You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை சாத்தியமா? சட்ட வல்லுநர்கள் சொல்வது என்ன?
- எழுதியவர், ஆ. விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு ரிசர்வ் வங்கி அதிகாரிகள் எழுந்து நிற்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ` மாநில அரசோடு மத்திய அரசு மோதல்போக்கைக் கடைபிடிக்கிறது என்றால், அதிகாரிகளும் அதே பாணியில் செயல்படுவதையே இது காட்டுகிறது' என்கின்றனர் தமிழ் ஆர்வலர்கள்.
இந்தியாவின் 73 ஆவது குடியரசு நாளையொட்டி சென்னை பாரிமுனையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் தேசிய கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குநர் எஸ்.எம்.என்.சாமி கொடியை ஏற்றினார். இதன் பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் இசைக்கப்பட்டது.
இந்தப் பாடலுக்கு அங்கிருந்த சில அதிகாரிகள் எழுந்து நிற்காமல் அமர்ந்துள்ளனர்.
`தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது எழுந்து நிற்காதது ஏன்?' என அங்கிருந்த செய்தியாளர் ஒருவர் கேட்க, `அவ்வாறு எழுந்து நிற்க வேண்டிய அவசியமில்லை. நீதிமன்றத்தின் உத்தரவு உள்ளது' என அவர்கள் கூறியுள்ளார்.
`அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கும்போது அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என்பதற்கு அரசாணை உள்ளது' என மீண்டும் எடுத்துக் கூறவே, `இனிவரும் நாள்களில் எழுந்து நிற்கிறோம்' என தெரிவித்துவிட்டு கலைந்து சென்றுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக 27ஆம் தேதி காலையில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ தலைமையில் அக்கட்சித் தொண்டர்கள், ரிசர்வ் வங்கியை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
மேலும், இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர் ராஜேஷ் என்பவர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்கு ஆன்லைன் மூலம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
தொடர்ந்து இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தவே, தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனை, ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குநர் எஸ்.எம்.என்.சாமி நேரில் சந்தித்து விளக்கம் அளித்தார்.
73ஆவது குடியரசு தினமான நேற்று ரிசர்வ் வங்கி ஊழியர்கள் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்தாத நிலையில், ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குனர் எஸ்.எம்.என்.சாமி தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து விளக்கமளித்தார்.
இருந்தபோதும், இந்த விவகாரத்தில் ரிசர்வ் வங்கி அலுவலர்களின் செயல்பாடுக்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு வலுத்து வருகிறது.
``மத்திய அரசின் அதிகாரிகளாக இருந்தாலும் மாநில அரசின் சட்டதிட்டங்களுக்கு அவர்கள் கட்டுப்பட்டவர்கள்தான். மாநில அரசின் அதிகாரிகளும் மத்திய அரசின் சட்டங்களுக்கு எவ்வாறு கட்டுப்படுகிறார்களோ, அதைப் போலத்தான் இதுவும். தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பாக தமிழ்நாடு அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. இது அனைவருக்கும் தெரியும். அதைக்கூட, `தெரிந்து கொள்ள மாட்டேன்' எனக் கூறுவதும் `உயர் நீதிமன்ற உத்தரவு உள்ளது தெரியுமா?' எனக் கேட்பதும் கண்டிக்கத்தக்கது. மத்திய அரசு, மாநில அரசோடு மோதுகிறது என்றால், இவர்களும் அதே மோதல் போக்கைக் கடைப்பிடிக்கின்றனர். இதுபோன்ற சம்பவங்களுக்கு மத்திய அரசுதான் காரணம்,'' என்கிறார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவரும் சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞருமான குமாரதேவன்.
``காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தரப்பட்டுள்ளது. சட்டரீதியாக என்ன நடவடிக்கை எடுக்க முடியும்?'' என அவரிடம் கேட்டோம்.
``அரசின் விதிகளை மீறுவதற்காக தண்டனை பெற்றுத் தர முடியும். கொடி உள்பட மாநில அரசின் பொருள்களை அவமதிப்பது தண்டனைக்குரிய குற்றம். இது பிணையில் வரக் கூடிய குற்றம் என்றாலும் இதன்மூலம் மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமையும்'' என்கிறார் குமாரதேவன்.
தொடர்ந்து பேசுகையில், `` தேசிய கீதம் இசைக்கும்போது எழுந்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளதையும் சிலர் குறிப்பிடுகிறார்கள். ஓர் அரசாணையை வெளியிட்டு, `தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க வேண்டும்' என மாநில அரசு தெரிவித்துள்ளது. தேசிய கீதத்துக்கு அப்படி எந்த உத்தரவும் இல்லை. அதற்கும் இதற்கும் ஏராளமான வித்தியாசங்கள் உள்ளன.
`திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கும்போது எழுந்து நிற்க வேண்டும்' எனக் கூறியபோது பல இடங்களில் சர்ச்சை எழுந்தது. `இப்படி எழுந்து நின்றுதான் தேச பக்தியைக் காட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை என நீதிமன்றமும் கூறியது. ஆனால், தமிழ்த்தாய் வாழ்த்து அரசாணையில், `மாற்றுத் திறனாளிகள், கர்ப்பிணிகளைத் தவிர அனைவரும் எழுந்து நிற்க வேண்டும்' எனக் கூறப்பட்டுள்ளது. அதனை இவர்கள் மீறுகிறார்கள். இதற்குக் காரணமான அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கையை எடுப்பதற்கும் வாய்ப்பு உள்ளது'' என்கிறார்.
இது தொடர்பாக, தமிழ்நாடு பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். ``தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நின்று அதற்கு உரிய மரியாதையை கொடுக்க வேண்டும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. தாய்க்கு இணையானது தாய்மொழி. அதனை இசைக்கும்போது உரிய மரியாதை செலுத்துவதில் சுணக்கம் இருக்கக் கூடாது,'' என்கிறார்.
``கடந்த மாதம் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இதுதொடர்பான வழக்கு வந்தபோது, `தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க வேண்டியதில்லை' என நீதிபதி தெரிவித்ததையடுத்து, தமிழ்நாடு அரசு அரசாணையைப் பிறப்பித்தது. இந்த அரசாணையைப் பின்பற்ற வேண்டியது அதிகாரிகளின் கடமை. இதனை யார் செய்திருந்தாலும் அது தவறுதான். இதனை அவர்கள் சட்டப்படி சந்திக்க வேண்டும் அல்லது உரிய மரியாதை கொடுத்து அந்தப் பாடலை பாடி மரியாதை செலுத்த வேண்டும். இதுதான் பா.ஜ.கவின் நிலைப்பாடு,'' என்கிறார்.
பிற செய்திகள்:
- அகில இந்திய சமூக நீதி சம்மேளனத்தை உருவாக்குவோம்: மு.க. ஸ்டாலின்
- ரயில்வே தேர்வு தொடர்பாக போராடும் வட இந்திய மாணவர்களின் கோபம் ஏன்?
- உக்ரேனை ரஷ்யா ஆக்கிரமித்தால் புதின் மீது தனிப்பட்ட பொருளாதார தடை- அமெரிக்கா
- தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக பிப்ரவரி 19ம் தேதி நடக்கும்
- பத்ம விருதுகளை நிராகரித்த புத்ததேவ், சந்தியா - என்ன பின்னணி?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: