தன் மகளைவிட சிறப்பாக படித்த மாணவர் கொலை புகார்: விசாரணையில் திருப்பம்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், நடராஜன் சுந்தர்
- பதவி, பிபிசி தமிழுக்காக
காரைக்கால் பகுதியில், தன் மகளை விட நன்றாகப் படித்ததால் மகளுடன் படிக்கும் மாணவனுக்கு, மாணவியின் தாய் குளிர்பானத்தில் பெயர் கண்டறியப்படாத மாத்திரையைக் கலந்து கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
வாந்தி மயக்கத்துடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த குறிப்பிட்ட மாணவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
புதுச்சேரி யூனியன் பிரதேச பிராந்தியங்களில் ஒன்றான காரைக்காலின் நகரப்பகுதியில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் ராஜேந்திரன் - மாலதி என்ற தம்பதியர் வசித்து வருகின்றனர். இவர்களுடைய 13 வயது மகன் காரைக்காலில் உள்ள தனியார் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த மாணவர், அவர் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுப்பதோடு கூடுதல் பாடத்திட்ட செயல்பாடுகளிலும் சிறந்து செயல்பட்டு வந்துள்ளார். இவர் வழக்கம் போல் கடந்த வெள்ளிக்கிழமை காலை பள்ளிக்குச் சென்றுள்ளார். காலை சுமார் 10 மணியளவில் ஒரு பெண் பள்ளிக்கு வெளியே வந்து பாதுகாப்புப் பணியிலிருந்த வாட்ச்மேனிடம், 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவரின் பெயரைக் குறிப்பிட்டு குளிர்பானத்தைக் கொடுக்குமாறு கூறியதாக வாட்ச்மேன் தெரிவித்தார்.

புதிதாக கிடைத்த ஆவணங்கள்
இந்த வழக்கில் திடீர் திருப்பமாக ஒரு சாட்சி தானே முன்வந்து மாணவன் கொலை வழக்கு தொடர்பாக முக்கிய ஆதாரத்தை தெரிவித்தார்.
அதாவது குற்றம் சாட்டப்பட்ட இந்த பெண் ஒரு மளிகை கடையில் எலி மருந்து வாங்கி சென்றது தெரியவந்தது. இதன் அடிப்படையில் கொலைக் குற்றம் சாட்டப்பட்ட பெண்ணிடம் போலீசார் விசாரணை செய்தபோது, அவர் குளிர்பானத்தில் எலி மருந்து கலந்து கொடுத்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து இந்த வழக்கைப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் காரைக்கால் நகர பகுதி காவல் நிலைய ஆய்வாளர் பாலை, பிபிசி தமிழ் தொடர்பு கொண்டு பேசியது. அப்போது பேசிய அவர், "இந்த வழக்கில் எதிர்பாராத விதமாக முக்கிய சாட்சி எங்களுக்கு கிடைத்தது. அந்த சாட்சி யார் என்பதை நாங்கள் தெரியப்படுத்த கூடாது. மாணவனை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட பெண் மளிகை கடையில் எலி மருந்து வாங்கி சென்றதை அந்த சாட்சி தெரிவித்தார். அவர் கூறியதை முதலில் உறுதிசெய்ய எலி மருந்து வாங்கியதாக கூறப்பட்ட மளிகை கடைக்கு அருகே இருந்த சிசிடிவி காட்சியை ஆய்வு செய்தோம். அதில் இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட பெண் அங்கே சென்றதும் ஊர்ஜிதமானது. இதையடுத்து அந்த பெண்ணிடம் விசாரணை செய்ததில் அவர் குளிர்பானத்தில் எலி மருந்து கலந்து மாணவனுக்கு கொடுத்ததை வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்," என்று ஆய்வாளர் பால் தெரிவித்தார்.

குளிர்பானத்தில் என்ன கலந்தார்?
வாட்ச்மேனும் உடனடியாக வகுப்பறையில் இருந்த அந்த மாணவனிடம் அந்த குளிர்பான பாட்டிலை கொடுத்துள்ளார். சிற்றுண்டி இடைவேளையில் மாணவர் அதைக் குடித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை பள்ளி ஆண்டு விழா என்பதால் மதியம் அனைத்து மாணவர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. அப்போது குளிர்பானம் பருகிய அந்த மாணவன் வீட்டுக்கு சென்றதும் வாந்தி எடுத்துள்ளான். அதனைப் பார்த்த பெற்றோர்கள் உடனடியாக காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மாணவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
அதன் பிறகு பெற்றோரும் உறவினர்களும் பள்ளிக்குச் சென்று குளிர்பானத்தை யார் கொடுத்தது என்று விசாரித்துள்ளனர். அப்போது கேட்டில் இருந்த வாட்ச்மேன், தன்னிடம் ஒரு பெண் வந்து கொடுத்தாகத் தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து பள்ளியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சி மூலம் அதை உறுதிசெய்து காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.
மகளைவிடச் சிறப்பாகப் படிப்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாத தாய்
விசாரணையில் பாதிக்கப்பட்ட மாணவருடன் பயிலும் சக மாணவியின் தாய் குளிர்பானத்தைக் கொடுத்ததாக போலீசுக்குத் தெரிய வந்தது. இதையடுத்து அந்தப் பெண்ணை விசாரணைக்கு அழைத்து வந்து தீவிரமாக விசாரித்தனர். அதில் அவர் தெளிவில்லாத முரணான தகவலைத் தெரிவித்ததாக காவல் துறையினர் கூறுகின்றனர்.

மேலும் விசாரணை செய்ததில் பாதிக்கப்பட்ட மாணவர் நன்றாகப் படிப்பதும் தற்போது நடைபெற்ற தேர்வில் அவர் முதல் மதிப்பெண் பெற்றதும் தெரிய வந்தது. மேலும் வகுப்பில் அனைத்து செயல்பாடுகளிலும் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார். அதைப் பொறுத்துக் கொள்ளாமல் சக வகுப்பு மாணவியின் தாய் இவ்வாறு செய்ததாக காவல் துறையினர் முதற்கட்ட விசாரணையின் முடிவில் கூறுகின்றனர்.
இதனிடையே கடந்த இரண்டு நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவர் நேற்று(சனிக்கிழமை) இரவு சுமார் 11 மணியளவில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். மாணவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மகனின் மரணம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இந்தச் சூழலில் மாணவரின் உடற்கூராய்வு பரிசோதனை ஜிப்மர் மருத்துவமனையில் நடத்தப்பட்டு, அதை வீடியோ பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.
காவல்துறை என்ன சொல்கிறது
இதுகுறித்து விளக்கம் கேட்டறிய காரைக்கால் பிராந்திய காவல் துறை முதுநிலை காவல் கண்காணிப்பாளர் லோகேஸ்வரனை பிபிசி தொடர்பு கொண்டு பேசியது. அப்போது விளக்கமளித்த அவர், "குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட மாணவியின் தாயாருடைய வாக்குமூலத்தின் படி, இந்த மாணவர் வகுப்பில் சிறப்பாகப் படிக்கக் கூடியவர். பள்ளியின் மற்ற அனைத்து செயல்பாடுகளிலுமே சிறந்து விளங்கக் கூடியவராக இருந்துள்ளார். இதனால் மாணவியின் தாயாருக்கு அந்த மாணவர் மீது காழ்ப்புணர்ச்சி இருந்துள்ளது. சம்பவம் நடைபெற்ற நாளன்று பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றுள்ளது. அந்த பள்ளி விழாவில் மாணவர் நிறைய பரிசுகள் வாங்க இருக்கிறார் என்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாத பெண், நாட்டு மருந்து கடையில் பேதி மாத்திரை வாங்கியதாக விசாரணையில் தெரிவித்துள்ளார்.
அவர் மூன்று பாக்கெட்டுகள் பேதி மாத்திரை வாங்கியுள்ளார். ஒவ்வொரு பாக்கெட்டில் மூன்று மாத்திரைகள் இருந்துள்ளன. அதற்குப் பிறகு இரண்டு ஃப்ரூட் மிக்ஸ் பாட்டில்களை வாங்கி அவை ஒவ்வொன்றிலும் ஒரு பாக்கெட் மாத்திரையைப் போட்டுள்ளார். மாத்திரை கலந்த இரண்டு பாட்டில்களையும் பள்ளி வாட்ச்மேன் மூலமாக அந்த மாணவரிடம் கொடுத்துள்ளார்," என்று மாணவியின் தாயார் விசாரணையில் கூறியுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், "பள்ளியில் ஒரு பாட்டில் ஃப்ரூட் மிக்ஸை குடித்துவிட்டு, மற்றொரு பாட்டிலை அப்படியே வீட்டிற்குக் கொண்டு வந்துள்ளார். அன்று வீட்டுக்கு வந்ததும் மாணவருக்கு வாந்தி மயக்கம் இருந்துள்ளது. இதையடுத்து அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அன்றிரவு அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதற்குப் பிறகு மாணவர் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டது. அவர் நேற்றிரவு (சனிக்கிழமை) 9 மணி வரை சற்று சகஜ நிலையில் தான் இருந்துள்ளார்.
ஆனால் அதன் பிறகு அந்த மாணவர் இருமிய போது அடைப்பு ஏற்பட்டு நேற்றிரவு சுமார் 11 மணியளவில் உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறுகின்றனர்," என்றார் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் லோகேஸ்வரன்.
மாணவியின் தாயார் மீது கொலை வழக்கு பதிவு
"அந்த மாணவர் பரிசு வாங்கக் கூடாது என்பதற்காக அந்தப் பெண் வயிற்றுப்போக்கு மாத்திரை தான் வாங்கிக் கொடுத்தாகக் கூறுகிறார். ஆனால் மருத்துவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். அதன் முடிவில்தான் மாணவருக்குக் கொடுக்கப்பட்டது என்ன என்பது தெரியவரும்.
தற்போது அந்தப் பெண் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302இன் கீழ் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் விசாரணையில் அவர் சரியான மனநிலையில் இருப்பது போன்று தெரியவில்லை. அது தொடர்பாக மருத்துவ ஆய்வு செய்யப்படும். குறிப்பாகத் தனது மகளின் வகுப்பில் படிக்கும் சக மாணவர் சிறந்து படிப்பதாலும் தனது மகளை விட அனைத்திலும் சிறந்து செயல்படுவதாலும் அவருக்குப் பொறாமை கூட ஏற்பட்டிருக்கலாம். தற்போது இந்தச் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம்," என்று காரைக்கால் பிராந்திய முதுநிலை காவல் கண்காணிப்பாளர் லோகேஸ்வரன் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













