மலையாளத் திரைப்படங்கள் தமிழ்நாட்டில் அதிக வரவேற்பை பெறுவது ஏன்? தமிழ் சினிமாவுக்கு ஆபத்தா?

பட மூலாதாரம், Twitter/DisneyplusHSMal
- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
ஓடிடி தளங்களின் வருகைக்குப் பிறகு, மலையாளத்தில் வெளியாகும் திரைப்படங்களுக்கான வரவேற்பு வெகுவாக அதிகரித்திருக்கிறது. இதற்கு என்ன காரணம்? இது தமிழ் சினிமாவில் தாக்கத்தை ஏற்படுத்துமா?
ஓடிடி தளங்களின் வளர்ச்சி

பட மூலாதாரம், Getty Images
ஓடிடி தளங்கள் அறிமுகமான கடந்த 5-6 ஆண்டுகளில் தமிழ்நாடு சினிமா ரசிகர்களின் பார்வையில் பெரும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. உலகம் முழுவதும் வெளியாகும் திரைப்படங்கள் ரசிகர்களுக்குப் பார்க்கக் கிடைப்பதால், அவர் தமிழக ரசிகர்களின் ரசனையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
குறிப்பாக கடந்த சில ஆண்டுகளில் ஓடிடி தளங்களில் வெளியான மலையாள திரைப்படங்கள், பெரும் வரவேற்பைப் பெற்றிருப்பதோடு, அந்தப் படங்களுக்கான சந்தைகளையும் விரிவாக்கியுள்ளன.
2015ஆம் ஆண்டில் இந்தியாவில் ஹாட் ஸ்டார் தனது ஸ்ட்ரீமிங் சேவைகளைத் துவங்கியது. இதற்குப் பிறகு அமேசான் பிரைம் 2016ஆம் ஆண்டின் இறுதியில் அறிமுகமானது.
இதே காலகட்டத்திலேயே நெட்ஃப்ளிக்சும் இந்தியாவில் தனது சேவைகளைத் துவங்கியது. பிறகு படிப்படியாக, பல ஓடிடி தளங்கள் இந்தியாவை குறிவைத்துக் களமிறங்கின. உள்ளூர் தொலைக்காட்சி நிறுவனங்கள், தயாரிப்பு நிறுவனங்களும் ஓடிடி சேவைகளைத் துவங்கின.
தற்போது இந்தியாவில் 20க்கும் மேற்பட்ட ஓடிடி தளங்கள் செயல்பட்டு வரும் நிலையில், அவற்றில் பத்துக்கும் மேற்பட்ட தளங்கள் முன்னணி தளங்களாக இருக்கின்றன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் உள்ள திரைப்படங்களும் தொடர்களுமே விரும்பிப் பார்க்கப்படுகின்றன.
இதில் தமிழைப் பொறுத்தவரை, திரையரங்குகளில் வெளியான திரைப்படங்களே சில நாட்கள் கழித்து ஓடிடிகளில் வெளியாகின்றன. அல்லது, பல்வேறு மொழிகளில் வெளியாகும் திரைப்படங்களும் வெப் தொடர்களும் தமிழிலும் வெளியாகின்றன. தமிழ் ஓடிடி ரசிகர்களுக்கென தனித்துவமிக்க படைப்புகளவெகு அரிதாகவே வெளியாகின்றன.
இந்தப் பின்னணியில்தான் மலையாள திரைப்படங்கள் தமிழ் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றிருக்கின்றன. மலையாள படங்களும்கூட, கேரளாவில் திரையரங்குகளில் வெளியான சில நாட்கள் கழித்தே ஓடிடி தளங்களுக்கு வருகின்றன. ஆனால், அவை தமிழ் ரசிகர்களைப் பொறுத்தவரை புதிய திரைப்படங்களைப் போலவே எதிர்கொள்ளப்படுகின்றன.

பட மூலாதாரம், Twitter/DisneyplusHSMal
மலையாள சினிமாவில் ஓடிடியின் தாக்கம்
மிகச் சிறிய கதை, மிகச் சிறந்த திரைக்கதை, நல்ல நடிகர்கள் ஆகியவற்றோடு உருவாக்கப்பட்டு, மலையாளத்தில் கடந்த சில ஆண்டுகளில் வெளியான பல திரைப்படங்கள் தமிழில் வெகுவாக வரவேற்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் ஓடிடி தளங்கள் பிரபலமாக ஆரம்பித்த 2016ஆம் ஆண்டிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மலையாள படங்கள் குறித்த கவனிப்பும் அதற்கான ஆதரவும் தொடர்ந்து அதிகரித்து வந்திருக்கிறது.
- 2016இல் வெளியான படங்கள்: மகேஷிண்ட பிரதிகாரம், கம்மாட்டி பாடம், ஒளிவுதிவசத்துக் களி, புலி முருகன்
- 2017இல் வெளியான படங்கள்: அங்கமாலி டைரீஸ், டேக் ஆஃப், சகாவு, காம்ரேட் இன் அமெரிக்கா, தொண்டிமுதலும் த்ரிக்ஷாஷியும்
- 2018இல் வெளியான படங்கள்: கார்பன், காயாகுளம் கொச்சுண்ணி, கும்ப்ளாங்கி நைட்ஸ், ஒரு அடார் லவ், லூசிஃபர், உயரே, வைரஸ், லூகா, இஷாக்கிண்ட இதிகாசம், ஜல்லிக்கட்டு, ஆண்ட்ராய்டு குஞ்சப்பன், டிரைவிங் லைசன்ஸ்
- 2020இல் வெளிவந்த படங்கள்: பிக் பிரதர், ஷைலக், அய்யப்பனும் கோஷியும், ட்ரான்ஸ், ஃபாரன்சிக், கபேலா
- 2021இல் வெளிவந்த படங்கள்: மரக்கர்: தி லயன் ஆஃப் தி அரேபியன் ஸீ, கிரேட் இந்தியன் கிச்சன், த்ரிஷ்யம் 2, தி ப்ரீஸ்ட், இருள், ஜோஜி, நாயாட்டு, நிழல், கோல்ட் கேஸ், மாலிக், சுழல், குருதி, குரூப், சுருளி, மின்னல் முரளி
- 2022இல் வெளிவந்த படங்கள்: ஹ்ருதயம், ப்ரோ டாடி, ஆராட்டு, பீஷ்ம பர்வம், நாரதன், பட, சல்யூட், 21 கிராம்ஸ், ஜன கன மன, சிபிஐ - 5: தி பிரெய்ன், புழு, 12த் மேன், குட்டாவும் சிக்ஷயும், இன்னாளே வரே, மலையான் குஞ்சு, 19 (1)(A), தள்ளுமாலா, தீர்ப்பு, பால்து ஜான்வர், சுந்தரி கார்டன்ஸ், ஒரு தெக்கன் தல்லு கேஸ், பத்தொன்பதாம் நூட்டாண்டு, இனி உத்தரம், ரோர்ஷ்ஷா, மான்ஸ்டர், படவேட்டு, ஜெயஜெயஜெயஜெயஹே, கூமன், முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ், கோல்ட், சவுதி வேலக்கா, அறியிப்பு, காப்பா
இப்படி கடந்த ஏழு ஆண்டுகளில் மலையாள சினிமாவில் வெளியான 70க்கும் மேற்பட்ட படங்கள் தமிழ்நாட்டில் கவனிக்கப்பட்டிருக்கின்றன.
தமிழ்நாட்டில் கிடைத்த வரவேற்பு

பட மூலாதாரம், Facebook/Alphonse Puthren
2016ஆம் ஆண்டில் சுமார் நான்கைந்து மலையாள திரைப்படங்களே கவனிக்கப்பட்ட நிலையில், அதற்குப் பிந்தைய ஆறு ஆண்டுகளில் மலையாள படங்கள் மீதான ஆர்வம் வெகுவாக அதிகரித்திருக்கிறது. 2022ஆம் ஆண்டில் மட்டும் 35க்கும் மேற்பட்ட படங்கள் தமிழில் கொண்டாடப்பட்டிருக்கின்றன.
இதில் ஒரு சில படங்களைத் தவிர மற்ற படங்கள் அனைத்தும் கேரளாவில் திரையரங்குகளில் வெளியான பிறகு, ஓடிடிகளில் வெளியானவை என்றாலும், அப்படி வெளியாகும்போது தமிழ் சமூக ஊடகங்களில் குறிப்பிடத்தக்க அளவில் இந்தப் படங்கள் பேசப்படுகின்றன. அது தவிர, நேரடியாக ஓடிடிகளில் வெளியாகும் படங்களுக்கும் நல்ல வரவேற்பு இருக்கிறது.
சான்றாக, த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் நேரடியாக பிரைம் வீடியோவில் நள்ளிரவு 12 மணியளவில் வெளியானபோது, ரசிகர்கள் காத்திருந்து அந்தப் படத்தைப் பார்த்தார்கள். அடுத்த நாள் முழுக்க ட்விட்டரில் அந்தப் படமே பேசுபொருளாக இருந்தது.
"மலையாளத் திரைப்படங்கள் ஓடிடிகளில் வெற்றிபெற முக்கியமான காரணம் இருக்கிறது. தமிழ் சினிமாவை பொறுத்தவரை, கதை - திரைக்கதை விவாதத்தின்போதே, ஓபனிங், ஹீரோவின் அறிமுகம், இன்டர்வெல் ப்ளாக், சண்டைகளுக்கான லீட், பாடல்களுக்கான லீட் என்றுதான் விவாதிப்பார்கள். இதனால், நல்ல கதை இருந்தாலும்கூட, இப்படிப்பட்ட திரைக்கதை அமைப்பால் வீணாகிவிடும்.
ஆனால், ஓடிடியின் வருகைக்கு முன்பேகூட, மலையாளத்தில் இப்படியெல்லாம் இருக்காது. இயல்பாக ஓரிடத்தில் இடைவேளை அமையும். கோவிட் காலகட்டத்தில் ஓடிடிகள் பிரபலமாக ஆரம்பித்தபோது, அதன் தன்மையை மலையாள இயக்குநர்கள் சிறப்பாகப் புரிந்துகொண்டார்கள்.

பட மூலாதாரம், Facebook/Fahadh Faasil
ஓடிடிகளுக்கு 'இடைவேளைக்கான திருப்பம்' ஏதும் தேவையில்லை. அதை மனதில் கொண்டு ஒரே சீராக படம் நகரும் வகையில் கதைகளை அமைத்தார்கள். ஆனால், தமிழில் நேரடியாக ஓடிடிகளுக்கு என படம் எடுத்தால்கூட திரையரங்குகளுக்கு படம் எடுப்பதைப் போலத்தான் எடுக்கிறார்கள். ஆகவேதான் ஓடிடிகளில் மலையாள படங்களுக்கு ஆதரவு இருக்கிறது," என்கிறார் சினிமா விமர்சகர் பிஸ்மி.
திரையரங்குகளில் வெளியாகும் படங்களுக்கும் ஓடிடிகளில் வெளியாகும் படங்களுக்கும் இடையிலான இடைவெளியை மலையாளத் திரையுலகம் சரியாகப் புரிந்துகொண்டிருக்கிறது என்கிறார் இயக்குநர் கேபிள் சங்கர்.
"நேரடி ஓடிடி திரைப்படங்களுக்கும் திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களுக்கும் முக்கியமான வித்தியாசம் உண்டு. அதாவது, நிஜ வாழ்க்கையில் இல்லாத அளவு பிரம்மாண்டத்தைக் காண்பிக்கக்கூடிய படங்களே இப்போது திரையரங்குகளுக்கான படங்களாக மாறிவிட்டன.
இயல்பான கதையைக் கொண்ட படங்கள் ஓடிடிகளில் வெளியாகின்றன. மலையாளத் திரைப்படங்களில் கதைகள் தனித்துவத்தோடு, இயல்பாக இருக்கும் என்பதால், அவற்றுக்கு எப்போதுமே தென்னிந்தியா முழுக்க வரவேற்பு உண்டு. இந்த ஓடிடி காலகட்டத்தில் அதற்கு வரவேற்பு அதிகரித்திருக்கிறது," என்கிறார் கேபிள் சங்கர்.
மலையாள திரையுலகைப் பொறுத்தவரை, கதைக்குத் தேவையான அளவுக்கே செலவு செய்வார்கள் என்பதால், சரியான விலையில் ஒரு படத்தை அவர்களால் ஓடிடிக்கு விற்க முடியும்.
"பெரிய நடிகர் நடித்த படத்தைக்கூட, நேரடியாக அவர்களால் ஓடிடியில் ரிலீஸ் செய்ய முடிவது இதனால்தான். ஆனால், தமிழில் தேவையே இல்லாத செலவுகளைச் செய்து படத்தின் பட்ஜெட்டை அதிகரித்திருப்பார்கள். அதை வாங்குவதைவிட, மலையாள படங்களை வாங்கி வெளியிடுவது ஓடிடிகளுக்கும் வசதியாக இருக்கிறது," என்கிறார் பிஸ்மி.
ஓடிடிகள் வருவதற்கு முன்பாக, மலையாளத் திரைப்படங்கள் தமிழ்நாட்டின் சென்னை போன்ற பெரு நகரங்களில் மிகக் குறைந்த திரையரங்குகளில் மட்டும் வெளியாகும். குறிப்பாக 'ஏ' சென்டர் என்று சொல்லக்கூடிய இடங்களில் மட்டும் வெளியாகும்.
"ஆனால், ஓடிடிகள் மலையாளத் திரைப்படங்களைத் தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் கொண்டுபோய் சேர்த்துள்ளன. இது மக்களின் ரசனையில் மாற்றத்தை ஏற்படுத்தும்," என்கிறார் கேபிள் சங்கர்.
மலையாளத்தில் நன்றாக ஓடிய திரைப்படங்கள் இங்கு ரசிக்கப்படாமல் போவதும் அங்கே கடுமையாக விமர்சிக்கப்பட்ட மலையாள திரைப்படங்கள் இங்கே பெரும் வரவேற்பைப் பெறுவதும் உண்டு என்பதையும் சுட்டிக்காட்டுகிறார் சங்கர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












