கருவுறுதல் விகிதம்: இந்தியாவில் மக்கள் குறைந்த எண்ணிக்கையில் குழந்தைகளை பெற்றுக்கொள்கிறார்களா?

குறைந்த எண்ணிக்கையில் குழந்தை
    • எழுதியவர், சுசீலா சிங் மற்றும் ஷதாப் நஸ்மி
    • பதவி, பிபிசி நியூஸ்

"எங்களுடைய பொருளாதார நிலை காரணமாகவே இன்னொரு குழந்தை வேண்டாம் என முடிவு செய்தேன்" என்கிறார், கான்பூரை சேர்ந்த சல்மா (பெயர் மாற்றப்பட்டுள்ளது)

ஜெய்பூரில் வசிக்கும் ராக்கியின் கதையும் ஏறக்குறைய சல்மாவை போன்றதுதான். அவரும் தனது குடும்பத்தை ஒரே ஒரு மகனுடன் நிறுத்திக்கொள்ள முடிவு செய்தார்.

தத்தமது கணவருடன் கலந்துபேசி சல்மாவும் ராக்கியும், ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளை மட்டுமே பெற்றுக்கொள்ளலாம் என முடிவு செய்தனர். ஆனால், இது வெறும் இருவரின் கதை அல்ல. ஏறக்குறைய இந்தியாவின் தற்போதைய நிலை.

தேசிய குடும்ப சுகாதார ஆய்வு NFHS-5ன் தரவை பார்க்கும்போது, இந்தியா முழுவதிலுமே ஏறக்குறைய இதே நிலைதான் காணப்படுகிறது. மொத்த கருவுறுதல் விகிதம் அதாவது ஃபெர்டிலிட்டி ரேட் கடந்த . சில ஆண்டுகளில் சரிந்துள்ளது.

தரவுகள் சொல்வது என்ன?

இந்தியாவில் உள்ள எல்லா மதங்கள் மற்றும் இனக்குழுக்களிலும் மொத்த கருவுறுதல் விகிதம் குறைந்துள்ளது என்று தேசிய குடும்ப சுகாதார ஆய்வு அல்லது NFHS-5 இன் சமீபத்திய தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

NFHS-4 இல் (2015-2016) கருவுறுதல் விகிதம் 2.2 ஆக இருந்த நிலையில், NFHS-5 இல் (2019-2021) இது 2.0 ஆகக் குறைந்துள்ளது.

மொத்த கருவுறுதல் விகிதம் குறைவதால், ஒரு தம்பதிக்கு சராசரியாக இரண்டு குழந்தைகள் பிறக்கின்றன. இதனால், குடும்பங்களின் அளவுகள் சிறியதாகிவிட்டன. இருப்பினும் குடும்பத்தை சிறியதாக வைத்திருப்பதற்கு அவர்களின் சொந்த சமூக மற்றும் பொருளாதார காரணங்களும் உள்ளன என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கூட்டுக் குடும்ப அமைப்பு முடிவுக்கு வரும் நிலையில், நிதி நெருக்கடியுடன் கூடவே வேலை செய்யும் தம்பதிகளுக்கு குழந்தை பராமரிப்பில் உள்ள சிரமங்களும் சிறிய குடும்பத்திற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். ஆனால், ஆண் குழந்தை வேண்டும் என்ற ஆசையில் இரண்டு குழந்தைகளுடன் நிறுத்திக்கொள்ளாத ஒரு பிரிவினரும் சமூகத்தில் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இன்டர்நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஃபார் பாபுலேஷன் சயின்ஸின் பேராசிரியரும், இந்த அறிக்கையின் ஆசிரியர்களில் ஒருவருமான எஸ்.கே.சிங், இந்த சரிவுக்கு பல காரணங்களை சுட்டிக்காட்டுகிறார்.

  • பெண்களின் திருமண வயது அதிகரித்துள்ளது. அவர்கள் பள்ளிக்குச் செல்லும் ஆண்டுகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
  • கருத்தடை சாதனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. கூடவே, "குழந்தை இறப்பு விகிதமும் குறைந்துள்ளது"என்று அவர் குறிப்பிட்டார்.
  • அதே நேரம், வறுமை அதிகமாகவும், கல்வி நிலை மோசமாகவும் இருக்கும் மதங்கள் அல்லது சமூகக் குழுக்களில், மொத்த கருவுறுதல் விகிதம் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
  • நகரங்களில் கருவுறுதல் விகிதம் 1.6 ஆக உள்ளது. அதே நேரம் கிராமப்புறங்களில் அது 2.1 ஆக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் மத்தியில் கருவுறுதல் விகிதம் வெகுவாக குறைந்துள்ளதாகவும் இந்த ஆய்வு குறிப்பிடுகிறது.
மொத்த கருவுறுதல் விகிதம்

பட மூலாதாரம், Getty Images

இது ஒரு சாதனைதான்

50களில் (1951) இந்தியாவின் மொத்த கருவுறுதல் விகிதம் அல்லது TFR சுமார் 6 ஆக இருந்தது. எனவே, தற்போதைய எண்ணிக்கை ஒரு சாதனை என்று இந்தியாவின் மக்கள்தொகை அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர் பூனம் முட்ரேஜா கூறுகிறார்.

பெண்கள் கல்வியறிவு பெற்றவர்களாக இருந்தால் அவர்களுக்குக் குறைவான குழந்தைகளே பிறக்கின்றன என்பதை புள்ளிவிவரங்கள் தெளிவாகக் காட்டுகின்றன. இதனுடன், அரசின் மிஷன் பரிவார் யோஜனாவும் இதில் முக்கியப் பங்காற்றியுள்ளது.

கருவுறுதல் விகிதத்தை ஒரு குறிப்பிட்ட மதத்துடன் இணைப்பதை பூனம் எதிர்க்கிறார். "இந்தியாவின் அதிக மக்கள்தொகை கொண்ட உத்தர பிரதேச மாநிலத்தில், இந்து குடும்பங்களில் TFR 2.29 ஆக உள்ளது. தமிழ்நாட்டில் முஸ்லிம் பெண்களிடையே இது 1.93 ஆக உள்ளது.

எனவே, இதை மதத்துடன் தொடர்புபடுத்தாமல், கல்வி மற்றும் பொருளாதார காரணங்களுடன் தொடர்புபடுத்த வேண்டும். ஏனெனில், பெண்கள் கல்வியறிவு பெற்றுள்ள இடங்களில், குழந்தை பிறப்பின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது," என்று அவர் குறிப்பிட்டார்.

இந்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் 2016 ஆம் ஆண்டு 'மிஷன் பரிவார் விகாஸ்' திட்டத்தை தொடங்கியது. உத்தர பிரதேசம், பிஹார், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்கண்ட் மற்றும் அசாம் ஆகிய ஏழு மாநிலங்களில் கருவுறுதல் விகிதம் அதிகமாக உள்ள 145 மாவட்டங்களில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. 2025 ஆம் ஆண்டுக்குள் கருவுறுதல் விகிதத்தை 2.1க்கும் கீழே கொண்டுவருவதே இந்தத்திட்டத்தின் குறிக்கோளாகும்.

TFR 2.1ஐ அடையும் போது, அது 'ரீப்ளேஸ்மெண்ட் லெவல் ஃபெர்டிலிட்டி (replacement level fertility)' என்று அழைக்கப்படுகிறது. இந்த எண்ணிக்கையை எட்டினால், அடுத்த மூன்று முதல் நான்கு தசாப்தங்களில் நாட்டின் மக்கள்தொகை ஒரே சீராகும்.

கருத்தடையில் உள்ள இடைவெளி

குழந்தை

பட மூலாதாரம், Getty Images

ஆண்கள் மற்றும் பெண்கள் கருத்தடையை எடுத்துக்கொண்டால் இதில் ஒரு பெரிய இடைவெளி உள்ளது. 15-49 வயதுடைய பெண்களிடையே கருத்தடை விகிதம் 37.9 சதவிகிதமாக உள்ள நிலையில், ஆண்களின் கருத்தடை விகிதம் மிகவும் குறைவாக அதாவது 0.3 சதவிகிதமாக உள்ளது. ஆனால், ஆண்களிடையே ஆணுறை பயன்பாடு 9.5% ஆக அதிகரித்துள்ளது. முந்தைய NFHS-4 இல் இது 5.6 ஆக இருந்தது.

அதே சமயம், 35 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெண்களில் 27% பேர் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளை விரும்புவதாகவும், 7 சதவிகிதம் பேர் மட்டுமே இரண்டு குழந்தைகளுக்கு மேல் வேண்டும் என்று விரும்புவதாகவும் அதே கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

இதன் விளைவு என்னவாக இருக்கும்?

இந்தியாவில் கருத்தடையின் சுமை பெண்கள் மீது அதிகம் என்று அவர் கருதுகிறார். எனவே, அவர்களின் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார்.

இந்தியாவின் மக்கள்தொகையில் சுமார் 65 சதவிகிதம் பேர் இளைஞர்கள். இது நாட்டுக்கும் பயனளிக்கிறது. ஆனால், வருங்காலத்தில் இந்த இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து, முதியோர்களின் தொகை அதிகரிக்கும். அதனால் சமூக சமநிலையும் பாதிக்கப்படும்.

ஜப்பான், சீனா மற்றும் தைவான் போன்ற ஆசியாவில் உள்ள நாடுகளை பார்க்கும்போது, அவை பொருளாதார ரீதியாக மிகவும் துடிப்புடன் இருந்தன. கூடவே, இது குடும்பத்தின் அளவு மீதும் எதிர்விளைவை ஏற்படுத்தியது. சமநிலையை எட்டுவது அவர்களுக்கு இப்போது ஒரு பெரிய சவாலாக உள்ளது என்று பொது சுகாதார சேவைகளில் 18 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் உள்ள ப்ராச்சி கர்க் குறிப்பிட்டார்.

ஆனால், ஆசியாவின் பிற நாடுகளுடன் இந்தியாவை ஒப்பிடுவது தவறு. தற்போது இந்தியாவுக்கு மக்கள்தொகை நிலைத்தன்மை மிகவும் முக்கியமானது என்கிறார், பேராசிரியர் எஸ்.கே.சிங்.

தற்போது கருவுறுதல் விகிதம் குறைந்திருந்தாலும், மக்கள்தொகை சீரடைய சுமார் 40 ஆண்டுகள் ஆகும். அதாவது, 2060ஆம் ஆண்டுக்குள் இது நிகழும். இந்தியா தற்போது அதன் இளம் மக்கள்தொகை மூலம் பயனடைகிறது.

அதன் பிறகு இந்த வளர்ச்சி விகிதம் ஒவ்வொரு வயதிலும் நிலையானதாக இருக்கும். மேலும், சமநிலையும் பராமரிக்கப்படும். எனவே, ஆசியாவின் பிற நாடுகளுடன் இந்தியாவை ஒப்பிடுவது தவறு என்று அவர் குறிப்பிட்டார்.

கருவுறுதல் விகிதம் குறித்து ஆய்வாளர்கள் உற்சாகமாக இருந்தாலும் கூட, சிறு குடும்பங்கள் காரணமாக மாமா, அத்தை, தாய் மாமன் போன்ற உறவுகள் முடிவுக்கு வந்துவிடும்படியான சமநிலையை பேண வேண்டிய அவசியம் உள்ளதா என்ற கேள்வியையும் அவர்கள் எழுப்புகின்றனர்.

காணொளிக் குறிப்பு, வாடகைத்தாய் தடை மசோதா: எப்படி பார்க்கிறார்கள் வாடகைத்தாய்கள்?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :