You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சூர்யாவின் ‘ஜெய்பீம்’ - பிரகாஷ் ராஜ் கன்னத்தில் அறையும் காட்சி: இந்தி ஆதரவாளர்கள் எதிர்ப்பு
உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட 'ஜெய்பீம்' திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் படத்தில் இடம்பெற்றுள்ள இந்தி மொழி தொடர்பான காட்சி ஒன்று தற்போது சர்ச்சையாகி, சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகி இருக்கிறது. என்ன சர்ச்சை?
'ஜெய்பீம்'
விருத்தாச்சலத்தில் உள்ள கம்மாபுரத்தில் 1993ஆம் ஆண்டு பழங்குடி இனத்தை சேர்ந்த ராஜாக்கண்ணு என்பவர் திருட்டு குற்றச்சாட்டின் பேரில் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். பிறகு விசாரணையின்போது, காவல் துறையினரால் கடுமையாக துன்புறுத்தப்பட்டு சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இந்த விவகாரத்தை ராஜாக்கண்ணுவின் மனைவி செங்கேணி வழக்கறிஞர் சந்துருவிடம் எடுத்து வருகிறார்.
ராஜாக்கண்ணு விசாரணையின் போது தப்பித்து சென்று விட்டதாகவும், அப்படி தப்பித்து போகும்போது வழியில் விபத்தில் மாட்டி உயிர் இழந்ததாகவும் காவல்துறை சார்பில் சாட்சியங்கள் கொடுக்கப்படுகிறது.
காவல்துறை சார்பில் சொல்லும் சாட்சியங்கள் மெய்தானா, ராஜாக்கண்ணு உண்மையிலேயே திருடினாரா, பாதிக்கப்பட்ட செங்கேணிக்கு நீதி கிடைத்ததா என்று கதை நகரும். ஒடுக்கப்பட்ட பழங்குடி மக்கள் மீது அதிகாரம் தன் கோர முகத்தை எப்படி காட்டியிருக்கிறது, அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் என்னென்ன, அதிகாரத்தில் இருப்பவர்கள் எப்படி அதில் இருந்து தப்பிக்க முயல்கிறார்கள், இதை நீதிமன்றம் எப்படி அணுகியது என்பதுதான் 'ஜெய் பீம்'.
தற்போது என்ன சர்ச்சை?
'ஜெய்பீம்' திரைப்படத்தில் இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு வந்த பிறகு வழக்கை எடுத்து விசாரிக்கும் காவல்துறை அதிகாரியான ஐ.ஜி பெருமாள்சாமி கதாப்பாத்திரத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் நடித்திருப்பார்.
படத்தில் விசாரணையின் போது, உண்மை குற்றவாளிகளை காட்டி கொடுக்க மறுக்கும் இடத்தில் அதை சமாளிப்பதற்காக திருடப்பட்ட நகைகளை வாங்கி விற்ற வட இந்தியாவை சேர்ந்த நபர் இந்தியில் பதில் சொல்வார். அதற்கு பிரகாஷ்ராஜ் கதாப்பாத்திரம் அவரை கன்னத்தில் அறைந்து, 'தமிழில் பேசு' என்று சொல்வது போன்று காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.
படத்தில் இந்த காட்சியை பார்த்துவிட்டு சமூக வலைத்தளங்களில் சிலருடைய கருத்தால் தற்போது சர்ச்சை கிளம்பி இருக்கிறது.
இந்த ட்வீட்டை பதிவிட்டிருப்பவரான திரைப்பட விமர்சகர் ரோஹித், ''ஜெய்பீம் திரைப்படம் உண்மையில் மனதைக் கணக்க செய்தது. ஆனால், இங்கு நான் ஒரு கருத்தை பதிவிட வேண்டும். இது தனிப்பட்ட முறையில் எந்தவொரு நடிகரையோ, வேறு யாரையுமோ குறிப்பிட்டு அல்ல. படத்தில் ஒரு காட்சி உள்ளது. அதில் ஒரு நபர் இந்தியில் பேசும்போது, பிரகாஷ்ராஜ் அவரை அறைந்து தமிழில் பேசச் சொல்வார். உண்மையில் இதுபோன்ற காட்சி தேவை இல்லாதது. படக்குழு இதைக் கருத்தில் கொண்டு நீக்குவார்கள் என நம்புகிறேன்'' என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமிழ் படங்களைத் தாங்கள் ஆதரிப்பதாகவும், தமிழ் படங்களுக்காக காத்திருப்பதாகவும், தமிழ் படங்களை பல மொழிகளில் வெளியிடுவதற்கும் வரவேற்பு கொடுப்பதாகவும் அதற்கு பதிலாக தாங்கள் எதிர்ப்பார்ப்பதெல்லாம் அன்பு மட்டும்தான் எனவும் அன்பு இல்லை என்றால் கூட குறைந்தபட்சம் மனிதநேயமாவது எதிர்ப்பார்க்கிறோம் எனவும் அதில் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த ட்வீட்டுக்கு பதில் அளிக்கும் விதமாக பத்திரிக்கையாளர் ராஜசேகர், ''இந்த குறிப்பிட்ட காட்சி இந்தி பேசும் இந்தியர்களுக்கு எதிரானதாக சித்தரிக்கப்படவில்லை. குறிப்பிட்ட அந்த வட இந்தியர் கதாப்பாத்திரம் பிரச்னையில் இருந்து தப்பிப்பதற்காக இந்தியில் பேசுகிறார். இதனால் எதிரில் இருக்கும் பிரகாஷ்ராஜ் கதாப்பாத்திரம் தான் சொல்ல வருவதை புரிந்து கொள்ளாது என எண்ணுகிறார். இந்த திட்டத்தை புரிந்து கொண்டே, பிரகாஷ்ராஜ் கதாப்பாத்திரம் அவரை அறைந்து தமிழில் பேசச் சொல்வார். தமிழ் இயக்குநர்கள் இந்தி மொழிக்கு எதிரானவர்கள் அல்ல. மேலும் அமைப்பு ஒரு மொழியை திணித்தால் மட்டுமே வெறுப்போம். மற்றபடி நாம் அனைவரும் பெருமைமிகு இந்தியர்கள்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பதில் கூறியுள்ள ரோகித், ''யாரும் குறிப்பிட்ட ஒரு மொழிக்கு எதிரானவர்கள் என இங்கு நான் குறிப்பிடவில்லை. அந்த காட்சி எனக்கு மிகவும் வேதனையை ஏற்படுத்தியது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு புரிதல் இருக்கும். உண்மையில் அந்தக் காட்சி தேவை இல்லாதது. நான் ஒரு திரைப்பட விமர்சகராக பல வருடங்களாக, தமிழ்ப் படங்களுக்கு ஆதரவு அளித்து வருகிறேன். அந்த காட்சியில் அறைந்து கேட்பதற்கு பதில், 'தமிழில் பேசு' என சொல்லியிருந்தாலே போதுமானது'' என அந்த ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 'ஜெய்பீம்' படத்தின் இந்த காட்சிக்கு வந்திருக்கும் எதிர்ப்புக்கு, 'ஸ்கேம் 1992' இணையத் தொடரில் தமிழ் பேசும் ஒருவரை 'இந்தி தெரியாதா?' என அதிகாரி ஒருவர் விசாரிக்கும் காட்சியையும் இணைத்து, அந்த காட்சிக்கான பதிலடிதான் இது என சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற மொழிகளில் எப்படி 'டப்' செய்யப்பட்டிருக்கிறது?
அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் ஆங்கிலத்தில் சப் டைட்டில்களோடு வெளியானது.
இதில் தமிழ், தெலுங்கில் இந்த காட்சிக்கு பிரகாஷ்ராஜ் கதாப்பாத்திரம் அறைந்து அந்ததந்த மொழிகளில் பேசு என்று குறிப்பிடும்படியாகவும், இந்தியில் வெளியாகியிருக்கும் காட்சியில் மட்டும், எதிரில் இருப்பவரை அறைந்த பின்பு 'உண்மையைக் கூறு' என்று சொல்லியிருப்பது போலவும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.
படக்குழுவை பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்
'ஜெய்பீம்' திரைப்படத்திற்கு பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், படத்தை பார்த்த தமிழக முதல்வர் ஸ்டாலின் படக்குழுவினருக்கு தமது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். 'ஜெய்பீம்' நினைவுகள் தனது மனதை கணமாக்கி விட்டதாகவும் விளிம்புநிலை இருளர் மக்களின் வாழ்வியலையும் அவர்களின் துன்பங்களையும் துல்லியமாகவும், கலைப்பூர்வமாகவும் காட்சிப்படுத்தி உள்ளது என தனது அதிகாரப்பூர்வமான சமூக வலைத்தளப்பக்கத்தில் படம் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த திரைப்படத்தில் வருவது போன்ற காவல் நிலைய தாக்குதல் 1976ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் நாள் சென்னை மத்திய சிறையில் மிசா காலத்தில் தமக்கு நடந்ததாகவும் அந்த நினைவுகள் எல்லாம் இந்த படம் நினைவு படுத்தியதாகவும் அந்த அறிக்கையில் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டு இருந்தார்.
நடிகர் கமல்ஹாசனும் 'ஜெய்பீம்' படக்குழுவினரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததோடு படம் பார்த்து தமது கண்கள் குளமானதாகவும், பழங்குடியினரின் இன்னல்களை அழுத்தமாக வெளிப்படுத்திய இயக்குநருக்கும் படத்தில் நடித்து, தயாரித்த நடிகர் சூர்யாவுக்கும் தமது பாராட்டுகளை ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.
பிற செய்திகள்:
- தமிழ்நாட்டுக்கு மூவேந்தர் கொடி - சீமான் மீது வழக்கு ஏன்?
- 87 வயதில் முதுகலை பட்டம்: கனடாவில் சாதித்த இலங்கை தமிழ் பெண்
- 'சீன, ரஷ்ய அதிபர்கள் செய்தது தவறு: COP26 மாநாட்டில் விமர்சித்த பைடன்'
- தீபாவளி உணவுகள்: தென்னிந்தியா, வடஇந்தியா இடையே வேறுபாடு என்ன?
- 'நிகர பூஜ்ஜிய உமிழ்வு' என்பது என்ன? இதற்காக நாடுகள் என்ன செய்கின்றன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்