ஆந்திரப்பிரதேசத்தில் கருவுறாத பெண்ணுக்கு கர்ப்பம் என்று சொல்லி 9 மாதம் சிகிச்சை அளித்த மருத்துவமனை

பட மூலாதாரம், UGC
- எழுதியவர், ஷங்கர் வடிசெட்டி
- பதவி, பிபிசி தெலுங்கு சேவைக்காக
ஆந்திரப்பிரதேசத்தில் கர்ப்பமாக இருப்பதாகக் கூறி மகாலட்சுமி என்ற பெண்ணுக்கு கடந்த 9 மாதங்களாக ஒரு தனியார் மருத்துவமனை சிகிச்சை அளித்துவந்த நிலையில், அரசு மருத்துவர்கள் செய்த பரிசோதனையில் அவர் கர்ப்பமாக இல்லை எனத் தெரியவந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரப்பிரதேச மாநிலம் காக்கிநாடாவில் ரம்யா மருத்துவமனை செயல்பட்டுவருகிறது. மகப்பேறு சேவையளிக்கும் இந்த மருத்துவமனைக்கு நூற்றுக்கணக்கான பெண்கள் வந்துசெல்கின்றனர்.
இந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ஆந்திரப் பிரதேசத்தின் அரசாங்கத்திலும் பணியாற்றிவருகிறார். இந்த நிலையில், மகாலட்சுமி என்ற பெண்ணும் அவரது உறவினர்களும் ரம்யா மருத்துவமனை தங்களை ஏமாற்றிவிட்டதாகக் குற்றம்சாட்டியுள்ளனர்.
"ரம்யா மருத்துவமனை ஊழியர்கள் நான் கர்ப்பமாக இருப்பதாகக் கூறி, கடந்த 9 மாதங்களாக எனக்கு பேறுகால மருத்துவம் பார்த்துவந்தனர். ஆனால், அரசு மருத்துவர்கள் நான் கருத்தரிக்கவேயில்லை என்பதை உறுதிசெய்துள்ளனர்" எனக் குற்றம்சாட்டுகிறார் மகாலட்சுமி.
அவரும் அவரது உறவினர்களும் மருத்துவமனைக்கு வெளியே போராட்டம் நடத்திய நிலையில், அவர்களுக்கு பெண்கள் அமைப்பும் ஆதரவு தெரிவித்தது. இது தொடர்பாக மகாலட்சுமியின் கணவர் காவல்நிலையத்தில் புகாரும் அளித்துள்ளார்.

பட மூலாதாரம், UGC
என்ன நடந்தது?
கிழக்கு கோதாவரியில் உள்ள கோகாவரம் கிராமத்தைச் சேர்ந்த மகாலட்சுமி, தனது கணவருடன் ஏனாம் கிராமத்தில் வசித்துவருகிறார். மகாலட்சுமி கர்ப்பம் தொடர்பான பிரச்சனையால் அவதிப்பட்டு வந்ததால், காக்கிநாடாவின் காந்தி நகரில் உள்ள ரம்யா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் மகாலட்சுமி கர்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்து, அவருக்கு கடந்த 9 மாதங்களாகப் பேறுகால சிகிச்சை அளித்துவந்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து பிபிசியிடம் பேசிய மகாலட்சுமியின் தாயார் கமலா ராணி, "நாங்கள் ஆரம்பத்திலிருந்தே மருந்துகளை உபயோகித்துவருகிறோம். மகாலட்சுமியைப் பரிசோதித்துவிட்டு அவர் கர்ப்பமாக உள்ளதாக மருத்துவர்கள் கூறினர். மாதாந்தோறும் பரிசோதனை செய்து குழந்தை நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்தனர். பிரசவத்திற்கான தேதியைக் கூட அவர்கள் வழங்கிவிட்டனர்.
அதனால் பிரசவத்திற்காக மகாலட்சுமி எங்கள் வீட்டிற்கு வந்தார். 9 மாதங்களைக் கடந்த பிறகும் எந்த மாற்றமும் இல்லாததல் சந்தேகத்தின் அடிப்படையில் அரசு மருத்துவமனைக்குச் சென்றோம். அவர்கள் பிரசவம் பார்ப்பார்கள் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்தபோது மகாலட்சுமி கர்ப்பமாக இல்லை என்று தெரிவித்தனர். அவருடைய வயிற்றில் குழந்தை இல்லை என்பதையும் அவர்கள் உறுதிசெய்தனர். மகாலட்சுமி கர்ப்பமாக இருக்கிறார் என்று ரம்யா மருத்துவமனையில் தொடர்ந்து கூறியது மற்றும் மருந்துகள் பரிந்துரைத்ததன் நோக்கத்தை எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை" எனக் கூறினார்.
"முதலில் தலைமை மருத்துவர் பரிசோதித்து கர்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்தார். அதன் பிறகு, அவர் வேறு வேலையில் இருப்பதாகக் கூறி மற்ற இரு மருத்துவர்கள்தான் என் மகளுக்கு மருத்துவம் பார்த்துவந்தனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதன்முறையாக மருத்துவமனைக்குச் சென்றோம். அன்றிலிருந்து ஒவ்வொரு மாதமும் பரிசோதனை செய்தார்கள். இதுவரை பரிசோதனைகளுக்காகவும் மருந்திற்காகவும் 40 ஆயிரம் ரூபாய் செலவழித்துள்ளோம். ஆனால், முடிவில் எங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது" என்றும் கமலா ராணி கூறினார்.


உண்மை தெரியவந்தது எப்படி?
கடைசியாக மகாலட்சுமி செப்டம்பர் 12ஆம் தேதி ரம்யா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை நலமுடன் இருப்பதாகத் தெரிவித்து, செப்டம்பர் 22ஆம் தேதியை பிரசவத் தேதியாக வழங்கியுள்ளனர்.
இதையடுத்து, பிரசவத்திற்காக மகாலட்சுமி கடந்த 20ஆம் தேதி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இல்லை என்ற உண்மையைத் தெரிவித்துள்ளனர்.


"கடந்த 20ஆம் தேதி மகாலட்சுமி மருத்துவமனைக்கு வந்தார். தான் கர்ப்பமாக இருப்பதாகவும் தன்னை பிரசவத்திற்காக அனுமதிக்கும்படியும் கேட்டார். கடந்த 9 மாதங்களாக அவர் எடுத்துக்கொண்ட மருந்துகளின் பட்டியலும் அவரிடம் இருந்தது. ஆனால், அவரது வயிற்றை பார்த்தபோது எங்களுக்குச் சந்தேகமாக இருந்தது. உடனே ஸ்கேனிங் பரிசோதனைக்கு அவரை அனுப்பினோம். அதன் அறிக்கையில் அவர் கர்ப்பமாக இல்லை என்பது தெரியவந்ததும் அவரைத் திருப்பி அனுப்பிவிட்டோம்" என்கிறார் அரசு மருத்துவமனை மருத்துவர் ஸ்ரவந்தி.
தனது வயிறு கொஞ்சம் வீங்கி இருந்ததால் அதை கர்ப்பம் என்று மகாலட்சுமி நினைத்துக்கொண்டதாகவும், தான் கர்ப்பமாக இல்லை என்பது தெரியவந்ததும் அவர் உடைந்துபோய்விட்டதாகவும் மருத்துவர் ஸ்ரவந்தி கூறினார்.

பட மூலாதாரம், LAKSHMAN
என்ன சொல்கிறது ரம்யா மருத்துவமனை நிர்வாகம்?
ரம்யா மருத்துவமனையின் தலைமை மருத்துவர் பிரபாவதி, ஆந்திரப் பிரதேசத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அகாடமியின் தலைவராகவும் உள்ளார். அவரது கணவர் பிதானி அன்னவரம் ஆளும் ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் மருத்துவர்கள் பிரிவின் மாநில அளவிலான தலைவராக உள்ளார்.
கர்ப்பம் தரிக்காதவரை கர்ப்பமாக இருப்பதாகக் கூறிய குற்றச்சாட்டு கடந்த காலங்களிலும் ரம்யா மருத்துவமனை நிர்வாகம் மீது உண்டு. இது தொடர்பாக பெத்தபுரத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் சில ஆண்டுகளுக்கு முன்பு ரம்யா மருத்துவமனை முன்பு போராட்டம் நடத்தினர்.
"ஜனவரி 2022 முதல் மகாலட்சுமி எங்கள் மருத்துவமனைக்கு வந்தது உண்மைதான். 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவருக்கு கருக் கலைவு ஏற்பட்டது. அவருக்கு நிறைய உடல்நலப் பிரச்சனைகள் உள்ளன. அவரது கணவர் குடும்பத்தினரின் அழுத்தம் இருந்ததால், தான் கர்ப்பமாக இருப்பதாக அவரே அனைவரிடம் கூறிக்கொண்டார். ஒவ்வொரு முறை மருத்துவமனைக்கு வரும்போதும் அவரை ஸ்கேன் பரிசோதனை செய்யக்கூறினோம். ஆனால், அவர் மறுத்துவிட்டார். இப்போது எங்கள் மீது குற்றம்சாட்டுகிறார். அவரது குற்றச்சாட்டில் உண்மையில்லை" என ஊடகங்களிடம் தலைமை மருத்துவர் பிரபாவதி தெரிவித்தார்.
மகப்பேறு தொடர்பான பிரச்சனையோடு வருபவர்களுக்கு பரிந்துரைக்கும் வழக்கமான இரும்புச்சத்து மாத்திரைகளையே மகாலட்சுமிக்கு வழங்கியதாகவும், வேறு எந்த மருந்தும் அவருக்கு வழங்கப்படவில்லை என்றும் தலைமை மருத்துவர் கூறியதை மறுக்கும் மகாலட்சுமியின் குடும்பத்தினர் கர்ப்பம் தரித்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ள மருத்துவமனை அறிக்கையை ஆதரமாகக் காட்டுகின்றனர். மருத்துவனை நிர்வாகம் தங்களது தவறை மறைக்கப் பார்ப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.


இத்தகைய தவறுகள் ஏன் நடக்கின்றன?
இது தொடர்பாக அனுபவம் மிக்க மருத்துவரிடம் பிபிசி தெலுங்கு சேவை பேசியது. "சில சமயங்களில் ஒருவரது கர்ப்பத்தை உறுதிசெய்வதற்காக செய்யப்படும் பரிசோதனையில் அறிவியல்பூர்வமாக தவறு நடக்க வாய்ப்புகள் உள்ளன. ஆனால், அந்தப் பெண் மருத்துவமனைக்குச் சென்ற எல்லா மாதங்களிலும் செய்த பரிசோதனையில் தவறு நடந்திருப்பது சந்தேகத்தைக் கிளப்புகிறது" என்கிறார் மூத்த மருத்துவர் எம்.நாயக்.
"மிகவும் அரிதான சந்தர்ப்பத்தில்தான் கர்ப்பத்தை உறுதி செய்யும் பரிசோதனை தவறாகப் போகும். அது மாதிரியான சந்தர்ப்பத்தில் மூன்று மற்றும் ஆறாவது மாதங்களில் செய்யப்படும் ஸ்கேன் பரிசோதனை பிரச்சனையை விளக்கிவிடும். குழந்தை வயிற்றில் இல்லாதபோது எப்படி குழந்தை வயிற்றில் இருப்பது மாதிரியான ஸ்கேன் அறிக்கைகளை உருவாக்கினார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். கர்ப்ப அறிகுறிகள் கிராமங்களில் எளிதில் அடையாளம் காணப்படும் நிலையில், ஒன்பதாவது மாதம்வரை கர்ப்பத்தை கண்டறிய முடியவில்லை என்பதும் சந்தேகமளிக்கிறது" என அவர் கூறுகிறார்.
முழுமையான விசாரணைக்குப் பிறகே இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பதைக் கூற முடியும் எனக் கூறிய மருத்துவர் எம்.நாயக்., இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க மருத்துவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்கிறார்.

பட மூலாதாரம், UGC
காவல்துறையில் புகார்
இந்த விவகாரம் தொடர்பாக காக்கிநாடா காவல்துறையில் மகாலட்சுமியின் கணவர் வட்டி சத்தியநாராயணா புகாரளித்துள்ளார்.
"என் மனைவி கர்ப்பமாக இல்லை. ஆனால், ரம்யா மருத்துவமனை கொடுத்த மருந்துகளால் வயிறு பெரிதாகியுள்ளது. போலியான அறிக்கைகளை உருவாக்கி, போலி சிகிச்சை அளித்த அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். என் மனைவிக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு ரம்யா மருத்துவமனையே பொறுப்பு" என்கிறார் வட்டி சத்தியநாராயணா.
காக்கிநாடா டூ டவுன் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட எழுத்துப்பூர்வ புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பிபிசியிடம் தெரிவித்த காவல்துறையினர், முதற்கட்ட தகவல்களைச் சேகரித்தவுடன் வழக்குப்பதிவு செய்யப்படும் என்றனர்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












