You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கமலா ஹாரிஸ்: அமெரிக்க அதிபர் அதிகாரத்தைப் பெற்ற முதல் பெண்; ஜோ பைடன் உடல் நலப் பரிசோதனையால் வாய்ப்பு
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், அமெரிக்க வரலாற்றிலேயே அதிபர் அதிகாரத்தைப் பெற்ற முதல் பெண் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வழக்கமான உடல்நலம் சார்ந்த மருத்துவ பரிசோதனையை மேற்கொண்ட போது, சிறிது நேரம் தன் அதிபர் அதிகாரத்தை, கமலா ஹாரிஸுக்கு வழங்கினார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 57 வயதான கமலா ஹாரிஸ், வெள்ளிக்கிழமை (நவம்பர் 19) 85 நிமிடங்களுக்கு அதிபர் பொறுப்பில் இருந்தார். அப்போது ஜோ பைடனுக்கு கொலோனோஸ்கோபி பரிசோதனைக்காக மயக்க மருந்து செலுத்தப்பட்டது.
சிகிச்சைக்குப் பிறகு அதிபர் ஜோ பைடன் ஆரோக்கியமாக இருப்பதாகவும், அவர் தனது கடமைகளைச் செய்யும் திறனோடு இருக்கிறார் என்றும் பைடனின் மருத்துவர் ஒரு அறிக்கையை வெளியிட்டார்.
ஜோ பைடனின் 79ஆவது பிறந்த நாளன்று மாலை இந்த மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பொறுப்பிலிருந்த கமலா ஹாரிஸ், வெள்ளை மாளிகையின் மேற்கு வளாகத்தில் உள்ள தன் அலுவலகத்திலிருந்து கொண்டே, தன் பணிகளை மேற்கொண்டதாக அதிகாரிகள் கூறினர்.
கமலா ஹாரிஸ்தான் முதல் கருப்பின மற்றும் தெற்கு ஆசிய அமெரிக்க துணை அதிபர். அவர்தான் அமெரிக்க வரலாற்றின் முதல் பெண் துணை அதிபர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்காலிகமாக அதிபரின் அதிகாரங்கள் பரிமாற்றப்படுவது இதற்கு முன் அமெரிக்காவில் நடந்திருக்கிறது, அது தொடர்பான செயல்முறைகளும் அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன என வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலர் ஜென் சாகி கூறினார்.
"முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ் 2002 மற்றும் 2007 ஆகிய ஆண்டுகளில் இது போல அதிகாரத்தை பரிமாற்றம் செய்துள்ளார்" என ஜென் சாகி ஒரு செய்தி அறிக்கையில் குறிப்பிட்டார்.
மருத்துவ பரிசோதனை எல்லாம் முடித்துக் கொண்டு ஜோ பைடன் சிரித்த முகத்தோடு வெள்ளை மாளிகைக்குத் திரும்பினார். "நான் நன்றாக இருக்கிறேன்" என்று கூறினார்.
"78 வயதான ஜோ பைடன் ஆரோக்கியத்தோடு இருப்பதாகவும், அவர் தன் அதிபர் பணிகளை சிறப்பாக செய்யும் திறனோடு இருக்கிறார்" என்றும் அதிபரின் மருத்துவர் கெவின் ஓ கானர் கூறினார்.
ஜோ பைடனுக்கு செய்யப்பட்ட கொலோனோஸ்கோபியில், அவர் குடலில் ஒரு சிறு திசு வளர்ச்சி இருப்பதை கண்டுபிடித்து எளிதில் அகற்றிவிட்டதாக மருத்துவர் கூறினார். மேலும் பைடனின் நடை கொஞ்சம் விரைத்திருப்பதாகவும், அதற்கு முதுகெலும்பு தேய்மானம் காரணமென்றும் கூறினார்.
அமெரிக்க அரசியல் வரலாற்றிலேயே மிக வயதான அதிபராக பொறுப்பேற்றவர் ஜோ பைடன்தான். அவர் கடந்த 2019 டிசம்பரில் முழு உடல்பரிசோதனை செய்து கொண்டார்.
அப்போதும், அவர் நல்ல உடல் நலத்தோடு இருப்பதாகவும், அதிபர் பொறுப்பில் பணியாற்றும் ஆரோக்கியத்தோடு இருப்பதாகவும் அவரது மருத்துவ அறிக்கைகள் கூறின.
பிற செய்திகள்:
- வேளாண் சட்டங்கள் விஷயத்தில் மோதி அரசின் பின்வாங்கல் சாணக்கிய தந்திரமா?
- இன்னும் காடுகளை அழித்துக்கொண்டிருக்கும் நாடுகள் எவை?
- கள்ளக்குறிச்சியில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட குறவர்களுக்கு நடந்தது என்ன?
- தூத்துக்குடியில் இரவு நேரங்களில் காரில் சென்று ஆடு திருடி வந்த கும்பல் சிக்கியது எப்படி?
- “வேளாண் சட்டங்கள் திரும்ப பெறப்பட்டதற்கு காரணம் பஞ்சாப், உ.பி மாநில தேர்தல்கள்தான்”: பத்திரிகையாளர் ஏ.எஸ். பன்னீர்செல்வம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்