதாக அறிவிக்கப்படும் பத்ம விருதுகள் தேர்வில் அரசியல் தாக்கம் இருப்பதாக தொடர்ந்து பலரும் சந்தேகம் எழுப்புகிறார்கள்.
தமிழ்நாட்டில் புகழ்பெற்ற கல்லீரல் அறுவை சிகிச்சை நிபுணர் மொஹம்மத் ரேலாவுக்கு தமிழகத்தின் கிட்டத்தட்ட எல்லா எம்.பிக்களுமே பத்ம விருதுக்கு பரிந்துரை செய்தபோது அதை இந்த அரசு கண்டுகொள்ளாமல் தவிர்க்க அவர் ஜெகத்ரட்சகன் மருத்துவமனையில் பணியாற்றியதே காரணம் என்கிறார் லக்ஷ்மணன்.
மோதி ஆட்சியில் மாறிய பத்ம விருதுகள் நடைமுறை
இந்தியாவில் நரேந்திர மோதி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வரும் முன்பு, பத்ம விருதுகளுக்கு தேர்வு செய்யப்படுவோரின் பட்டியலை குறிப்பிட்ட நபரின் பெயரை பரிந்துரைக்கும் மிக முக்கிய பிரமுகரின் சிபாரிசு கடிதம் அடிப்படையில் பிரதானமாக தீர்மானிக்கப்பட்டது.
இதில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று கூறிய மோதி அரசு, பத்ம விருதுகளுக்காகவே பிரத்யேகமாக ஒரு இணையதளத்தை உருவாக்கி, அந்த விருதுக்கு தகுதி பெறுவோர், தாங்களாகவோ அவர்களின் சார்பாக விண்ணப்பிக்கிறவர்களோ விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்தால் அதை தேர்வுக்குழு பரிசீலித்து தீர்மானிக்கும் என்று தெரிவித்தது. இந்த விண்ணப்ப முறையிலான தேர்வு மட்டுமின்றி பத்ம விபூஷண், பத்ம பூஷண் விருதுக்கு தகுதி பெறுவோரை மத்திய அரசின் தேர்வுக்குழு, சம்பந்தப்பட்ட நபருக்கு சமூகத்தில் உள்ள செல்வாக்கு, அவர்கள் சார்ந்த துறைக்கு ஆற்றும் சேவை அடிப்படையிலும் கண்டறிந்து விருதுக்கு பரிந்துரை செய்கிறது.
முந்தைய காலங்களில் பத்ம விருதுக்கு தேர்வு பெறுவோர், பல காரணங்களைக் கூறி விருதை நிராகரித்த கதைகள் அதிகமாகிக் கொண்டே இருந்தது. இதைக் கருத்தில் கொண்ட மத்திய அரசு, தேர்வுக்குழு சம்பந்தப்பட்ட நபர்களின் பெயரை பரிந்துரை செய்த பிறகு மத்திய உள்துறை மூலம் அவர்களை தொடர்பு கொண்டு விருதை பெறுகிறீர்களா என்று கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டு அவர்களின் பெயர் அடங்கிய இறுதிப்பட்டியலை வெளியிடுகிறது.
இதே வழக்கத்தைத்தான் இந்த ஆண்டும் மத்திய அரசு கடைப்பிடித்தது. அதன்படி, புத்ததேவ் பட்டாச்சார்யா, சந்தியாவை அவர்களின் விண்ணப்பமின்றி மத்திய அரசே நேரடியாக அதன் தேர்வுக்குழுவை வைத்து கண்டறிந்திருக்கிறது.
இதைத்தொடர்ந்து புத்தேவ் பட்டாச்சாச்சார்யாவை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க உள்துறை அமைச்சக அதிகாரிகள் முயன்றுள்ளனர். ஆனால், உடல் நலமில்லாததால் ஓய்வில் இருந்த அவருக்கு பதிலாக அவரது மனைவியிடம் விருதுக்கு தேர்வான தகவலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் விருதுக்கு அவரது பெயர் தேர்வான அறிவிப்பு வெளிவந்தவுடன், அந்த விருதை தாம் பெற விரும்பவில்லை என்று தெரிவித்திருக்கிறார் புத்ததேவ். நான் ஆற்றிய சேவை மக்களுக்கானதே தவிர, அரசாங்கத்துக்காக அல்ல என்று அவர் கூறியதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
80 வருட சாதனைக்கு 90 வயதில் விருதா?
பாடகி சந்தியா முகர்ஜியை, மத்திய உள்துறை அமைச்சகம் தொடர்பு கொண்டு பத்ம விருதுகள் பட்டியலில் உங்களுடைய பெயரை அறிவிக்க சம்மதமா என கேட்டபோது, அவர் அதில் தனக்கு விருப்பமில்லை என கூறியதாக சந்தியாவின் மகள் செளமி சென்குப்தா பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
90 வயதாகும் சந்தியா தனது சிறு வயது முதல் திரைத்துறையில் இருந்தவர். பல பத்தாண்டுகளுக்கு முன்பு பட இசை உலகில் பரிணமித்த அவருக்கு இப்போது பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டிருப்பது அவரது சேவையை மட்டுப்படுத்துவது போல அமையும். அவருக்கு ஏற்கெனவே மாநிலத்தில் மிக உயரிய விருதுகளாக கருதப்படும் கீதஸ்ரீ, வங்கவிபூஷண் போன்ற உயரிய விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அதனால் மிகவும் இளையவர்களுக்கு வழங்கப்படும் பத்மஸ்ரீ விருதை அவருக்கு வழங்குவது சரியாக இருக்காது என்று செளமி சென்குப்தா கூறியுள்ளார்.
பிடிவாதமாக மறுத்த ஜானகி
இவர்களுக்கு முன்பே 2013இல் பத்ம பூஷண் விருது திரைப்பட பாடகி எஸ். ஜானகிக்கு அறிவிக்கப்பட்டது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என தென் மாநில திரைப்படங்கள் மற்றும் பாலிவுட்டில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடிய ஜானகி, தனக்கு அறிவிக்கப்பட்ட விருது காலம் கடந்து கிடைக்கும் கெளரவம் என்று கூறி விருதை ஏற்க முடியாது என்று அறிவித்தார். அந்த விருது அறிவிக்கப்படும்போது ஜானகிக்கு வயது 75.
விருதை நிராகரிப்பது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜானகி, கடந்த, 55 ஆண்டுகளாக, திரைத் துறையில் புகழ் பெற்ற பாடகியாக இருந்தேன். ஆனாலும், மத்திய அரசு, என்னை அங்கீகரிக்கவில்லை. நான் பாடிய அனைத்து பாடல்களுமே, அந்தந்த மாநில ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டன. என் தாய்மொழி தெலுங்காக இருந்தாலும் மற்ற மொழிகளில் எனது உச்சரிப்பு சரியாக இருப்பதாக பல்வேறு தரப்பினரும் பாராட்டியுள்ளனர். ஆனால் இவ்வளவு காலம் தாழ்த்தி, எனக்கு கிடைத்துள்ள கெளரவத்தை ஏற்க எனக்கு மனம் வரவில்லை.
அதற்காக, மத்திய அரசு மீது, எனக்கு எந்த கோபமும் இல்லை. நான் தவறு செய்துவிட்டதாகவும் கருதவில்லை. ஆனாலும், இந்த விருதை வாங்கப் போவது இல்லை என்ற முடிவில் உறுதியாக இருக்கிறேன் என்று கூறியிருந்தார்.
ஆனால், ஜானகி சம்பவத்துக்குப் பிறகே பத்ம விருதுக்கு தகுதி பெறுவோரின் பட்டியலை வெளியிடும் முன்பு, அதை பெற சம்மதமா என வாய்மொழியாக உறுதிப்படுத்திக் கொண்ட பிறகே பட்டியலை வெளியிடும் வழக்கத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.
தாமதம்தான் ஆனாலும் ஏற்கிறேன்: இளையராஜா
2018ஆம் ஆண்டில் திரை இசை அமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்ம பூஷண் விருதை மத்திய அரசு அறிவித்தது. அதுவும் காலம் கடந்து வழங்கப்பட்ட விருது என இளையராஜாவின் மகனும் இசை அமைப்பாளருமான கார்த்திக் ராஜா கூறினார். இருப்பினும், அந்த விருதை மகிழ்ச்சியுடன் பெறுவதாக இளையராஜா தெரிவித்தார்.
இசை உலகில் இளையராஜாவின் சிஷ்யனாக இருந்து தமிழ், தெலுங்கு, பாலிவுட் மட்டுமின்றி திரைத்துறையில் ஹாலிவுட்டிலும் சாதித்தவர் ஏ.ஆர். ரகுமான். குருவான இளையராஜாவுக்கு 2018இல் கிடைத்த பத்ம பூஷண் விருதினை, அவரது சிஷ்யனான ஏ.ஆர். ரகுமானுக்கு 2010இலேயே மத்திய அரசு வழங்கி கெளரவித்தது.
கலைத்துறையைத் கடந்து அரசியல் உலகிலும் இந்த பத்ம விருது தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது வெளிப்படைத்தன்மையாக நடந்த தேர்வு என்று பல முறை பத்ம விருதுகள் பற்றி இந்திய பிரதமர் நரேந்திர மோதி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் கூறியிருக்கிறார்கள்.
ஆனால், இந்திய குடியரசுத் தலைவராக தனகு பதவிக்காலத்தை நிறைவு செய்த பிரணாப் முகர்ஜிக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னாவை வழங்கி மோதி அரசு கெளரவித்தபோது, அந்த செயல்பாட்டை பிரணாபுக்கு அரசியலில் அடையாளம் கொடுத்த காங்கிரஸ் கட்சியே கூட எதிர்பார்க்கவில்லை.
மிகச்சமீபமாக, இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் பட்டியலில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான குலாம் நபி ஆசாதுக்கு பத்ம பூஷண் விருது வழங்கும் மத்திய அரசின் முடிவு காங்கிரஸ் கட்சியினரை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.
ஒரு பிரிவு காங்கிரஸ் தலைவர்கள் இந்த முடிவை ஆதரித்தாலும் சிலர் அதை விமர்சித்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் ஏற்கெனவே காங்கிரஸ் கட்சியில் இருந்த பல இளம் தலைவர்கள் குலாம் நபி ஆசாதின் வழிகாட்டுதலை விரும்பாமல் அந்த கட்சியில் இருந்து விலகினார்கள். ஒரு பிரிவு தலைவர்கள் குலாம் நபி ஆசாத் பாரதிய ஜனதா கட்சியுடன் இணக்கமாக இருப்பதாக குற்றம்சாட்டி வந்தனர். இத்தகைய சூழலில் குலாம் நபிக்கு பத்ம பூஷண் விருது அறிவித்துள்ள நடவடிக்கையை காங்கிரஸ் தலைவரான ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.
புத்ததேவ் பட்டாச்சார்யா விருதை நிராகரித்து பற்றிய ஒரு செய்தியாளரின் ட்விட்டர் இடுகையை டேக் செய்து, அது சரியான செயல்தான். அவர் சுதந்திரமாக இருக்க விரும்பியிருக்கிறார். அவர் குலாம் அல்ல என்று வார்த்தை நையாண்டி செய்துள்ளார்.
மேலும் மற்றொரு இடுகையில் முன்னாள் உயரதிகாரியான பிஎன் ஹக்ஸர் பத்ம விருதை மறுத்ததைப் பற்றிய புத்தகத்திலிருந்த ஒரு பகுதியை ஜெய்ராம் ரமேஷ் பகிர்ந்துள்ளார்.
அதில், "1973ஆம் ஆண்டு ஜனவரியில், நமது நாட்டின் மிகவும் சக்தி வாய்ந்த அரசு அதிகாரி அவர். பிரதமர் அலுவலகத்தை விட்டுச் செல்லும் போது அவருக்கு பத்ம விபூஷண் வழங்கப்படும் என்று கூறப்பட்டது. அதற்கு அந்த அதிகாரியோ, இது ஒரு வழக்கமாகவும் முன்மாதிரி போலவும் ஆகிவிடும்," என்று கூறியதாக அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
காங்கிரஸ் கட்சியில் குலாம் நபி ஆசாத், கபில் சிபல், ஆனந்த் சர்மா ஆகியோரை "ஜி-23" குழு என அழைப்பார்கள். காரணம், இந்த 23 தலைவர்கள்தான் 2020இல் சோனியா காந்திக்கு கடிதம் எழுதி தலைமை சரியில்லை, கட்சியில் பெரிய சீர்திருத்தம் தேவை என எழுதியிருந்தனர்.
மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்த ஆர்.பி.என். சிங், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் ஓரிரு தினங்களுக்கு முன்பே சேர்ந்தார். இந்த நிலையில், அந்த கட்சியின் மூத்த தலைவரான குலாம் நபி ஆசாதுக்கு பத்ம பூஷண் விருதை வழங்கியிருப்பது அவரை பாஜகவுக்குள் இழுக்கும் முயற்சி என்று காங்கிரஸார் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதேசமயம், புத்ததேவ் பட்டாச்சார்யா, குலாம் நபி ஆசாத் போன்றோருக்கு உயரிய விருது வழங்கப்பட்டிருக்கும்போது அவர்கள் சமூகத்துக்கு வழங்கிய சேவையை மட்டுமே கவனத்தில் கொண்டு ஏற்றுக் கொள்ள வேண்டுமே தவிர அதை அரசியல் பார்வையுடன் அணுகுவது ஆரோக்கியமாக இருக்காது என்று லக்ஷ்மணன் தெரிவித்தார்.
பிற செய்திகள்:
- இந்தி படிப்பதை யாரும் தடுக்கவில்லை: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு
- மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்கும், விலங்குகளிலிருந்து மீண்டும் மனிதர்களுக்கு கொரோனா பரவுகிறதா?
- யுக்ரேன் பதற்றம்: ரஷ்ய அச்சுறுத்தலை எதிர்க்க அணி திரளும் மேற்கு நாடுகள்
- பிபின் ராவத் பஞ்சலோக சிலை: கடலூர் முதல் டெல்லிவரை கொண்டு செல்ல திட்டமிடும் முன்னாள் ராணுவத்தினர்
- உச்ச நீதிமன்றம்: அடுத்த 10 மாதங்கள் புதிய நீதிபதிகள் நியமனத்துக்கு மிகவும் முக்கியம் - ஏன்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்