You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தி நடிகை ஸ்வேதா திவாரி மீது விசாரணைக்கு உத்தரவிட்ட மத்திய பிரதேச பாஜக அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா
''கடவுள் எனது ப்ராவை அளவெடுக்கிறார்'' என்று கூறிய இந்தி தொலைக்காட்சி நடிகை ஒருவர் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
இது தொடர்பாக காவல்துறை விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு, பாரதிய ஜனதா கட்சி ஆளும் மத்திய பிரதேசத்தின் உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா உத்தரவிட்டுள்ளார்.
''ஷோ ஸ்டாப்பர்'' என்ற வெப் சீரிஸில் நடிக்கும் ஸ்வேதா திவாரி, மற்றும் அத்தொடரை உருவாக்கிய குழுவில் இருப்பவர்கள் கலந்துகொண்ட செய்தியாளர் சந்திப்பு ஒன்று மத்திய பிரதேச மாநிலம் போபலில் புதனன்று நடந்தது.
பிரபலமான 'மகாபாரதம்' தொலைக்காட்சி தொடரில் இந்து கடவுளான கிருஷ்ணர் வேடத்தில் நடிக்கும் நடிகர் சௌரப் ஜெய்ன், ஃபேஷன் ஷோ பற்றிய ''ஷோ ஸ்டாப்பர்'' தொடரில் மாடல்களுக்கு மார்புக் கச்சை (ப்ரா) பொருத்தும் வேடத்தில் நடிப்பதாக இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
அவரை மறைமுகமாகக் குறிப்பிட்டு பேசிய ஸ்வேதா திவாரி, ''கடவுள் எனது ப்ராவை அளவெடுக்கிறார்'' என்று கூறினார் என ஏ.என்.ஐ செய்தி முகமை கூறுகிறது. அவர் அவ்வாறு பேசியது சமூக ஊடகங்களில் வைரலானது.
இது குறித்து தமது கண்டணத்தைப் பதிவு செய்துள்ள மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா, காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளதாக வியாழனன்று தெரிவித்தார்.
24 மணி நேரத்தில் அறிக்கை சமர்ப்பிக்க போபல் மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
நரோத்தம் மிஸ்ரா - கடந்தகாலத்தில் தெரிவித்த எதிர்ப்புகள்
சன்னி லியோன் நடனத்தில் 'சரிகமா மியூசிக்' நிறுவனம் வெளியிட்ட ''மதுபன் மே ராதிகா'' எனும் பாடல் காணொளியை மூன்று நாட்களுக்குள் இணையத்தில் இருந்து நீக்க வேண்டும் என, சென்ற டிசம்பர் மாதம் நரோத்தம் மிஸ்ரா கெடு விதித்த பின், அப்பாடல் காணொளி இணையத்தில் இருந்து நீக்கப்பட்டது.
இதற்கு முன்னரும் இவர் இதுபோன்ற காரணங்களுக்காக செய்திகளில் இடம்பிடித்துள்ளார்.
ஒருபால் உறவில் உள்ள இரண்டு பெண்கள் (லெஸ்பியன்) இந்துக்கள் கொண்டாடும் 'கர்வா சவுத்' விழாவைக் கொண்டாடுவதை காட்டும் வகையில் சென்ற ஆண்டு வெளியான டாபர் நிறுவனத்தின் விளம்பரத்துக்கு எதிர்ப்பு எழுந்த பொழுது நரோத்தம் மிஸ்ரா அப்போதும் டாபர் நிறுவனத்தை கண்டித்திருந்தார்.
அதன்பின்பு டாபர் நிறுவனம் அந்த விளம்பரத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டது.
தங்கள் கணவர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்பதற்காக சில வட இந்திய மாநிலங்களில் உள்ள பெண்கள் 'கர்வா சவுத்' எனும் விழாவை அனுசரிக்கிறார்கள்.
வடிவமைப்பாளர் சப்யாசாச்சி முகர்ஜி, 2021 அக்டோபர் மாதம் வெளியிட்ட 'மங்கல் சூத்ரா' (தாலி) விளம்பரம் ஆபாசமாக இருப்பதாக கண்டனம் எழுந்த பொழுது நரோத்தம் மிஸ்ராவும் சப்யாசாச்சி முகர்ஜியை கண்டித்து இருந்தார். அதன் பின்பு இந்த விளம்பரமும் திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டது.
பிற செய்திகள்:
- இலங்கையில் 43 ஆண்டுகளுக்குப் பின் திருத்தப்படும் பயங்கரவாத தடைச் சட்டம் - விரிவான தகவல்கள்
- தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் எப்படி நடைபெறும்? - அடிப்படை தகவல்கள்
- டாடா வசமான ஏர் இந்தியா: மீண்டும் திரும்பிய வரலாறு - முக்கிய தகவல்கள்
- தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை சாத்தியமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: