சந்திர பிரபா சைக்கியானி: அஸ்ஸாமில் திரையிடும் வழக்கத்தை நீக்கிய போராளி

    • எழுதியவர், சுஷிலா சிங்
    • பதவி, பிபிசி இந்தி

(இந்தியாவின் வரலாற்று பக்கங்களில் இடம்பெறாவிட்டாலும், நவீன கால இந்திய பெண்களின் வாழ்க்கைமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு வித்திட்ட பத்து இந்திய பெண்களின் பிரமிக்கத்தக்க கதைகளை பிபிசி உங்களிடம் கொண்டு வருகிறது. அதன் மூன்றாவது அத்தியாயம் இது.)

1925 ஆம் ஆண்டு, அஸ்ஸாமின் நவ்காவில், அஸ்ஸாம் சாஹித்ய சபையின் கூட்டம் நடைபெற்றது. மகளிர் கல்விக்கு ஊக்கம் அளிப்பது குறித்து அக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. சிறுமிகளிடையே கல்வியை பரப்பும் விஷயம் குறித்தும் முக்கியமாக பேசப்பட்டது.

இந்தக்கூட்டத்தில், ஆண்கள் மற்றும் பெண்கள், இருவருமே கலந்துகொண்டனர். ஆனால், பெண்கள், ஆண்களிடமிருந்து தனியே, மூங்கில் திரைக்கு பின்னே, அமர்ந்திருந்தனர்.

சந்திரப்பிரபா சைக்கியானி மேடையில் ஏறி மைக்கில் சிங்கம் போல கர்ஜித்தார், " நீங்கள் திரைக்கு பின்னே ஏன் அமர்ந்துள்ளீர்கள் " இப்படிக்கூறிய அவர், முன்னே வருமாறு பெண்களை கேட்டுக்கொண்டார்.

கூட்டத்தில் இருந்த மகளிர், அவருடைய இந்தப்பேச்சால் ஊக்கம் பெற்றனர். ஆண்களையும் பெண்களையும் பிரிக்கும் மூங்கில் திரையை உடைத்துவிட்டு, அவர்களுடன் சென்று அமர்ந்தனர்.

'வரலாற்றில் பெண்கள்' தொடரின் பிற கட்டுரைகள்:

சந்திரப்பிரபாவின் இந்த முன்முயற்சி, அஸ்ஸாம் சமுதாயத்தில் அப்போது நடைமுறையில் இருந்த திரை போடும் வழக்கத்தை நீக்குவதில், முக்கிய பங்கு வகித்ததாக சொல்லப்படுகிறது.

அஸ்ஸாமை சேர்ந்த, ஆணித்தரமாக பேசும் வல்லமை கொண்ட சந்திரப்பிரபா, 1901ஆம் ஆண்டு, மார்ச் 16 ஆம் தேதி, காம்ரூப் மாவட்டத்தின் தோயிசிங்காரி கிராமத்தில் பிறந்தார்.

அவரது தந்தை ரதிராம் மஜும்தார், கிராமத்தின் தலைவராக இருந்தார். அவர் தமது மகளின் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தார்.

சந்திரப்பிரபா தனது படிப்பில் மட்டுமல்லாது, தனது கிராமத்தை சேர்ந்த படிக்கும் சிறுமிகள் மீதும் கவனம் செலுத்தினார்.

"அவருக்கு 13 வயது இருந்தபோது, தனது கிராமத்தின் சிறுமிகளுக்காக ஆரம்ப பள்ளிக்கூடத்தை துவக்கினார். இந்த பதின்பருவ ஆசிரியையை கண்டு வியந்த ஸ்கூல் இன்ஸ்பெக்டர் , சந்திரபிரபா சைக்கியானிக்கு, நவ்காவ் மிஷன் பள்ளிக்கூடத்தின் உபகார சம்பளத்தை பெற்றுத்தந்தார். கல்வியில் பெண்கள் மீது காட்டப்படும் பாகுபாட்டிற்கு எதிராகவும், நவ்காவ் மிஷன் பள்ளியில், அவர் குரல் எழுப்பினார். இது போன்ற விஷயம் தொடர்பாக எதிர்ப்பு தெரிவித்த முதல் பெண் இவர் என்று நம்பப்படுகிறது," என்று அவரது பேரன் அந்தணு சைக்கியா தெரிவிக்கிறார்.

அவர் 1920-21 ல், கிரோன்மயி அகர்வாலின் உதவியுடன், தேஜ்பூரில், மகளிர் சமிதியை அமைத்தார்.

சந்திரப்பிரபா மற்றும் வேறு சுதந்திர போராட்ட வீரர்களும், 'துணி யாகம்', அதாவது வெளிநாட்டு துணிகள் புறக்கணிப்பு இயக்கத்தை துவக்கி துணிகளை எரித்தனர். இதில் பெரும் என்ணிக்கையில் மகளிரும் பங்குகொண்டனர். அந்த நேரத்தில் மகாத்மா காந்தி, தேஜ்பூர் சென்றிருந்தார் என்று சந்திரபிரபா குறித்து புத்தகம் எழுதிய நிருபமா பார்கோஹேன் தெரிவித்தார்.

நிருபமா பர்கோஹேன் எழுதிய 'அபிஜாத்ரி' என்ற நாவலுக்காக அவருக்கு சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது.

பிற்படுத்தப்பட்ட வகுப்பைச்சேர்ந்த சந்திரப்பிரபா சைக்கியானிக்கு, மிக இளம் பருவத்திலேயே , மிகவும் வயதான நபர் ஒருவருடன் திருமணம் நடக்கவிருந்தது. ஆனால், அவரை திருமணம் செய்துகொள்ள சந்திர பிரபா மறுத்துவிட்டார்.

அவர் மிகவும் தைரியமான பெண்மணி. அவர் ஆசிரியராக இருந்தபோது, வேறு ஒரு உறவு மூலமாக, திருமணமாகமலேயே தாயானார். ஆனால் அந்த உறவு நீடிக்கவில்லை. இந்த உறவு மூலம் பிறந்த மகனை தன்னுடன் வைத்துக்கொள்ள அவர் முடிவு செய்தார். குழந்தையை தனியே வளர்த்தார் என்று எழுத்தாளர் நிருபமா பர்கோஹேன் தெரிவிக்கிறார்.

சந்திரப்பிரபா சைக்கியானி சிறுமிகளின் கல்விக்காக மட்டும் பணியாற்றவில்லை, அவர்களது உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சுதந்திர போராட்டத்தை அவர்கள் வரை கொண்டுசேர்க்கவும், மாநிலம் முழுவதிலும், சைக்கிள் பயணம் மேற்கொண்டார். அப்படிச்செய்த மாநிலத்தின் முதல் பெண் அவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

'' கிராமத்தில் பட்டியலின வகுப்பை சேர்ந்தவர்கள், குளத்திலிருந்து தண்ணீர் எடுக்க அனுமதி இல்லை, ஆனால், சந்திரபிரபா சைக்கியானி, அதற்கு எதிராக குரல் கொடுத்தார், போராடினார், மக்களுக்கு அவர்களின் உரிமையை பெற்றுத்தந்தார். அதன் காரணமாகவே, மக்கள் குளத்திலிருந்து தண்ணீர் எடுக்கும் உரிமையை பெற முடிந்தது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் கோயிலுக்குள் நுழைய இருந்த தடை குறித்தும் அவர் போராட்டங்கள் நடத்தினார். ஆனால், இதில் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை ," என்று சொல்கிறார் அவரது பேரன் அந்தணு.

1930ஆம் ஆண்டு, சுதந்திர வேள்வியின் ஒரு முக்கிய அத்தியாயமாக தொடர்ந்த ஒத்துழையாமை இயக்கத்திலும் அவர் பங்குகொண்டு சிறை சென்றார்.

1947ஆம் ஆண்டுவரை, காங்கிரஸ் கட்சியின் தொண்டராக அவர் பணியாற்றி வந்தார்.

அவர் ஆற்றிய அரும்பணிகளுக்காக, 1972 ஆம் ஆண்டு, அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: