போலீஸ் எஸ்.ஐ. வெட்டிக் கொலை: ஆடு திருடும் கும்பல் காரணமா?

திருச்சி அருகே, ஆடு திருடும் கும்பல் என்று சந்தேகிக்கப்படுவோரை துரத்திச் சென்றபோது சிறப்பு போலீஸ் எஸ்.ஐ. பூமிநாதன் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்கிறது போலீஸ்.

திருச்சி மாவட்டம், நவல்பட்டு சோழமாநகர் பகுதியில் வசித்து வந்தவர் பூமிநாதன். இவருக்கு கவிதா என்ற மனைவியும், குகன் என்ற மகனும் உள்ளனர்.

பூமிநாதன் நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தார்.

பூமிநாதன் நேற்று சனிக்கிழமை இரவு ரோந்து பணியில் இருந்தபோது நவல்பட்டு சாலையில் நள்ளிரவு 2 மணி அளவில் மூன்று இரு சக்கர வாகனங்களில் ஆடுகளுடன் வந்த நபர்களை இவர் தடுத்து நிறுத்தியதாகவும், அவர்கள் நிற்காமல் வேகமாக சென்றதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இதையடுத்து, அவர்கள் ஆடு திருடும் கும்பலை சேர்ந்தவர்கள் என்பதை தெரிந்துகொண்ட பூமிநாதன் இருசக்கர வாகனத்தில் அவர்களை விரட்டி சென்றுள்ளார். அப்போது புதுக்கோட்டை மாவட்டம் களமாவூர் ரயில்வே கேட் பகுதியிலுள்ள பள்ளப்பட்டி என்ற ஊரில் தப்பிச் சென்ற ஒரு பைக்கை மடக்கிப் பிடித்துவிட்டு, காவல் நிலையத்தை தொடர்புகொண்டு தகவல் தெரிவித்துள்ளார்.

அப்போது மற்ற இரண்டு பைக்கில் வந்தவர்களும், பிடிபட்ட நபரை விட்டுவிடும்படி பூமிநாதனை மிரட்டியதாகவும், ஆனால், பூமிநாதன் அதற்கு மறுத்ததால், அவரை தலையில் வெட்டிவிட்டு தப்பிவிட்டதாகவும், காயம்பட்ட பூமிநாதன் அந்த இடத்திலேயே உயிரிழந்ததாகவும் போலீசார் கூறுகின்றனர்.

காலை 5 மணி அளவில், இயற்கை உபாதைக்காக அங்கே வந்த பள்ளப்பட்டி பொதுமக்கள் இறந்து கிடந்த பூமிநாதனைப் பார்த்துவிட்டு போலீசுக்குத் தகவல் கொடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை போலீசாரும், திருச்சி போலீசாரும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஐஜி பொறுப்பு கார்த்திகேயன், டிஐஜி சரவணன் சுந்தர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார் உள்ளிட்டோர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டனர்.

மேலும் இரண்டு டிஎஸ்பிக்கள், இரண்டு காவல் ஆய்வாளர், இரண்டு உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 14 பேர் கொண்ட 4 தனிப்படைகள் அமைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

முதல்வர் அறிவிப்பு

திருச்சியில் திருடர்களை விரட்டி பிடிக்க முயன்றபோது வெட்டிக் கொல்லப்பட்ட உதவி ஆய்வாளர் பூமிநாதன் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :