You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜெய்பீம் - சூர்யா 'சுயநலமி' என ஹெச். ராஜா ட்வீட்; லைக் செய்த சூர்யா
நடிகர் சூர்யா நடித்து வெளிவந்த ஜெய்பீம் திரைப்படம் பிற மொழிகளில் வெளிவந்தது ஏன், என பாஜக தலைவர் ஹெச்.ராஜா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். நடிகர் சூர்யா அதை லைக் செய்துள்ளார்.
இந்த ஸ்க்ரீன் ஷாட்டை பகிர்ந்து சமூக ஊடகங்களில் பலர் தங்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த ஜெய்பீம் பல்வேறு தரப்பிலிருந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு ஜெய்பீம் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
நடிகர் சூர்யா இதில் வழக்கறிஞர் சந்துருவாக நடித்துள்ளார். பல்வேறு தரப்புகளில் பாராட்டை பெற்ற இத்திரைப்படம் ஐந்து மொழிகளில் அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் "நம் குழந்தை 3 மொழி படிக்கக் கூடாது என்றவர் தன் படத்தை 5 மொழிகளில் வெளியிடுவாராம். சுயநலமிகளை புரிந்து கொள்வோம்,"என ஹெச். ராஜா ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
ஹெச். ராஜாவின் இந்த பதிவை நடிகர் சூர்யா லைக் செய்துள்ளார்.
ராஜாவின் இந்த பதிவிற்கு பலர் "இது சினிமா, எந்த மொழியில் பார்க்க வேண்டும் என விரும்புகிறார்களோ அந்த நோக்கத்தில் பார்ப்பதற்காக படம் இத்தனை மொழிகளில் வெளி வருகிறது. இதற்கும் ஹிந்தி திணிப்பிற்கும் என்ன சம்மந்தம்" என பின்னூட்டத்தில் தங்கள் கருத்துகளை பகிர்ந்துள்ளனர்.
மேலும் பலர், திரைப்படம் கூறியிருக்கும் கருத்து குறித்து விவாதிக்காமல் தேவையில்லாமல் வைக்கப்படுகிற வாதம் இது என்றும் தெரிவித்துள்ளனர்.
தீபாவாளிக்கு முன்னதாக ஓடிடியில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் குறித்து தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தனது பாராட்டுகளை பதிவு செய்திருந்தார்.
"பார்வையளர்களின் மனதில் தாக்கத்தையும் அதன்விளைவாக சமூகத்தில் நல்லதொரு மாற்றத்தையும் ஏற்படுத்துவதுதான் சிறந்ததொரு கலைப்படைப்பு! நேற்று நண்பர் வழக்கறிஞர் சந்துருவாக வாழ்ந்துள்ள ஜெய்பீம் திரைப்படத்தைப் பார்த்தேன். அத்திரைப்படம் ஏற்படுத்திய அதிர்வுகள் ஏராளம்," என தமிழக முதல்வர் ஸ்டாலின் ட்வீட் செய்திருந்தார். திரைப்படம் குறித்து ஓர் அறிக்கையும் வெளியிட்டிருந்தார்.
அதற்கு பதிலளித்த சூர்யா "வார்த்தைகளின்றி நெகிழ்ந்து நிற்கிறேன். மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் உணர்வுப்பூர்வமான பாராட்டு, ஜெய்பீம் திரைப்படத்தின் நோக்கத்தை நிறைவேற்றி இருக்கிறது," என தெரிவித்திருந்தார்.
திரைப்படம் குறித்து நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் ஹாசன் தனது பாராட்டுகளை தெரிவித்திருந்தார்.
"ஜெய்பீம் பார்த்தேன்.கண்கள் குளமானது.பழங்குடியினரின் இன்னல்களை அழுத்தமாக வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குநர்" என பாராட்டியிருந்தார் அவர்.
பலரும் திரைப்படம் குறித்தும் அதில் பதிவாக்கப்பட்ட சம்பவம் குறித்தும் தங்களின் கருத்துக்களை பதிவிட்டிருந்த நிலையில் ஹெச். ராஜா இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
கன்னத்தில் அறைந்த சர்ச்சை
ஜெய்பீம் திரைப்படத்தில் கன்னத்தில் அறைவது போன்ற காட்சிகள் இருப்பதாக கூறி சமூக வலைதளங்களில் பலர் தங்களின் கருத்துகளை தெரிவித்திருந்தனர்.
அதற்கு அந்த காட்சி ஹிந்தி பேசுபவர்களுக்கு எதிரான காட்சி இல்லை என்றும், அது அந்த குறிப்பிட்ட நபருக்கான காட்சி என்று பலர் விளக்கம் தெரிவித்திருந்தனர்.
ஜெய்பீம் திரைப்படம் குறித்து பிற மொழி நடிகர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
நீட் பிரச்னைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் சூர்யா பல்வேறு சமூக பிரச்னைகளின்போதும் தனது கருத்தை கடந்த காலங்களில் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்