குழந்தைகள் இடையே கிட்டப்பார்வை குறைபாடு அதிகரிக்கிறதா?

கிட்டப்பார்வை குறைபாடு

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஜெசிகா முட்டிட்
    • பதவி, .

குழந்தைகள் மத்தியில் கிட்டப்பார்வை குறைபாடு விகிதம் அதிகரித்து வருவது உலகம் முழுவதும் பெற்றோரையும், மருத்துவர்களையும் எச்சரிக்கும் வகையில் உள்ளது. இந்த நிலைமையை நாம் மாற்றமுடியுமா?

1980களின் பிற்பகுதியிலும், 1990களிலும் சிங்கப்பூர் மக்கள் தங்கள் குழந்தைகளிடம் கவலைப்படத்தக்க ஒரு மாற்றம் தென்படுவதை கவனிக்கத் தொடங்கினர். பொதுவாக, சிறிய, வெப்பமண்டல தேசமான அங்கு வசித்து வந்த மக்கள், அந்த சமயத்தில் பெரும் அளவில் முன்னேற்றம் கண்டனர். கல்விக்கான வாய்ப்புகள் அதிகரித்தன. வளர்ச்சிக்கான வாயில்கள் திறந்திருந்தன. ஆனால், இதற்கு எதிர்மறையான போக்கும் அங்கு ஏற்பட்டது. அதிக குழந்தைகள் கிட்டப்பார்வை கொண்டவர்களாக மாறினர்.

கண்பார்வை குறைபாடு தேசிய அளவில் ஏற்பட்டதை யாராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. மையோபியா எனப்படும் கிட்டப்பார்வை குறைபாடு தொடர்ந்து அதிகரித்து வந்தது. இன்றைக்கு சிங்கப்பூரில் 18 வயதுக்கு மேற்பட்ட இளம் வயதினரிடம் 80 சதவிதம் அளவுக்கு கிட்டப்பார்வை குறைபாடு அதிகரித்திருக்கிறது. "உலகின் கிட்டப்பார்வை தலைநகராக" சிங்கப்பூர் உள்ளது.

"இந்த விஷயத்தில் 20 ஆண்டுகளாக கவனம் செலுத்தி வருகிறோம். ஆகவே நாங்கள் உணர்வற்ற நிலையில் இருக்கின்றோம்," என சொல்கிறார் சிங்கப்பூர் தேசிய கண் மையத்தின் இணை பேராசிரியரும் மூத்த மருத்துவ ஆலோசகருமான ஆட்ரி சியா . "ஏறக்குறைய சிங்கப்பூரில் ஒவ்வொருவரும் கிட்டப்பார்வை குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்," என்றும் அவர் தெரிவித்தார்.

சிங்கப்பூரில் என்ன நடந்ததோ, அதுதான் இப்போது உலகம் முழுவதும் நடந்து கொண்டிருக்கிறது. வெளித்தோற்றத்துக்கு உலக நாடுகள் முழுவதும் வித்தியாசமான வாழ்க்கை சூழலைக் கொண்டவைதான். ராக்கெட் வேகத்தில் அதிகரிக்கும் கிட்டப்பார்வை குறைபாடு என்பது நாடுகளுக்கு அப்பாற்பட்டு அனைத்து நாடுகளிலும் ஆச்சர்யமூட்டும் ஒற்றுமையாக கவனிக்கத்தக்க நிகழ்வாக இருக்கிறது.

அமெரிக்காவில் 18 வயதுக்கு மேற்பட்டோரில் 40 சதவிகிதம் பேர் கிட்டப்பார்வை குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 1971ம் ஆண்டில் 25 சதவிகிதமாக இருந்தது. இதே விகிதத்தில்தான் பிரிட்டனிலும் அதிகரித்திருக்கிறது. ஆனால், இந்த சதவிகிதத்துடன் ஒப்பிடும்போது சீனா, தைவான், தென்கொரியாவில் பதின்ம வயதினர் மற்றும் இளைஞர்களின் கிட்டப்பார்வை பாதிப்பு அதிர்ச்சியளிக்கக்கூடியதாக இருக்கிறது. இந்த நாடுகளின் பாதிப்பு விகிதம் 84 சதவிகிதத்துக்கும் 97 சதவிகிதத்துக்கும் இடையே உள்ளது. இப்போதைய சூழல் தொடர்ந்தால், 2050ம் ஆண்டுக்குள் உலக மக்கள் தொகையில் பாதிபேர் கிட்டப்பார்வை குறைபாடு உள்ளவர்களாக இருப்பார்கள். இந்த பிரச்னை முன் எப்போதையும் விட அதிக விகிதத்தில் பரவி வருகிறது.

சீனாவில் குழந்தைகள் மத்தியில் கிட்டப்பார்வைக் குறைபாடு வேகமாக அதிகரித்து வருகிறது. பள்ளிக்குழந்தைகள் மத்தியில் 76-90 சதவிகிதம் வரை அதிகரித்திருக்கிறது. "இது மிக வேகமாக அதிகரித்து வருகிறது," என்கிறார் சியா.

உலகின் கிட்டப்பார்வை குறைபாடு முக்கியமான பிரச்னையாக முதலில் கருதப்படவில்லை. எனினும், தூரத்தில் இருக்கும் பொருளை பார்ப்பதற்கு யாரேனும் சிரமப்பட்டால், நம்மிடம் இருக்கும் தீர்வு கண்ணாடி அணியுங்கள் என்பதாகும். ஆனால், கிட்டப்பார்வைக் குறைபாடு ஆபத்து இல்லாதது என்பது கிடையாது என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர். இது பார்வை குறைபாடு மற்றும் பார்வை பறிபோவதற்கான காரணமாகவும் இருக்கிறது என்றும் அவர்கள் சொல்கின்றனர்.

உதாரணமாக, குழந்தைகள் மத்தியில் இந்த பிரச்னையை கண்டறிவதற்கும் அதனை சரிசெய்வதற்கும் சிறிது காலம் ஆகலாம். இது பள்ளியில் அவர்களது கற்கும் திறனை பாதிக்கலாம், அன்றாட வாழ்க்கையின் மகிழ்ச்சியையும் பாதிக்கலாம். எதிர்காலத்தில் கண்களின் ஆரோக்கியத்தில் குறைபாடுகளுக்கு வித்திடலாம்.

கிட்டப்பார்வை குறைபாடு

பட மூலாதாரம், Getty Images

இன்னும் மோசமான சூழலில், பொதுவாக 8 முதல் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மத்தியில் கிட்டப்பார்வைக் குறைபாடு பாதிப்பை ஏற்படுத்தும். இளம் வயதில் குழந்தைகள் கிட்டப்பார்வை குறைபாட்டுக்கு உள்ளாவர். குழந்தைகளிடம் முன்கூட்டியே கிட்டப்பார்வைக் குறைபாடு ஏற்பட்டால், இளம் வயதில் அவர்கள் தீவிரமாக பாதிக்கப்படலாம். இறுதியில் கண்ணின் பல பகுதிகளில் அதாவது, கிளைகோமா, விழித்திரை விலகுதல், கண்புரை மற்றும் தீவிரமான பார்வைக்கோளாறு ஆகியவற்றால் பார்வைத்திறனுக்கு ஆபத்து ஏற்படலாம்.

உலகளாவிய கண்பார்வைகுறைபாடு விளக்குவது என்ன?

"மரபு ரீதியான காரணங்களின் பங்கு மிகவும் குறைவுதான். குடும்பத்தினர் யாருக்கேனும் கிட்டப்பார்வைக் குறைபாடு இருந்தால், குழந்தையிடமும் அதன் பாதிப்பு ஏற்படுவதற்கான அபாயம் அரிதானதுதான்," என்கிறார் பதிவு பெற்ற கண் மருத்துவர் மற்றும் இங்கிலாந்தின் பிராட்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் நீமா கோர்பானி-மொஜர்ராட்.

இந்த குறைபாட்டுக்கு வாழ்வியல் முறைகள் காரணமாக இருக்கின்றன. குறிப்பாக வெளியிடங்களில் நடமாடுவது குறைவது, படிப்பது போன்ற செயல்பாடுகள், நெருக்கமாக ஒரு பொருளை நீண்ட நேரமாக கவனமாக பார்த்தபடி இருத்தல் ஆகியவை இதற்கான காரணமாக இருக்கலாம். குழந்தைகளின் வாழ்க்கையில் ஏற்படும் நேர்மறையான கல்விச் செயல்பாடு, தற்செயலாக கிட்டப்பார்வை குறைபாட்டின் பரவலை தீவிரமாக்கியுள்ளது.

எனினும், கல்வி அதனளவில், உலகை கண்டறியும் உணர்வில், அறிவு மற்றும் திறன் ஆகியவற்றின் வழியே ஒருவருக்கு அதிகாரம் அளிக்கிறது. கல்வி கண்பார்வை பாதிக்கப்படுவதற்கு காரணமாக இது இருக்காது. மாறாக, கல்வி என்பது பல்வேறு நேர்மறையான, ஆரோக்கிய விளைவுகளை ஏற்படுத்துவதுடன் தொடர்புடையதாக இருக்கிறது. நவீன உலகில், குழந்தைகள் கல்வி கற்கும் வழியானது, வகுப்பறைகளில் நீண்ட நேரம் செலவழிப்பதாக இருக்கிறது. இதனால், அவர்களின் கண் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.

"கிட்டப்பார்வை குறைபாடு ஏற்படுவதற்கு காரணமாக கல்வி சுட்டிக்காட்டப்படுகிறது," என்கிறார் கோர்பானி-மொஜர்ராட். "கல்வி எப்படி காரணமாகிறது என்பது தெரியவில்லை. அதிக காலம் உள்ளறையில் படிப்பதற்கு செலவிடுவது காரணமாக இருக்கலாம். ஒவ்வொரு ஆண்டும் ஒரு வகுப்பு முடியும்போது, கிட்டப்பார்வை குறைபாடு ஏற்படுவதற்கான விகிதம் அதிகரிக்கிறது," என்கிறார்.

கல்வி முரண்பாடு

கோர்பானி-மொஜர்ராட் மற்றும் அவரது குழுவினரும் கல்வி கற்கும் காலம் நீள்வதற்கும் இந்தப் பிரச்சனைக்கும் தொடர்பு உள்ளதா என்று ஆராய்ந்தனர். பிரிட்டனில் 1970களில் பள்ளிப் படிப்பை முடிக்கும் வயது 15 ஆக இருந்து, 16 ஆக உயர்ந்தபோது இது பார்வைப் பிரச்சனையில் ஏற்படுத்திய தாக்கத்தை அவர்கள் ஆராய்ந்தனர். கூடுதலாக ஓராண்டு பள்ளியில் படித்தவர்களிடத்தில் கிட்டப்பார்வை குறைபாடு அதிகரித்ததை அவர்கள் பார்த்தனர். தற்போது பிரிட்டனில் பள்ளி முடிக்கும் வயது 18. இப்போது மீண்டும் கிட்டப்பார்வை குறைபாடு அதிகரிப்பதை புள்ளிவிவரம் காட்டுமா தெரியவில்லை," என்றார் அவர்.

ஆச்சர்யம் அளிக்கும் இந்த தொடர்பை புரிந்து கொள்ள, எப்படி கிட்டப்பார்வைக் குறைபாடு இந்த அளவு வரை உயர்ந்தது என்பதற்கு அதற்கு இடையே உள்ள தொடர்புகளை அடையாளம் காண இது உதவலாம். புதிதாக பிறக்கும் பெரும்பாலான குழந்தைகள் தூரப் பார்வையுடன் வாழ்க்கையை தொடங்குவர். அவர்களின் வாழ்க்கையில் முதல் ஆண்டில், கண் பார்வை இயற்கையாகவே சரியாகும். தூரப்பார்வை என்பது, அவர்களின் பார்வை ஒரு கட்டத்தில் ஏறக்குறைய சரியானதாக மாறுகிறது. எனினும், சில நிகழ்வுகளில் கண்கள் வளர்ச்சியடைவது நிற்காமல், கிட்டப்பார்வை குறைபாடு ஏற்படும். எனினும், சில நிகழ்வுகளில் கண்விழி வழக்கத்துக்கு மாறாக நீளமாக ஒரு குறிப்பிட்ட தூரத்தில் உள்ள பொருட்களை கண்ணாடி அணியாமலேயே பார்க்கக் கூடிய திறன் கிடைக்கும்.

"ஒவ்வொருவரும் வரையறுக்கப்பட்ட அளவு விழித்திரையை கொண்டிருப்பர். கண் தொடர்ந்து வளர்ந்தால், விழித்திரை மெல்லியதாகிவிடும். இதனால் விழித்திரை கிழியும் வாய்ப்புள்ளது" என்கிறார், கோர்பானி-மொஜர்ராட்.

வெளியே வராமல் உள் அறைக்குள்ளேயே இருக்கும்போது இயற்கை ஒளியை விடவும், அறைக்குள் உள்ள வெளிச்சம் வேறுபடுவதன் காரணமாக ஒருவேளை இந்த பிரச்னை அதிகரிப்பதாகத் தோன்றுகிறது.

சிங்கப்பூரில் சிறுவயது கிட்டப்பார்வைக் குறைபாடு குறித்து நீண்ட காலம் தொடர்ச்சியாக சில ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆராய்ச்சியில் ஈடுபட்ட வல்லுநர்கள் இதே போன்ற முடிவுக்குத்தான் வந்தனர்.

வெளியே வராமல் உள் அறைக்குள்ளேயே இருக்கும்போது இயற்கை ஒளியை விடவும், அறைக்குள் உள்ள வெளிச்சம் வேறுபடுவதன் காரணமாக ஒருவேளை இந்த பிரச்னை அதிகரிப்பதாகத் தோன்றுகிறது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வெளியே வராமல் உள் அறைக்குள்ளேயே இருக்கும்போது இயற்கை ஒளியை விடவும், அறைக்குள் உள்ள வெளிச்சம் வேறுபடுவதன் காரணமாக ஒருவேளை இந்த பிரச்னை அதிகரிப்பதாகத் தோன்றுகிறது.

"என்னுடைய தந்தை தலைமுறையை சேர்ந்தவர்கள் மீன்பிடித்தல் உள்ளிட்ட விஷயங்களில் நீண்டகாலம் வெளியிடங்களில் நேரத்தை செலவிட்டனர்," என்றார் சியா.

"ஆனால், அப்போது சிங்கப்பூரில் நகர மயமாதல் தொடங்கியது. கல்விசார் நடவடிக்கைகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு திறம்பட ஊக்குவிக்கப்பட்டன. தங்கள் பிள்ளைகள் நல்ல பள்ளியில் படிக்க வேண்டும் என்றும் உயர்கல்வி படிக்க வேண்டும் என்றும் பெற்றோர் விரும்பினர். எனவே, படிப்பது நன்மை பயக்கும் ஒன்றாக இருப்பதால் அதிகம் படிப்பதற்காக அனைத்து குழந்தைகளும் வகுப்பறைக்குள் இருக்க வேண்டும் என்பதை நோக்கிச் சென்றது," என்றார்.

இது முரணாக இருக்கிறது. எனினும், படிப்பது குழந்தைகளுக்கு நல்லது. கல்வி பொதுவாக குழந்தைகளின் நலனுக்கு முக்கியமானதாக இருக்கிறது. அதை அவர்கள் தவற விடுவது, நீண்டகாலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தக் காரணமாகி விடும்.

ஆனால், கல்வி கற்று சிறந்து விளங்குதல் என்பது வாழ்க்கையின் இதர அம்சங்களை, அதாவது கண் ஆரோக்கியத்தை தீர்மானிக்கக்கூடிய வெளியிடங்களில் நேரத்தை செலவிடுதல் ஆகியவற்றை விலக்கிவைப்பதாக இருக்கிறது என்கிறார், பெல்பாஸ்ட் குயின்ஸ் பல்கலைக்கழகத்தின் பொது சுகாதார மையத்தின் சர்வதேச கண் சுகாதாரத்துக்கான பேராசிரியர் நாதன் காங்டான்.

ஜப்பான், கொரியா, வியட்நாம், சீனா, ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் ஆகிய ஆகியவற்றில் கிட்டப்பார்வைக் குறைபாடு மிக அதிக விகிதத்தில் பாதித்திருக்கிறது என்று அவர் சுட்டிக்காட்டுகிறார். "ஆனால், அந்த நாடுகள் கல்வியில் பெரும் வெற்றி பெற்றிருக்கின்றன. இது ஒரு சிக்கலான கலாசார நிகழ்வாக இருக்கிறது," என்றார்.

சீனாவில் வகுப்பறைகளில் சோதனைகள் நடத்தப்படுகின்றன. வகுப்பறைக்கு வெளியே பொழுதுபோக்கு கற்றல் நடைபெற்றது. ஜாங்ஷான் கண் மருத்துவ மையத்தில் ஆசிரியர்கள், குழந்தைகளைக் கொண்டு 2017ம் ஆண்டு ஆராய்ச்சி நடைபெற்றது. அதில் காங்டானும் பங்கேற்றார். பாரம்பரியமான வகுப்பறைகளுடன் ஒப்பிடும்போது கண்ணாடி அறைகளைப் போன்ற வெளிச்சமான வகுப்பறைகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. எனினும் கோடை காலங்கள் மற்றும் அதிக வெப்பமான நாட்களில் ஒளியின் அடர்த்தி வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது. வழக்கமான வகுப்பறையை கட்டமைப்பதை விடவும், பிரகாசமான வகுப்பறையில் பகுதியளவுக்கு குளிரூட்டும் வழிமுறைகள் தேவைப்படுவதால் இருமடங்கு செலவு ஏற்பட்டது.

இது சிக்கலான பிரச்னை. ஒருவருடைய வருவாயும் இதில் காரணியாக இருக்கிறது.

கல்வியைப் போலவே, அதிக வருவாயும் பொதுவாக குழந்தைகளின் சிறந்த வசதி, வாய்ப்புகளுடன் தொடர்புடையதாக இருக்கிறது. ஆனால், கண் ஆரோக்கியம் என்று வரும்போது அவ்வாறு இருப்பதில்லை. மாறாக, கிட்டப்பார்வை என்பது உயர்ந்த சமூக பொருளாதார நிலையுடன் தொடர்புடையதாக இருக்கிறது.

"பணக்காரராக நாம் பல விஷயங்களை பெற்றோம். ஆகையால் (குழந்தைகள்) அவர்கள் மேலும் விஷயங்களை பெற வேண்டும் என்பதற்காக எப்போதும் வெளியிடங்களுக்குப் போகாமல் நமது குழந்தைகளை வீட்டுக்கு உள்ளேயே நாம் நன்றாக பாதுகாக்கின்றோம். அவர்கள் பியானோ வாசிக்கின்றனர். சாக்ஸபோன் கற்றுக் கொள்கின்றனர். தொலைக்காட்சி உள்ளிட்ட இதர விஷயங்களையும் பார்க்கின்றனர்" என்கிறார் காங்டன்.

கற்றலின் தாக்கம்

குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளில் கிட்டப்பார்வை குறைபாடு விகிதம் குறைவாக உள்ளது. வங்கதேசம், இந்தியாவில் நடத்தப்பட்ட மாதிரி ஆய்வுகளில் 18 வயதுக்கு மேற்பட்டோரிடம் கிட்டப்பார்வை அளவு 20-30 சதவிகிதம் ஆக இருக்கிறது. ஆனால், இது மாறி வருகிறது. ஆப்பிரிக்காவில் எடுத்துக்காட்டுக்கு ஒப்பிட்டு பார்க்கையில் கிட்டப்பார்வைக் குறைபாடு அவ்வளவாக இல்லை. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் குழந்தைப் பருவ கிட்டப்பார்வை குறைபாடு மிக வேகமான விகிதத்தில் அதிகரிக்கிறது. மேலும், குறைந்த வருவாய் உள்ள நாடுகளில் குழந்தைகளிடம் நோய்கண்டறிந்து கிட்டப்பார்வையை சரி செய்வதற்கான வசதிகள் குறைவாக இருக்கலாம்.

இது, அவர்களின் வாழ்க்கையிலும், கல்வியிலும் பெரும் விளைவை ஏற்படுத்தலாம். ஆப்பிரிக்காவில் சில சமூகத்தினரிடம் கண் கண்ணாடிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்று தெரியவருகிறது. கண் சிகிச்சை வாய்ப்புகளும் குறைவாக இருக்கின்றன. முறையாக கண்களால் பார்க்க இயலவில்லை என்பது, ஆசிரியர்கள் கரும்பலகையில் என்ன எழுதியுள்ளனர் என்பதை குழந்தைகளால் பின்பற்ற இயலாத நிலையாகும். தவிர வழக்கமான இதர பள்ளி செயல்பாடுகளில் பங்கெடுப்பதும் இவர்களுக்கு கடினமாகவும் இருக்கும்.

இந்த நாடுகளில் கல்வி அறிவு விகிதம் அதிகரித்திருப்பது வரவேற்கக்கூடிய முன்னேற்றம். எனினும் கண் பரிசோதனை, கண் கண்ணாடிகள் வழங்குதல் போன்ற பெரும் முயற்சிகள் இல்லாவிடில் இந்த பிரச்னை மேலும் அதிகரிக்கும் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

"இந்தியா போன்ற நாடுகளில் குழந்தைகள் பள்ளிச் செல்வது அதிகரித்திருக்கிறது. எனவே, கிட்டப்பார்வை குறைபாடு விகிதம் அதிகரிக்கும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்," என்கிறார் காங்டான். "குழந்தைகள் பள்ளி வகுப்பறையில் நீண்ட நேரம் செலவழித்தால், அவர்கள் படிப்பதற்கு அதிக நேரம் செலவிடுவார்கள். வெளி இடங்களில் குறைவான நேரமே செலவிடுவார்கள்," என்றார்.

எனினும், பள்ளி நேரம் மட்டுமே பிரச்னைக்கான மூலக்காரணமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை கோவிட்-19 முழு ஊரடங்குகள் வெளிப்படுத்தின. வீட்டுக்கு உள்ளேயே இருப்பது போல இது தோன்றுகிறது. முழு ஊரடங்கின் போது பள்ளிகள் உலகம் முழுவதும் மூடப்பட்டிருந்தன. ஆனால், குழந்தைகளின் கண்களின் ஆரோக்கியம் மேலும் மோசமானது. பொதுவாக ஊரடங்கில் குழந்தைகள் வீட்டுக்குள்ளேயே இருந்தனர். இதர வழியிலான கற்றல், மற்றும் பொழுது போக்கு இல்லாதபோது ஆன்லைன் வகுப்புகளுக்காகவோ அல்லது தொலைக்காட்சி பார்ப்பதற்காகவோ அவர்கள் வெண் திரைகளை பார்த்தபடி இருந்தனர்.

ஊரடங்கு விளைவு

ஊரடங்கு விளைவுகளை பொறுத்தவரையில், நான்கு முதல் ஆறு வயதுள்ள குழந்தைகள் குறித்து சியா கவலை கொள்கிறார். "கோவிட்-19 தொற்றின் காரணமாக குழந்தைகள் வீட்டுக்குள்ளேயே நிறைய நேரம் செலவிட்டதால், கிட்டப்பார்வை குறைபாடு விகிதம் அதிகரிக்குமோ என்று நாங்கள் கவலைப்பட்டோம்," என கூறும் சியா, "இது குறித்து கண்டறிய எங்களுடைய தரவுகளுக்காக காத்திருக்கிறோம்," என்று தெரிவித்தார்.

ஊரடங்குகள், இளம் சிறார்களின் கண் ஆரோக்கியத்தில் உண்மையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன என்பதை சீனாவிலிருந்து வரும் தரவுகள் தெரிவிக்கின்றன. குழந்தைகள் மத்தியிலான கிட்டப்பார்வை விகிதம் குறித்த ஓர் ஒப்பீட்டு ஆராய்ச்சியில், வருடாந்திர பரிசோதனைகள் நடத்தப்பட்டன. பெருந்தொற்று காலத்துக்கு முன்பு அதாவது 2015 மற்றும் 2019ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் 6 வயது குழந்தைகளிடம் கிட்டப்பார்வை விகிதம் 5.7 சதவிகிதமாக அதிகரித்ததாக இதில் மதிப்பிடப்பட்டது. 2020ம் ஆண்டில் வீட்டுக்குள் முடங்கியிருந்த ஐந்து மாதங்களுக்குப் பிறகு அதாவது ஜூன் மாதம் அதே வயதுடைய குழந்தைகளின் கண்பார்வையை ஆராச்சியாளர்கள் அளவிட்டபோது இந்த விகிதம் 21.5 சதவிகிதம் அதிகரித்தது," என மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் தொற்றுநோயியல் மற்றும் கண் மருத்துவம், பார்வை அறிவியல் பேராசிரியரும், ஆராய்ச்சியின் ஆசிரியர்களில் ஒருவருமான டேவிட் சி.மஸ்ச் கூறினார்.

கிட்டப்பார்வை குறைபாடு

பட மூலாதாரம், Getty Images

ஆய்வாளர்கள் இந்த விளைவை தனிமைப்படுத்தலின்போதான கிட்டப்பார்வை குறைபாடு என்று குறிப்பிடுகின்றனர். அதாவது, ஊரடங்கால் தூண்டப்பட்ட கிட்டப்பார்வை குறைபாடு.

ஊரடங்கு காரணமாக, இதற்கு முன்பு கிட்டப்பார்வை குறைபாட்டால் அதிகம் பாதிக்கப்படாத நாடுகளில் கூட இப்பிரச்னை கவலைக்குரியதாக மாறியது. பெருந்தொற்று காலத்துக்கு முன்பு பொதுவாக குழந்தைகள் வெளியிடங்களில் ஓடி ஆடி விளையாடும் நாடுகளில் குறிப்பாக இது கண்டறியப்பட்டது. ஊரடங்கு முடக்கம் காரணமாக, தானாக இப்பிரச்னை அதிகரித்தது.

"வெளி இடங்களில் நடமாடும் வாழ்கை முறையை கொண்ட நாடுகளில் கூட பெருந்தொற்று ஊரடங்குகள் காரணமாக கிட்டப்பார்வை குறைபாடு விகிதம் தீவிரமாக அதிகரித்திருக்கலாம்," என சியா கூறினார். "சிங்கப்பூர் போன்ற நாடுகளில் எல்லாம் வெளியிடங்களில் அதிகமாக சுற்றுவதில்லை. எனவே, அந்நாட்டில் தொற்றுநோயால் ஏற்படும் மாற்றம் பெரியதாக இருக்காது," என்றார்.

கிட்டப்பார்வை குறைபாடு

பட மூலாதாரம், Getty Images

குழந்தைகளின் கண்பார்வையை பாதுகாத்தல்

இந்த பிரச்னையால், குழந்தைகளின் கண்பார்வையை பாதுகாக்க என்ன செய்ய முடியும் என்று பல பெற்றோர் சிந்திக்கத் தொடங்கலாம். கண் ஆரோக்கியம் என்பது சர்வதேச பிரச்னை என்பதில் இருந்து, பல நாடுகள் இதற்கும் கூட முக்கியத்துவம் கொடுக்கின்றன. எடுத்துக்காட்டாக, சீனாவில் பெரும் எண்ணிக்கையிலான தொழிற்சாலைகளில் பரவலான கிட்டப்பார்வை குறைபாடு காரணமாக தொழிலாளர்கள் பற்றாக்குறை நேரிடலாம் என்ற எச்சரிக்கையில் பல்வேறு உத்திகளை கடைபிடிக்கின்றனர்.

"சீனாவில் கிட்டப்பார்வை குறைபாடுகள் பாதிப்பின் நிலைமை மோசமடையாமல் தடுக்க பெரும்பாலான தீர்வுகள் முன்னெடுக்கப்பட்டன அல்லது பரிசோதிக்கப்பட்டன," என கோர்பானி-மொஜர்ராட் கூறினார்.

முடிவுகள் கலவையானவையாக இருந்தன. நீண்டகாலத்துக்கு கிட்டப்பார்வை குறைபாட்டை தடுப்பதற்கு குறைந்த செலவிலான கண் ஆரோக்கியத்தை அளிக்கும் கண்ணுக்கு பயிற்சி தரும் முறை போதுமானதாக இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. வாரம் தோறும் குறிப்பிட்ட எண்ணிக்கையில்தான் வீடியோ விளையாட்டுகளில் ஈடுபட வேண்டும் என சீனா வரம்பு நிர்ணயம் செய்தது. ஆனால், இது தன்னளவில் திரைகளுடன் செலவழிக்கும் நேரத்தை விடவும் பெரும்பாலும் வீடியோ விளையாட்டுகளின் எதிர்மறையான தாக்கம் குறித்த கவலைகளை கொண்டிருந்தது. திரை நேரம்-கிட்டப்பார்வை குறைபாடு ஆகியவற்றுக்கு இடையேயான சாத்தியமான தொடர்புகளை பொறுத்தவரை உறுதியான ஆதாரம் இல்லை.

"பல்வேறு வகையான வித்தியாசமான திரைகள், நிறைய அம்சங்களைக் கொண்டிருக்கின்றன. எனவே, துல்லியமான அபாயம் குறித்த தரவை பெறுவது சிக்கலாக இருக்கிறது," என்கிறார் கோர்பானி-மொஜர்ராட். " திரைகள் குறிப்பாக ஒரு காரணியாக இருக்கலாம் என்பதை ஆதாரங்கள் வெளிக்காட்டுவதால் பெற்றோர் என்ற முறையில் திரைகளில் குழந்தைகள் அதிக நேரத்தை செலவிடாமல் எச்சரிக்கையாக பார்த்துக்கொள்வது நல்லது. உங்களுடைய குழந்தை உண்மையில் திரையில் செலவிடும் நேரத்தை விரும்பினால், அவர்களை வெளியிடங்களில் அமர வைத்து அவர்கள் அதை செய்ய அனுமதிக்கலாம்.

தொழில்நுட்ப முன்னேற்றங்களை சார்ந்திருப்பது இதர தீர்வாகும். உதாரணத்துக்கு சிங்கப்பூர் கிட்டப்பார்வை குறைபாடு தடுப்பு உத்தியில் சிறப்பான அம்சங்களைக் கொன்ற கான்டாக்ட் லென்ஸ் அல்லது கண் கண்ணாடிகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கிறது. மருந்துகள் உட்கொள்ளுதல், கண்களுக்கு பயிற்சி அளித்தல், கண்களுக்கு ஓய்வு தரும் கருவிகள், அக்குபிரஷர் அல்லது காந்த சிகிச்சை போன்ற சிகிச்சை முறைகள் சாதகமான விளைவை ஏற்படுத்துவதற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். எனினும், எளிமையான கண் சொட்டு மருந்து வேண்டுமானால் உதவலாம்.

புதிய சிவப்பு விளக்கு தெரபி சிகிச்சையும் பல சாதகங்களைக் கொண்டிருக்கிறது. நாளொன்றுக்கு சில நிமிடங்கள் வீதம் வாரத்தில் ஐந்து நாட்களும் குழந்தைகளின் கண்களில் சிவப்பு விளக்கு ஒளியை ஒரு கருவி உமிழும். கிட்டப்பார்வை குறைபாடு வளர்வதை இது தாமதப்படுத்துவதாக ஆய்வு காட்டுகிறது. ஆனால், ஏன் என்று எங்களால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியவில்லை ," என கோர்பானி-மொஜர்ராட் கூறுகிறார்.

இறுதியாக, சரியான சிகிச்சை என்பது குழந்தையை சார்ந்தது என வல்லுநர்கள் சொல்கின்றனர். பெற்றோர் கவலை அடைந்தால், அது குறித்து அவர்கள் கண் மருத்துவர்களிடம் அவசியம் பேச வேண்டும்.

ஆனால், இப்போதைக்கு, அது கிட்டப்பார்வையை தடுப்பாக இருந்தாலும் அல்லது சமாளிப்பதாக இருந்தாலும் மேலும் சில சக்திவாய்ந்த தீர்வுகள் ஆச்சர்யம் தரும் வகையில் எளிமையாக உள்ளன.

ஆரோக்கியமான வாழ்க்கைமுறை - ஆரோக்கியமான கண்கள்

உலகின் பல பகுதிகளில், சாதாரண கண் கண்ணாடிகளை கொடுப்பதன் மூலம் வாழ்க்கை முறை மாற்றத்தை ஏற்படுத்த முடியும். 1980களின் தொடக்கத்தில் இருந்து காங்டான் சீனாவுடன் பணியாற்றி வருகிறார். இந்தியா மற்றும் சீனாவில் 25 லட்சம் குழந்தைகளுக்கு குறைந்த விலையில் கண்ணாடிகளை வழங்கிய ORBIS இன்டர்நேஷனல் என்ற தன்னார்வ அறக்கட்டளை நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகிறார். கண் கண்ணாடி அணிவதால் கல்வியில் சாதகமான முன்னேற்றம் ஏற்படுகிறதா என்பதை கண்டறிய முதன் முதலாக அவர் பரிசோதனையை மேற்கொண்டார். சீனாவின் குவாங்டாங் பகுதியில் 20,000 குழந்தைகளிடம் அவர் ஆய்வு மேற்கொண்டார். அவர்களுக்கு நான்கு டாலர் மதிப்புள்ள ஜோடி கண்ணாடிகளை கொடுத்ததன் மூலம் பெற்றோரின் கல்வி அல்லது குடும்ப வருமானத்தின் தாக்கத்தை அது மிஞ்சியதாக இருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டது.

"எளிமையான, குறைந்த செலவிலான தீர்வு தரும் முறைகள் நிறைய குறைபாடுகளை மாற்ற முடியும் என்பதே இதன் பொருளாகும். பெற்றோரின் கல்வி அல்லது குறைந்த வருவாய் உள்ள குடும்பம் என்பதையெல்லாம் தாண்டி அந்த குழந்தை இந்த உலகத்துக்குள் வரும். இந்த அற்புதத்தை நாங்கள் கண்டுபிடித்தோம்," என்றார் காங்டான்.

அதிக சாதகமான அம்சங்கள், ஆதாரப்பூர்வ அடிப்படையிலான தடுப்பு முறை என்பது வியப்பூட்டும் வகையில் குறைந்த தொழில்நுட்பம் கொண்டதாக இருந்தது. அதிக நேரம் வெளியிடங்களில் செலவிடுதல் என்ற இந்த முறையை அனைத்து நாடுகளும், தங்களின் வசதி அல்லது வளங்களை கருத்தில் கொள்ளாமல் அமல்படுத்தலாம்.

கிட்டப்பார்வை கோளாறை தடுப்பதில் இயற்கை ஒளியில் இருப்பது மற்றும் வெளியிடங்களிலேயே இருப்பது ஏன் உதவுவதாக இருக்கிறது என்பது குறித்து துல்லியமாக கண்டறிவது குறித்து ஆராய்ச்சியாளர்கள் இன்னும் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.

சிங்கப்பூரில் கிட்டப்பார்வை கோளாறை எதிர்த்துப் போராடும் விரிவான தேசிய உத்தியின் ஒருபகுதியாக, முன்பருவ பள்ளிகளில் குழந்தைகள் வெளியிடங்களில் செலவிடும் நேரம் ஒரு மணி நேரமாக இரட்டிப்பாக்கப்பட்டது. வீட்டுப்பாடத்தில் நேரம் செலவழிக்கப்படுவதை குறைக்க இளம் மாணவர்களுக்கான தேர்வுகள் கைவிடப்பட்டன.

"18 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு வெளியிடங்களில் செலவழிக்கும் நேரத்தை அதிகரிக்க வேண்டும் என நாங்கள் கோரிக்கை விடுக்கின்றோம். ஆனால், பாடத்திட்டங்கள் அதிகமாக உள்ளன," என்கிறார் சியா. "நாங்கள் ஒரு சிறிய தீவாக இருக்கின்றோம். எனவே, சில பள்ளிகள் குழந்தைகள் வெளியே செல்வதற்கான போதுமான இடத்தைக் கொண்டிருக்கவில்லை. பூங்கா போன்ற இடங்கள் அவர்களுக்கு அருகே இல்லை." கிட்டப்பார்வை குறைபாடு குறித்து தொடர்ந்து நிச்சயமற்ற விஷயங்கள் இருக்கும்போது, பத்தாண்டுகளுக்கும் மேலான அவரது ஆராய்ச்சியின் முன்னேற்றங்களுக்காக அவர் ஊக்குவிக்கப்படுகிறார்." மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, சூரிய ஒளி எவ்வளவு முக்கியத்துவம் வாய்ததாக இருக்கிறது என்று நாம் அறிந்திருக்கவில்லை" என்கிறார் அவர்.

இறுதியாக, ஒரு குழந்தையின் கண்பார்வை, அவர்களின் பொதுவான நலனில் ஒருபகுதியாகும். "கண்களில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்று வெறுமனே நாங்கள் கூறவில்லை; இது ஒட்டு மொத்த உடலைப் பற்றியது; நல்ல மன நல ஆரோக்கியத்தைப் பற்றியது. நமது குழந்தைகள் ஆரோக்கியமான வாழ்க்கையை முன்னெடுத்து செல்ல வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்," என்று முடித்தார்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: