உயிர் காக்கும் தாய்ப்பால் தானம்: வழிகாட்டும் சென்னை மருத்துவமனை
- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
''குழந்தை பிறந்தவுடன் என்னால் பாலூட்ட முடியவில்லை. சுயநினைவில் நான் இல்லை. அரசு தாய்ப்பால் வங்கியில் இருந்து என் குழந்தைக்கு பால் கொடுத்துள்ளார்கள் என்பதை அறிந்தபோது, ஆனந்தத்தில் அழுதுவிட்டேன். பால்கொடுத்த தாயின் முகம், பெயர், ஊர் தெரியாது. அவரின் கொடைக்கு ஈடு இல்லை,'' உணர்ச்சிப் பெருக்குடன் பேசுகிறார் சென்னையை சேர்ந்த இளம் தாய் ரேஷ்மா.

தமிழகத்தில் அதிக அளவில் தாய்மார்கள் தாய்ப்பால் கொடை அளிக்கும் வங்கியாக இருப்பது சென்னை எழும்பூரில் உள்ள அரசு தாய் சேய் மகப்பேறு மருத்துவமனை. இந்த வங்கியில் இருந்துதான் ரேஷ்மாவின் குழந்தைக்கு பால் அளிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நாளும் சுமார் 35 தாய்மார்கள், தங்கள் குழந்தைக்கு அளித்தது போக, தங்களிடம் சுரக்கும் பாலை கொடையாக வங்கியில் வழங்குகிறார்கள்.
உலக அளவில் ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரம் 'தாய்பால் வாரம்' கடைப்பிடிக்கப்படுகிறது.
குழந்தைகளுக்கு தாய்ப்பால் அளிக்க வேண்டிய அவசியம், தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு ஏற்படும் சிக்கல் பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
அதன் ஒரு பகுதியாக கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டதுதான் எழும்பூரில் இயங்கும் இந்த தாய்ப்பால் வங்கி.

பட மூலாதாரம், ALIYA SHAGIEVA
தமிழகத்தில் தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்காக நடத்தப்படும் இதுபோன்ற வங்கிகளின் செயல்பாடுகள், தாய்ப்பால் கொடுக்க பொதுவெளிகளில் தாய்மார்கள் சந்திக்கும் சிரமங்கள், தாய்ப்பால் புகட்டுவதில் இருக்கும் தயக்கங்கள் குறித்து பிபிசி தமிழ் தாய்மார்களிடம் கேட்டறிந்தது.
அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்ற ரேஷ்மா ஒரு வாரம் கழித்துத்தான் தன் மகனுக்குப் பாலூட்டினார். அந்த ஏழு நாட்களுக்கும் அவரது குழந்தையை காப்பாற்றியது மற்ற தாய்மார்கள் கொடையாக அளித்த பால்தான்.


தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்த உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை, உலகில் ஐந்தில் மூன்று குழந்தைகளுக்கு பிறந்தவுடன் தாய்ப்பால் கிடைப்பதில்லை என்ற காரணத்தினாலேயே அவர்கள் இறப்பு அல்லது வியாதிகளுக்கு ஆளாகும் ஆபத்தை சந்திக்கிறார்கள் என்று கூறுகிறது.
மற்ற குழந்தைகளோடு ஒப்பிடும்போது, பிறந்தவுடன் தாய்ப்பால் கிடைக்கும் குழந்தைகள் பிழைப்பதற்கான வாய்ப்பை அதிகம் பெற்றவர்களாக இருப்பார்கள் என்கிறது அந்த அறிக்கை.
தாய்ப்பால் தானம்-சிறந்த கொடை

பட மூலாதாரம், GRIHALAKSHMI MAGAZINE
''அரக்கோணம் அரசு மருத்துவமனையில் எழும்பூருக்கு கொண்டு செல்லுங்கள் எனக்கூறி ஆம்புலன்சில் ஏற்றிவிட்டார்கள். மூன்று மணிநேரம் ஆம்புலன்ஸ் பயணத்தில் நான் உயிருடன் இருப்பேனா? குழந்தையை பெற்றெடுப்பேனா என நடுக்கத்தில் இருந்தேன். அதிகப்படியான ரத்தம் வெளியேறிக்கொண்டிருந்தது.
மருதுவர்கள் உடனடியாக அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து, சிசேரியன் செய்தார்கள். விழித்ததும், எனக்கு சொல்லப்பட்ட தகவல்,குழந்தை ஆரோக்கியமாக உள்ளது. மேலும் தாய்ப்பால் என்னால் கொடுக்க முடியாததால், தாய்ப்பால் வங்கியில் இருந்து கொடுத்திருக்கிறார்கள் என்ற செய்தியை சொனார்கள்,'' என தன்னுடைய பிரசவப் போராட்டத்தைப் பற்றி பேசினார் ரேஷ்மா.
ரேஷ்மாவின் குழந்தைக்கு கிடைத்ததுபோல பல குழந்தைக்கும் பால் கிடைக்கவேண்டும் என்ற எண்ணத்தில் தாய்ப்பாலை வங்கியில் செலுத்தவந்த தாய்மார்களையும் சந்தித்தோம்.

பட மூலாதாரம், சிவகாசி பேருந்து நிலையத்தில் பூட்டப்பட்டு இருக்கும
''நாம் செய்யும் எந்த தானத்தைவிடவும் பிறந்த குழந்தைக்கு நாம் கொடுக்கும் தாய்ப்பால் தானம் உயிர் கொடுப்பதற்கு சமம். என் சகோதரிக்கு பால் சுரக்காதபோது பட்ட கஷ்டம் நினைவில் உள்ளது. எனக்கு குழந்தை பிறந்த முதல் வாரத்தில் இருந்து அதிகமாக சுரக்கும் பாலை கொடுக்க முன்வந்தேன். என் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தார்கள்,'' என விழிப்புணர்வுடன் பேசுகிறார் பெரம்பூரைச் சேர்ந்த இளம் தாய் ரமணி தினேஷ்குமார்.
''நம்மிடம் சுரக்கும் அதிக பாலை மட்டுமே நாம் தருகிறோம் என்பதால் நம் குழந்தைக்கு எந்த பிரச்சினையும் இருக்காது. ஒரு சில மாதம் மட்டுமே இதை நாம் செய்யமுடியும் என்பதால் மனச் சலனம் இன்றி உடனடியாக இந்த தானத்தை செய்துவிடுவது என்று முடிவுசெய்தேன்,'' என்று விவரித்தார் ரமணி.
''கழிவறைக்கு சென்று பாலூட்டுவேன்''

பட மூலாதாரம், Getty Images
மருத்துவமனை மற்றும் வீடுகளில் இருக்கும் சமயத்தில் குழந்தைக்கு பாலூட்டுவதில் பெண்களுக்கு சிரமம் இருப்பதில்லை. அவர்கள் வேலைக்கு சொல்லுமிடங்களிலும், பயணிக்கும்போதும் குழந்தைக்கு பசிக்கும் நேரத்தில் அவர்களால் பாலூட்ட முடிவதில்லை என சில தாய்மார்கள் தங்களது சிரமங்களை பிபிசி தமிழிடம் பகிர்ந்துகொண்டனர்.
கல்பாக்கத்தைச் சேர்ந்த ரேவதி ஜோசப் தினமும் பேருந்து, ரயில் என பயணம்செய்து பணியிடத்திற்குச் செல்லவேண்டும். ''குழந்தை பிறந்த மூன்று மாதங்கள் ஓய்வு எடுத்துக்கொண்டேன். ஆனால், குடும்பத்தின் பொருளாதாரத்தை கவனத்தில் கொண்டு வேலைக்குத் திரும்பினேன்.
தனியார் ஆடிட்டர் அலுவலகத்தில் வேலை. அலுவலக அறைகள் எப்போதும் கூட்டமாக இருக்கும். பாலூட்ட கழிவறைக்குத்தான் குழந்தையை எடுத்துச்செல்வேன். குறைந்தபட்சம் குழந்தையை அலுவலகத்திற்கு எடுத்துவர எனக்கு வாய்ப்பு கொடுத்தார்கள் என்பதை நினைத்துக்கொண்டு சமாதானம் செய்துகொள்கிறேன். பயணிக்கும்போது பாலூட்டுவது நடக்காத காரியம். இடம் கிடைத்தால் நிம்மதியாக உட்கார்ந்து செல்லமுடியும்,'' என்று கூறுகிறார் ரேவதி.
''அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பாலூட்டும் அறைகள் இருக்கவேண்டும். முன்பைவிட பல பெண்கள் வேலைக்கு போகிறார்கள். உழைக்கும் பெண்களுக்கு இந்த உதவியைக் கூட செய்யாமல், அதை செய்யவேண்டும் என அரசும் வலியுறுத்தாமல் இருப்பது வருத்தமளிக்கிறது,'' என்கிறார் ரேவதி.
பாலூட்டும் அறைகளின் நிலை

பட மூலாதாரம், Alain DENANTES/Gamma-Rapho via Getty Images
ஒவ்வொரு பெண்ணும் தனது குழந்தைக்கு தயக்கமின்றி பாலூட்ட பொது இடங்களில் பாலூட்டும் அறைகளை திறந்தார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.
தமிழகம் முழுவதும் பல பேருந்து நிலையங்களில் உள்ள பாலூட்டும் அறைகளை ஆய்வு செய்துள்ள பேராசிரியர் மற்றும் சமூக ஆர்வலர் சண்முகவேலாயுதம் பேசும்போது நடைமுறையில் பாலூட்டும் அறைகளில் உள்ள குறைபாடுகளை பட்டியலிட்டார்.


''சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் ஆசியாவின் பெரிய பேருந்து நிலையம். இங்குள்ள இரண்டு அறைகளில் ஒன்று மட்டுமே செயல்படுகிறது. வள்ளலார் நகர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் உள்ள பேருந்து நிலையங்களில் அறைகள் இருப்பது பற்றிய விளம்பரம் இல்லை. பூட்டியிருக்கும் அறைகளை பார்க்கும் தாய்மார்கள் யாரிடம் உதவி கேட்பது என்று தெரியாமல் அறையை பயன்படுத்தாமல் இருக்கும் நிலையும் உள்ளது.
குறைந்தபட்சம் பேருந்து நிலைய நிர்வாகத்தினர் இதில் கவனம் எடுக்கவேண்டும். சேலம், கும்பகோணம் போன்ற நகரங்களில் அந்த அறைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நகராட்சி மற்றும் மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் பாதுகாப்பான முறையில் பாலூட்டும் அறைகள் செயல்படுவதை அரசும், பொதுமக்களும் சேர்ந்துதான் உறுதி செய்ய முடியும்,'' என்கிறார் சண்முகவேலாயுதம்.
''தாய்ப்பால் சுரப்பது தாயின் மனஓட்டத்தைப் பொருத்தது''

பட மூலாதாரம், Alain DENANTES/Gamma-Rapho via Getty Images
தாய்ப்பால் குழந்தைக்கு ஏன் முக்கியம் என்பதை விளக்கிய அரசு மருத்துவர் பிரகாஷ், '' ஒவ்வொரு குழந்தைக்கும் முதல் ஆறு மாதங்கள் கட்டாயமாக கிடைக்க வேண்டியது தாய்ப்பால். தண்ணீரைவிட குழந்தைக்கு தாய்ப்பால் முக்கியமானது. இதுதான் அனைத்து ஊட்டச்சத்தும் நிறைந்ததாக இருக்கும். குழந்தையின் முழுமையான உடல் வளர்ச்சிக்கு அடிப்படை தாய்ப்பால் மட்டுமே,'' என்கிறார்.
மேலும் தாய்ப்பால் சுரப்பது தாயின் மன ஓட்டத்தைப் பொருத்தது என்கிறார் மருத்துவர் பிரகாஷ். ''பாலூட்டும் தாய்க்கு மனவருத்தம் ஏற்பட்டால் தாய்ப்பால் அவருக்கு நன்றாக சுரக்காது. பயம், குழப்பம், மன உளச்சல் போன்றவற்றை சுமக்காமல், மகிழ்வுடன் குழந்தைக்கு ஒரு தாய் பால் கொடுப்பது அந்த குழந்தையின் வளர்ச்சிக்கு அவசியம்,'' என்கிறார்.
''தாய்ப்பால் தானம்': தமிழக தாய்மார்களின் ஆச்சரிய முயற்சி
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













