You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ்நாடு ஆளுநருக்கு தங்கம் தென்னரசு எதிர்வினை - நீட், மொழிக்கொள்கை விவகாரம்
- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாட்டில் பின்பற்றப்பட்டுவரும் இருமொழிக் கொள்கையால் எந்தப் பின்னடைவும் இல்லையென தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருக்கிறார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தனது குடியரசு தின உரையில் தெரிவித்த கருத்துகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த அறிக்கை வெளியாகியிருக்கிறது.
ஜனவரி 25ஆம் தேதியன்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி நீண்ட குடியரசு தின வாழ்த்துச் செய்தி ஒன்றை வெளியிட்டார். அதில் பின்வரும் பகுதிகள் இடம்பெற்றிருந்தன. "அரசுப் பள்ளிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதே இப்போதைய உடனடித் தேவை. அரசுப் பள்ளிகளுக்கும் தனியார் பள்ளிக்கூடங்களுக்கும் இடையிலான எதிர்மறை வேறுபாடு கவலையைத் தோற்றுவிக்கிறது.
செலவுமிக்க தனியார் பள்ளிகளில் ஏழைகளால் சேர முடியாது. அரசுப் பள்ளிகள் மட்டுமே அவர்களுக்கான நம்பிக்கை. நீட் தேர்வுக்கு முன்னதான காலத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்திருக்கிறது.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவிகித ஒதுக்கீட்டின் காரணமாக இந்த எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. எனினும் அரசுப் பள்ளிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டியது நம்முடைய அவசரத் தேவை.
உலகின் மிகத் தொன்மையான மொழி தமிழே ஆகும். நாட்டின் பிற பகுதிகளுக்கு தமிழ்மொழி பரவுவதை ஊக்குவிக்க வேண்டும். தமிழ்மொழியின் பிற மாநிலங்களில் உள்ள மாணவர்களைப் போல நம்முடைய பள்ளி மாணவர்களும் பிற இந்திய மொழிகளைப் பயில வேண்டும். பிற இந்திய மொழிகளின் அறிவை நம்முடைய மாணவர்களுக்கு மறுப்பது என்பது அவ்வளவு சரியில்லை" என்று ஆளுநர் பேசியிருந்தார்.
ஆளுநரின் குடியரசு தின வாழ்த்துச் செய்தியில் இடம்பெற்றிருந்த இந்தச் செய்திகள் அந்த தருணத்திலேயே சமூக வலைதளங்களில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தன.
எதிர்வினையாற்றிய தங்கம் தென்னரசு
இந்த நிலையில்தான் மாநில தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆளுநரின் கருத்துகளுக்குப் பதிலளிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
"தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கையினை ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்திட முன்வர வேண்டும் என்ற கருத்து உருவாகும் வகையில் மாண்புமிகு ஆளுநர் அவர்கள், பிற மாநிலங்களில் உள்ள மாணவர்களைப் போல நம்முடைய தமிழ் நாட்டுப் பள்ளி மாணவர்களும் பிற இந்திய மொழிகளைப் பயில வேண்டும் எனவும் பிற இந்திய மொழிகளின் அறிவை நம்முடைய மாணவர்களுக்கு மறுப்பது என்பது சரியல்ல எனவும் தனது குடியரசு நாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்து அது ஊடகங்களிலும் பரவலாக வெளிவந்திருக்கின்றது.
தமிழ் நாட்டின் மொழிப்போராட்ட வரலாறை அறிந்தோருக்குப் பிற இந்திய மொழிகள் என்பது இந்தியை முன்னிலைப்படுத்தும் சொற்பிரயோகம் என்பதில் இரு வேறு கருத்து இருக்க முடியாது.
தமிழ் நாட்டில் இந்தி ஆதிக்கத்திற்கு எதிரான மொழிப் போராட்டம் என்பது நெடிய வரலாற்றை உள்ளடக்கியது. தமிழ் நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில்தான் அன்றைய தலைமை அமைச்சர் பண்டித நேரு இந்தி பேசாத மாநிலங்கள் விரும்பாத வரை கட்டாயமாக இந்தியைத் திணிக்க மாட்டோம் என வாக்குறுதி அளித்தார்கள்.
தமிழ்நாட்டில் பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழக அரசு 1967ஆம் ஆண்டு அமையப் பெற்றபோது தமிழ் நாட்டில் தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமே இடம்பெறும்; இரு மொழிக் கொள்கையே கடைபிடிக்கப்படும் என அறிவித்து அன்று முதல் இன்று வரை இரு மொழிக் கொள்கையே தமிழ் நாட்டு அரசின் மொழிக் கொள்கையாகக் கடைபிடிக்கப்பட்டு வருவதை நான் மாண்புமிகு ஆளுநர் அவர்களது மேலான கவனத்திற்குச் சுட்டிக் காட்ட விழைகிறேன்.
இரு மொழிக் கொள்கையால் தமிழ் நாட்டு மாணவர்களின் கல்வித் தகுதியிலோ அல்லது பெரும் பொறுப்புகளில் அவர்களில் இடம் பெறும் வகையில் பெறும் வாய்ப்புகளிலோ யாதொரு பின்னடைவோ குறைகளோ ஏதுமில்லை.
அதே போல, நீட் தேர்வின் காரணமாக அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான எம்.பி.பி.எஸ் தகுதிப் பட்டியலில் முதல் 1000 இடங்களில் சிபிஎஸ்சி மாணவர்கள் 579 பேர், மாநில பாடத்திட்ட வாரியத்தில் பயின்ற 394 பேர் மற்றும் ஐசிஎஸ்சி போன்ற பிற பாடத்திட்டங்களில் படித்த 27 பேர் இடம் பெற்று உள்ளனர்.
இந்தப் பாகுபாட்டினைக் களையும் வண்ணம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு ஓரளவு உதவக்கூடும்.
எனினும் அது ஒரு தற்காலிகத் தீர்வுதான் என்பதனையும் மாநிலப் பாடத்திட்ட வாரியம் மூலம் பயிலும் மாணவர்கள் குறிப்பாக அரசுப் பள்ளியில் பயின்று தனியார் பயிற்சிப் பள்ளிகளில் ஏராளமான கட்டணம் செலுத்திப் படிக்க இயலாத மாணவர்கள் மருத்துவப் படிப்புகளில் சமூகநீதியின் அடிப்படிடையில் தங்களுக்கான இடங்களைப் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பெறவேண்டும் எனில் நீட் தேர்வில் இருந்து தமிழ் நாட்டு மாணவர்களுக்கு முழு விலக்கு அளிக்கப்படுவதே நிரந்தமான தீர்வாக அமையும் என்பதனையும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தொடந்து வலியுறுத்தி வருகின்றார்.
அதனடிப்படையில், தமிழ்நாடு சட்டமன்றத்திலும் நீட் தேர்வில் இருந்து விலக்களிக்கும் சட்ட முன்வடிவு நிறைவேற்றப் பட்டு அது மாண்புமிகு ஆளுநரின் ஒப்புதலுக்குக் காத்திருக்கின்றது.
ஆளுநர் அவர்கள் அந்த சட்ட முன் வடிவிற்குத் தன்னுடைய இசைவினையும் விரைவில் அளித்து ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைப்பதன் மூலம் தமிழ்நாட்டு மாணவச் செல்வங்களின் மருத்துவப் படிப்பு கனவுகளை நிறைவேற்றத் துணை நிற்பார் என நான் நம்புகின்றேன்" என்று அந்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.
ஆளநர் செய்தது சரியா?
"ஆளுநர் தன்னுடையக் கருத்தை இப்படித் தெரிவிப்பது தவறு. அரசியல்சாசனப்படி அவர் இந்த மாநிலத்தின் தலைவர். மக்களால் தேர்வுசெய்யப்பட்ட மாநில அரசு என்ன சொல்கிறதோ, அதுவே மக்களின் கருத்து. அளுநருக்கென்று தனிப்பட்ட கருத்து இருக்கக்கூடாது. இருந்தாலும் வெளிப்படுத்தக்கூடாது. மாநில அரசானது அரசியல் அரசியலமைப்புச் சட்டம் கூறுவதன்படி நடக்கிறதா என்பதைத்தான் அவர் கண்காணிக்க வேண்டும். அப்படி நடக்கவில்லையென்றால், முதல்வரிடம், தலைமைச் செயலரிடம் பேசலாம். மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பலாம். அவ்வளவுதான் செய்ய முடியும்" என்கிறார் மூத்த பத்திரிகையாளரான அய்யநாதன்.
ஒரு மாநிலத்தின் கொள்கை என்ன என்பதை ஆளுநரோ, நீதிபதியோ எப்படி சொல்ல முடியும் எனக் கேள்வியெழுப்பும் அய்யநாதன், ஒரு மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் முரண்பாடு ஏற்படலாம். ஆனால், மாநில அரசோடு ஆளுநர் முரண்பட முடியாது என்கிறார் அய்யநாதன்.
மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு பதவியேற்கும்போது பன்வாரிலால் புரோகித் ஆளுநராக இருந்தார். பிறகு அவர் மாற்றப்பட்டு ஆர்.என். ரவி புதிய ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார்.
தமிழ்நாட்டில் இதற்கு முன்பாக மாநில அரசும் ஆளுநரும் மோதிய பல நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. குறிப்பாக, ஜெயலலிதாவின் முதலாவது ஆட்சிக்காலத்தில் அப்போதைய ஆளுநர் சென்னாரெட்டியுடன் மிகத் தீவிரமாக மோதினார் முதலமைச்சர் ஜெயலலிதா.
பிற செய்திகள்:
- அகில இந்திய சமூக நீதி சம்மேளனத்தை உருவாக்குவோம்: மு.க. ஸ்டாலின்
- ரயில்வே தேர்வு தொடர்பாக போராடும் வட இந்திய மாணவர்களின் கோபம் ஏன்?
- உக்ரேனை ரஷ்யா ஆக்கிரமித்தால் புதின் மீது தனிப்பட்ட பொருளாதார தடை- அமெரிக்கா
- தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக பிப்ரவரி 19ம் தேதி நடக்கும்
- பத்ம விருதுகளை நிராகரித்த புத்ததேவ், சந்தியா - என்ன பின்னணி?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: