'ஜெய்பீம்' ஆஸ்கர் தளத்தில் இடம்பெற காரணம் இதுதான் - இயக்குநர் ஞானவேல்

    • எழுதியவர், ச. ஆனந்தப்பிரியா
    • பதவி, பிபிசி தமிழுக்காக

சூர்யாவின் 'ஜெய் பீம்', மோகன்லாலின் 'மரக்கார்: அரபிகடலிண்டே சிம்ஹம்' ஆகிய படங்கள், 2022இல் ஆஸ்கார் சிறந்த திரைப்படத்திற்கு தேர்வாவதற்கான தகுதியைப் பெற்றுள்ளன. இந்த படங்களுக்கான இறுதி பரிந்துரை வரும் பிப்ரவரியில் அறிவிக்கப்படும்.

'ஜெய்பீம் குறித்தும், ஆஸ்கர் விருதுக்கு தேர்வானது பற்றியும் த. செ. ஞானவேலிடம் பேசினோம்.

கடந்த வருடம் நவம்பரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முன்னணி ஓடிடி தளத்தில் த. செ. ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் என பலரது நடிப்பில் வெளியானது 'ஜெய்பீம்' திரைப்படம். திரைப்படங்களுக்கான ரேட்டிங் கணக்கிடும் IMDB தளத்தில் அதிக ரேட்டிங் (9.6 புள்ளிகள்) பெற்று 'ஜெய்பீம்' முதலிடம் பெற்றது.

வெளியான நாளில் இருந்து படத்தின் மீது குவிந்த கவனம் இப்போது ஆஸ்கர் தகுதிப்பட்டியல் வரை சென்று சிறப்பித்திருக்கிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆஸ்கரின் அதிகாரபூர்வ யூடியூப் பக்கத்தில் 'ஜெய்பீம்' திரைப்படத்தின் காட்சிகளின் இயக்குநர் த. செ. ஞானவேல் அவரது பேட்டியும் இடம்பெற்றிருந்தது.

ஆஸ்கரின் யூடியூப் தளத்தில் பதிவேற்றப்பட்ட முதல் தமிழ்த்திரைப்படம் 'ஜெய்பீம்' என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது 94வது ஆஸ்கர் விருதுகளின் தகுதிப்படியலில் அனுப்பப்பட்ட 276 படங்களில் 'ஜெய்பீம்' தேர்வாகி உள்ளது. இதற்கு வாழ்த்து தெரிவித்து 'JaibhimjoinsOSCARS' என்ற டேக்கில் சமூக வலைதளங்களில் திரையுலகை சேர்ந்த பிரபலங்களும் ரசிகர்களும் பதிவிட்டு வருகின்றனர்.

கடந்த வருடம் இந்தியா சார்பாக அகாடெமி விருதுகளுக்கு அனுப்பப்பட்ட படங்களில் 'கூழாங்கல்', 'சர்தார் உதம்', ' சுருளி' உள்ளிட்ட படங்கள் இடம் பெற்றிருந்தன.

ஆனால் 'ஜெய்பீம்' இடம்பெறாதது அப்போது பேசுபொருளானது. இதனை தொடர்ந்து தற்போது 'Open Category' -யில் 'ஜெய்பீம்' அனுப்பப்பட்டு தேர்வாகி உள்ளது.

இதே போன்ற ஓப்பன் கேட்டகிரியில் கடந்த வருடம் சூர்யாவின் 'சூரரைப் போற்று', நடிகர் பார்த்திபனின் 'ஒத்த செருப்பு' படங்கள் இடம்பெற்றிருந்தன.

கடந்த வருடம் 'ஜெய்பீம்' ஆஸ்கரில் இடம்பெறாதது ஏன்?

ஆஸ்கர் தகுதிப்பட்டியலில் தேர்வாகி இருப்பது, ஆஸ்கரின் யூடியூப் பக்கத்தில் இடம் பெற்றது என 'ஜெய்பீம்' பட இயக்குநர் த. செ. ஞானவேலுக்கு வாழ்த்து தெரிவித்து பேசினேன்,

"ஆஸ்கர் விருதுகளுக்கான தகுதிப்பட்டியலில் இடம் பெற்றிருப்பது மகிழ்ச்சியான ஒன்றுதான். கடந்த வருடம் ஆஸ்கர் விருதுகளுக்கான காலக்கெடுவுக்குள் படத்தை எடுத்து அனுப்ப முடியவில்லை. ஆஸ்கரின் காலக்கெடு முடிந்து மூன்று மாதங்களுக்கு பிறகுதான் அதாவது நவம்பர் போலதான் பட வெளியீடு இருந்தது. அது வருட இறுதி என்பதால் ஆஸ்கர் மட்டுமல்ல கோவா திரைப்பட விழா என எந்த திரைப்பட விருதுகளுக்கும் படத்தை அனுப்ப முடியாத சூழல் இருந்தது.

கடந்த வருடம் நிலவிய கோவிட் காரணங்களால் படத்தை எடுத்து வெளியிடுவதே சவாலான விஷயமாக இருந்ததால் விருதுகளுக்கென அப்போது யாராலும் யோசிக்க முடியாத ஒரு சூழல் இருந்தது. மேலும், விருதுகளுக்கென தனியாக படத்தின் காட்சிகள் நீக்குவது சேர்ப்பது போன்ற விஷயங்களும் இருக்கிறது.

ஆனால் படம் வெளியான பிறகு அது உருவாக்கிய தாக்கம், தமிழகம் தாண்டியும் இந்தியா முழுவதும் மக்கள் அதை புரிந்து கொண்டு வரவேற்ற விதம் இதெல்லாம்தான் எங்களுக்கு இன்னும் அதிக நம்பிக்கையை கொடுத்தது.

மேலும் 'ஜெய்பீம்' படத்தை ஏன் ஆஸ்கருக்கு அனுப்பவில்லை என விருதுகளுக்கு தொடர்ச்சியாக படத்தை தேர்வு செய்து அனுப்பும் குழுவை சேர்ந்தவர்களும் கேட்டார்கள்.

அதனால் ஆஸ்கரின் 'ஓப்பன் கேட்டகிரி'க்கு அனுப்ப வேண்டும் என தயாரிப்பு நிறுவனம் 2டி முடிவு செய்து அனுப்பினார்கள்.

அகாடெமி விருதுக்கு அனுப்பட்ட 'ஜெய்பீம்' படத்தில் சில இடங்களில் பாடல்களை நீக்கிவிட்டுதான் அனுப்பி இருக்கிறோம். மேலும் 'குளோடன் குளோப்' பட்டியலில் 'ஜெய்பீம்' இடம் பெற்றிருப்பதும் கூடுதல் சிறப்புதான்.

அமேசான் ஓடிடி நிறுவனமும் இந்த படத்தை உலக அளவில் எடுத்து செல்ல முக்கியமான தளத்தை அமைத்து கொடுத்தது" என்றார்.

ஆஸ்கர் யூடியூப் பக்கத்தில் 'ஜெய்பீம்'

'ஜெய்பீம்' திரைப்படம் அதன் கதைக்கருவுக்காக எப்படி விவாதங்களை முன்னெடுத்ததோ அதேபோல படத்தில் இடம்பெற்ற சில காட்சிகள், வசனங்களுக்காகவும் சர்ச்சையாகி பின்பு காட்சிகள் மாற்றப்பட்டது. தற்போது ஆஸ்கரின் யூடியூப் பக்கத்தில் 'ஜெய்பீம்' இடம் பெற்றது பற்றியும் படத்தில் குறிப்பிட்டு முதல் காட்சியை ஆஸ்கர் யூடியூப் பக்கத்திற்கு தேர்ந்தெடுத்தது குறித்தும் இயக்குநரிடம் கேட்டேன்,

"கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆஸ்கர் குழுவில் இருந்து படத்தின் சில காட்சிகளை இணைத்து என்னுடைய பேட்டியும் கேட்டிருந்தார்கள். இதற்கு முன்பு இப்படி எல்லாம் யாரிடமும் கேட்டிருப்பார்களா என தெரியவில்லை. 'ஜெய்பீம்' கதை என்பது சாதி ரீதியாக ஒருவன் எப்படி ஒடுக்கப்படுகிறான் அவனுக்கு சாதி என்ன செய்கிறது என்பதுதான். படத்தின் இந்த மொத்த கதையும் முதல் காட்சியில் இருக்கும். அதில் ஏராளமான ராசாக்கண்ணு இருக்கிறார்கள்.

இதை ஆஸ்கர் நடுவர் குழுவில் இருப்பவர்களுக்கு புரிய வைக்க வேண்டும் என்பதற்காகவே முதல் காட்சியை தேர்ந்தெடுத்தேன்.

இங்கு எப்படி சாதியோ அங்கு நிறம் குறித்தான ஏற்றத்தாழ்வுகள் (Racism) மக்களுக்கான அச்சுறுத்தல். நிறவெறியை விடவும் பத்து மடங்கு ஆபத்தான படிநிலையை கொண்டது சாதி.

அதானலேயே, முதல் காட்சியை தேர்ந்தெடுத்து சாதி Vs ரேசிசம் என்று ஆஸ்கருக்கான யூடியூப் தள காணொளியில் பேசியிருந்தேன்.

உலக அளவில் பலரிடமும் இது குறித்தான புரிதல் உருவாக்க வேண்டும் என்ற எண்ணம்தான். அந்த காணொளி யூடியூப் தளத்தில் பதிவேற்றப்பட்ட மற்ற காணொளிகளை காட்டிலும் அதிக பார்வைகளை கடந்திருக்கிறது" என்றார்.

விருது குறித்து எதிர்ப்பார்ப்பு இல்லை

மேலும் ஒரு படம் நல்ல வரவேற்பைப் பெற்று அடுத்தடுத்த தளங்களுக்கு செல்லும் போது அந்த படத்தில் உழைத்த அனைவருக்குமே அந்த மகிழ்ச்சியும் பாராட்டும் போய் சேரும் என்றவரிடம் படத்தின் ரீமேக் வாய்ப்புகள் குறித்து கேட்டேன்.

"'ஜெய்பீம்' படம் வெளியாகி முக்கியமான விவாதத்தை முன்னெடுத்து இவ்வளவு பெரிய கவனத்தை குவித்திருக்கிறது எனும்போதே இது தொடர்பான பேச்சுகள் வராமல் இருக்காது. அது குறித்து தயாரிப்பு நிறுவனம்தான் பேச வேண்டும்" என்றவர் தயாரிப்பாளர், நடிகர் என சூர்யா இந்த படத்தின் இரட்டை நாயகனாக செயல்பட்டார் என்கிறார்.

"நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் இந்த படத்தை நம்பி சூர்யா அடுத்தடுத்த தளங்களுக்கு எடுத்து சென்றது முக்கியமானது. ஆஸ்கர் தகுதிப்பட்டியலில் இடம் பெற்றிருக்கிற செய்தி வெளியானதும் வாழ்த்துகளை பரிமாறி கொண்டோம். அதைத்தாண்டி ஆஸ்கரின் அடுத்த நிலை குறித்தான எதிர்பார்ப்பு எதுவும் இல்லை. 'ஜெய்பீம்' உலக அளவில் பலரிடமும் போய் சேர்ந்திருக்கிறது என்பதே மகிழ்ச்சியான விஷயம்தான்" என்கிறார்.

எப்போது இறுதி முடிவு தெரியும்?

இருளர் பழங்குடியினருக்கு இழைக்கப்பட்ட அநீதி மற்றும் காவல்துறையில் ஒரு சிலரின் கொடுமைகளை விவரிக்கும் சூர்யாவின் ஜெய் பீம், 2021ஆம் ஆண்டின் சிறந்த தமிழ்த் திரைப்படங்களில் ஒன்றாகும்.

த. செ. ஞானவேல் இயக்கிய இந்தப் படத்தில் சூர்யா, லிஜோமோல் ஜோஸ், மணிகண்டன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.94ஆவது அகாடமி விருதுகளில் சிறந்த திரைப்படத்திற்கான தேர்வுப் பட்டியலில் இடம்பிடித்த ஒரே தமிழ்த் திரைப்படம் ஜெய் பீம் மட்டுமே.

உலகம் முழுவதும் தேர்வு செய்யப்பட்ட 276 படங்களில், ஜெய் பீம், மலையாளப் படமான மரக்கர்: அரபிகடலிண்சே சிம்ஹம் ஆகியவை இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளன.ஆஸ்கார் விருதுக்கான பரிந்துரை வாக்களிப்பு வியாழக்கிழமை (ஜனவரி 27) தொடங்குகிறது, மேலும் இறுதிப் பரிந்துரைப் பட்டியல் பிப்ரவரி 8, 2022 செவ்வாய்க் கிழமை அன்று அறிவிக்கப்படும். விருது வழங்கும் விழா மார்ச் 27ஆம் தேதி ஹாலிவுட்டில் நடைபெறும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: