திருமணமாகாதவர்களுக்கும் கருக்கலைப்பு உரிமை: உச்சநீதிமன்ற தீர்ப்பு நடைமுறையில் சாத்தியமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
திருமணமாகாத பெண்களுக்கும் கருக்கலைப்பு செய்து கொள்ளும் உரிமை உள்ளது என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் தெளிவுபடுத்தியுள்ள தீர்ப்பைத் தொடர்ந்து, பாதுகாப்பற்ற முறையில் பெண்கள் கருக்கலைப்பு செய்வது ஓரளவு குறையும் என்றும் பதின்பருவ கர்ப்பங்கள் ஓரளவு தவிர்க்கப்படலாம் என்றும் சமூக செயல்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
திருமண உறவில் கூட, விருப்பமற்ற முறையில், பெண் ஒருவர் கர்ப்பம் அடைந்தால், அதை வன்புணர்வாகக் கருதி, அந்த கருவை கலைக்க அவருக்கு முழு உரிமை உள்ளது என்றும் உச்சநீதிமன்றம் சமீபத்தில் வழக்கு ஒன்றில் தெளிவுபடுத்தியது. இதை பல தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.
அது என்ன வழக்கு?
திருமணம் ஆகாத பெண் ஒருவர், கர்ப்பமாகி 22 வாரங்கள் ஆன நிலையில், தனது காதலர் திருமணத்துக்கு மறுத்துவிட்டதால், கருக்கலைப்பு செய்து கொள்ள உயர் நீதிமன்றத்தை நாடினார். ஆனால், 'திருமணம் ஆகாதவர்' என்பதால் உயர்நீதிமன்றம் அவர் கருக்கலைப்பு செய்ய அனுமதி மறுத்தது. அந்தத் தடையை நீக்கக்கோரி அந்த பெண் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், ஏ.எஸ்.போபண்ணா, ஜே.பி.பர்திவால் ஆகியோர் அடங்கிய அமர்வு, தேவையற்ற கர்ப்பத்தை கலைப்பதற்கு ஒரு பெண் திருமணம் ஆனவரா, ஆகாதவரா என்று வித்தியாசம் தேவையில்லை என்று கூறினர். மேலும், கருக்கலைப்பு செய்து கொள்ளும் முடிவை எடுப்பது சம்பந்தப்பட்ட பெண்ணின் உரிமை என்றும் நீதிபதிகள் கூறினர்.
பாதுகாப்பற்ற கருக்கலைப்பு காரணமாக தினமும் இந்தியாவில் சுமார் எட்டு பெண்கள் இறந்து போகிறார்கள் என்ற புள்ளிவிவரத்தை நீதிபதிகள் தங்களுடைய தீர்ப்பில் சுட்டிக்காட்டினர்.
தேவையற்ற கர்ப்பத்தால், ஒரு பெண்ணின் வாழ்க்கை மோசமாக பாதிக்கப்படும் என்று கூறிய நீதிபதிகள், தனது எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு கருக்கலைப்பு செய்து கொள்வதற்கு முன்வந்தால் அவரை திருமணம் ஆனவரா, ஆகாதவரா என வித்தியாசம் பார்ப்பது தேவையற்றது. அது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும் தெரிவித்தனர்.
மேலும், திருமண உறவில் மனைவி ஒருவர் "கணவரின் பாலியல் வன்புணர்வால் கர்ப்பம் அடைந்தால், அந்த குழந்தையைப் பெற்றெடுக்கவும், வளர்க்கவும் அவரை கட்டாயப்படுத்தக்கூடாது. மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தீங்கு விளைவிக்கும் நபராக இருக்கும் கணவருடன் அந்த பெண் அந்த குழந்தையை வளர்க்கும் நிலைக்கு அவரை கட்டாயப்படுத்தக் கூடாது" என தெளிவுபடுத்தியுள்ளனர்.
சமீபத்தில் அமெரிக்க உச்சநீதிமன்றம் கருக்கலைப்பு தொடர்பான வழக்கில், கருக்கலைப்பு செய்வதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் கொண்ட தீர்ப்பை வழங்கியிருந்தது. இந்த நிலையில், இந்திய உச்சநீதிமன்றம், கருக்கலைப்பு செய்வது முழுக்க, முழுக்க ஒரு பெண்ணின் சொந்த முடிவாக இருக்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது கவனத்தை பெற்றுள்ளது.
தீர்ப்பின் யதார்த்தம் என்ன?

பட மூலாதாரம், Getty Images
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு பல பெண்களுக்கு, அவர்கள் தேவையற்ற கர்ப்பத்தை சுமப்பதிலிருந்து விடுதலை கொடுக்கும் என கூறுகிறார் பெண்கள் நல செயல்பாட்டாளர் வேணி. 51ஆண்டுகளாக நாட்டில் நீடித்து வந்த கருக்கலைப்பு சட்டத்தில் புதிய மாற்றத்தை இந்த உச்சநீதிமன்ற தீர்ப்பு ஏற்படுத்தியுள்ளது எப்படி என்பதையும் அவர் விளக்குகிறார்.
''இந்தியாவில் எம்.டி.பி., எனப்படும் கருக்கலைப்புச் சட்டம், 1971இல் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தில் 2021ஆம் ஆண்டில் புதிய திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. அதில் யார் கருக்கலைப்பு செய்து கொள்ளலாம் என்ற விதிகள் சேர்க்கப்பட்டன.
திருமணமான பெண்கள், பாலியல் வன்புணர்வால் கருவுற்ற பெண்கள் மற்றும் குழந்தைகள், மாற்றுத்திறனாளி பெண்கள் மற்றும் குழந்தைகள் 24 வாரங்கள் வரையிலான கருவைக் கலைக்க அனுமதி உள்ளது. அத்துடன், திருமணம் ஆகாமல் கர்ப்பம் அடையும் பெண்கள், 20 வாரங்கள் வரையிலான கருவைக் கலைக்க மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதனை தற்போது உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தி, திருமணம் ஆகாத தனி பெண்களும் 24 வாரங்கள் வரை கருக்கலைப்பு செய்துகொள்ளலாம் என தீர்ப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது,'' என்கிறார் வேணி.
''கருக்கலைப்பு சட்டத்தில், திருமணமான, திருமணமாகாத பெண்கள் என்று வேறுபடுத்திப் பார்ப்பது, செயற்கையானது என நீதிபதிகள் கூறியுள்ளது வரவேற்கத்தக்கது. தற்போது சமூகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை பார்க்கும்போது, திருமணம் ஆகாத பெண்கள், இளம்பெண்கள் தங்களுடைய அனுமதியோடு அல்லது அனுமதி இல்லாமல் உடலுறவு கொள்வதும், அதனால் கர்ப்பம் அடைவதும் நடக்கிறது. அதே நேரம் அந்த பெண் விருப்பம் இல்லாமல் குழந்தை பிறப்பிற்கு ஆளாகவேண்டியதில்லை என்பதை நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது,''என்கிறார் வேணி.


உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால், இளம் பெண்கள் கர்ப்பம் அடைந்தாலும், குற்ற உணர்வின்றி, பாதுகாப்பான கருக்கலைப்பிற்கு செல்ல முடிவு செய்வார்கள் என்கிறார் வேணி.
''போக்சோ சட்டத்தின் கீழ் பல வழக்குகளில் பாலியல் வன்புணர்வால் வளரிளம் பெண்கள் கர்ப்பம் அடைந்த பின் புகார் கொடுத்திருக்கிறார்கள். அதில், சில பெற்றோர் கர்ப்பம் ஆகி விட்டதால், தங்கள் மகளை வன்புணர்வு செய்த நபருக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என பெண்ணை வற்புறுத்துகின்றனர். கர்ப்பம் ஆகிவிட்டால், பாதிக்கப்பட்ட பெண்ணின் வாழ்க்கை முடிந்து விட்டதாக பார்க்கப்படுகிறது. தேவையற்ற கர்ப்பம் என்பதால் அதை கலைத்துவிட்டு, அந்த பெண் முழு சுதந்திரத்துடன் வாழ முடியும் என்பதை இந்த தீர்ப்பு உணர்த்துகிறது,''என்கிறார் அவர்.
இந்த தீர்ப்பின் மூலம், சமூக மாற்றத்துக்கு ஏற்ப சட்டத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்ற கருத்துக்கு நீதிமன்றம் வலு சேர்த்துள்ளதாக வேணி கூறுகிறார்.
மேலும் இந்த தீர்ப்பில், "உடலுறவு என்பதற்கு திருமணம் முன்நிபந்தனையாக இருக்கவேண்டிய தேவை தற்போதைய சமூகத்தில் இல்லை. சமூக பழக்கவழக்கங்கள் மாறுவதாலும், நம் சமூகம் பரிணாம வளர்ச்சியடையும் போது, நாம் சட்டத்தை செயல்படுத்தும் விதத்திலும் மற்றம் தேவை. நம் சட்டங்களில் காலத்திற்கு ஏற்ப மறுசீரமைப்பை செய்து கொள்ள வேண்டியது அவசியம்.'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு, ''திருமணம் அல்லாத 'லிவ்-இன் ரிலேஷன்ஷிப்' என்ற முறை, ஒரு பால் உறவு கொள்பவர்கள் மற்றும் திருமணத்திற்கு முன்பு உறவில் ஈடுபடுபவர்கள் போன்றவர்களை குற்றம் புரிந்தவர்கள் என்ற கண்ணோட்டத்தில் நாம் பார்க்கக்கூடாது'' என்றும் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்த மாற்றம் என்கிறார்.
பதின்பருவத்தில் கர்ப்பம் ஆகும் பெண்களின் நிலை

பட மூலாதாரம், Getty Images
எல்லா சட்டங்களை போல கருக்கலைப்பு சட்டத்தையும் தவறாக பயன்படுத்தும் வாய்ப்பு உள்ளது. ஆனால் தவறாக பயன்படுத்துபவர்களை விட, தேவையற்ற கர்ப்பத்தை கலைத்து பயன்பெறுவார்கள்தான் அதிகமாக இருப்பார்கள் என்கிறார் பெண்கள் முன்னேற்றம் மற்றும் ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த ரேணுகா.
தனி பெண்கள் மற்றும் பதின்பருவ பெண்களின் உரிமைகள் தொடர்பான வழக்குகளை கையாளும் ரேணுகா, பாதுகாப்பான உடலுறவு மற்றும் பாலியல் கல்வி தொடர்பான விழிப்புணர்வு அதிகரிக்கவேண்டும் என்கிறார்.
''சென்னையில் கண்ணகி நகர், செம்மன்சேரி பகுதிகளில் பதின்பருவ பெண்கள் குழந்தைகளுடன் இருப்பதை பார்க்கலாம். பல வன்புணர்வு புகார்களை நாங்கள் காவல்துறைக்கு கொண்டுசென்றுள்ளோம். அதில், ஒரு சில குழந்தைகளுக்கு ஏற்பட்ட தேவையற்ற கர்ப்பத்தை கலைப்பதற்கு பல சிக்கல்களை சந்தித்தோம். ஒரு பதின்பருவ பெண்ணின் வழக்கில், அவர் கர்ப்பம் கலைப்பதற்கு பல நாட்கள் ஆனதால், அவரது குடும்பத்தினர் மோசமாக நடத்தி தற்கொலைக்கு தள்ளிவிட்டனர். இதுபோன்ற சம்பவங்களை இனி தடுக்கலாம். அதேபோல பெண்களும் தாங்களாகவே வீட்டில் கர்ப்பத்தை கலைப்பதற்கு முயற்சி செய்வதை கைவிடுவார்கள். மருத்துவமனை சென்று தனக்கான உரிமையுடன் கருக்கலைப்பு செய்வதற்கு இந்த தீர்ப்பு உதவும் ,''என்கிறார் ரேணுகா.
தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின் படி இந்தியாவில், தற்போது 15-19 வயதில் உள்ள பெண்களில் 7.9%, தாயாகவோ அல்லது கர்ப்பமாகவோ இருக்கின்றனர். தேவையற்ற கர்ப்பத்தை குறைப்பதால், பதின்பருவத்தில் தாயாகும் பெண்களின் எண்ணிக்கையும் கணிசமாக குறையும் என்கிறார் ரேணுகா.
திருமண உறவில் பாலியல் வன்புணர்வு
கருக்கலைப்பு தொடர்பான தீர்ப்பாக இது அமைந்துள்ளபோதும், திருமண உறவில் நேரும் வன்புணர்வு குறித்தும் இந்த தீர்ப்பு பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது என்கிறார் ரேணுகா.

பட மூலாதாரம், Getty Images
''நெருக்கமான உறவில் இருக்கும் நபர் மூலமாக பாலியல் வன்புணர்வு ஏற்படும் என்ற நிதர்சனத்தை நாம் அங்கீகரிக்கவேண்டும். குடும்பம் என்ற அமைப்பில் பாலினம் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறை (அனைத்து வடிவங்களிலும்)நீண்ட காலமாக நடந்துவருகிறது. இதை ஏராளமான பெண்களின் வாழ்க்கை அனுபவத்தில் ஒன்றி உள்ளது," என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பேசிய ரேணுகா, ''குடும்ப உறவில் பிரச்னை வந்தால் பெண்கள் குடும்ப நலனிற்காக தங்களுக்கு இழைக்கப்படும் உடல், மனம் மற்றும் பாலியல் ரீதியான அத்துமீறலை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றுதான் பல காலங்களாக நம் குடும்ப அமைப்பு சொல்லிவருகிறது. தற்போது, குடும்பங்களில் உள்ள வன்முறையை நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது பாராட்டுக்கு உரியது. இதனால், தங்களுக்கு இழைக்கப்படும் வன்முறைகளை தாங்கிக்கொண்டு குடும்பத்தை நடத்துவது என்ற கண்ணோட்டத்தில் இருந்து பலரும் மீண்டுவர உதவியாக இருக்கும். தனக்கு நேருவது வன்முறை, அதற்கான நியாயத்தை கேட்பது ஒரு பெண்ணின் உரிமை என்பதை நீதிபதிகள் உணர்த்தியுள்ளனர்,''என்கிறார் அவர்.
இதன்மூலம், நீண்ட காலமாக சட்டத்தின்படி, திருமண பந்தத்தில், 18வயதை அடைந்த மனைவியின் அனுமதி இன்றி உடலுறவு கொள்வதை வன்புணர்வாக கருததேவையில்லை என்ற விதி இருந்தது. தற்போது, பெண் ஒருவர் விருப்பம் இல்லாத கர்ப்பத்தை கலைக்க முழு சுதந்திரம் உள்ளது என தெரிவித்துள்ளதால், கணவர் மூலமாககூட விருப்பம் இல்லாமல் கர்ப்பம் ஆகும் மனைவி ஒருவர் வன்புணர்வுக்கு ஆளானதாக கருதவேண்டும் என்பதை இந்த தீர்ப்பு எடுத்துரைத்துள்ளது என்கிறார் ரேணுகா.
வழக்கறிஞர் மற்றும் பெண்ணிய செயற்பாட்டாளர் ரஞ்சினியிடம் பேசியபோது, திருமண உறவில் ஏற்படும் பாலியல் வன்புணர்வு பற்றி நீதிபதிகள் எடுத்துரைத்துள்ளதால், இந்த தீர்ப்பு காரணமாக, பல வழக்குகளில் தேவையற்ற கர்ப்பத்தை கலைத்த பெண்கள் மீதான குற்றசாட்டுகள் களையப்படும் என்கிறார்.
''குடும்ப பிரச்னையால் வரும் வழக்குகளில், தன் மனைவி கர்ப்பத்தை கலைப்பதை தனக்கு நேர்ந்த அநீதியாக சில ஆண்கள் வாதிடுவார்கள். ஆனால், ஒரு பெண் தனக்கு விருப்பம் இல்லாமல், கர்பத்தை ஏற்றுகொள்ளத்தேவையில்லை என்று கூறியுள்ளதால், பாதிக்கப்பட்ட பெண் தன்னுடைய நிலையை இந்த தீர்ப்பை மேற்கோள்காட்டி தான் அநீதி செய்யவில்லை என்றும் தனக்கான நீதிக்காக போராடியதாக பேசமுடியும்,''என்கிறார் ரஞ்சினி.
பாலியல் வன்புணர்வு தொடர்பான புதிய பார்வையை நீதிபதி கூறியுள்ளதை தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளதா என்று கேட்டபோது, ''இந்த தீர்ப்பில் ஒரு பெண் சுயமாக முடிவு செய்வதற்கான தடை நீக்கப்பட்டுள்ளது என்றுதான் பார்க்கமுடியும். இதனை தவறாக பயன்படுத்துவது என்பதற்கு வாய்ப்பில்லை. ஏனெனில் இதில் முடிவு செய்வது பாதிக்கப்பட்ட பெண் என்பதால், அவர் இந்த தீர்ப்பை தனக்கு சாதகமாக பயன்படுத்துவதை நாம் தவறாக பயன்படுத்துகிறார் என்று சொல்லமுடியாது,''என்கிறார் ரஞ்சினி.
போலி மருத்துவரிடம் செல்வது குறையுமா?

பட மூலாதாரம், Getty Images
நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு கருக்கலைப்பு செய்துகொள்ளவந்த பெண்மணி ஒருவரின் பிரச்னையை சுட்டிக்காட்டி, இந்த தீர்ப்பு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என விவரிக்கிறார் மருத்துவர் சாந்தி.
''சமீபத்தில் நாகர்கோவிலில் இருந்து திருமணம் ஆகாத பெண் ஒருவர் என்னிடம் கருக்கலைப்பு செய்துகொள்ளவந்தார். அவர் திருமணம் ஆகாமல் கர்ப்பம் அடைந்துவிட்டதால், அதனை அவர் குடும்பத்தினர் ஏற்கவில்லை. ஊர்மக்கள் என்ன சொல்வார்கள், அவருடைய காதலர் அவரை திருமணம் செய்துகொள்வரா என்ற உத்தரவாதம் இல்லாத காரணத்தால், அவர் கருக்கலைப்பு செய்ய முடிவு செய்தார். ஆனால் அவருடைய ஊரில், அருகில் உள்ள ஊரில் கூட கருக்கலைப்பு செய்துகொண்டால், யாருக்காவது தெரியவந்துவிடும் என்ற அச்சத்தில் அவர் சென்னை வந்தார். இதுபோல பெண்கள், சட்டத்தின்படி வழி இருந்தாலும், சமூகத்தில் உள்ள தயக்கம் காரணமாக கருக்கலைப்பு செய்வதற்கு முன்வர யோசிக்கிறார்கள். இதன் தொடர்ச்சியாக ஒருசிலர், போலி மருத்துவர்களிடம் மாட்டிக்கொள்கிறார்கள்,''என்கிறார் சாந்தி.
தற்போது வந்துள்ள தீர்ப்பால் போலி மருத்துவர்களிடம் செல்வதை பற்றி பெண்கள் யோசிப்பார்கள் என்றும் பாதுகாப்பான கருகலைப்பை நாடிவரும் மாற்றத்தை ஓரளவு எதிர்பார்க்கலாம் என்றும் தெரிவிக்கிறார் சாந்தி. ''தீர்ப்பு என்பது சட்டப்படி கொண்டுவரப்படும் மாற்றம். அதுவே நம் சமூகத்தில் முழுமையாக நடைமுறையில் ஈடேறுமா என்று உடனே சொல்லமுடியாது. ஆனால் மாற்றத்திற்கான ஒரு வழியாக இந்த தீர்ப்பை பார்க்கலாம்,''என்கிறார் சாந்தி.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












