தொற்று நோயிலிருந்து உங்களை காக்கும் ‘ஆன்டி வைரல்’ புடவை - தமிழ் நெசவாளரின் அசத்தல் முயற்சி

சேகர்
    • எழுதியவர், ஹேமா ராக்கேஷ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

சென்னை அனகாபுத்தூரை சேர்ந்த இயற்கை நெசவாளர் சேகர் என்பவர் இந்தியாவின் முதல் ஆன்டி வைரல் புடவையை இயற்கை முறையில் நெய்து சாதனை படைத்திருக்கிறார். பிபிசி தமிழுக்காக சேகர் பகிர்ந்து கொண்ட தகவல்களை பார்க்கலாம்.

சென்னை அனகாபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் சேகர். இயற்கை பொருட்களை கொண்டு புடவைகள் மற்றும் துணிகளை நெசவு செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். வாழைநார், கற்றாலை நார், அன்னாசி நார், சணல், கோரைப்புல், வெட்டிவேர் போன்றவற்றில் இவர் நெய்யும் புடவைகளுக்கு தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் வரவேற்பு இருக்கிறது. இப்போது நாட்டிலேயே முதன்முறையாக உடலுக்கு குளிர்ச்சி கொடுப்பதோடு நோய் தொற்று ஏற்படா வண்ணம் ஆன்டி வைரல் புடவைகளை அறிமுகப்படுத்தியுள்ளார் சேகர்.

" Green Silver nano particle" கொண்டு முழுவதும் இயற்கை முறையில் நெய்யப்பட்ட ஆன்டி வைரல் புடவைகளை கடந்த மாதம் கோவா மாநில கவர்னர் அறிமுகப்படுத்தினார். இந்த புடவைகள் உடலுக்கு குளிர்ச்சியை தருவதோடு தொற்று நோய்களில் இருந்தும் பாதுகாக்கிறது. வேப்பிலை, மஞ்சள், துளசி போன்றவற்றை இதில் மூலப்பபொருட்களாக பயன்படுத்தி இருக்கிறோம். இது சரும பிரச்சனைகளையும் தடுக்கிறது. பெண்கள் பல பேர் இப்போதே இந்த புடவைகளுக்கு ஆர்டர் கொடுத்திருப்பதாக மகிழ்ச்சியுடன் சொல்கிறார் சேகர்.

இந்தியாவின் முதல் ஆன்டி வைரல் புடவை - அசத்தும் தமிழ நெசவாளர்

கடந்த 15 ஆண்டுகளாக இயற்கை நெசவுத்தொழில் ஈடுபட்டு வருகிறார் சேகர். சுற்று சூழலுக்கு மாசு ஏற்படாத வண்ணம் இயற்கை பொருட்களை கொண்டு புடவைகள் தயாரிப்பதால் இந்த புடவைகளுக்கு பெரும் வரவேற்பு இருக்கிறது. இவர் உற்பத்தி செய்த ஆடைகள் டெல்லியில் உள்ள ஐஐடிக்கு சோதனைக்கு அனுப்பப்பட்டது. அதில் வாழை நார், கற்றாலை நார், மூங்கில் என இயற்கை பொருட்களை கொண்டு உற்பத்தி செய்யப்படுவதால் உடலுக்கு குளிர்ச்சி தருவதோடு தோல் வியாதிகளையும் கட்டுப்படுத்துகிறது என்று சோதனை முடிவுகள் வந்திருக்கிறன. இதற் காரணமாக மேலும் பல்வேறு புதுமைகளை புகுத்தி தேசிய அளவிலும் லிம்கா ரெக்கார்ட் சாதனை படைத்திருக்கிறார் சேகர். புடவைகள் மட்டுமல்லாது இந்தியாவிலேயே முதள்முறையாக வாழைநாரில் ஜீன்ஸ் பேண்ட் தயாரித்து சாதனை படைத்திருக்கிறார் சேகர்.

"இந்தியாவிலேயே முதன்முறையாக நாங்கள் வாழைநாரில் ஜீன்ஸ் பேண்ட் தயாரித்து சாதனை படைத்துளோம். இன்றைய நவநாகரீக பெண்களுக்கு சாதாரண ஜீன்ஸ் பேண்ட் அணிவது உடலில் சூட்டை அதிகப்படுத்துகிறது. அதனால் நாங்கள் இயற்கை முறையில் வாழை நாரில் ஜீன்ஸ தயாரித்திருக்கிறோம். இதை அணிவதால் உடலுக்கு குளிர்ச்சி ஏற்படுகிறது. மேலும் கையாள்வதற்கும் இது எளிதாக இருக்கிறது," என்கிறார் சேகர்.

புடவைகள் , ஜீன்ஸ மட்டுமல்லாமல் வாழை நார் மற்றும் பனை நார்களை கொண்டு கைவினை பொருட்களையும் தயாரித்து வருகின்றனர் . இவரது தலைமையில் உள்ள குழுவினர் புடவைகளுக்கு மேட்சாக வளையல், கம்மல், செயின் போன்றவற்றை புடவையின் நிறத்திற்கு ஏற்ப தயாரித்து வருகின்றனர்.

இந்தியாவின் முதல் ஆன்டி வைரல் புடவை - அசத்தும் தமிழ நெசவாளர்

"எங்களிடம் 50 க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவி குழுவைச் சேர்ந்த பெண்கள் வேலை செய்து வருகிறார்கள். வாழை நார், கற்றாலை நார்,மூங்கில் நார், அன்னாலி பழ நார் போன்றவற்றை பதப்படுத்தி அவற்றை தனித்தனியாக நார் போன்று எடுத்து அவற்றை முறையாக சேமித்து காயவைத்து, இயற்கை பொருட்களை கொண்டு சாயத்தை உருவாக்கி, அதை கைநெசவு செய்து புடவை தயாரித்து முடிக்கும் பணிகளில் பெண்கள் ஆர்வத்துடன் ஈடுபடுகிறார்கள்," என்கிறார் சேகர்.

மத்திய அரசின் கைவினைப் பொருட்கள் துறை, சணல் வாரியம் சார்பில், நாடு முழுவதும் நடந்த கண்காட்சியில் சேகர் பங்கேற்று இயற்கை முறை நெசவு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறார். அசாமில் நடந்த வட கிழக்கு பிராந்திய கூட்டமைப்பு கண்காட்சியில் பங்கேற்றதோடு அசாம் நெசவாளர்களுக்கு ஒரு மாதம் இயற்கை நெசவு குறித்த பயிற்சியையும் வழங்கி உள்ளார் சேகர்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: