நயன்தாரா, விக்னேஷ் சிவனுக்கு இரட்டை குழந்தை: வாடகைத் தாய் சட்டம் திருமணம் ஆகாதவர்களுக்கான உரிமைகளை மறுக்கிறதா?

பட மூலாதாரம், Sandy AKNINE / Getty Images
- எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
- பதவி, பிபிசி தமிழ்
தாங்கள் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு "அம்மா - அப்பா" ஆனதாக, இயக்குநர் விக்னேஷ் சிவன் - நடிகை நயன்தாரா இருவரும் ஞாயிற்றுக்கிழமை (அக். 09) சமூக வலைத்தளம் மூலமாக அறிவித்தனர். அறிவித்த சில மணி நேரங்களில் வாழ்த்துகள் குவிந்த நிலையில், இருவரும் வாடகைத்தாய் மூலமாகவே குழந்தைகள் பெற்றிருக்க வேண்டும் என்ற கருத்து பரவலாக இணைய உலகை ஆக்கிரமித்தது. எனினும், இது குறித்து எவ்வித கருத்தையும் நட்சத்திர தம்பதி அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
சமூக ஊடகத்தில் மட்டுமல்லாமல், ஊடக சந்திப்பு ஒன்றில் தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியத்திடம், "வாடகைத்தாய் சட்ட விதிமுறைகளை மீறி திருமணமான குறுகிய காலகட்டத்திலேயே நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி குழந்தை பெற்றுள்ளார்களா?" என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியம், "இது விவாதத்திற்குரிய ஒன்று. விதிமுறைகளின்படி இது நடந்ததா என்பது, மருத்துவ சேவை இயக்குனரகம் (டிஎம்எஸ்) வாயிலாக பரிசீலிக்கப்படும்" என கூறினார்.
இதனைத் தொடர்ந்து, வாடகைத் தாய் முறைமை என்பது என்ன, இந்தியாவில் அதற்கான சட்டம் என்ன சொல்கிறது என்பது குறித்த இணையத் தேடல்களும் விவாதங்களும் அதிகரித்துள்ளன.
இந்த விவாதத்திற்கு மறுபுறம், இந்தியாவில் திருமணமானவர்கள் மட்டுமே வாடகைத்தாய் முறை மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முடியுமா? தன்பால் ஈர்ப்பாளர்கள், திருநங்கைகள் உள்ளிட்ட 'குயர்' சமூகத்தினர் இந்த சட்டத்தில் அடங்குவரா? என்ற கேள்விகளும் அதற்கான கோரிக்கைகளும் பல்வேறு தரப்பிலிருந்தும் மேலெழத் தொடங்கியிருக்கிறது.
உண்மையில், இந்த சட்டத்தில் யாரெல்லாம் அடங்குவர், யாரெல்லாம் இந்த சட்டத்தில் விடுபட்டுள்ளனர்? இந்திய வாடகைத்தாய் ஒழுங்குமுறை சட்டம் பாலின சமத்துவத்துடன் உள்ளதா?


என்ன சட்டம்?
மக்களவையில் 2019ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதியன்று வாடகைத்தாய் ஒழுங்குமுறை மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. பிறகு, 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் 2022 ஜனவரி மாதம் சட்டம் நடைமுறைக்கு வந்தது. இந்த சட்டம் வாடகைத்தாய் முறை மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதற்கு சில கட்டுப்பாடுகளை விதிக்கிறது.
வணிக நோக்கில் வாடகைத் தாய் முறையில் ஈடுபடுவது இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. "தன்னலமற்ற" நோக்கத்துடனேயே இதனை செய்ய வேண்டும் என இச்சட்டம் சொல்கிறது.
ஒரு தம்பதிக்காக வாடகைத் தாயாக இருந்து குழந்தையைப் பெற்றெடுக்கும் பெண், குழந்தை பிறந்த பிறகு அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். மகப்பேறின்மை பிரச்னை ஒரு தம்பதிக்கு இருந்தாலோ, அது தொடர்பான ஏதேனும் நோயினால் பாதிக்கப்பட்டிருந்தாலோ மட்டுமே வாடகைத் தாய் முறை அனுமதிக்கப்படுகிறது.
அதிலும் அவர்களுக்கு நெருங்கியவர்களே வாடகைத் தாயாக இருக்க முடியும். அப்படி வாடகைத் தாயாக இருக்க முன்வருபவர், 25 முதல் 35 வயதுக்கு உட்பட்டவராகவும் பெற்றோராக விரும்பும் தம்பதிக்கு நெருக்கமான உறவினராகவும் இருக்க வேண்டும்.

பட மூலாதாரம், seksan Mongkhonkhamsao / Getty Images
சட்டம் என்ன சொல்கிறது?
திருமணமான இந்திய ஆண் மற்றும் பெண்ணில் இருவருக்கோ அல்லது ஒருவருக்கோ குழந்தை பெற்றுக்கொள்ள உடல் ரீதியாக பிரச்னைகள் ஏற்படும்போது, அத்தம்பதி வாடகைத்தாய் முறை மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும். இதில், ஆண் 21 வயதையும் பெண் 18 வயதையும் பூர்த்தி செய்திருக்க வேண்டும். ஆனால், திருமணமாகி 5 ஆண்டுகளை நிறைவு செய்திருக்க வேண்டும் என இச்சட்டம் சொல்லவில்லை என்கிறார், மகப்பேறு மருத்துவரும் சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் செயலாளருமான சாந்தி ரவீந்திரநாத்.
"இந்த சட்டம் மசோதாவாக இருக்கும்போதே சில கருத்து வேறுபாடுகள் இருந்தன. அதனை அரசுக்கு கோரிக்கைகளாக முன்வைத்திருந்தோம்.
அதில் முதலாவது, வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் தம்பதிக்கு திருமணமாகி 5 அண்டுகள் ஆகியிருக்க வேண்டும் என்பது. இது, மசோதாவில்தான் இருந்தது. இயற்கையாகவே கர்ப்பப்பையில் பிரச்னை இருக்கும் பெண்கள் ஏன் ஐந்து ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும், எனவே இதனை அறிவியல்பூர்வமாக மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தோம். இதனால், அந்த விதியை சட்டமாக்கும்போது நீக்கிவிட்டனர்" என்றார், மருத்துவர் சாந்தி ரவீந்திரநாத்.
மேலும், விவாகரத்தான அல்லது கணவனை இழந்த பெண்கள் இந்த சட்டத்தின் மூலம் வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும். இந்த பெண்ணுக்கு 35-45 வயதுக்குள் இருக்க வேண்டும் என சட்டம் சொல்கிறது.

பட மூலாதாரம், DEV IMAGES / Getty Images
சட்டம் பாலின சமத்துவத்துடன் இருக்கிறதா?
இந்த சட்டம் யாருக்கெல்லாம் பொருந்தாது அல்லது யாரெல்லாம் இந்த சட்டத்தில் இருந்து விடுபட்டுள்ளனர் என்பது ' பாலின சமத்துவம்' குறித்த கேள்விகளை எழுப்புகிறது. அதேசமயத்தில், இந்த சட்டத்தை வழக்கமான அணுகுமுறையுடன் அல்லாமல் இன்னும் சுதந்திரமாக அணுகியிருக்க வேண்டும் என்ற வாதமும் எழுகிறது.
உதாரணமாக, திருமணமான தம்பதி குறித்து மட்டுமே இந்த சட்டம் பேசுகிறது. திருமணமாகாத, ஆனால் ஒருமித்த உறவில் உள்ளவர்களுக்கு இச்சட்டம் பொருந்தாது.
இதனை, திருமணமாகாத பெண்களுக்கும் கருக்கலைப்பு செய்து கொள்ளும் உரிமை உள்ளது என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தெளிவுபடுத்தியுள்ள தீர்ப்புடன் நாம் பொருத்திப் பார்க்கலாம்.
"அப்படியெனில், திருமணமாகாதவர்களுக்கு கருக்கலைப்பு உரிமை உள்ளதுபோன்று, திருமணமாகாமல் உள்ளவர்களும் வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொள்ளும் உரிமையை கோருவது நியாயமான கோரிக்கையே" என்கிறார், மருத்துவர் சாந்தி ரவீந்திரநாத்.
அதேபோன்று, தன்பால் ஈர்ப்பாளர்கள், திருநங்கைகள் உள்ளிட்ட குயர் சமூகத்தினருக்கும் இச்சட்டம் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது.
கடந்த ஜூலை மாதம் நாடாளுமன்ற மக்களவையில் "இந்தச் சட்டத்தின்கீழ், குழந்தை பெற்றுக் கொள்ளும் உரிமையை குயர் சமூகத்தினர், திருநங்கைகள் மற்றும் தனிநபர்களுக்கும் கொடுக்கவேண்டும். மேற்படி சமூகத்தினருக்கு எதிரான பிரிவுகளைத் திரும்பப் பெற வேண்டும்" என்று திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் இந்திய அரசாங்கத்தை வலியுறுத்தியிருந்தது, அச்சமூகத்தினரின் கோரிக்கைக்கு வலுசேர்ப்பதாக அமைந்தது.
ஒற்றை ஆண்கள், விவாகரத்தான ஆண்களுக்கும் இந்த உரிமையை அளிக்கும்போதுதான் இச்சட்டம் பாலின சமத்துவத்துடன் இருக்கும்.
அதேபோன்று, கணவரை இழந்த அல்லது விவாகரத்தான பெண்கள் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் உரிமை, ஆண்களுக்கும் அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது.
இந்த சட்டம் வருவதற்கு முன்பே, 2017ம் ஆண்டு, பிரபல பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர், திருமணமாகாத நிலையில் இரட்டை குழந்தைகளை வாடகைத்தாய் மூலம் பெற்றுக்கொண்டார். அதனை வெளிப்படையாக அறிவிக்கவும் செய்தார்.
எனவே, ஆண்களுக்கும் இச்சட்டம் நீட்டிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இயல்பாகவே எழுந்திருக்கிறது.

- திருமணமாகாதவர்களுக்கும் கருக்கலைப்பு உரிமை: உச்சநீதிமன்ற தீர்ப்பு நடைமுறையில் சாத்தியமா?
- நயன்தாரா, விக்னேஷ் சிவன் அறிவிப்புக்கு பிறகு விவாதம் ஆகும் வாடகை தாய் சட்டம்
- LGBTQ+: “திருமணம், குழந்தை தத்தெடுப்பு உரிமைகள் எங்களுக்கும் வேண்டும்”
- ‘சிறுநீரக விற்பனை, வாடகைத் தாய்’ - மருத நில மனிதர்களின் துயர்மிகு கதை

"சில குழப்பங்களுக்கு தீர்வு தேவை"
"விவாகரத்தான அல்லது கணவரை இழந்த பெண்களுக்கு 35 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும் என்பது சட்டம். ஆனால், குறைந்த வயதிலேயே கணவரை இழந்தவர்கள் ஏன் 35 வயதுவரை காத்திருக்க வேண்டும்?
அதேபோன்று, வாடகைத்தாயாக இருப்போர், தம்பதிக்கு நெருங்கிய உறவினராக இருக்க வேண்டும் என சட்டம் சொல்கிறது. ஆனால், விதிகளில் உறவினராகவோ அல்லது உறவினர் அல்லாதவராகவோ இருக்கலாம் என இருக்கிறது. இதில் குழப்பம் நீடிக்கிறது. அதனை தெளிவுபடுத்த வேண்டும்.
ஏனெனில், உறவினராக இருக்க வேண்டும் என்றால், அவர் வாடகைத் தாயாக சம்மதிப்பதில் உள்ள வாய்ப்புகள் பல குறைந்துவிடும்" என கூறுகிறார், மகப்பேறு மருத்துவர் சாந்தி ரவீந்திரநாத்.
மேலும், இந்த சட்டம் பல கட்டுப்பாடுகளை கொண்டிருப்பதால் அதனை பயன்படுத்த முடியாத அளவுக்கு உள்ளதாக தெரிவிக்கிறார் அவர்.
"குழந்தையின்மை பெருகிவரும் நாட்டில் வாடகைத்தாய் தேவையும் பெருகிவருகிறது. எனவே, இந்த விதிகள் எளிமைப்படுத்தப்பட வேண்டும். யதார்த்தத்திற்கு ஏற்றாற்போல் இருக்க வேண்டும். விதிகளில் தெளிவின்மை நிலவுவதால் இந்தியாவில் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது குறைந்துள்ளது. எனவே அதனை சரிசெய்து, பாலின சமத்துவத்துடன் விதிகளில் திருத்தம் கொண்டு வரவேண்டும்" என முடிக்கிறார் மருத்துவர் சாந்தி.
இந்தியாவில் குழந்தையின்மையால் 3.9% முதல் 16.8% வரையிலான தம்பதிகள் அவதிப்படுவதாக உலக சுகாதார நிறுவன தரவுகள் குறிப்பிடுகின்றன. புள்ளிவிவரங்களுடன் பொருத்திப் பார்க்கையில் பாலின சமத்துவத்துடனும் தெளிவுடனும் இச்சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கைகள் எழுவது இயல்பானதாகவே உள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













