You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
NEET தமிழ்நாடு மாணவர்கள் மனநிலை: "கொரோனா காலத்தில் தேர்வு கட்டாயம் என்பது வேதனை"
- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவு தேர்வு கட்டாயம் நடைபெறும் என தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள அறிவிப்பு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாக தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
கொரோனா தாக்கம் காரணமாக நீட் தேர்வில் விலக்கு அளிக்கவேண்டும் என மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடியாகியுள்ள நிலையில், தேர்வு கட்டாயம் நடைபெறும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நோய் தொற்று ஏற்படும் அபாயம் காரணமாக பொதுத் தேர்வு நடத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளபோது, நீட் தேர்வை மட்டும் ஏன் கட்டாயம் நடத்தவேண்டும் என மாணவர் அமைப்புகளும் கேள்வி எழுப்பியுள்ளன.
நீட் தேர்வுவுக்கு தயாரான சென்னையை சேர்ந்த மாணவி சுனைனா பேசும்போது, கொரோனா அச்சம் காரணமாக நீட் தேர்வை இந்த ஆண்டு எழுதவேண்டாம் என முடிவுசெய்துள்ளதாக கூறுகிறார். நீட் தேர்வு நடத்துவதற்கு முன்னேற்பாடுகளை செய்துவிட்டதாகவும், மாணவர்களுக்கு கிருமி நாசினி மற்றும் முகக்கவசம் வழங்குவது போன்றவற்றை முடிவுசெய்துள்ளதாக தெரிவித்துள்ளபோதும், தேர்வு குறித்த அறிவிப்பு அச்சத்தை அதிகரித்துள்ளதாக கூறுகிறார் சுனைனா.
''மருத்துவராக வேண்டும் என்ற விருப்பத்தில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்தேன். ஆனால் நோய் பரவும் வாய்ப்பு இருப்பதால், இந்த ஆண்டு தேர்வு எழுத வேண்டாம் என பெற்றோர் அறிவுறுத்துகின்றனர். ஊரடங்கு காலத்தில் வீட்டில் பாதுகாப்பாக இருந்தோம். தேர்வு மையத்தில் அல்லது பயணத்தில் தொற்று ஏற்பட்டால், அது என் குடும்பத்தை பாதிக்கும்,''என்கிறார் சுனைனா.
மற்றொரு மாணவி பேபி பவஸ்ரீ தேர்வுக்கு குறைந்தபட்சம் ஒரு மாதம் அவகாசம் கொடுத்தால், தயாரிப்புகளை துரிதப்படுத்தலாம் என்கிறார்.
''ஊரடங்கு காலத்தில் வீட்டில் இருந்தாலும், கொரோனா குறித்த அச்சம் எல்லோரிடமும் இருந்தது. நீட் தேர்வுக்கு தயாராக உள்ளேன் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் தேர்வு மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியாக இருக்குமா என்ற அச்சம் உள்ளது.
12ம் வகுப்பில் 509/600 பெற்றுள்ளேன். நீட் தேர்வு தள்ளிவைக்கப்படும் என எதிர்பார்த்தேன். கொரோனா பரவல் அதிகரிக்குமோ என்ற பயம் உள்ளது, ''என்கிறார் பேபி பவஸ்ரீ. நீட் தேர்வுக்கு ஓராண்டு விலக்கு கொடுப்பதால் என்ன பிரச்சனை ஏற்படும் என மத்திய அரசாங்கம் வெளிப்படையாக பேசவேண்டும் என்கிறார் இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலத் தலைவரான மாரியப்பன்.
''நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு தரவேண்டும் என கோரிக்கையை ஒவ்வோர் ஆண்டும் வைக்கிறோம். மாணவர்களின் நலனில் அக்கறை கொண்ட அரசாக இருந்தால், ஏன் இந்த கோரிக்கையை பரிசீலிக்கவில்லை? நீட் தேர்வு மூலம் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மருத்துவப் படிப்புகளுக்கு செல்வதில் சிக்கல் உள்ளதாக பல அறிக்கைகள் வெளியாகிவிட்டன. தனியார் கோச்சிங் மையங்களின் நலனை மட்டுமே அரசாங்கம் கருத்தில் கொள்கிறது என்பது வெளிப்படையாக தெரிகிறது,''என்கிறார் மாரியப்பன்.
மேலும், மாணவர்கள் தேர்வு மையத்தில் பாதுகாப்பாக இருக்கிறோமா என்ற எண்ணத்தில் தேர்வு எழுதும்போது அவர்கள் எப்படி முழுமையான மனதோடு தேர்வு எழுதமுடியும் என யோசிக்கவேண்டும் என்கிறார் மாரியப்பன்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: