காதுக்குள் 'இயர் பட்ஸ்' இருந்தது தெரியாமல் 5 ஆண்டுகளாக வலியோடு வாழ்ந்தவர்

தனது செவித்திறன் குறைந்து வருவதாக நினைத்துக்கொண்டிருந்த ஒருவரின் காதுக்குள் 5 ஆண்டுகளாக இயர்பட்ஸ் சிக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, தற்போது அது அகற்றப்பட்டுள்ளது.
பிரிட்டனின் டோர்செட் பகுதியின் வேமெளத்தைச் சேர்ந்தவர் வாலஸ் லீ.
இதுநாள்வரை இரைச்சல் மிக்க விமானத் துறையில் பணியாற்றியது அல்லது ரக்பி போட்டியின் போது ஏற்பட்ட பழைய காயம் தன்னுடைய செவித்திறன் குறைபாட்டிற்கு காரணமாக இருக்கலாம் என்று இவர் நினைத்துக் கொண்டிருந்தார்.
அண்மையில் அவர், உடலின் உட்பகுதியை வீட்டிலேயே பரிசோதிக்கும் எண்டோஸ்கோப் கருவியை வாங்கினார். அதன் மூலம் பரிசோதித்த போது, காதுக்குள் வெள்ளை நிறத்திலான சிறிய பொருள் இருப்பதை கண்டறிந்தார். இதையடுத்து, மருத்துவரைச் சந்தித்தார் வாலஸ் லீ .
அதன் பிறகு காதுக்குள் சிக்கியிருந்த பொருள் இயர்பட்ஸ் என்று கண்டறியப்பட்டு அது அகற்றப்பட்டது. இதன் பிறகு தனக்கு உடனடி நிவாரணம் கிடைத்ததாகவும் மகிழ்ச்சியளிப்பதாகவும் கூறுகிறார் வாலஸ்.
இங்கிலாந்து கடற்படையின் முன்னாள் வீரரான இவர், விமான பயணத்தின் போது இது சிக்கியிருக்கலாம் என்று நம்புகிறார்.
“நான் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியாவில் உள்ள என் குடும்பத்தை சந்திக்கச் சென்றபோது, விமானத்தின் சத்தத்தைப் பொறுத்து வெவ்வேறு அளவுகளில் வைக்கக்கூடிய இந்த சிறிய இயர்பட்ஸ்களை வாங்கினேன். அதில் ஒன்று காதிற்குள் சிக்கி அங்கேயே இருந்துள்ளது" என்று வாலஸ் லீ கூறினார்.

பட மூலாதாரம், WALLACE LEE
தன்னுடைய மனைவிக்கு இருப்பதைப் போல தனக்கும் செவித்திறன் குறைவதைக் கவனித்த அவர், காது கேட்கும் திறனை இழந்து விடுவோமோ என்று அஞ்சியுள்ளார்.
இந்த அடைப்பை வெற்றிகரமாக நீக்கிய காது, மூக்கு மற்றும் தொண்டை (ENT) அறுவை சிகிச்சை நிபுணர் ஆச்சரியமடைந்ததாக வாலஸ் லீ கூறினார்.
“மருத்துவர் அதை வெளியே எடுக்க முயற்சித்த போது, நீண்ட காலமாக காது மெழுகோடு இருந்ததால் அது அசையக் கூடவில்லை. எனவே சிறிய அளவிலான முள் கருவி கொண்டு அவர் முயற்சித்த போது அது வெளியே வந்தது” என்று வாலஸ் லீ கூறினார்.
உடனடியாக அந்த அறையில் அனைத்து சத்தங்களையும் தன்னால் சிறப்பாக கேட்க முடிந்ததாக கூறிய அவர், மீண்டும் முதல்முறை சரியாக கேட்டது போல நிம்மதியாக இருந்ததாகக் கூறுகிறார்.
காது, மூக்கு மற்றும் தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர் நீல் டி சொய்சா பிபிசியிடம் கூறுகையில், “வீட்டில் உங்கள் காதுகளை பரிசோதிப்பது பெரிய அளவில் தீங்கு விளைவிக்க வாய்ப்பில்லை. எனினும், காதுக்குள் சிக்கியிருக்கும் பொருட்களை மருத்துவர்கள் உதவியின்றி நீக்க முயற்சிப்பது தொற்று ஏற்பட அல்லது மோசமான விளைவுகளுக்கு வழிவகுக்கும்” என்கிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













