சென்னை விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்: பதற்றம் தவிர்க்க ஆற்காடு நவாப் செய்தது என்ன?

பட மூலாதாரம், KRISHNAKUMAR
- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
சென்னை நகரத்தில் பெரிய அளவில் நடக்கும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கும், ராயப்பேட்டை அமீர் மகால் அரண்மனையில் வசிக்கும் ஆற்காடு நவாப் முகமது அப்துல் அலிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.
1690களில் கர்நாட்டிக் தென்னிந்திய பகுதிகளில் வரிவசூலிக்க மொகலாய அரசர் அவுரங்கசீப்பால் நியமிக்கப்பட்டது ஆற்காடு நவாப் வம்சம். அந்த நவாப் வம்சாவளியைச் சேர்ந்தவர்தான் அமீர் மகாலில் வசிக்கும் தற்போதைய நவாப் முகமது அப்துல் அலி. அவருக்கும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கும் உள்ள தொடர்பு பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன்னதாக, விநாயகர் சதுர்த்தி சென்னை நகரத்தில் பிரபலமானது எப்படி என்பதை புரிந்துகொள்வது அவசியம்.

பட மூலாதாரம், Getty Images
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை பல இந்து அமைப்புகள் தங்களது பலத்தை காட்டும் நிகழ்வாக பார்ப்பதுண்டு. ஆங்கிலேயர்கள் காலத்தில் இந்துக்களை மத ரீதியாக ஒன்றுதிரட்ட இந்த விநாயகர் சதுர்த்தியை பொது நிகழ்வாக மாற்றியவர் பால கங்காதரத் திலகர்.
ஆனால், பிறகு 1992ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதை தொடர்ந்து, பல மாநிலங்களில் வலதுசாரி அமைப்புகள், இந்துக்களை ஒன்றிணைக்கும் நிகழ்வாக அதை நடத்திவருகிறார்கள். 1990களில் இருந்து விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை நடத்துவது மிகவும் அரசியலாக்கப்பட்ட நிகழ்வாக மாறிவிட்டது என்பதை நினைவுகூருகிறார் மூத்த பத்திரிகையாளர் லட்சுமி சுப்பிரமணியன்.
''1990களில்தான் விநாயக சதுர்த்தி விழா தமிழ்நாட்டில் முக்கியத்துவம் பெற்றது. ஊர்வலத்தின்போது, தொடர்ந்து வன்முறை செயல்கள் நடைபெறுவதும், அதனை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுப்பதும் வாடிக்கையாக இருந்தது. தமிழ்நாட்டில் விநாயக சதுர்த்தி ஊர்வலத்தின் போது மசூதிகள் மீது தாக்குதல் நடந்தத சம்பவங்களும் உண்டு. 1990 செப்டம்பர் 2ம் தேதி, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஐஸ் ஹவுஸ் வழியாக விநாயகர் சிலை ஊர்வலம் சென்றபோது, பெரிய மசூதி என்று அறியப்படும் மசூதி மீது செருப்பு வீசப்பட்டு வன்முறை வெடித்தது. வன்முறையில் இரண்டு முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். 1991லும் வன்முறை தொடர்ந்தது. 1995லும் அந்த சம்பவங்கள் தொடர்ந்தன. அதுவரை, சென்னை நகரத்தில் மூன்று வழிகளில் கொண்டு செல்லப்பட்டு விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. அந்த வழிகளை மாற்றி, ஒரே வழியில் கொண்டுசெல்ல 1996ல் வழிகாட்டு நெறிமுறைகள் கொண்டுவரப்பட்டன. அந்த விதிகள் தற்போதும் தொடர்கின்றன,''என்கிறார் லட்சுமி.

பட மூலாதாரம், AMIR MAHAL
இந்த பின்னணியில்தான் ஹார்மனி இந்தியா (Harmony India) என்ற அமைப்பை தொடங்கினார் நவாப் முகமது அப்துல் அலி. அந்த அமைப்பின் முக்கிய நோக்கமே மத நல்லிணக்கம் என்பதாகும். ''மசூதி இருக்கும் பகுதியில் ஊர்வலம் சென்றவர்கள் இஸ்லாமியர்களுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர். இஸ்லாமியர்கள் மத்தியில் அமைதியற்ற போக்கு நிலவுவதை அடுத்து, அங்குள்ளவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தேன். ஊர்வலம் நடத்துபவர்களிடம் பேசினேன். இந்து சகோதரர்கள் ஊர்வலத்தை நடத்துவதற்கு உதவுவது பற்றி கலந்து ஆலோசனை செய்தேன். இரண்டு மதங்களை சேர்ந்தவர்களும் இறைவனின் பிள்ளைகள் என்பதால், அமைதியாக ஊர்வலத்தை நடத்துவதுதான் இரண்டு பேருக்கும் வெற்றி என்பதை உணர்த்தினேன். அதிலிருந்து பிறந்ததுதான் ஹார்மனி இந்தியா அமைப்பு,''என்கிறார் நவாப் முகமது அப்துல் அலி.
இப்படி இரண்டு தரப்புடனும் தொடர்ந்து தொடர்பில் இருப்பது விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களை மையமாக வைத்து பதற்றம் ஏற்படுவதைத் தவிர்க்க உதவியிருக்கிறது என்கிறார் அவர்.
ஹார்மனி இந்தியா அமைப்பின் மூலம் பல மதங்களை சேர்ந்த தலைவர்களை அழைத்து மதநல்லிணக்கம் குறித்த உரைகளை நடத்தியதாக கூறுகிறார் நவாப் முகமது அப்துல் அலி. ''விநாயகர் சதுர்த்தி அமைதியான முறையில் நடைபெறுவதற்கு இரண்டு மதத்தினரும் உதவவேண்டும் என்பதற்காக 1990களில் பேச்சுவார்த்தை நடத்தியதை இன்றும் பெருமிதத்துடன் நினைத்து பார்க்கிறேன். அதற்கு ஒத்துழைப்பு நல்கியவர்களுக்கும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். இந்து சகோதரர்கள் மற்றும் இஸ்லாமிய சகோதரர்கள் இணைந்திருப்பதுதான் உண்மையான திருவிழா. அந்த பேச்சுவார்த்தைகளால் ஒற்றுமை ஓங்கியது. இதனால், எங்களுக்கும் விநாயகர் சதுர்த்திக்கும் தொடர்பு ஏற்பட்டது,''என்கிறார் நவாப் முகமது அப்துல் அலி.

பட மூலாதாரம், Getty Images
தனது மூதாதையர்கள் மதங்களை தாண்டி நன்கொடைகள் கொடுப்பது, நிலங்களை அளிப்பது என பலவிதமான மத நல்லிணக்க செயல்களில் ஈடுபட்டதை பெருமையாக கருதுவதாக சொல்கிறார் அவர். ''தமிழ்நாட்டில் புகழ்பெற்ற மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோயிலுக்கும் எங்கள் குடும்பத்திற்கும் வரலாற்று ரீதியான தொடர்பு உண்டு. 1690 முதல் 1855 வரை, ஹைதராபாத் நிஜாமின்கீழ் ஆற்காட்டை தலைநகரமாக கொண்டு தனி ராஜ்ஜியமாக இருந்தது கர்நாட்டிக் பகுதி. அதை ஆட்சி செய்த என் முன்னோரான முகமது அலி கான் வாலாஜா அவர்கள், கபாலீஸ்வரர் கோயில் திருக்குளத்திற்கு நிலம் வழங்கினார். இதுபோல பல தேவாலயங்களுக்கும், மசூதிகளுக்கும் அவர் இடம் வழங்கினார். இந்தப் பழக்கம் எங்கள் குடும்பத்தில் நிலைத்துள்ளது. அதனால்தான் மதங்களை தாண்டி அனைவரையும் நாங்கள் சகோதரராகப் பார்க்கிறோம்,'' என்கிறார் அவர்.
மேலும், எந்த மதத்திலும் வன்முறை போதிக்கப்படவில்லை என்பதிலும், மதநல்லிணக்கமே எல்லா மத விழாக்களின் மையமாக இருக்கவேண்டும் என்பதிலும் ஒவ்வொருவரும் உறுதியாக இருந்தால் மதக் கலவரங்களை தடுக்கலாம் என்கிறார் அவர்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












