தாய்ப்பால் ஊட்டுதல், தானம் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய தகவல்கள்

பட மூலாதாரம், Getty Images
"பச்சிளம் குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கும், வளர்ச்சிக்கும் தாய்ப்பால் இன்றியமையாததாக இருக்கிறது. தாய்ப்பால் குடித்து வளர்ந்த குழந்தைகளுக்கு உடலில் நோய் எதிர்ப்புத்திறன் அதிகமாக இருக்கும்" என்கின்றனர் மருத்துவர்கள்.
தாய்மார்கள் தாய்ப்பாலூட்டுவதை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரம் உலக தாய்ப்பாலூட்டல் வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
ஆதரவில்லாமல் கைவிடப்பட்ட பச்சிளங்குழைந்தைகளுக்கும், உடல் ஆரோக்கியமின்றி பிறந்த குழந்தைகளுக்கும் தாய்ப்பால் தானம் செய்து வரும் தாய்மார்கள், தாய்ப்பாலூட்டலின் முக்கியத்துவம் குறித்து பிபிசியிடம் பகிர்ந்துகொண்டனர்.
"தாய்ப்பால்தான் குழந்தைகளின் உணவும் மருந்தும் என கூறலாம். குழந்தைகளை, வராத நோயிலிருந்து பாதுகாப்பதும், வந்த நோயை அழிப்பதும் தாய்ப்பால் தான்.
ஒரு பெண், தனது குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டும்போது, அவளுக்கும் குழந்தைக்கும் இடையிலான உறவு வலுப்பெறுகிறது. இருவருக்கும் இடையிலான நெருக்கமும் பாசமும் அதிகரிக்கிறது.
தாய்ப்பாலூட்டுவதால் தாய், சேய் இருவரின் உடலும் ஆரோக்கியமடைகிறது. எனவே, தாய்ப்பாலூட்டுவதை தவிர்க்கவே கூடாது. அதேவேளையில், தாய்ப்பால் தானம் செய்யவும் தாய்மார்கள் முன்வர வேண்டும்" என்கிறார் தாய்ப்பால் கொடையாளர் செல்வி.

திருப்பூரில் வசித்து வரும் செல்வி, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் தாய்ப்பால் தானம் செய்துவருகிறார். இவரது தாய்ப்பால், கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உயிருக்காக போராடிய பல பச்சிளங்குழந்தைகளின் உயிரை காப்பாற்றியது குறித்து பெருமை கொள்வதாக தெரிவிக்கிறார் இவர்.
"நான் கர்ப்பம் அடைந்திருந்த போதுதான் தாய்ப்பால் தானம் குறித்து படித்து தெரிந்துகொண்டேன்.
அப்போதே, 'நாமும் தாய்ப்பால் தானம் செய்ய வேண்டும்' என முடிவு செய்தேன். குழந்தை பிறந்ததும் தாய்ப்பால் தானம் வழங்கும் சேவையை ஒருங்கிணைக்கும் தன்னார்வலர்களை தொடர்பு கொண்டு விருப்பம் தெரிவித்தேன்.
அப்போது, நாக்கும் கீழ் உதடும் ஒட்டிப் பிறந்த குழந்தை ஒன்று அறுவை சிகிச்சை முடிந்து தாய்ப்பாலுக்காக காத்திருந்தது.
குழந்தையின் தாய்க்கு மார்பக பகுதியில் தீக்காயம் ஏற்பட்டதால் அவருக்கு தாய்ப்பால் வரவில்லை. அந்த குழந்தையின் உயிரை பாதுகாக்க தாய்ப்பால் தேவைப்படும் நிலை இருந்தது.
நான் வழங்கிய தாய்ப்பால் அந்த குழந்தைக்கு கொடுக்கப்பட்டது. அடுத்தடுத்த வாரங்களில், குழந்தையின் உடல்நலம் சீரானது. தானமாக வழங்கும் தாய்ப்பால் யாருக்கு செல்கிறது என எனக்கு அப்போது தெரியாது. காப்பாற்றப்பட்ட குழந்தையின் தாய் என்னை நேரில் வந்து சந்தித்து நன்றி கூறினார்.
இரு தாய்களுக்கும் இடையிலான உணர்ச்சி மிகுந்த தருணம் அது. இன்றும் அந்த குழந்தை பற்றி தொலைபேசியில் அழைத்து விசாரித்துக் கொண்டிருக்கிறேன்" என உணர்வுப்பூர்வமாக தெரிவிக்கிறார் செல்வி.
ஈரோட்டில் வசித்து வரும் தாய்ப்பால் கொடையாளரான அருணா தங்கவேல், "தாய்ப்பால் தானம் குறித்த புரிதலும், விழிப்புணர்வும் நம் சமூகத்தில் அதிகரிக்க வேண்டும்" என்கிறார்.
"தாய்ப்பால் தானம் குறித்து பெரும்பாலான தாய்மார்களுக்கு தெரிந்திருந்தும், தாய்ப்பால் தானம் வழங்குவதற்கு அவரது குடும்ப உறுப்பினர்கள் அனுமதிப்பதில்லை. எனவே, தாய்ப்பால் தேவைப்படும் குழந்தைகளுக்கு இலவசமாக தாய்ப்பால் வழங்கும் திட்டத்தின் முக்கியத்துவத்தை அனைவரும் உணர்ந்திட வேண்டும்.
நான், கடந்த பிப்ரவரி மாதம் தாய்ப்பால் தானம் வழங்க முன்வந்த போது, எனது குடும்ப உறுப்பினர்கள் மறுப்பு தெரிவித்தனர்.
"மற்ற குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்கினால், நம் குழந்தைக்கு தாய்ப்பால் இல்லாமல் போய்விடும்" என அவர்கள் பயந்தனர். நம் குழந்தைக்குப்போக, வீணாகும் தாய்ப்பாலை தான் தானமாக வழங்குகிறேன் என எடுத்துக்கூறி தானத்தை தொடங்கினேன்.
"நான் வழங்கும் தாய்ப்பால் எங்கோ உயிருக்கு போராடி வரும் ஒரு குழந்தையை காப்பாற்றுகிறது என நினைக்கையில் மனதிற்கு நிறைவாக இருக்கிறது. ரத்த தானம் அனைவராலும் செய்ய முடியும். ஆனால், தாய்ப்பால் தானம் தாய்ப்பாலூட்டும் தாய்மார்களால் மட்டுமே செய்ய முடியும் என்பதால் இது தனித்துவமான சிறந்த தானமாக கருதுகிறேன்" என பெருமிதத்துடன் தெரிவிக்கிறார் அருணா.
தாய்மார்களிடம் இருந்து தானமாக பெறப்படும் தாய்ப்பால், உரிய பரிசோதனை மற்றும் பாதுகாப்புக்கு பிறகே குழந்தைகளுக்கு வழங்கப்படுவதாக தெரிவிக்கிறார், கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின், பச்சிளம் குழந்தைகள் பிரிவு மருத்துவர் செந்தில்குமார்.

"2015 ஆம் ஆண்டில், தமிழக அரசு தாய்ப்பால் வங்கித் திட்டத்தை 6 மாவட்டங்களில் துவங்கியது. தற்போது 23 மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தாய்ப்பால் வங்கித் திட்டம் இயங்கி வருகிறது. கோவை அரசு மருத்துவமனையில், கோவையை ஒட்டியுள்ள 4 மாவட்டங்களில் இருந்து அவசர மருத்துவ உதவி தேவைப்படும் குழந்தைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர். இவ்வாறு அனுமதிக்கப்படும் குழந்தைகளுக்கும், ஆதரவில்லாமல் விடப்படும் பச்சிளம் குழந்தைகளுக்கும் உதவுவதற்காகவே தாய்ப்பால் வங்கித் திட்டம் துவங்கப்பட்டது. ஏராளமான தாய்மார்களின் உதவியோடு இத்திட்டம் தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது."
"தாய்ப்பால் தானம் செய்பவருக்கு நோய்த்தொற்று எதுவும் இல்லை என ரத்த பரிசோதனையில் உறுதி செய்த பின்பே, அவரின் தாய்ப்பால் பதப்படுத்துவதற்காக எடுத்துக்கொள்ளப்படுகிறது.
பல நிலைகளில் தாய்ப்பாலை பதப்படுத்தியதற்கு பின்னர், அதில் உள்ள கிருமிகளின் அளவு ஆய்வு செய்யப்படுகிறது. நூறு சதவிகிதம் ஆரோக்கியமான தாய்ப்பால் மட்டுமே குழந்தைகளுக்கு வழங்குவதற்காக அனுப்பப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் பச்சிளங்குழந்தைகளின் இறப்பு விகிதம் குறைந்து வருகிறது. தாய்ப்பால் கொடுப்பதால், பெண்களின் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும், உடல் எடை அதிகரிக்கும் போன்ற தவறான கருத்துகள் உள்ளன. குறிப்பாக, இளம்தலைமுறையினர் உடல் அழகுக்காக தாய்ப்பால் ஊட்டுவதை தவிர்க்கின்றனர். தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு உடல் எடை குறைகிறது, மார்பக புற்றுநோய் மற்றும் கருமுட்டை புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளது என நிரூபிக்கப்பட்டுள்ளது" என்கிறார் மருத்துவர் செந்தில்குமார்.

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ்: உங்களை தற்காத்துக் கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து எப்போது கிடைக்கும்?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ் : இதுவே கடைசி கொள்ளை நோய் அல்ல
- கொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் என்ன?

கொரோனா நோய்த்தொற்று சூழலிலும் தாய்ப்பால் தானம் வழங்குவதில் பெண்கள் தயக்கம்காட்டுவதில்லை என்கிறார் 'அமிர்தம்' தாய்ப்பால் தான தன்னார்வக்குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ரூபா.
"2018 ஆம் ஆண்டு முதல் நான் தாய்ப்பால் தானம் செய்து வருகிறேன். தாய்ப்பால் தானத்தின் தேவையை உணர்ந்து இதுவரை சுமார் 800 லிட்டர் தாய்ப்பாலை தானமாக பெற்று தாய்ப்பால் வங்கிக்கு வழங்கியுள்ளேன். தங்களது குழந்தையின் தேவைப்போக மீதமுள்ள தாய்ப்பாலை அதற்கென பிரத்யேக பையில் சேமித்து, வீட்டில் உள்ள ஃப்ரீசரில் வைக்கின்றனர். மாதத்தின் இறுதி வாரத்தில் அவற்றை பெற்றுக்கொண்டு, அரசு மருத்துவமனையின் தாய்ப்பால் வங்கியில் வழங்குகிறோம். தனி ஆளாக இந்த குழுவைத் தொடங்கினேன், தற்போது 1100 தாய்மார்கள் இதில் உள்ளனர். அனைவரும் சுயமாக முன்வந்து தாய்ப்பால் தானம் செய்கின்றனர்" என்கிறார் கோவையில் ஐடி பணியாளராக வேலைசெய்து வரும் ரூபா.
"எடை குறைவாக பிறந்த குழந்தை, குறைப்பிரசவ குழந்தை ஆகியோருக்கு தாய்ப்பால் தான் அவர்களின் உயிரை பாதுகாத்து ஆரோக்கியத்தை மீட்டெடுக்கிறது. கொரோனா காலத்திலும் தாய்ப்பாலின் தேவை இருந்துகொண்டே தான் இருக்கிறது. தாய்ப்பால் மூலம் கொரோனா பரவாது என்பதை உலக சுகாதார அமைப்பு உறுதி செய்தபோதும், நோய்த்தொற்று பரவல் சூழல் காரணமாக தாய்மார்கள் தாய்ப்பால் தானம் செய்யத் தயங்குவார்கள் என கருதினோம். ஆனால், எந்த தயக்கமுமின்றி எங்கள் குழுவில் உள்ள தாய்மார்கள் தானம் செய்து வருகின்றனர். முன்பைவிட இப்போது மிகவும் உற்சாகமாக குழுவை ஒருங்கிணைத்து வருகிறேன். எல்லா குழந்தைகளையும் தன் குழந்தை என கருதி பாதுகாப்பதே தாய்மை. அதுவே பெண்களின் ஆகச்சிறந்த அடையாளம் என கருதுகிறேன்" என கூறுகிறார் ரூபா.
சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
தொடர்புடைய செய்திகள்:
- உலகிலேயே முதல்முறையாக கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துக்கு அனுமதி வழங்கியது ரஷ்யா
- பெண்களும், பிராமணர் அல்லாதோரும் கல்வி கற்பதை எதிர்த்தாரா திலகர்?
- 1989-இல் இந்தி உரையை மொழிபெயர்த்தாரா கனிமொழி? வைரலாகும் புகைப்படங்களின் பின்னணி என்ன?
- பாகிஸ்தான் வரைபடத்தில் குஜராத்தின் ஜுனாகத் பகுதி: இம்ரான் கான் அரசுக்கு என்ன லாபம்?
- திருப்பதி கோயில் ஊழியர்கள் 743 பேருக்கு கொரோனா: சமூக வலைத் தளங்களில் கடும் விமர்சனம்
- ஐக்கிய அரபு அமீரக விசா, பர்மிட்டுகளுக்கு 1 மாதம் காலக்கெடு நீட்டிப்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












