You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சென்னை ஐ.ஐ.டி: தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பா? - பட்டமளிப்பு விழாவில் என்ன நடந்தது?
சென்னை ஐ.ஐ.டி பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் புறக்கணித்ததாகக் கூறி அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டன அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர்.
சென்னை ஐ.ஐ.டியின் 58 ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை அன்று இணையம் மூலம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்து உள்பட பலர் பங்கேற்றனர். இதில் 1,900 மாணவர்களுக்கு இணையம் வழியாகவே பட்டங்கள் வழங்கப்பட்டன.
அப்போது பேசிய பி.வி.சிந்து, ` பட்டம் பெறுவதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து கற்றுக் கொள்வதற்கு முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் எதனைச் செய்தாலும் அதனை ஆர்வத்துடன் செய்யுங்கள். வெற்றி, தோல்விகளைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை' என்றார்.
அதேநேரம், `வந்தே மாதரம்' பாடலுடன் தொடங்கிய பட்டமளிப்பு விழாவானது, தேசிய கீதம் இசைத்தலோடு நிறைவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்த் தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டதுடன் மாணவர்கள் ஆங்கிலத்தில் உறுதிமொழி ஏற்ற பிறகு சம்ஸ்கிருதத்தில் மந்திரம் கூறி முடித்ததாகவும் கூறப்படுகிறது.
ஏற்கெனவே, கடந்த 2018ஆம் ஆண்டும் சென்னை ஐ.ஐ.டியில் நடந்த மத்திய அரசின் விழாவில் இதேபோல் சம்ஸ்கிருதத்தில் மகா கணபதி மந்திரம் கூறப்பட்ட விவகாரமும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்ற அந்தக் கூட்டத்திலும் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டதாகக் கூறி எதிர்ப்பு எழுந்தது. இதுதொடர்பாக, அப்போது விளக்கமளித்த ஐ.ஐ.டி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி, மாணவர்கள் தாமாக முன்வந்து சம்ஸ்கிருதப் பாடலை பாடியதாகக் கூறியிருந்தார்.
இந்நிலையில், பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டது குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ` சென்னை ஐ.ஐ.டி கல்வி நிறுவனத்தில் நேற்று (20.11.2021) நடைபெற்ற பட்டமளிப்பு நிகழ்ச்சியில் திட்டமிட்டே தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் புறக்கணித்துள்ளனர். வேறு ஏதோ ஒன்று நுழைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கல்வி நிறுவன நிகழ்ச்சிகளிலும், அரசு நிகழ்ச்சிகளிலும் மொழி வாழ்த்துப் பாடப் பட வேண்டும் (அதற்கு அவையினர் எழுந்து நிற்க வேண்டும் என்பதும் மரபு) என்ற தமிழ்நாடு அரசின் ஆணையை அலட்சியப்படுத்தியுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது.
இப்படி தமிழ் வாழ்த்தைப் புறக்கணிப்பது, முதல் தடவையல்ல. முன்பும் இப்படிப்பட்ட நிகழ்வுகள் அங்கே நடந்தேறியுள்ள நிலையில், தமிழ்நாடு அரசின் ஆணையைப் பின்பற்றவோ- மதிக்கவோ ஐ.ஐ.டி தயாராக இல்லை என்பது ஏற்கத்தக்கதுதானா? தமிழ்நாடு அரசும் கல்வியாளர்களும் உரிய கண்டனத்தைப் பதிவு செய்வது முக்கியமாகும்' எனப் பதிவிட்டுள்ளார்.
இதையடுத்து, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், `தமிழ்த்தாய் வாழ்த்தைப் புறக்கணித்து சம்ஸ்கிருதத்தில் இறைவணக்கம் பாடப்பட்டிருக்கிறது. இது தமிழ்த்தாயை அவமதிக்கும் செயல்' எனக் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள செய்தியிலும், `சென்னை ஐ.ஐ.டியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் புறக்கணிக்கப்பட்டு இருப்பது கண்டனத்திற்குரியது. ஐ.ஐ.டியில் அவ்வப்போது இத்தகைய புறக்கணிப்பு நிகழ்வது ஏற்கத்தக்கதல்ல. இதனை மத்திய, மாநில அரசுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதும் சரியானதல்ல' எனக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டதாகக் கூறி அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவிப்பதற்கு ஐ.ஐ.டி தரப்பில் இருந்து விளக்கம் எதுவும் வெளிவரவில்லை.
பிற செய்திகள்:
- பெங்களூரைச் சூழ்ந்திருக்கும் பிட்காயின் ஊழல் அரசியல் - நடந்தது என்ன?
- கொரோனா பரவலை தடுக்காவிட்டால் ஐரோப்பாவில் 5 லட்சம் பேர் பலியாகலாம்: WHO எச்சரிக்கை
- போலீஸ் எஸ்.ஐ. வெட்டிக் கொலை: ஆடு திருடும் கும்பல் காரணமா?
- கிலோ கணக்கில் கறி சாப்பிட்டவருக்கு தடை விதித்த சீன உணவகம்
- 'ஆமைக்கறி, பூனைக்கறி': சீமான் பற்றி இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ் எம்.பி பேச்சால் சர்ச்சை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்